விவசாயி வயிறு காயும்
நெய்தல் நிலம் காய்ந்துவிட
வெண்ணமுது விளைந்துவரும்
சோற்றினைச் சுவைக்க உதவிடும்
உப்பளத் தொழிலாளி காலினிலே
மக்களின் நாச்சுவை வாழும்…
அறநெறி தத்துவ வழிமுறைகள்
கடல்விளை அமுதத் துகளாக -சோற்றுக்
கலம்வழி உயிரில் புகுத்திவிடும்….
மண்குதிரைச் சவாரி
[வல்லமை இதழின்261-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
மண்குதிரை மீதேறி
மாக்கடலைக் கடந்துவிட்டு
மறுகரையை அடைந்திடவே
மன்றாடும் மாந்தரைப்போல்
கண்ணிரண்டும் விற்றுவிட்டு
கவின்மிகு சித்திரத்தை
கண்டுநாளும் களித்திடவே
கனவுகாணும் மூடனைப்போல்
இயற்கை வளங்களை அழித்து விட்டு
இன்ப வாழ்க்கையைத் தேடுகின்றோம்
நிலவளம் நீர்வளம் கெடுத்து
நித்திய இன்பத்தை நாடுகின்றோம்…
சுவற்றை அழித்துவிட்டு
சுந்தர ஓவியந் தீட்டுவதுபோல்
பூமியின் வளமழித்து
புதிய சொர்க்கம் தேடுகின்றோம்….
இடிதாங்கி மனிதர்கள்
[வல்லமை இதழின்260-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
நிற்க நேரமின்றி
பிறர் பாரம் தானேற்று
வயிறு நிரப்பும்
சுமைதாங்கி மனிதர்கள்!
கொடும் நுண்ணயிரியால்
தடைக்காலம் கண்டமையால்
தடம் பார்த்து நின்றுகொண்டு
விடைதேடும் வீரர்கள்!
தொடருந்து போலத்
துயரங்கள் தொடர்ந்தாலும்
தப்பியோடும் மார்க்கமில்லா
இடிதாங்கி மனிதர்கள்….
பலியாடுகள்
[வல்லமை இதழின்259-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை
பிழைப்புக்கேற்ற தொழிலும் இல்லை
களைத்து ஒதுங்க குடிலும் இல்லை
வறுமையைத் தீர்க்க வழியும் இல்லை
போதை தீர்ந்த நேரம் இல்லை
பாதை காணத் திறனும் இல்லை
நாளை குறித்து திட்டம் இல்லை
பிரரைக் குறைசொல்லி வாழ்ந்துவிட்டோம்
ஐந்தாண்டுக்கு ஒருமுறை
அதிகாரம் மாற்ற வாய்ப்பிருந்தும் -அதை
ஆயிரம் ஐநூறுக்கு விற்றுவிட்டு
எதிர்காலம் தொலைதது விட்டோம்…
பலிபீடத்தில் நின்றுகொண்டு
பச்சைதழை இலைகள் உண்டு
வரும் கொடுமை உணராத
பலியாட்டு மந்தைகள் நாம்…