லோஹ்ரி (Lohri) – லோடி (Lodi) என்று உச்சரிப்பர் - என்பது பஞ்சாபியர்கள், அவர்களின் புஸ் மாதம் நிறைவு பெறுவதை ஒட்டி நடத்தப்படும் விழா. புஸ் மாதம் என்பது பஞ்சாபி மொழியில் புஷ்ய மாதம் என்பதன் திரிபு. இது மக மாதத்தின் முந்தைய மாதம். புஷ்ய மாதம் என்பது நமது தை மாதம் தான். வட இந்தியாவில் தை மாதம் அதாவது புஷ்ய மாதம் 9-ம் தேதி (பௌர்ணமி) அன்றோடு முடிந்து மக மாதம் ஆரம்பமாகி விட்டது. வடஇந்திய மாதங்களைப் பற்றி என் முந்தைய இரண்டு பதிவுகளில் (1,2 ) எழுதியுள்ளேன். இது போதுவாக ஜனவரி, 12 அல்லது 13-ம் தேதியன்று தான் வரும். சாதாரணமாக லோஹ்ரி, நம் போகிக்கு முதல் நாள் கொண்டாடப் படும்.
இந்த லோஹ்ரி நாள் இரவில் பொது இடத்தில் கட்டைகள் மற்றும் வறட்டிகளால் நெருப்பு வளர்த்து, அதைச் சுற்றி ஆடிப் பாடிக் களித்திருப்பர். எள் உருண்டை, வேர்கடலை, சோளப்பொரி ஆகியவற்றை நெருப்பிலிட்டும், வந்திருக்கும் அனைவருக்கும் கொடுத்து உண்டும் மகிழ்வர், ஆனால், நம் போகி போல பழையப் பொருட்களை எரிப்பதுக் கிடையாது; வறட்டி மரக்கட்டைகளைத் தான் எரிப்பர். வட இந்தியாவில் இது குளிர்காலம்; அதனால் இரவில் ஏழை மக்கள் குளிர்காய நெருப்பு வளர்த்து சுற்றி அமர்ந்திருப்பது வழக்கம். எனவே, இதனால் ஏற்படும் சுற்றுப்புற மாசு நம் தமிழகத்தில் போகியன்று இருக்கும் அளவிற்கு அதிகம் இருப்பதில்லை. மேலும், இதில் டயர் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதில்லை என்பதும் கூடக் காரணமாக இருக்கலாம்.
லோஹ்ரி என்பது தில் (எள்) - ரோர்ஹி (வெல்லம்) ஆகியவை இணைந்து திலோர்ஹி என்று வழங்கி நாளடைவில் லோஹ்ரி-யாக மருவியது என்றும் கூறுகிறார்கள்
முந்நாளில் கிராமங்களில் இந்த லோரிக்கு சில நாட்கள் முன்பு சிறுமிகளும் கன்னிப் பெண்களும் வீடுவீடாகச் சென்று வறட்டிகளைச் சேகரித்து, லோரி அன்று மாலை கிராமப் பொது இடத்தில் அவற்றை லோரிக்காகக் கொளுத்த ஆயத்தம் செய்வர். நெருப்பைச் சுற்றிப் பாடும் பாடலில் இந்த நெருப்பு சூரியனின் கிரணங்களுக்கு வலுவூட்டி அதை சூடுபடுத்தி குளிர்காலத்திலிருந்து வேனில் காலத்தை உருவாக்குவதாக பொருள் கொண்டு இருக்கும்.
பின்னர் அக்பர் காலத்தில் இது துல்லா பட்டி (Dulla Bhatti) என்ற சிற்றரசனின் பெயரால் – திலகர் விநாயக சதுர்த்தியை கணேஷ் சதுர்த்தியாக மராட்டிய மக்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டியது போல் – பஞ்சாபியர்கள் அக்பருக்கு எதிராக ஒன்று திரள இதை உபயோகப் படுத்திக் கொண்டனர். இந்நாளைத் தங்கள் பெண்களுக்கு வரன் பார்க்கும் நிகழ்வாகவும் கொண்டுள்ளனர். தலை தீபாவளிபோல் பஞ்சாபியர்கள் தலை லோஹ்ரியை சிறப்பாகக் கொண்டாடுவர். நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைபட்டக் காலத்தில் லோஹ்ரி பண்டிகை வந்தால் அதையே ஒரு திருமண நிகழ்வு போல் விமர்சையாகக் கொண்டாடுவர்.
துல்லா பட்டி (வரலாற்றில் சில இடங்களில் இவனைக் கள்வன் என்றும் குறிப்பிடுவர்- [எப்படி கட்ட பொம்மன் / மருதநாயகம் போன்றவர்கள் ஒரு சிலரால் போராளிகள் என்று புகழப்படும் வேளையில் வேறு சிலரால் கள்வர்கள் என்று குறிப்பிடப்படுவது போல்; பாரதியார் கூட கட்டபொம்மனைப் பற்றி ஒரு கவிதையில் கூடக் குறிப்பிட்டதில்லை. காரணம் அவர் எட்டப்பன்–இன் பாளையமான எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் என்பது தான்]
கள்வனாக இருந்தாலும் அவன் பெரிய பண்ணையார்களிடம் பொருள் சேகரித்து ஏழைகளுக்குக் கொடுத்து உதவியதாகக் கூறுவர். செவிவழி கதைகளின் படி, அவன் வெளி தேசத்திற்கு கடத்தப்பட இருந்த கன்னிப் பெண்களைக் காப்பாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாக லோரி பாடல்களில் உள்ளது.
ஒரு பாடலைப் பார்ப்போம்:
சுந்தர் முண்டிரி ஹோ அழகானப் பெண்ணே
தேரா கௌன் விசாரா ஹோ உன்னை யாரு நினைச்சான்
துல்லா பட்டி வாலா ஹோ துல்லா பட்டிக் காரனா
துல்லே தி தீ வ்யயே ஹோ துல்லா-வின் மகள் கல்யாணம்
சேர் ஷக்கர் பாயே ஹோ (ஒரு) சேர் சர்க்கரைத் தந்தான்
குடி தா லால் பட்கா ஹோ பெண் சிவப்பு அங்கி அணிந்துள்ளாள்
குடி தா ஸாலு பாடா ஹோ அவள் மேலங்கி கிழிஞ்சிருக்கு
சலு கௌன் சமேடே அதை யாரு தைத்தது
சாசே சூரி குட்டி சித்தப்பா வளை செஞ்சாரு
ஜமீந்தாரா லுட்டி ஜமீந்தார் திருடிட்டாரு
ஜமீந்தார் சுதாயே ஜமீந்தார் உதைவாங்கினாரு
படே போலே ஆயே அப்பாவி பசங்க வந்தாங்க
ஏக் போலா ரெஹ் கயா ஒரு அப்பாவி மாட்டிகிட்டான்
சிப்பாஹி ஃபர் கே லே கயா சிப்பாய் கைது செஞ்சான்
சிப்பாஹி நே மாரி ஈட் சிப்பாய் செங்கல்லால் அடிச்சான்
சன்னு தே தே லோரி எனக்கு லோரி (சன்மானம்) தா
தே தேரி ஜீவே ஜோடி (உங்க) ஜோடி நல்லா வாழ்க
(ஹோ ஹோ) [சந்தோஷமாக கத்துகிறார்கள்]
பான்வே ரோதே பான்வே பிட் இல்லாட்டி பிறகு தலைய முட்டிகங்க.
ஆனால், இப்பொழுதெல்லாம் சில இடங்களில் மட்டுமே இந்த மாதிரி பாடல்களைப் பாடுகிறார்கள். குருதாஸ் சிங் மான், தலேர் மெஹந்தி பாடிய் பாடல்களும் உள்ளன. குருதாஸ் மான் சற்று மெலடியாக கொஞ்சம் traditional பாடல்கள் பாடுவார். தலேர் மெஹந்தி பஞ்சாபி ராக் பாடல்கள் தான். ஆனால், பெரும்பாலான இடங்களில், அவர்கள் தோளைக் குலுக்கி ஆடும் (பாங்க்டா) நடனம் ஆடும் விதத்தில் புது புது ஹிந்தி குத்து பாடல்கள் தான் இருக்கின்றன. சென்ற வருடம் அதிகமாக ஓடவிட்ட பாடல் “ஷீலா! ஷீலா கீ ஜவானி”. இந்த வருடம் “Why this கொலவெறி” ஆகத்தான் இருக்கும்.
நாங்கள் நோய்டா வந்து குடியேறிய பின், இங்கே எங்கள் குடியிருப்பில் (கிட்டத்தட்ட பாரத விலாஸ் தான்) அனைத்து மத இன பண்டிகைகள் சமூகக் கூடங்களில் அனைவரின் பங்களிப்புடன் நடைபெறுவது ஒரு சிறப்பு. இது போன்ற மற்றவர்களின் பண்டிகைகளைப் பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நான் சாதாரணமாக இது போன்ற வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.
நல்ல பகிர்வு.
பதிலளிநீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அன்புள்ள ஸ்ரீனிவாசன், உங்களின் லோஹ்ரி கட்டுரை படித்தேன். நன்றாக உள்ளது. வாழ்த்துகள்
பதிலளிநீக்குவிஜயராகவன்
டெல்லி
இங்கே லோஹ்ரிக்கு பாடல் பாடுவது போல் நாங்கள் திருவோணப் பண்டிகைச் சமயம் வீட்டின் முன்புறமிருந்த பெரிய வேப்பமரத்தில் ஊஞ்சலிட்டு ஆடுவோம். அப்போது எனது மாமா பாடும் கிண்டல் பாட்டு ஒரு சில வரிகள் :
பதிலளிநீக்கு“கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!
கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!
சேர்ந்தே நடக்கலாச்சே! சேலை தினுசா உடுக்கலாச்சே!
பார்த்தால் சிரிக்கலாச்சே! பரிகாசம் பண்ணலாச்சே!
கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!
கெட்டுப் போச்சுதே உலகம் குட்டிப் பெண்களாலே!”
என்று பத்துப் பதினைந்து பத்திகள் பாடுவார்.
லோடியைப் பற்றிய நாட்டுப் பாடலைக் கண்டதும் லேடியைப் பற்றியப் பாட்டு நினைவுக்கு வந்தது.
லோஹ்ரியைப் பற்றி நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
நன்றி ஆதி
பதிலளிநீக்குவிஜயராகவன் தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்
பதிலளிநீக்குவாங்க பத்து, ஓணம் பண்டிகைக்குள் வலைப்பூ துவங்கி இதுபோல பாடல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தலாமே!!
பதிலளிநீக்கு