திங்கள், டிசம்பர் 16, 2013

மார்கழி – அகரஹாயணம்




'மாதங்களில் நான் மார்கழி' என்பது இறை வாக்கு.

நம் இந்திய வானியலில் பால்வீதி மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்தியத் தொன்மங்கள் மற்றும் சமய நூல்களில், பால்வீதியின் மையத்தில் விஷ்ணு சயனித்திருப்பதாகக் கூறப்படுவது நாம் அனைவரும் அறிந்த்தே.

இந்தப் பால்வீதி இருப்பது ரிஷப ராசிக்கும் மிதுன ராசிக்கும் இடையில் தான். மிதுன ராசியின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்பூசம் ஆகியவை.
 
 இந்த மாதத்தின் வானவெளியில் Orion (ஓரியன்) என்ற வேட்டுவனை நாம் காண முடியும். இந்தியத் தொன்மத்தில் இது பிரஜாபதியைக் குறிக்கும். பிரஜாபதியின்  தோள் பட்டை இருக்கும் இடத்தில் உள்ள நட்சத்திரம் தான் திருவாதிரை.  இந்திய தொன்மத்தில் பிரஜாபதி விடையாட்டின் தலையைக் கொண்டவர். இவர் தலைப் பகுதியில் இருக்கும் ஐந்து நட்சத்திரங்கள் மிருகத் தலை வடிவைக் கொண்டுள்ளன. அதுவே மிருகசீர்ஷம் (மிருகம் + சிரஸ்).  பிரஜாபதியின் இடுப்பில் (திரிசூலத்தால் குத்தப்பட்ட துளை போல மூன்று நட்சத்திரங்கள் உள்ளன. அவை முறையே அக்னி, சோமன், விஷ்ணு ஆகியோரைக் குறிக்கும். பால்வீதிக்கு அருகில் இந்த நட்சத்திரம் உள்ளதால் இது விஷ்ணு-வாகக் குறிப்பிடப் பட்டிருக்கலாம்.

பால கங்காதர திலகர் தன் ருக் வேத ஆராய்ச்சியில் இந்த ஒரியன் தோன்றும் மாதமே முதல் மாதமாகக் குறிப்பிடப்படுவதாகக் கூறுகிறார். அவர், ருக் வேதம்  சுமார் கி.மு. 4000 வருட வாக்கில் ருக் வேதம் தோன்றியிருக்கலாம் என்று கருதினார். இதற்கு ஆதாரமாக அவர் கூறுவது என்னவெனில் மற்ற மாதங்களின் பெயர்கள் அந்தந்த பௌர்ணமிகளின் நட்சத்திரங்களின் பெயரில் குறிப்பிடப்பட மார்கழி மட்டும் மார்கசீர்ஷம் /அகரஹாயணம் என்று குறிப்பிடப்படுவதைக் கூறுகிறார்.

அவரைப் பொறுத்தவரை மார்கசீர்ஷம் என்பது வெறும் மிருகசீர்ஷ நட்சத்திரத்தைக் குறிக்கவில்லை.  மார்கம் என்றால் பாதை; சிரஸ் என்றால் தலை (அ) ஆரம்பம் – எனவே, மார்கசீர்ஷம் என்றால் பாதையின் ஆரம்பம் என்று பொருள் கொள்ள வேண்டும் என்பது அவர் கருத்து. இதற்குச் சான்றாக சில இடங்களில் மார்கழி, அகரஹாயணம் - அகரம் என்றால் முதல்; அயணம் என்றால் சூரியன் செல்லும் பாதை – என்று குறிப்பிடப்படுவதைக் காட்டுகிறார்.

சூரியனின் அயனம் (equinox) சுமார் கி.மு. 4000 வருடத்தில் மிருகசீர்ஷ நட்சத்திரத்தில் இருந்தது. அதனால், அந்த சமயத்தில் தான் ருக் வேதம் தோன்றியிருக்கக் கூடும் என்று அவர் கருதினார்.  

சாதாரணமாக விவசாயிகள் விதை விதைக்க சரியான நேரமாகக் கருதுவது கார்த்திகையின் பின் பகுதியையே. அக்னிபுராணத்தில் ‘முஷ்டிக்ரஹானம்’ என்ற ஒரு பண்டிகை/கொண்டாட்டம் குறிப்பிடப்படுகிறது. இது விளைந்த பயிரை அறுவடைச் செய்வதற்கு முன் செய்வது. சந்தனம், பூ, பழம் ஆகியவற்றைக் கொண்டு பூஜை செய்து முதல் கதிரை அறுத்து ஈசான மூலை வழியாக தலைமேல் தூக்கி வீடு செல்வர். பிறகு, அகரஹாயனத்தில் நவான்னம் (புத்தரிசி) படைத்துக் கொண்டாட வேண்டும் என்று கூறுகிறது.  

மாதங்களில் முதலான மார்கழியைக் கொண்டாடுவோம்.

2 கருத்துகள்:

  1. கடந்த 10 மாதமாக எந்த கருத்துரையும் இல்லை... நன்றிகள் பல... தொடர வாழ்த்துக்கள்... இருந்தாலும்:

    தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியின் விளக்கம்.. நீங்களும் கலந்து கொள்ள விரும்புகிறேன்... நன்றி...

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html

    பதிலளிநீக்கு