வெள்ளி, மார்ச் 22, 2013

உலக நீர் நாள்



இன்று உலக நீர் நாள்…

1993 ஆம் ஆண்டு முதல் மார்ச் 22 ஆம் நாள் உலக நீர் நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1992-ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

’நீரின்றி அமையாது உலகு’ என்பது திருவள்ளுவர் வாக்கு.

உலகின் 79 சதவிகிதப் பரப்பு நீரால் அமைந்தது தான் என்றாலும் அதில் ஒரு சதவிகிதம் தான் குடிநீராகப் பயன்படுத்த முடியும். நாளும் வளர்ந்து வரும் மக்கள் தொகையில் இன்று நன்னீர் கிடைப்பது மிகவும் அரிதாகி வருகிறது.

உலகின் தண்ணீர் தட்டுப்பாட்டிற்குக் காரணமாகக் கீழ்க் கண்டவைக் குறிப்பிடப்படுகின்றன…

மக்கள் தொகை பெருக்கம்;
மரங்கள்/காடுகளை அழிப்பு;
மழை நீரை வீணாகுதல்;
சுற்றுச்சூழல் மாசுபாடு;
அதிதீவிரத் தொழில் மயம்

இதைக் கருத்தில் கொண்டு 2010 ஆம் ஆண்டு ஐநா-வில் கொண்டுவரப்பட்டத் தீர்மானத்தின் படி சுத்தமானத் தண்ணீரும் சுகாதாரமானக் கழிவு வடிகாலும் மனித உரிமையின் ஒரு அங்கமாக அங்கீரிக்கப்பட வேண்டும் என்பது அதை அவர்களுக்கு அளிப்பது அரசின் கடமை என்றும் ஏற்கப்பட்டது. இந்தியாவும் இந்தத் தீர்மானத்தை ஏற்று கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்று.
ஆனால், 2012 ஆம் ஆண்டு மத்தில், இந்திய அரசின் புதிய தண்ணீர் கொள்கையை அறிவித்தது. இதில் இரண்டு அம்சங்கல் உள்ளன, அவை...

முதலாவதாக, அனைத்து நீராதாரங்களும் பொதுச் சொத்தாகக் கருதப்படும். அடிப்படை மனிதத் தேவைகளுக்கும், ஆறுகள் வற்றாமல் தக்கவைக்கவும் போதுமான நீர் அளவு நிர்ணயிக்கப்பட்டு, மீதி தண்ணீர் அரசின் கட்டுப்பாட்டில் வரும். இந்த மீதமுள்ள நீரை அரசு, விலைக்கு விற்று பொருள் ஈட்டக்கூடிய ஒரு சரக்காகக் கருதப்படும்.
அடுத்து, மக்களுக்கு குடி நீர், பாசன நீர் விநியோகிக்கும் வேலையை அரசு தன் பொறுப்பிலிருந்து விடுவித்து அதை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பது.

சென்ற தசாப்தங்களில் கேரளாவில் கோக்கோகோலா நிறுவனத்திற்கு பொது மக்களுக்கான நீராதாரத்தில் உரிமையளிக்கப்பட்ட பொழுது அதை எதிர்த்து நடந்த வழக்கில் உச்ச நீதி மன்றம் அதைக் கண்டித்தது. ஆனால், இந்தக் கொள்கையின் படி சட்டரீதியாக அந்த உரிமையை அரசு தனியாருக்கு தாரைவார்க்க முடியும்.

இதன் முதல் படியாக சென்ற ஆண்டு தில்லி நீர் குழு (Delhi Jal Board) அரசு-தனியார் பங்களிப்பில் (Public Private Partnership) 24 மணிநேரமும் நீர் விநியோகம் என்ற திட்டத்தை அறிவித்தது. இதன்படி மின் விநியோகத்தைப் போல தனியாரை நீர் விநியோகத்தில் ஈடுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை முன்னுதாரணமாகக் கொண்டு மெல்ல மற்ற மாநிலங்களுக்கும் இத்திட்டத்தை செயல் படுத்த முனையலாம்.
இத்திட்டதிற்கு எதிரான போராட்டங்களையும் கருத்தரங்கினையும் ’நீர் ஜனநாயக மக்கள் முன்னணி’ என்ற அமைப்பு நடத்த உள்ளது. போல்வியாவைச் சேர்ந்த பப்பல்லோ சோலன் இந்த கருத்தரங்கில் கலந்து உரையாற்ற உள்ளார். 2010-இல் ஐநா தண்ணீரை மக்களின் அடிப்படை உரிமையாக அறிவித்ததில் முக்கிய பங்காற்றியவர், போல்வியாவின் ஐநா தூதரான இந்த சோலன். போல்வியாவில் தண்ணீர் இவ்வாறு தனியார் மயமாக ஆக்க முற்பட்டபோது அங்கு போராட்டம் நடத்திச் சட்டத் திருத்தம் நடத்த போரடியும் உள்ளார். தன் அனுபவத்தை இந்த கருத்தரங்கில் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மெல்ல மெல்ல, இனி நாம் குடிக்கும் நீருக்கும்  பன்னாட்டு நிறுவனம் நிலை நிர்ணயிக்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது!

8 கருத்துகள்:

  1. நீர் பற்றி நன்றாகச் சொன்னீர்!

    என்ன சொல்லி என்ன பயன். நீருக்கு கஷ்டப்படுபவர்கள் கூட அது நிறைய கிடைக்கும் காலகட்டத்தில் அதை சேமிக்க ஏரிகள் வேண்டுமென்பதையும் மறந்து விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெரும்பாலான ஏரிகள் இன்று அடுக்குமாடிக் குடியிருப்பாக மாறிவிட்டன!

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பத்து!

      நீக்கு
  2. வந்தாலும் வரும்... நாட்டின் விழிப்புணர்வு அப்படித்தான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஊடகங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆனால், அவை இது போன்ற விஷயங்களைக் கண்டு கொள்வதே இல்லை. பரபரப்பாக ஏதாவது செய்தி இருந்தால் அவை முன்னிலைப் படுத்தப்பட்டு இது போன்ற செய்திகள் மறைக்க/மறக்கடிக்கப் படுகின்றன!

      வருகைக்கு நன்றிகள் தனபாலன்!

      நீக்கு
  3. நல்ல பதிவு .நீரை சிக்கனமாக செலவு செய்வதில் நாம் கவனம் செலுத்தவில்லை.நீர் தனியார் மயம் ஆவது தடுக்கப் படவேண்டியதே விழிப்புணர்வு அவசியம் வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீர் பயன்பாட்டில் சிக்கனம் மிக அவசியம்!

      தங்கள் கருத்திற்கு நன்றிகள் முரளி!

      நீக்கு
  4. இப்பொழுதே காசு கொடுத்துதான் தண்ணீர் குடிக்க வேண்டியுள்ளது. எதிர் காலத்தில் விலையை மட்டுமல்ல, வீட்டுக்கு வீடு, தண்ணீருக்கு என்று ஒரு அளவு நிர்ணயிக்கப் பட்டாலும் வியப்பதற்கில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! இப்பொழுதே பெரும்பாலும் சுத்தமான தண்ணீர் என்று விளம்பரப்படுத்தப் பட்டு தனியாரிடம் காசு கொடுத்துதான் வாங்கிக் குடிக்கிறோம். மாநகராட்சிகள் தரும் தண்ணீர் உவர்பாக இருப்பதற்குப் பின்னர் இவர்களின் பங்கும் இருக்க வாய்ப்பும் இருக்கிறது.

      வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் ஜெயக்குமார்!

      நீக்கு