திங்கள், ஜூலை 23, 2012

தில்லியின் நீர் வளம்

என்றென்றும் வற்றாத ஜீவநதியான யமுனை ஓடும் தில்லியின் தற்போதைய நிலை என்று எடுத்துக் கொண்டால் நீருக்கு ஹரியானாவை நோக்கி கையேந்தியிருக்கும் நிலை. யமுனை மட்டும் தான் தில்லியின் நீராதாரமா?

’வீடு திரும்பல்’ திரு. மோஹன் குமாரின் தில்லியைப் பற்றிய இந்த பதிவில், பதிவர் வவ்வால் அவர்களின் ஒரு கருத்திற்கு நான் இட்ட கருத்துக்கள் இதோ…
                        
வவ்வால் :  டில்லில எல்லா இடத்துக்கும் பேரு கஞ்ச், சவுக்,விகார்னு இருக்கு.எதுக்கு அப்படி பேரு வைக்கிறாங்க தெரியலை

நான்:        சவுக் (chowk) என்றால் சந்தி அல்லது கூடல் - இரண்டு தெருக்கள் கூடுமிடம். உதாரணத்திற்கு சாந்தினி சௌக் என்றால் முகலாயர் காலத்தில் பௌர்ணமி நிலவில் கூடுமிடம்.

விகார் என்றால் வசிக்கும் இடம். தமிழில் சரித்திர நாவல்களில் படித்த (புத்த) விகாரம் தான். [விகாரமாக இருப்பதாஎன்று விவகாரமாகக் கேட்கக் கூடாது]

கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை.

கஞ்ச்-ஐயும் குஞ்ச்-ஐயும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். வசந்த் குஞ்ச் என்று ஒரு இடம் உள்ளது. அது வசந்த் கஞ்ச் அல்ல. குஞ்ச் என்றால் மரங்கள் நிறைந்த தோப்பு அல்லது பண்ணை. குஞ்ச் என்பது பண்ணை வீடுகள் (farm house) நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

வவ்வால் : நன்றி!
//கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை.//
இப்போ புரியுது , தார்யா கஞ்ச் என்ற இடத்தில் ஏகப்பட்ட புத்தக கடைகள், சாலையோரம் எல்லாம் புத்தகக்கடைகள் தான்,புது புத்தகமே மலிவாக கிடைக்குது,எல்லாம் பைரேட்டட் புக் தானாம்.
புத்தகசந்தைனு சொல்வது பொருத்தம் தான்.
நான்:        /தார்யா கஞ்ச் //
வவ்வால், தர்யா என்றால் நீரோட்டத்தைக் குறிக்கும்; அதாவது நூலோட்டம் போலத் தொடர்ச்சியாக இடைவிடாது நீர் ஓடுவது. [தமிழில் கூட தாரைத் தாரையாக் கண்ணீர் வழிந்தது என்று சொல்வோமே. தாராஎன்று எண்ணெய் பிராண்ட் கூட இருக்கிறது. அது இடைவிடாமல் தொடர்ச்சியாக எண்ணெய் கிடைப்பதைக் குறிக்கும்]

இங்கே இது (யமுனை) ஆற்றை ஒட்டியச் சந்தை என்று பொருள் கொள்ள வேண்டும். [நீங்கள் குறிப்பிட்டது போல் இங்கு புத்தகங்கள் தண்ணீர் பட்ட பாடுதான்]
தொடர்ந்து தில்லியின் பல்வேறு இடங்களைப் பற்றி எண்ணிப் பார்த்த பொழுது பெரும்பாலான இடங்களின் பெயர்கள் - சந்தை என்பவற்றைத் தவிர்த்து - தோப்பு, கிணறு, தோட்டம் என்று நீராதாரங்களையும் அதைச் சார்ந்த குறிப்புகளையும் கொண்டிருந்தது.

இப்பொழுது அவற்றில் சிலவற்றின் பெயர்களைப் பார்ப்போம்…

தௌலா குவான் : தில்லியில் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று தௌலா குவான் என்று அழைக்கப்படும் தூலா குவான். தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் இது அமைந்திருக்கிறது. ’குவான்’ என்றால் கிணறு; ‘தூலா’ என்றால் தூய்மையான அதாவது வெண்மையான கினறு. வரலாற்றிலும் மிக முக்கியமான இடம். தில்லி-குர்கா(வ்)ன் வழிப்பாதையில் அமைந்திருக்கும் இது ஷா ஆலம் காலத்திலிருந்து உபயோகத்தில் இருந்தது. சிந்தியா மஹாராஜா-வால் ஆங்கில கிருஸ்த்துவ பாதிரியார்களுக்கு கத்தீட்ரல் கட்ட முதலில் இதன் அருகில் உள்ள நிலம் தான் கொடுக்கப் பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கிழக்கிந்திய நிறுவனம் இந்த இடத்தை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்து விட்டதால் கதீட்ரல் பின்னர் ’டாக் கானா’ என்றழைக்கப்படும் தில்லியின் மையப்பகுதிக்கு அருகில் கட்டப்பட்டது.

லால் குவான்: இது ஷாஜகானாபாத் என்றழைக்கப்படும் பழைய தில்லியில் ஷாஜகானின் காலத்திற்கு முன்னரே துக்ளக் அல்லது லோதி வம்ச அரசர்களால் கட்டப்பட்டது (ஃபெரோஸ் ஷா காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கருத்து). இது இன்றும் சாந்தினி சௌக் பகுதியில் செயற்கை நீருற்றுடன் இருக்கிறது. பகதூர் ஷா ஸஃபர்-இன் மனைவி ஜீனத் மஹல் இதன் அருகில் தான் வசித்து வந்தார். அது இன்று பறவைகளின் மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

ஜங்லி குவான்: இது திஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தின் அருகில் இருந்தது. ஒரு காலத்தில் இது வனப்பகுதியாக இருந்திருக்கிறது. பின்னர், இந்த பகுதியில் இருந்த பேகம்-கா-பாக் (ராணியின் தோட்டம்) என்ற பெயரில் ஜஹனாரா, ரோஷனாரா, குட்ஸியா பேகம் போன்றவர்களால் பராமரிக்கப்பட்டத் தோட்டத்திற்கு இந்தக் கிணறு தான் நீராதாரமாக இருந்துள்ளது. இது இன்று உபயோகத்தில் இல்லை.

இவற்றைத் தவிர பாவ்லி (படிக்கிணறு) என்று பல இருந்தன. உக்ரசேனரின் பாவ்லி, காரி பாவ்லி (காரி  என்ரால் உப்புகரித்த; இதன் நீர் உவர்ப்பாக இருக்கும் என்பதால்  இப்பெயர்) இந்த பகுதியின் நீராதாரங்களும் சரி, நிஜாமுதின் பாவ்லி, மெஹ்ரோலி பாவ்லி ஆகியவையும் உபயோகத்தில் இல்லை. நிஜாமுதின் பாவ்லி ஒரு காலத்தில் ஹஸரத் நிஜாமுதின் தர்காவிற்கு இளவரசர் ஜௌனா (முகமது-பின்-துக்ளக் தான்), ஹஸன் கங்கூ (பாமினி வம்சத்தைத் தோற்றுவித்தவர்) போன்ற அரச வம்சத்தினர் இந்த தர்காவிற்கு வரும் பொழுது அவர்களின் பரிவாரங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்தது இந்த நிஜாமுதின் பாவ்லிதான்.

இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை, இது போன்ற  25-20 கிணறு/நீராதாரங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில பெயர் மட்டுமே இருக்கிறது. அவை, லௌண்டோன்-கா-குவான் (விடலைப் பயல்களின் குளம்), ரண்டியோன்-கா-குவான் (பறத்தையர் குளம்), சிடிமாரோன்-கா-குவான் (பறவையை அடிப்பவர் குளம்), பேரிவாலா குவான் (இலந்தைமரக் குளம்),  நீம்-கா-குவான் (வேப்பங்குளம்), பீபல்-கா-குவான் (அரசமரக்குளம்), கிகர்-கா-குவான் (கருவேலமரக்குளம்)ஆகியவை சாவடி பஜார் பகுதியில் இருந்தன. தௌல காவ்ன் பகுதிக்கு அருகில் மச்சிமாரன்–கா-குவான் (மீனவர் குளம்) என்றும் ஒன்று இருந்ததைக் குறிப்பிடுகிறது.

இன்று ராம்லீலா மைதானம் என்று பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் இடத்தில் ஷாஜி-கா-தலாப் (தலாப் என்றால் குளம்) இப்பொழுது புதுப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் அருகில் இருந்த மற்றொரு கிணறு இன்று இல்லை. அது தேவ்ராணி,ஜேட்டானி-கா-குவான் [தேவ்ராணி என்றால் சின்ன மருமகள்; ஜேட்டானி என்றால் பெரிய மருமகள். மாமியார் கொடுமை தாளாத இரண்டு மருமகள்களும் நீரெடுக்க இங்கு வந்து தங்களின் வேதனையை தினமும் பகிர்ந்து கொண்டு, முடிவில் வேதனைத் தாங்காமல் இதில் விழுந்து தற்கொலைச் செய்து கொண்டதாகக் கதை.]

மெஹ்ரோலி பகுதியில் மெஹ்ரோலி பாவ்லி-யைத் தவிர ஹவ்ஸ் (Hauz) என்ற குளங்களும் நிறைந்திருந்தன. ஹவ்ஸ்-காஸ் இன்றும் தில்லியின் பிரபல பகுதி. ஆனால், இங்கு குளத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. ஹவ்ஸ்-எ-ஷம்மி என்று குதும்பினாருக்கு அருகில் இருக்கிறது.  இது அல்டாமிஷால் கட்டப்பட்டது. இதில் படகுப் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.  உயர் நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு  இதன் பராமரிப்பை தில்லி மாநகராட்சியிடமிருந்து ASI-யிடம் மாற்றிய பின் தற்போது இது புதுப்பிக்கப் பட்டுள்ளது.

இத்தனை நீராதாரங்கள் இருந்தும் இன்று தில்லியின் நிலை தண்ணீருக்கு ஹரியானா, உ.பி ஆகியவற்றை எதிர்பார்த்திருப்பது தான். முக்கிய காரணம் மக்கள் தொகை என்றாலும் நீராதாரங்களைச் சரிவர பராமரிகாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். ஹவ்ஸ்-எ-ஷம்மி-யைப் போன்று ஒவ்வொன்றிலும் உயர் நீதிமன்றம் தலையிட்டப் பின் தான் சீர் செய்ய வேண்டுமென்றால். நாட்டில் தெருவுக்குத் தெரு உயர்நீதி மன்றம் தேவைப்படும்.

13 கருத்துகள்:

  1. ஹூம்! பெருமூச்சுத்தான் விட முடிகிறது.

    நந்தவனத்தில் ஓர் ஆண்டி போல கிடைத்தற்கரிய அரிய செல்வமாம் தண்ணீரை எப்படியெல்லாம் தொலைத்து நிற்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் பத்து, பெருமூச்சு மட்டும் தான் மிச்சம் இருக்கிறது.

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  2. நீராதாரங்களைச் சரிவர பராமரிகாமல் இருப்பதும் ஒரு காரணம் தான்

    பதிலளிநீக்கு
  3. இருக்கும் எல்லா நீர் நிலைகளைப் பாழாக்கி விட்டு தண்ணீருக்குத் தத்தளிக்கிறோம்...

    சனிக்கிழமை தில்ஷாத் கார்டன் சென்றேன். யமுனையைக் கடக்கும் போது நாசியில் அப்படி ஒரு நாற்றம் தாக்கியது. லக்ஷ்மி நகர் வரும் வரை மூக்கை மூடியபடியே பயணம் செய்ய வேண்டியிருந்தது.... கொடுமை.

    த.ம. 1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் வெங்கட், நல்ல வேளையாக மெட்ரோவில் தான் தினம் யமுனையைக் கடக்கிறேன். அதனால் அதன் நாற்றம் தெரிவதில்லை.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  4. நேற்று சத்யமேவ ஜெயதேயிலும் டில்லியின் ஆறுகள் பற்றி தான் பேசினர்

    நம் பதிவிலிருந்து இந்த பதிவுக்கு மேட்டர் கிடைத்ததில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா! நான் பார்க்கவில்லையே! சனிக்கிழமை, மறு ஒளிபரப்பு செய்யும் போது பார்க்கிறேன்.

      நன்றிகள் மோகன்.

      நீக்கு
  5. தி ஹிந்து நாளிதழின் திங்கள்கிழமை இணைப்புகளில் தொடர்ந்து எழுதி வரும் ஆர்.வி. ஸ்மித் இவற்றைப்பற்றி எழுதியது நினைவு வருகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ளவை பெரும்பாலும் கிணறுகள். கடைசியாகக் குறிப்பிட்ட குளங்கள் எப்போதோ மூடப்பட்டு விட்டன. இப்போதும் ஏரிகள் போல சில நீராதாரங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு மான்கள் பூங்காவில் உள்ள பெரிய குளம். ஹவுஸ் காஸ் பின்புறம் வரைக்கும் விரிந்திருக்கிறது இது. படகுகள் இயக்கப்பட்ட அடையாளங்கள் தெரிகின்றன. இதை சரியாகப் பராமரித்தால் சிறப்பான சுற்றுலாத்தலமாக மாற்ற முடியும்.

    பதிலளிநீக்கு
  6. வசந்த் குஞ்ச் போகும் பாதையில் நீராதாரங்களாக இருந்த பகுதிகள் எல்லாம் இன்று பெரும்பெரும் மால்கள்... இந்திரா காந்தி பல்கலை வளாகத்தில் திட்டமிட்டால் சிறப்பான நீராதாரத்தை உருவாக்க முடியும். ஜே.என்.யு.விலும் செய்யலாம். தில்லியில் வெளித்தோற்றத்தை அழகுபடுத்தி பெயர்வாங்குவதில்தான் அரசுகளுக்கு ஆர்வம் - அதில்தான் பணமும் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதும் காரணம். நடைபாதைகள் எல்லாம் தளமிடப்பட்டு, நிலத்தடி நீர்வளத்தைக் குலைத்தாயிற்று. தண்ணீர் விஷயத்தில் தமிழகத்துக்கும் தில்லிக்கும் ஒரு ஒற்றுமை - இரண்டுமே வெளி மாநிலங்களிலிருந்து வரும் நீரையே நம்பியிருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை ஷாஜஹான்.

      ஏரி மாவட்டம் என்று கூறப்பட்ட செங்கல்பட்டில் இன்று இருக்கும் ஏரிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். சென்னைப் புறநகரில் (தற்போது சென்னையின் முக்கிய பகுதி) வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், கீழ்கட்டளை என்று நான் கல்லூரியில் பயிலும் பொழுது பார்த்தது உண்டு. தற்போது அவை நல்ல நிலையில் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாம் வீட்டு மனைகளாக மாறிப் போயிருக்கும்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  7. சார் இந்தப் பதிவில் இருந்து டெல்லியை பற்றி அறிந்து கொண்டேனோ இல்லையோ நிறைய ஹிந்தி வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன், எனக்கு ஹிந்தி கற்க வேண்டும் என்று நெடுநாள் ஆசை, இப்படி கிடைக்கும் தகவல்களில் இருந்து தான் கற்றுக் கொள்ள வேண்டும் போல

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றிகள் சீனு.

      வைரமுத்து ஒரு பேட்டியில் பாரதிதாசனின் ‘துன்பம் நேர்கையில்’ பாடல் குழந்தையைப் படிக்கத் தூண்டும் பாடல் காதல் பாடலாக மாறியதைக் குறிப்பிடும் பொழுது ‘வயலுக்கு இரைக்கப்படும் நீர் களைக்கும் பாயும்’ என்பதைச் சற்று மாற்றி ’நந்தவன’த்திற்கும் பாய்ந்தது என்று குறிப்பிட்டார். அதுபோல் இந்த பதிவில் வேறு பயனும் இருந்தால் மகிழ்ச்சி தான்.

      நன்றிகள்.

      நீக்கு