வியாழன், ஜனவரி 12, 2012

கூடாரவல்லி


இன்று (மார்கழி 27-வது நாள்) கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இன்றைக்கு, குறிப்பாக வைணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ செய்து வழிபடுவர். வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் செய்து வருகிறார்கள்/வருகிறோம். காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவையின் முதல் பத்து பாடல்களில் தன் தோழியரை எழுப்பிய ஆண்டாள், பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள்.

திருவெம்பாவையில் முதல் எட்டு பாடல்கள் தோழியை எழுப்புவதாக இருக்கும். அதற்கு அட்டமா சித்திகளை எழுப்புவதாக பெரியோர் பொருள் கூறுவர். ஆனால்,  ஆண்டாளோ பத்து பாடல்களில் தோழியைத் துயில் எழுப்பக் காரணம் என்ன? மஹாசித்திகளை எழுப்புபவர்கள் சித்தர்கள்;  சித்தர்கள் போக்கு சிவன் போக்கு, ஆண்டாளுக்கு சிவன் போக்கு வேண்டாம்; விஷ்ணு வழிதான் வேண்டும் என்பதாலா?

அப்படியில்லை, முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது (நாராயணனே நமக்கே பறை தருவான்). இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது (செய்யும் கிரிசைகள் கேளீரோ : பரமனடி பாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம், நாட்காலே நீராடி; மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்). அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.

23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படி (காரியம் ஆராய்ந்து அருள்- என)ப் பணிக்கிறாள், ஆண்டாள். [நாம் கேட்கத் தெரியாமல் உளறிவிடுவோம் என்பது ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது.]

24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்)

25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில்  ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் (பய) நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். [கண்ணனும் தீபச் சுடரும் ஒன்று – என்று விசிஷ்டாத்தைவத்திலும் இப்படி அத்வைதம் பார்க்கலாம்].

26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும். [மாலே மணிவண்ணா – பாடலில் சங்கம், பறை, விளக்கு, கொடி எல்லாம் காட்டப்படுகின்றன].

27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் – பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள். 

இரண்டாம் பாடலில் சொன்ன விரதங்கள் முடிந்துவிட்டன. காரணம், கண்ணன் கொடுத்த சன்மானம் – சூடகம் (வளை), தோள்வளை, தோடு, செவிப்பூவே (காதைச் சுற்றிய வளையம்), பாடகம் (கொலுசு) – அதனால் அதை அணிந்து கொள்ளவேண்டியதுதான். ஆடை  உடுப்போம், கண்ணன் முழங்கை வழி வழிந்த நெய்ச்சோறை உண்டு விரதம் முடிப்பதைக் கூறுகிறது.

காஞ்சி பெரியவர், ’நைவேத்யம் பகவானுக்கு இல்லை; பக்தனுக்குத் தான்’ என்று கூறியுள்ளார். அதனால், பொதுவாக விரதம் இருந்தாலும், பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதனால் தான் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு படுத்திக் கொள்கிறாள்.

28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல் (சாதாரணமாக பூஜைகளில் “யதக்ஷர பதப்ரஷ்டம்” என்ற ஸ்லோகத்தைக் கூறுவர்; அதே போல் ‘சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ – கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு அருள்தான் – என்று பொறுத்தருள வேண்டுகிறாள்).

29-ம் பாடல் திரும்பவும் வணங்குதல் (புனர் பூஜை என்று வடமொழியில் கூறுவார்கள். பூஜையை ஒரே நாளில் முடித்துவிடாமல் தினமும் தொடர வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் செய்வார்கள்). ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம்’ என்று அடுத்த தினம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்தப் பிறவிகளிலும் தொடர்ந்து வணங்குவதை உறுதிச் செய்கிறாள்.

30-வது பாடல் பலச்ருதி – அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு – ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.

27-வது நாள் இவ்வாறு நைவேத்யம் படைப்பதால் ”கூடாரை வெல்லும்” என்ற அந்த பாசுரத்தின் பெயராலேயே, இந்த நாள் கூடாரை வெல்லும் கோவிந்தனின் மனதுக்கு உகந்தவளான “கூடார வல்லி” கோதை நாச்சியார் பெயரால் வழங்கப் படுகிறது.

இந்த நோன்பு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்நாளில், பாலில் செய்த சர்க்கரைப் பொங்கலை நெய் விட்டுப் படைப்பர்.

12 கருத்துகள்:

  1. ராம் குமார் எந்த விஷயம்;
    ”கூடாரவல்லி என்பதா (அ) திருப்பாவையின் அமைப்பா?” எதைப் பற்றிக் கேட்கிறாய்?

    பதிலளிநீக்கு
  2. //கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா//

    கூடாரைவெல்லிதான் கூடாரவல்லி ஆயிற்றோ! கோவிந்தன் என்றாலும், கோதை நாச்சியார் என்றாலும் நமக்கு கை நிறைய நெய் வழிய சர்க்கரைப் பொங்கல் கிடைக்குதே.

    பதிலளிநீக்கு
  3. Illa thirupaavaiyoda amaipu pathi sonnen. Nivedayami nu solli neyvedyam panradoda artham Arivikiren nu dan artham danam . Unbikirenu kedayadam. Iduvum Maha periyavar sonnadudan

    பதிலளிநீக்கு
  4. வெல்லி என்றால் வென்றவன்.கூடாரை வென்றவன்,கூடாரை வெல்லி ஆவான்.அதுவே கூடாரவல்லி என்று ஆகியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  5. வெல்லி என்றால் வென்றவன்.கூடாரை வென்றவன்,கூடாரை வெல்லி ஆவான்.அதுவே கூடாரவல்லி என்று ஆகியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு