சனி, டிசம்பர் 24, 2011

கடமை கண்ணியம் கட்டுப்பாடு (அனுமத் ஜெயந்தி)

இன்று அனுமத் ஜெயந்தி. அதை ஒட்டிய ஒரு கதை.

பூலோகத்தில் திருகார்த்திகை நாள்.

தேவலோகம். அங்கு, அது நள்ளிரவுக்கும் பொழுது புலருவதற்கும் இடைப்பட்ட நேரம். ஆம், பூமியின் ஒர் ஆண்டு தேவலோகத்தில் ஒரு நாள் அல்லவா?

ஆயினும் இந்திரனால் ஓய்வெடுக்க முடியவில்லை. காரணம், இராவணன். அவனை நினைத்தாலே தேவர்களுக்கு அச்சம் தான். ஆம், ”அவன் பிரமனிடமும் பரமசிவனிடமும் எண்ணிலா வரங்களைப் பெற்றுள்ளானே, என்ன செய்வது. விஷ்ணு நேரம் வரும் போது அவனை அழிக்க, தானே அவதரிப்பதாகக் கூறியிருகிறார். என்றாலும், அவர் ஒரு சாதாரண மானிடனாகத் தானே அவதரிப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த இராவணனோ  கொடிய அரக்கன். அவனை ஒரு  சாதாரண மானிடனால் எப்படி அழிக்க முடியும்? நாம் தான் ஏதாவது செய்ய வேண்டும்என்று நினைத்தான்.

உடனே, இந்திரனின் மனதில் நாமும் மற்ற தேவர்களும் பூமியில் தங்கள் அம்சங்களை பூமிக்கு அனுப்பலாம். அதற்கு பிரம்ம தேவரின் உதவியை நாடலாமா? ஆனால், அவர் ராவணனுக்குக் கொடுத்த வரங்கள் தானே இத்தனைக்கும் காரணம். அதனால், அவர் உதவியைத் தானாக வேண்டக்கூடாதுஎன்றும் நினைத்தான்.

சத்திய லோகம்.

பிரம்மனுக்கு, பூவுலகில்  நடக்கும் திருகார்த்திகைத் திருவிழாவை கண்டதும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவர் பரமேஸ்வரன்; தனக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் நடந்த போட்டியில் அவர்தம் அடிமுடியைக் கண்டவரே பெரியவர் என்று கூற, தான் அவருடைய முடியைக் கண்டதாகப் பொய்யுரைத்தது நினைவுக்கு வந்து, ”மனம் ஒரு குரங்கு - என்று கூறுவர்; அன்று என் மனம் ஏன் இந்தக் குரங்குத் தனத்தைச் செய்ததுஎன்று பெண் போல நாணமுற்றார். ஆனாலும், அந்த பரமன் தன்னை மன்னித்து அருளியதை எண்ணி, “என்னே! அவரது கருணைஎன்று நினைத்தார்.

உடனே அவர் திருக்கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் உருண்டு பூமியில் விழுந்தது.

அது என்ன சாதாரண நீரா?

படைப்பவனின் கண்ணீர் அல்லவா. உடனே, அது ஒரு உருவம் எடுத்தது. அழகான ஆகிருதியுடனான உருவம். ஆனால், அதன் முகமோ வானரம். அதைக் கண்டவுடன் பிரம்மனுக்குத் தான் தன் மனம் குரங்கு என்று எண்ணியதால் அது குரங்கு முகத்துடன் ரிஷ்யமுகனாகப் பிறந்தது புரிந்த்து.

அது மட்டுமா? மஹா விஷ்ணு பூமியில் தோன்றுவதற்கு முன் செய்யும் ஆயத்தத்தின் ஒரு பகுதிதான் அது என்பதும் புரிந்தது. சற்று முன், தேவலோகத்தில் இந்திரன் மனதில் தோன்றிய எண்ணங்களையும் இனி நடக்க இருப்பவைகளையும் எண்ணி மனதில் சிரித்துக் கொண்டார். உடனே மஹா மாயையை அழைத்து, “தாயே, தாங்கள் அங்கு ஒரு மாயக் குளத்தை உருவாக்குங்கள்.” என்று வேண்டினார்.

அதன் படியே அங்கு ஒரு குளம் உருவானது. குளத்தைக்  கண்டதும்  அந்த ரிஷ்யமுகன்வேகமாக அந்த குளத்தில் இறங்கி நீராடினான்.

! என்ன இது. நீரில் நனைந்ததும் அவன் அழகிய பெண்ணாக உருமாறிவிட்டானே. இனி என்ன நடக்கும்?

தேவலோகத்தில் பூமியில் எப்படித் தன் அம்சத்தை அனுப்புவது என்று எண்ணிக் கொண்டிருந்த இந்திரன், பூமியில் திடீரென்று முளைத்த அந்த அதிசயக் குளத்தையும் அதில் நனைந்த உடைகளுடன் கூடிய அந்த அழகியைக் கண்டான். கண்டதும் காமுற்று இந்தப் பெண் மூலம் தன் அம்சத்தை பூமிக்கு அனுப்பத் தீர்மாணித்தான். அகலிகையைக் கண்டு காமுற்று, உடல் முழுதும் ஆயிரம் பெண்குறிகள் தோன்றும்படி பெற்ற சாபமெல்லாம்  மறந்து போய்விட்டது. அப்பெண்ணை காமத்துடன் நோக்கினான். உடனே, பெண் உருவில் இருந்த அந்த ரிஷ்ய முகன் ஒரு குழந்தையை ஈன்றான்(ள்). பெண் உருவில் இருந்தாலும், அது வானரம் தானே குழந்தையும் வானரமாகப் பிறந்தது. அதைக் கண்டவுடன் ரிஷ்ய முகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆணாகிய தனக்கு எப்படி குழந்தைப் பிறந்தது என்று புரியாமல் விழித்த அவன் முன் தோன்றிய இந்திரன்  நடந்ததை விளக்கினான். அப்பொழுதுதான் அவனுக்கு தான் குளத்தில் இறங்கியவுடன் பெண்ணாக மாறியது எல்லாம் புரிந்தது. ஆனால், ஆணாகிய தான் எப்படி அந்த குழந்தையை வளர்க்க முடியும் என்று நினைத்த அவனிடம் இந்திரன், “இந்த குழந்தை பலவான். என் பலமும் உன் பலமும் சேர்ந்து, இருவரின் பலமும் கொண்டு இருக்கும்.

அதே நேரம்  தேவலோகத்தில் சூரியனின் மனம், தன் காதல் மனைவி உஷாவுடன் சேர்வதற்கான காலமானஉஷாகாலத்தை எண்ணிக் கொண்டிருந்தது. ”பூவுலகில் மானிடனாக அவதரிக்கும் விஷ்ணு, சூரிய வம்சத்தில் பிறக்கப் போவதையும் அவருக்கு துணையிருக்க தன் அம்சத்தை எப்படி அனுப்புவது?” என்றும் நினைத்துக் கொண்டிருந்தான்

அவன் முன் தோன்றிய நாரதர் பூலோகத்தில் இந்திரனின் அம்சம் பிறந்துவிட்டது என்று நடந்ததைத் தெரிவித்தார். இந்திரன் தன்னை முந்தியதை அறிந்தவுடன் சூரியன் அவசரபுத்தியுடன் தானும் உடனே அந்த பூலோகப் பெண்ணின் மூலம் தன் அம்சத்தை அனுப்ப முடிவெடுத்தான்.

அதேவேளையில் பூமியில், தான் முதல் முறை பெண்ணாக மாறிய போது இந்திரனையே மயக்கிய தன் முகத்தைப் பார்க்காததை எண்ணியரிஷ்ய முகன்அதை பார்க்க விரும்பி மீண்டும் அந்த மாயக் குளத்தில் மூழ்கி எழுந்து தன் முகத்தைப் பார்த்தான். அதே சமயத்தில் சூரியனும் இந்திரனின் அம்சத்தைப் பார்க்க பூலோகத்தில் தன் பார்வையை செலுத்தினான். அங்கே தேவர்களும் மயங்கும் அந்தரிஷ்ய முகன்-இன் பெண்ணுருவைப் பார்த்தான். உடனே தன் மனைவி உஷாவை மறந்து அந்தப் பெண் மேல் மோகம் கொண்டு அவளைக் காமத்துடன் நோக்கினான். உடனே அவள் மீண்டும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அங்கு தோன்றிய சூரியன் அக்குழந்தை தன் அம்சம் என்றும், மஹாவிஷ்ணு பூமியில் சூரிய வம்சத்தில் தோன்றும் பொழுது அவருக்கு அக்குழந்தை உதவும் என்று எடுத்துரைதான்.

நடந்த அனைத்தையும் வாயுதேவனுக்கும் நாரதர் எடுத்துரைத்து “வாயுதேவனே! நீ எப்பொழுது உன் அம்சத்தை பூமிக்கு அனுப்பப் போகிறாய்?” என குறும்புடன் கேட்டார்.

உடனே வாயுதேவனும், “முனி ச்ரேஷ்டரே! என் அம்சம் எப்போதுத் தோன்ற வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். பூலோகத்தில் திருகார்த்திகை நேரமான இப்பொழுது, சிவபெருமானை நினைப்பது தான் தற்சமயம் என் கடமை. இதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்என்று கூறி சிவபூஜையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.

அவன் பக்தியில் மனம் உருகிய சிவபெருமான் அவன் முன் தோன்றி, “வாயுதேவனே, பூலோகத்தில் அஞ்சனா தேவியும் கேசரியும் என்னைத் தன் மகனாகப் பெற வேண்டி தவமிருந்து வருகின்றனர். விஷ்ணு, பூலோகத்தில் ராமாவதாரம் செய்யவுள்ளார். அவருக்கு உதவியாக என் ருத்ராம்சம், அஞ்சனை புத்திரன் ஆஞ்சனேயனாகத் தோன்ற இருக்கிறது. என் அம்சத்தை அஞ்சனையிடம் சேர்க்க உன்னை விட தகுதி வாய்ந்தவர் யாருமில்லை. குழந்தை என் அம்சமாக கேசரி நந்தனாக இருந்தாலும், நீ கொண்டு சேர்ப்பதால் உன் அம்சமாக உன் மனோ வேகத்தோடு மாருத புத்ரன்மாருதியாக ஈரேழு பதினான்கு லோகத்திலும் கொண்டாடப் படும்என்று அருளினார்.

தான் ப்ரம்மதேவனின் கண்ணீரிலிருந்து தோன்றிய காரணம் ரிஷ்யமுகனுக்கு விலங்கியதும் அவன் முன் இருந்த மாயையும் மாயக்குளமும் விலகின. ரிஷ்யமுகனும் தன் மானிட ரூபம் விலக்கி தன் மக்களுக்கு காவலாக அங்கேயே பர்வதமாக உருமாறினான்.

ராமாவதாரம் பூலோகத்தில் நடைபெற்ற போது, அகங்காரமும் காமமும் கொண்டு பெற்ற இந்திரனின் மகனான வாலி தானும் அகங்காரமும் காமமும் கொண்டு தன் இளைய சகோதரன் சுக்ரீவனின் மனைவியையே சிறைபிடித்தான்.  

அவசரபுத்தி கொண்ட சுக்ரீவனோ ஆராயாமல் தன் அண்ணன் வாலிதான் இறந்தான் என்று மாயாவியுடன் அவன் போரிட்டுக்கொண்டிருந்த குகையின் வாயிலை பாறையால் மூடினான். சூரியன் கண் எதிரே அழகிய பெண்ணைக் கண்டதும் தன் மனைவி உஷாவை மறந்தது போல் அரசும் அரசியும் கிடைத்தவுடன் சீதாதேவியைத் தேடுவதைக் கூட மறந்து கள்ளுண்டு களித்திருந்தான்.

ஆனால், பக்தியும் தெய்வத் தொண்டுமே கருத்தில் கொண்டிருந்த வாயுவின் புத்திரன், வாயுதேவனைப் போலவே கடமையை கட்டுப்பாட்டுடன் கண்ணியமாக செய்ததால் கடவுளாகவேப் போற்றப் படுகிறான். வெறும் எண்ணம் மட்டும் நன்மையை விழைந்தால் போதாது, அதற்கானச் செயலும் முறையான தானக இருக்க வேண்டும் என்று அந்த அஞ்ஜனை மைந்தனைத் துதிப்போம்.

குறிப்பு:      பொதுவாக, வாலி, சுக்ரீவனின் தாய்-தந்தையரைப் பற்றி குறிப்புகள் ராமாயணப் புத்தகங்களில் இல்லை. வட இந்தியாவின் செவி வழிக் கதைகளில், இந்திரனும் சூரியனும்  அகலிகையுடன் இணைந்ததால், வாலி சுக்ரீவர்கள் பிறந்தனர் என்று கூறுவர். ஆனால், இதற்கு புராண குறிப்பு எதுவும் இல்லை. மேலும், ஒரு முறை நடந்தால் அது மன்னிக்கக் கூடியது. அதனால் ராமன், அகலிகைக்கு சாப விமோசனம் கொடுத்தது. எனவே, இது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்க வேண்டும். இந்த ரிஷ்ய முகனைப் பற்றிக் கேரள செவி வழி கதைகளில் குறிப்புகள் உள்ளன. அதை ஒட்டியே மேலே உள்ள இந்த புனைவு.

12 கருத்துகள்:

  1. அருமையான பதிவு. செவி வழி கதை என்றாலும் நம்பும்படியாகவே உள்ளது இந்த கதை. பகிர்தலுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பதிவில் இன்ட்லி, தமிழ் 10, உலவு போன்ற திரட்டிகளில் இணைத்தால் இன்னும் பல வாசகர்களை தங்கள் தளத்திற்கு பெறமுடியும்.

    பதிலளிநீக்கு
  3. நல்ல புராணக் கதை என்றாலும், சிறு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. ராஜபாட்டை ராஜா,
    தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  5. பிரசாத் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள். நான் ஏற்கனவெ இண்டிலி-யில் இணைத்திருக்கிறேன். தமிழ்-10, உலவு திரட்டிகளில் இணைப்பதில் சிறு தொழில் நுட்ப சிக்கல் தெரிகிறது. விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன். தங்கள் அறிவுரை/வழிகாட்டலுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  6. வாங்க பத்து,
    அகலிகை கதை செல்லிக் கொடுத்துள்ளார்களே!
    அதில், இந்திரனுக்கு 1000 கண் சாபமாகக் கிட்டியது - என்று பூடகமாகச் சொன்னார்கள். 1000 கண் உடையவள் என்று அம்பிகையைத் தொழுகிறோம்; ஆனால், இந்திரனுக்கு அது எப்படி சாபமாகும் என்று சற்று வயது வந்ததும் தோன்றியது - அப்பொழுது தான் அது கண் அல்ல என்பது புரிந்தது/தெரிந்தது.

    அது போல் செய்யலாம்.

    பதிலளிநீக்கு
  7. மிக்க நன்றிங்க நண்பரே ......
    நிறைய செய்திகள் அடங்கிய அற்புத பதிவு .. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு