செவ்வாய், செப்டம்பர் 13, 2011

கலவை (3)


கலவை (3)

சென்ற வாரம் உறவினர் ஒருவர் காலமானதைத் தொடர்ந்து அவசரமாக சென்னை/திருச்சி செல்ல நேர்ந்தது.

திருச்சியில் காவிரியில் வெள்ளம் நிரம்பியுள்ளது. ஆனால், நீண்ட நாட்கள் வற்றியிருந்ததாலும், வேறு மாசு கலப்பினாலும் நீர் முன் போல சுத்தமாக இல்லை. ஒருவேளை நீர் வரத்து தற்போது தான் ஆரம்பித்து இருப்பதால் கூட இருக்கலாம்.

பிள்ளையார் சதுர்த்தி விழாவை “இந்து எழுச்சி(?) விழாவாக இந்து அமைப்புகள் கொண்டாடுவதால் தேவையில்லாத ஒரு பதற்றம். குறிப்பாக இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளில். சாதாரண பிள்ளையார் “விஸர்ஜனவிழாவாக இருந்தால் இது இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். அமைதியான ஒரு விழா நிறுவனப் படுத்தப் படுவதால் வரும் பிரச்சனை.

நீதிபதி சௌமித்ரா சென் நான் நினைத்தது போலவே தானாவே பதவியை துறந்துள்ளார். இதனால் நீதித்துறைக்கும் நாடாளுமன்றத்திற்க்கும் மூளக்கூடிய ஒரு பனிப்போர் தவிர்க்கப் பட்டுள்ளது.

இதற்குள் தில்லியில் உயர்நீதிமன்றம் அருகில் குண்டு வெடிப்பு. இரண்டு மாதம் முன்பு அதே இடத்தில் ஒரு முன்னோட்டமும் பார்த்துள்ளனர். ஆனால், தில்லியில் எச்சரிக்கையாக இருப்பது என்பது மிகவும் கடினம். காரணம், “சல்தா ஹை (நடப்பது நடக்கட்டும்)என்ற பொது குணம். இது பொதுமக்களிடம் இருந்து காவலர்களுக்கும் மாறியுள்ளது. [அவர்களும் பொதுமக்களில் இருந்து வந்தவர்கள் தானே!!!]. இது மாறும் வரை இதை தடுப்பது கடினம்.

சென்னை முன் போல இல்லை. எல்லா இடங்களிலும் நெரிசல். ஒரே ஒரு நாள் தான் இருக்க நேர்ந்த்து (நேரமில்லாததால்). பொதுவாக முன்பு சுவரொட்டிகளில் கலைஞரின் படங்கள் அதிகமாக இருந்தது போல் இப்போது ஜெ. யின் படங்கள் இல்லை. சற்று அடக்கி வாசிக்கிறாரோ?

சென்ற வாரம் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீண்டும் தாக்கப் பட்டுள்ளது. இம்முறை பெட்ரோல் குண்டு. இது எந்த மாதிரி எதிர்ப்பு என்றே புரியவில்லை. இதை பொதுவாகவே இதை திராவிட கட்சிகள் தான் அறிமுகப் படுத்தின. என் நினைவுகள் 1989-ம் ஆண்டுக்கு செல்கிறது. அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். தேர்வு நேரம். இரவு என் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நண்பனின் வீட்டில் படிப்போம். அந்த நண்பனின் தந்தை தென் சென்னை வட்ட செயலாளர் (வீடு எம்.ஜி.ஆர் நகரில்).   அப்பொழுது, அதிமுக படு தோல்வி அடைந்த்து. முடிவுகள் வந்த அன்று இரவு அவனுடைய தாய் தெரிந்தவர்கள் வீட்டில் தங்கினார். எங்களையும் வேறு நண்பர்கள் வீட்டுக்கு செல்லும் படி கூறினார். ஆனால், அடுத்த தினம் தேர்வுக்கு ஒரு பாடத்தில் அந்த நண்பனின் சந்தேகங்களை தீர்க்கவேண்டி இருந்ததால் அந்த நண்பனும் நானும் மட்டும் அவனுடைய வீட்டில் படித்துக் கொண்டிருந்தோம். மற்ற நண்பர்கள் வேறு பாடம் படிக்க அடுத்த தெருவில் கூடியிருந்தனர். நள்ளிரவில் திடீரென்று ஒரே கல் மழை. அவசர அவசரமாக அவன் வீட்டிலிருந்த விளக்குகளை அணைத்து விட்டு பின் வழியாக வெளியே வந்தோம். எனக்கோ மிகப் பெரிய அதிர்ச்சி. ஆனால் அவனோ இது சாதாரணமாக நடப்பதுதான் என்றும் இதே அதிமுக வென்றிருந்தால் திமுகவினர் வீட்டிலும் இப்படிதான் நடக்கும் என்று சாதாரணமாகக் கூறினான். காரணம், பொதுவாக சென்னையில் அதிமுகவினர் சற்று அடங்கிதான் இருக்க வேண்டும் (ஏனென்றால் சென்னை அப்பொழுது திமுக கோட்டை) ஆனால் ஆட்சியோ அதிமுக வசம் எனவே காழ்ப்புணர்வு சற்று அதிகம் இருந்திருக்கும். ஆனால் தற்போது சேகரைப் பொறுத்தவரை அவர் எதிர்கட்சி சார்புடையவர். ஆனால வம்புக்காரர். தேவையிருக்கிறதோ இல்லையோ அனைத்திலும் மூக்கை நுழைப்பவர் அதுதான் காரணமாக இருக்கும். எப்படியிருந்தாலும் அவரை இந்த முறையில் எதிர்ப்பது தவறு தான்.  

கிரிகெட்டில் ஒரு போட்டியைக் கூட பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை. (நல்ல நேரம்!!) ஒரு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை. ஆனால், எண்ணிக்கைகளைப் பார்த்தால் ஓரளவு நன்றாக விளையாடியுள்ளது போல் தான் தெரிகிறது. குறிப்பாக இளைஞர்கள் (ஜடேஜா, ரஹானே, ரெய்னா). தோனியும் ஃபார்மில் வந்த்து போல் தான் தெரிகிறது. ஜடேஜா தன் இடத்தை எங்கே விட்டாரோ (இங்கிலாந்தில் நட்ந்த 20-20 உலகக் கோப்பை சொதப்ப ஆரம்பித்து) அங்கேயே திரும்ப பிடித்துள்ளார்

இன்னும் ஒரு போட்டி மீதியிருக்கிறது அதுவாவது கிட்டுமா என்று பார்ப்போம். அங்கே இலங்கையும் சரியாக விளையாடவில்லை. இதில் ஆசிய ஆடுகளங்களை குறைகூறுவதில் அர்த்தமில்லை. ஆஸ்த்ரேலியா இங்கிலாந்து இந்தியா/இலங்கையில் சொதப்புவார்கள். ஓரளவு அவை மட்டையாட்ட்த்திற்க்கு உதவுவதால் அவர்கள் இது போல வெள்ளையடிக்கப்படுவதில்லை. இல்லையென்றால் அவர்களின் நிலையும் இதுதான். அதுவும் ஆஸ்த்ரேலியாவின் தற்பொழுதைய அணி இலங்கையில் அவர்களின் spin-ஐ ஆடுவது கடினம்தான். ஆஸ்த்ரேலியாவில் நடப்பதால் அவர்கள் கை ஓங்கியுள்ளது. ஆனால் இங்கிலாந்து அணி சற்று வலுவாக முதலிடத்தில் (வரிசையில் மட்டுமில்லாமல் உண்மையாகவே) உள்ளது.

6 கருத்துகள்:

  1. ஓ... என்னடா சீனுவை வலைப்பக்கம் காணோமே என்று பார்த்தேன்....

    திடீர் பயணம்.... எனக்குத் தெரிந்தவரா?


    கலவை எப்போதும் போலவே கிரிக்கெட்-ம் ஒரு பாகம்... :)

    பதிலளிநீக்கு
  2. ஆமாம். தனியாக mail அனுப்புகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. //சென்ற வாரம் நடிகர் எஸ்.வி.சேகர் வீடு மீண்டும் தாக்கப் பட்டுள்ளது.//

    தாக்கியவர் நிச்சயம் அவரது இரட்டை அர்த்த நாடகத்தைப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன்.

    (சமீபத்தில் தில்லியில் அவரது நாடகத்தை பார்த்ததில் இருந்து எஸ்.வி.சேகர் மேல் இருந்த மரியாதை குறைந்தது உண்மை)

    பதிலளிநீக்கு
  4. நன்றி பத்து.

    கிரேஸி மோகன், கோபு-பாபு, சுந்தா ஆகியோர் வசனம் எழுதியவரை அவர் நாடகம் நன்றாக தான் இருந்தது. அவர்களின் விலகல்/மறைவுக்குப் பின் அவருடைய தடம் மாறிவிட்டது. அவர் நல்ல timing sense உள்ள நகைச்சுவை நடிகர் மட்டுமே. நல்ல நகைச்சுவை வசன கர்த்தா அல்ல. அதுதான் காரணம்.

    நகைச்சுவையில் இரட்டை அர்த்த வசனம் என்பது அளவு மீறக் கூடாது. மேலும், பிம்பம் (image) என்று ஒன்று உள்ளது. வெ.மூர்த்தி இரட்டை வசனம் பேசினால் அது தவறாகத் தெரிவதில்லை. ஏனெனில் அவரிடம் அதுதான் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், குடும்பத்துடன் பார்க்கும் ஒரு நாடகத்தில் அது இலைமறை காயாக இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. திடீர் பயணம்......:((((

    கலவை எப்போதும் போல் நல்ல அலசல்......

    பதிலளிநீக்கு
  6. ஆம், ஆதி.

    தீபாவளி சமயம் செல்லலாம் எனத் திட்டமிட்டோம். ஆனால், முன் கூட்டியே செல்லும்படி நேர்ந்துவிட்டது.

    பதிலளிநீக்கு