செவ்வாய், செப்டம்பர் 27, 2011

மஹாலய பட்சம்


மஹாலய பட்சம்

இன்று மஹாலய அமாவஸ்யை. சென்ற பௌர்ணமி துவங்கி இன்று வரை மஹாலய பக்ஷம்.

பொதுவாக, சௌர மாதம், சந்திர மாதம் என்று மாதங்களில் இரண்டு வகை உண்டு.

சௌர மாதம் என்பது சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் 12 ராசிகளில் பிரவேசிப்பதை சங்கராந்தி என்று கூறுவர். அணைவரும் அறிந்த மகர சங்கராந்தி என்பது சூரியன் மகர ராசியில் நுழைவதைக் குறிக்கும். தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநில மக்கள் இந்த சூரிய மாதத்தையே பின்பற்றுகின்றனர். அதிலும் கேரளத்தில் இவை எந்த ராசியில் சூரியன் இருக்கிறாதோ அந்த பெயரிலேயே அழைக்கபடும். தமிழ்நாட்டில் அந்த மாத பௌர்ணமியில் இருக்கும் நட்சத்திரத்தின் (பௌர்ணமி அன்றோ அல்லது அதை ஒட்டியோ அந்த நட்சத்திரம் இருக்கும்) பெயரால் அழைக்கப் படும்.   

சந்திர மாதம் என்பது சந்திரனை அடிப்படையாகக் கொண்டது. இதிலும் இரண்டு வகை உண்டு. முதலாவது, அமாவாசைக்கு அடுத்த நாள் துவங்கி அமாவாசையில் முடிவது. இதிலும், மாதப் பெயர் பொதுவாக பௌர்ணமி அன்று உள்ள நட்சத்திரத்தின் பெயரால் அழைக்கப் படும். ஆந்திரம், கர்நாடகம், மராட்டிய மாநிலங்களில் இந்த முறை தான்.

மற்றொரு முறை, பௌர்ணமி மறுதினம் துவங்கி பௌர்ணமியில் முடிவது. பொதுவாக, பௌர்ணமியை பூர்ண மாஸ்ய” (அதாவது மாதம் பூர்த்தி அடைவு) என்றே கூறுவர். வட இந்தியாவில் இந்த முறைதான். மாதங்களின் பெயரும் அன்றைய நட்சத்திர பெயர்தான்.

இதில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல், பூமி சூரியனைச் சுற்ற 365 ¼  நாள் எடுத்துக் கொள்ளும். அதனால், சூரியனை அடிப்படையாகக் கொண்ட வருடம் 365 () 366 நாட்களாக இருக்கும். ஆனால், சந்திர மாதங்கள் 360 நாட்களுடன் இருக்கும். இந்த மீதமுள்ள 5/6 நாட்களை சேர்த்து 5 வருடங்களுக்கு ஒரு முறை 13 மாதங்கள் கொண்ட வருடமாக கணக்கிடுவர். அந்த அதிக மாதத்திற்கு பெயரும் கிடையாது. அந்த மாதத்தில் பொதுவாக, திருமணம் போன்ற நல்ல செயல்கள் செய்ய மாட்டார்கள்.

பொதுவாக, நாம் கொண்டாடும் பண்டிகைகள் இந்த சந்திர மாத அடிப்படையிலானவை தான். இதை நாம், கிருஷ்ண ஜெயந்தி, தீபாவளி போன்ற பண்டிகைகளில் அவதானிக்கலாம்.

மஹாலய பக்ஷம் பாத்ரபாத மாதம் முடிந்த அடுத்த தினத்திலிருந்து அமாவாசை வரை 15 நாட்களுக்கு நடக்கும். அது இன்றைய அமாவாசையுடன் நிறைவு பெறுகிறது.

பொதுவாக இந்த 15 நாட்களும் நீத்தார் கடன் செய்வார்கள்.

இதற்குப் பின் ஒரு கதை உள்ளது.

கர்ணன், உயிர் நீத்தப் பின் சொர்கலோகம் சென்றான். அங்கு அவனுக்கு அவன் செய்த புண்ணியத்தின் பலனாக எல்லா பொருட்களும் (பொன், பொருள் எல்லாம்) கிடைத்தன. ஆனால், உணவு மட்டும் கிட்டவில்லை. அது ஏன் எனக்கேட்ட பொழுது அவன் எல்லா தானங்களும் செய்ததாகவும் ஆனால் அன்னதானம் மட்டும் செய்யவில்லை அதனால் தான் அன்னம் அவனுக்கு கிட்டவில்லை என்ற பதில் கிடைத்தது. உடனே அவன் எமனிடம் வேண்டி 15 நாட்கள் பூலோகம் வந்து அந்த 15 நாட்களும் எளியவர்களுக்கு அன்ன தானம் செய்தான். அந்த 15 நாட்களே மஹாலய பக்ஷம் என்று கூறுவர்.

ஆனால் இது எப்படி நீத்தார் கடனாக மாறியது என்பது தெரியவில்லை.

3 கருத்துகள்:

  1. நல்ல அருமையான தகவல் தொகுப்பு. அறிந்திராத பல விசயங்கள். நன்று. நன்று.

    //இது எப்படி நீத்தார் கடனாக மாறியது என்பது தெரியவில்லை//

    காசு கடன் வாங்கியிருந்தால் திருப்பிக் கொடுத்து கடனை அடைத்து விடலாம். ஆனால் நம் முன்னோர்கள் கடைசி நிமிடம் வரை அன்பையும், பாசத்தையும் கொடுத்துக் கொண்டே இருந்து நம்மை கடன்காரர்கள் ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் உயிரோடு இருக்கும் போது அன்பையும், பாசத்தையும் திருப்பிக் காட்டி கடனை ஓரளவு அடைத்து விடலாம். ஆனாலும் முழுக்க அடைக்க முடியுமா என்பது இயலாத காரியம். எனவே, இந்த மஹாளய காலத்தில் நமது முன்னோர் (கர்ணன் தலைமையில் என்று வைத்துக் கொள்வோம்)ஒட்டுமொத்தமாக பூமிக்கு வரும் போது மீதிக் கடனை அடைப்பதாலேயே ‘நீத்தார் கடன்’ என்று சொல்கிறார்களோ?

    பதிலளிநீக்கு
  2. //அவர்கள் உயிரோடு இருக்கும் போது அன்பையும், பாசத்தையும் திருப்பிக் காட்டி கடனை ஓரளவு அடைத்து விடலாம். ஆனாலும் முழுக்க அடைக்க முடியுமா என்பது இயலாத காரியம்.//

    மற்றவருக்கு அன்பு காட்டியும் செய்யலாம்.

    தவிர, உயிருடன் இருக்கும் போது முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு பின் நீத்தார் கடன் செய்வதில் ஒரு பயனும் கிட்டாது. நீங்கள் கூறியது போல் உயிருடன் இருக்கும் பொழுதே அவர்களிடம் அன்பு காட்டுவது தான் சிறந்ததாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல விளக்கம் சீனு. இது போன்ற நல்ல விஷயங்களைத் தொடர்ந்து பகிரவும்....

    பதிலளிநீக்கு