செவ்வாய், நவம்பர் 15, 2011

ஐந்து நாள் போட்டிகளின் முடிவு


நேற்று காலை கல்கத்தாவில் இரண்டாவது ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகள் ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்கின.

முதல் போட்டியில் இந்தியாவின் வெற்றி;
இந்தியா டாஸில் வென்று முதலில் மட்டையாட்டத்தைத் தேர்ந்தெடுத்தது;
சச்சின் 100வது சதத்தை எட்ட இருந்த எதிர்பார்ப்பு
இன்றும் இந்தியா நல்ல வலுவான நிலையில் இருந்த்து.
அதுவும், கல்கத்தாவின் செல்லப் பிள்ளை லக்ஷ்மண் சதம் எடுத்த நிலை.
-       மைதானம் நிரம்புவதற்கான அனைத்து அம்சங்களும் இருந்தன.
ஆனால், மைதானத்தில் இருந்தவர்களோ விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் சொற்பமானவர்களே. இங்கிலாந்து தவிர அனைத்து இடங்களிலும் ஐந்து நாள் போட்டிகளில் கிட்டத்தட்ட இதே நிலைமை தான்.

இதன் காரணம் என்னவாக இருக்கும்?

1.    இங்கிலாந்து தொடரில் இந்தியா பெற்ற தொடர் தோல்விகளால் இந்தியா தன் வீட்டில் மட்டுமே வெல்லும் என்ற விரக்தி;
2.    தற்போதய மேற்கிந்திய அணி (குறிப்பாக இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்து ஆடுவதில்) அத்தனைத் திறன் பெற்ற அணி இல்லை;
3.     ஐந்து நாட்களை வீணாக விளையாட்டிற்காக செலவிடுவதா என்ற மன நிலை;
4.    ஆடுகளங்களின் (மோசமான) நிலைமை;
5.    தொழில் நுட்ப முன்னேற்றத்தால் மைதனத்திலிருந்து பார்ப்பதைவிட வீட்டில் நன்றாக பார்த்து ரசிக்க முடிவது  அல்லது அலுவலகத்தில் தொலைகாட்சியிலும் வலையிலும் ஸ்கோர் தெரிந்துகொள்வது;
போன்றவற்றால் பொதுவாக ஐந்து நாள் போட்டிகளை மைதானத்தில் பார்ப்பது குறைந்திருந்தால் அது பரவாயில்லை.

ஆனால், இது ஐந்து நாள் என்ற பொன் முட்டையிடும் வாத்தை ஐபிஎல் என்ற முட்டைக்காகக் கொல்வது என்ற நிலையாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. பொதுவாகவே supply அதிகம் ஆகும் பொழுது அதன் தேவை குறையும். ஒருவேளை அதிக கிரிக்கெட், குறிப்பாக ஐபிஎல், சாம்பியன் ட்ராஃபி போன்றவை தான் காரணம் என்றால், அவற்றைக் குறைக்க வேண்டியது தான் இப்போதைய தேவை. ஐபிஎல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறையும் இடைப்பட்ட வருட்த்தில் சாம்பியன் ட்ராஃபியும் நடத்தலாம்.

ஆனால், இன்றைய ஆட்டங்களின் பட்டியல்கள் நிறைவுற்ற நிலையில் இது சாத்தியமாகத் தோன்றவில்லை ஐசிசி கூட ஐந்து நாள் சாம்பியன் தொடரை நடத்துவது 2017-க்கு முன் சாத்தியமில்லை என்று கைவிரித்துவிட்டது.

மைதானத்தில் ஆட்களே இல்லாமல், தொலைக்காட்சி உரிமையை மட்டும் வைத்து ஒரு தொடரை நடத்துவது சாத்தியமா? ஆட்டக்காரர்கள் அதை விரும்புவார்களா?

இது ஐந்து நாள் ஆட்டத்தின் முடிவா? காலம் தான் இதற்கு பதில் தர முடியும்.

புதன், நவம்பர் 09, 2011

கலவை – 8


தமிழகத்தை மழை அடித்துத் துவைத்துவரும் இந்த வேளையில் தில்லியிலும் குளிர் மெதுவாக ஆரம்பித்து வருகிறது. நான் 1990 களில் வந்த புதிதில் குளிர் பெரும்பாலும் அக்டோபர் மாதத் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிடும். குளிர் மார்ச் மாத இறுதிவரை இருக்கும்.. ஆனால், மெதுவாக இந்த நிலைமாறி இப்பொழுதெல்லாம், நவம்பரின் பிற்பாதியில் ஆரம்பித்து பிப்ரவரியிலேயே முடிந்துவிடுகிறது. புவிவெப்பம் தான் காரணம். ஃப்ரிட்ஜும் குளிர்சாதனப் பெட்டியும் வைத்துக் கொண்டு ஓசோன் படலத்தை ஓட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். இவற்றைத் தவிர பிலாஸ்டிக், மருத்துவ, வேதியல் மற்றும் எலெக்ட்ரானிக் கழிவுகள் என்று நாளும் பூமியை மெதுவாக வாழ்வதற்கு ஒன்னாத ஒரு பிரதேசமாக ஆக்கிவருகிறோம்.

பிளாஸ்டிக் கழிவுகள் என்றது ஒரு செய்தி. சபரிமலையையும் அதன் சுற்றுப் புரங்களையும் (பம்பைவரை) ஒரு பெரிய சுத்தம் செய்யும் பணி 6000 தன்னார்வலர்களால் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. அதில் அமிர்தானந்தமயி மடத்திலுருந்து 3000 பேரும் மற்ற சிறிய பெரிய நிறுவனங்களிலிருந்தும் அரசு சாரா அமைப்புகளிலிருந்தும் 3000 பேரும் சேர்ந்து இந்த பணியைச்  செய்கின்றனர். இந்த பகுதியில் zero waste zone ஆக்குவதுதான் அவர்களின் நோக்கமாம். இதைப் பார்த்தவுடன் ’நம்மவர்’ படத்தின் ”சுற்றம் என்பது நமக்கு சுத்தம் உள்ள பூமிதான்” என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.

’நம்மவர்’ கமலுக்கு நேற்று முன் தினம் பிறந்த நாள். ஒரு சில விமர்சனங்கள் இருந்தாலும் எனக்குப் பிடித்த நடிகர். சிவாஜிக்குப் பின் அவரது கலை உலக வாரிசு என்றால் அது கமல் தான். அதே போல் எம்.ஜி.ஆர். போல் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் இவருக்கு உண்டு. சிவாஜியின் நடிப்பு இவரிடமும் style ரஜினியிடமும் போனது போல், MGR-ன் தொழில் நுட்ப ஆர்வம் இவரிடமும் மக்கள் கூட்டம் ரஜினியிடமும் சென்றுவிட்டதாகவே கூறலாம். அதே நேரம் MGR-ஐ விட ரஜினி எப்படி நல்ல நடிப்பாரோ அதே போல் அவரைவிட கமலின் சினிமா தொழில் நுட்ப ஆர்வமும் அதிகம். எனக்கு மிகவும் பிடித்த 10 கமல் படங்கள் இவை:-

1.    அன்பே சிவம்
2.    ஹே ராம்
3.    குருதிப்புனல்
4.    சிகப்பு ரோஜாக்கள் [style என்றால் சாதரணமாகப் பார்ப்பது கூட என்பது இந்த படத்தில் புரியும்]
5.    மைக்கேல் மதன காம ராசன்
6.    நாயகன்
7.    மகாநதி
8.    16 வயதினிலே
9.    அபூர்வ சகோதரர்கள்
10.  எல்லாம் இன்ப மயம் [’ஆசை கிளியே பர்லா’வும் ‘மாமன் வூடு’ம் என் fav. பாட்டு]


சென்ற கலவையில் மக்கள் தொகை 7 பில்லியன்களை எட்டியதைப் பார்த்தோம். அதில் ஓர் ஆச்சரியமானத் தகவலை விட்டுவிட்டேன். சீனாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஓர் ஆச்சர்யமான தகவல் இருந்தது. அந்நாட்டில் தற்பொழுது 100 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை 49000த் தாண்டிவிட்ட்தாம். ஜூன் வரை அது 48900 ஆக இருந்ததாகவும் சீனாவின் ஜெரொண்டொலாஜிகல் சொசைடி என்ற அமைப்பு கூறுகிறது. இது சென்ற ஆண்டைவிட 5000 அதிகமாம். லுயோ மெழ்ஹென் என்ற 126 வயது பெண்மணிதான் அந்நாட்டில் தற்பொழுது மிகவும் முதியவராம்.

நூறு என்றவுடன் நம் ஞாபகத்திற்கு வருபவர் சச்சின். இன்று 100வது சதத்தை அடித்துவிடுவார் என்று நினைத்திருந்தேன். அதிலும் முதல் session-ல் எட்வர்ட்ஸின் பந்துகளை அவர் எதிர் கொண்ட விதம் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. ஆனால், கடைசியில் short length-ல் வந்த பந்தை விட்டு காலில் வாங்கி அவுட். 76 ரன்கள்.  நேற்று அவர்  15000 ரன்கள் எடுத்த உடனேயே எழுத நினைத்தேன்.  ஆனால், இன்று பார்த்துவிட்டு சதத்தையும் சேர்த்து எழுதலாம் என்று இருந்தால் இப்படி 76-ல் அவுட் ஆகிவிட்டார். எத்தனையோ சாதனைகள். ஆனாலும், முச்சதம் அடிப்பது, இன்றைய நிலையில், கடினம் தான் என்று நினைக்கிறேன். Fitness-தான் பிரச்சனை. அதுதான் அவர் கவனத்தையும் திசைத் திருப்புகிறது என்று நினைக்கிறேன். ஒருநாள் போட்டிகளில் மைதானம் சற்று சிறியதாக இருக்கும் (எல்லைக் கோடுகள் குறுக்கப் படுவதால்). மேலும் அதில் attacking விளையாடலாம். ஆனால் அவர் தற்போது (டெஸ்டில்) அப்படி ஆடுவதில்லை. ஆனால், அப்படி அவரை சாதாரணமாக கழித்து கட்டிவிட முடியாது என்பது தான் அவருடைய பலம். பொறுத்திருந்து பார்ப்போம்.

சாதாரணமாக, அவர் முதல் இன்னிங்ஸ் ஆட்டக்காரர் [சேவாக், திராவிட் ஆகியோரும் கூட]. ஆனால், லக்ஷ்மண், கம்பீர் போன்றவர்கள் இரண்டாம் இன்னிங்ஸ் ஆட்டக்காரர்கள். அதனால் அவர்கள் match winner-களாகப் பார்க்கப்படுகிறார்கள். ஆனாl சச்சின் மீது பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு அவர் match winner இல்லை என்பதுதான். ஆனால் சச்சின் டெஸ்ட்களில் சதம் அடித்த 51-ல் 17 வெற்றி; 11 தோல்வி, 23-ல் டிரா. அதுவே ஒருநாள் போட்டிகளில் 49-ல் 33 வெற்றிக்காக. அதிலும், ஒரு நாள் போட்டிகளைப் பொறுத்தவரை அவர் முதல் ஆட்டக்காரராகக் களமிறங்குவதால் பெறும்பாலும் இறுதிவரை ஆட முடிவதில்லை. எனவே, அவரை finisher இல்லை என்று குற்றம் சாட்டினால் அது ஓரளவுக்கு சரி. ஆனால், match winner இல்லை என்பது அவர் மீது உள்ள காழ்புணர்வே.

செவ்வாய், நவம்பர் 08, 2011

கிள்ளை பேச்சு கேட்கவா


குழந்தை பிறந்து ஒர் ஆண்டு ஆனதோ இல்லையோ, எல்லா பெற்றொருக்கும் வரும் முதல் கவலை அது எப்போது பேசத் துவங்கும் என்பதாகத் தான் இருக்கும். அதுவும் அடுத்த வீட்டில் சமவயது குழந்தை இருந்து அது பேசத் துவங்கிவிட்டால் குல தெய்வத்திற்கு காசு முடிவதிலிருந்து கடா வெட்டுவரை வேண்டுதல்கள் இருக்கும். மேலும், அந்த குழந்தையின் அறிவாற்றலையும் சந்தேகிக்க ஆரம்பித்துவிடுவர். சாதாரணமாக சீக்கிரம் பேசத் துவங்கும் குழந்தைகள் புத்திசாலிகள் என்ற கருத்து இருக்கிறது. இது சரியில்லை. குழந்தைகளின் அறிவுத் திறனுக்கும் அவர்கள் பேசத் துவங்குவதற்கும் அதிகத் தொடர்பு இல்லை.  

குழந்தைகள் பேசுவது மிக முக்கியமான ஒன்று தான். பேசுவது என்பது அவர்களின் எண்ணங்களை வெளிப்படுத்துவரற்குத் தேவையான மிக முக்கியமான ஒன்று.

சொல்லப் போனால் குழந்தைகள் பேசுவதற்கு முன்னரே தங்களின் எண்ணங்களை, உணர்வுகளை, தேவைகளை – அழுவது, கோபமாக பொருட்களை எறிவது, தரையில் பிரண்டு அரற்றுவது ஆகியவற்றினால் - வெளிப்படுத்தத் துவங்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக – பெற்றோரும் சுற்றத்தாரும் – செல்லும் சொற்களைக் கவணித்து அவற்றில் அவர்களை ஈர்த்த, அவர்களுக்கு எளிதானவற்றைத் திரட்டி தங்கள் அந்த சத்தங்களை பிரதிபலிக்க முயற்சிக்கும். சிறு குழந்தைகளின் கவனிப்புத் திறன்  பெரியவர்களை விட மிகக் கூர்மைனது. காரணம், நம்மைப் போல் அன்றி அவர்களுக்கு கவனச் சிதறல் குறைவு.


குழந்தைகளின் இந்த முயற்சியை வளர்ப்பதிலும் அதைச் சீரமப்பதிலும் பெற்றோருக்குப் பெரும் பங்கு உள்ளது. அவர்களின் பேச்சு, உரையாடல்கள் தான் குழந்தைகளால் அதிகம் கவனிக்கப்படுபவை. அதிகம் தொலைகாட்சி பார்க்கும் குழந்தைகளால் -  ஒலி ஒரே இடத்திலிருந்து வருவதால் உரையாடல்களையும் அதற்கான உதட்டசைவு நாக்கு சுழலும் விதம் ஆகியவற்றை கவனிக்க முடியாததாலோ என்னவோ – பேசத் துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், பேசத்துவங்கும் குழந்தைகளைத் தொலைகாட்சியிலிர்ந்து திசைத் திருப்பி, வெவ்வேறு சத்தங்களையும், சொற்களையும் வார்த்தைகளையும் உச்சரிக்கச் செய்யத் தூண்ட வேண்டும்.

சாதாரணமாக, குழந்தை மூன்று மூன்றரை வயதில் பேச ஆரம்பிக்கும். துவக்கத்தில் அவை வார்த்தைகளைச் சரியாக உச்சரிக்காமல் அல்லது பதங்களை மாற்றியோ பேச (உறள சீசீ உளற!!!) ஆரம்பிக்கும். அப்பொழுது அவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ திருத்தவோ முயலக் கூடாது. இது சாதாரணமாக அவர்களை புதுபுது சொற்களை கற்க/உபயோகப்படுத்த முயற்சிப்பதிலிருந்து தடுக்கும். அதே நேரம், பெற்றோர் அவர்களைப் போலவே மழலையாக பேச ஆரம்பிக்கவும் கூடாது. இது அவர்களை அவர்களாகவேத் திருத்திக் கொள்வதிலிருந்துத் தாமதப் படுத்தும்.

மெதுவாக பேச ஆரம்பித்துவிட்டால் அடுத்து பெற்றோர் சந்திக்கும் பிரச்சனை அவர்கள் திக்கித் திக்கி பேசுவது. குழந்தை முதலில் திக்கிப் பேச ஆரம்பித்த உடனேயெ பெற்றோருக்கு tension ஆரம்பித்துவிடும். ஆனால், இதற்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நினைக்கும் குழந்தைக்கு அதற்கான தகுந்த பொருத்தமான சொற்களை அல்லது அந்தச் சொற்களைப் பயண்படுத்தித் தொடர் வாக்கியமாக மாற்றுவதில் உண்டாகும் குழப்பமே. சில நேரங்களில் பயம் கூடக் காரணமாக இருக்கும். இந்த நேரத்தில்,  அந்த பயத்தைப் போக்கி புது புது வார்த்தைகளை மெதுவாக அவர்களுக்கு அறிமுகப் படுத்துவது நலம்.

பொதுவாக, குழந்தைகள் ஆறு / ஏழு வயதை எட்டும் பொழுது தடுமாறாமல் தொடர்ச்சியாகப் பேசத் துவங்குவர். அதுவரை பொறுமை காப்பது அவசியம்.

வியாழன், நவம்பர் 03, 2011

இன்று சுடுவது நிச்சயம் - ‘சவால் சிறுகதை-2011’


இன்று சுடுவது நிச்சயம்

”இன்றைக்கு நிச்சயம் சுட்டு விடவேண்டும்!!” என்று மனதில் நினைத்துக் கொண்டார் கோகுல்நாத். பாவம் அவரும் எத்தனை நாள் தான் மனைவி ரூபலா செய்வதைப் பொருத்திருப்பார். கடந்த 40 வருடங்களில் இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதிலும், கடந்த இரண்டு வருடமாக அதாவது ரிடையர் ஆனபின் தான் இத்தனை மோசம். காரணம் அந்த விவேக் தான். அவனை நினைத்த உடனேயே அவர் உடல் வேர்க்கத் துவங்கியது.

ஆம் இன்று சுடுவது நிச்சயம்.

அதற்கு, அவர் தேர்ந்தெடுத்த ஆள் விஷ்ணு. ஆம், அதே விஷ்ணு தான். எவன், தன் அத்தை மகள் ரூபலாவை தனக்கு அறிமுகம் செய்து தன் காதல் திருமணம் நடக்க உதவினானோ, அந்த பால்ய நண்பன் விஷ்ணு தான் இதற்கு சரியான ஆள்.

”இந்த ரூபலாவோ விஷ்ணு தன் மாமன் மகன், தன் காதலுக்கு உதவியவன் என்பதை எல்லாம் மறந்து அவனை எப்பொழுதும் ஏசிக் கொண்டே இருக்கிறாள். அவனைக் கண்டாளே இவளுக்கு எட்டிக் காய்தான். அதுவும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் ஏதோ வெளிநாட்டு ஒற்றன் போல் வேவு பார்க்க வந்து விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்; எங்கள் நட்பு இவள் வருவதற்கு முன்பே சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இன்றைக்கும் என் ஒரே நண்பன் என்றால் அவன் விஷ்ணுதான்” என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

உடனே அவர் மனசாட்சி எதிரில் இருந்த கண்ணாடியில் வந்து,  ”ஏன் விவேக் உன்னை விட சிறியவன் என்றாலும் அவனும் உன் நண்பன் தானே?” என்று கேட்டது.

”நண்பன்!! யார்?  அந்த விவேகா!! துரோகி, அவன் தான் இது எல்லாத்துக்கும் காரணம். அவனைப் பற்றி பேசாதே” என்று திட்டி அதைத் துரத்தினார்

அவன் பெயரை நினைத்ததுமே அவருக்கு அன்று அந்த விவேக்-இன் 50-வது பிறந்த நாளில் நடந்தது தான் நினைவுக்கு வந்த்து. அவருக்கும் விஷ்ணுவுக்கும் முன்னாலேயே ரூபலாவும் விஷ்ணுவின் மனைவி பாமாவும் ஒரு பெரிய கேக் துண்டை எடுத்து விவேக்-இன் வாயில் ஊட்ட அவனும் சிறிது கூடத் தயக்கம் இல்லாமல் பெரிய கேக் துண்டை அவர்களுக்கு ஊட்ட இவருக்கு வந்ததே பெரிய கோபம். ஆனால், மனதுக்குள் புழுங்குவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும். வயதாகிவிட்டதால் இது போன்ற நிலை சகஜம் தான். அதற்காக இந்த பெண்கள் இப்படியா நடப்பார்கள். அவருக்கு ஒரே ஆத்திரம். அவருக்குள் மீண்டும் அந்த மிருகம் விழித்துக் கொண்டது.

”இன்று நிச்சயம் சுட வேண்டும்.”

அன்று, தனியே விஷ்ணுவிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு, அந்த வாய்ப்பு சாப்பிடும் போது தான் கிடைத்தது. அதுவும், அப்போது ரூபலாவும் பாமாவும் விவேக்-உடன் ஒட்டிக்கொண்டு ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்ததால்.

ரூபலா நடந்து கொள்வதைப் பற்றி விஷ்ணுவிடம் விவரித்த கோகுலுக்கோ விஷ்ணு சொன்னது அதைவிட அதிர்ச்சியைத் தந்தது. ஆம், பாமா விஷ்ணு விஷயத்தை கேட்ட போது தன் நிலைமையே தேவலாம் என்று கூட அவர்க்குத் தோன்றியது. இதற்கும் இந்த விவேக் தான் காரணம்!! வேறு யாரால் இது மாதிரி செய்ய முடியும். அப்பொழுதுதான் அவருக்கு அந்த யோசனைத் தோன்றியது. அதைக் கேட்டவுடன் விஷ்ணுவுக்கோ ஒரே ஷாக்.

”இது முடியுமா? நடக்குமா? உனக்கு சுடக் கூடத் தெரியுமா? எனக்குத் தெரியாதே” என்று விஷ்ணு கேள்வி மேல் கேள்வி கேட்டான்

“அடப்பாவி, நான் உனக்குச் சுடத் தெரியும். நீ உதவுவாய் என நினைத்தேன். இப்படிக் காலை வாருகிறாயே!! என்று கோகுல் அறட்ரவே ஆரம்பித்தார்.

உடனே விஷ்ணு ”சரி சரி, நீ கவலைப்படாதே நான் என் பி.ஏ. ரமணியை விசாரித்து உனக்குக் கூறுகிறேன்” என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ”என்ன ரெண்டு பேரும் கோட் வேர்டில் பேசிக் கொண்டிருக்கிறிர்கள்?” என்று கேட்ட படியே ரூபலா வேவு பார்க்க வந்ததைக் கண்டு இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

கிளம்பும் போது விஷ்ணு, யாருக்கும் தெரியாமல், எப்படி சுடுவது என்பதை ரமணியிடம் கோட் வேர்டிலேயே அனுப்பச் சொல்வதாகக் கூறினான்.

ஒருவழியாக இன்று காலை ரமணி ரூபலாவிடம் ஏதோ கொடுப்பது போல் அந்த பேப்பரை கையில் திணித்த போது கோகுலால் தான் தரையில் நிற்பதையே உணர முடியவில்லை. அதற்குள் ரூபலா வந்துவிட அவசர அவசரமாக அங்கிருந்த புத்தகத்தில் அதை வைத்துவிட்டு எதுவும் தெரியாமல் நின்றுகொண்டார்.

உள்ளேயிர்ந்து வந்த ரூபலா என்ன இது இன்னும் சின்ன குழந்தை மாதிரி படித்த புத்தகத்தை எல்லாம் அடுக்க மாட்டீர்களா என்று கூறி அவற்றை கபோர்டில் அடுக்கி, என்றும் இல்லாத திருநாளாக “நான் பாமாவுடன் கோவிலுக்குப் போகிறேன். மாலைபில் தான் வருவேன்” என்ற போது கோகுலுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. அதனால் தான் ”கோவிலுக்கு போனால் அத்தனை நேரம் ஏன்? விவேக்-ஐப் பார்க்கப் போகிறாயா?” என்று வாய் வரை வந்த கேள்வியைத் தவிர்த்து ”பஸ்ஸில் போகவேண்டாம் ஆட்டோவில் சென்று வா” என்று (வழிந்து கொண்டே) வழியனுப்பினார்.

ரூபலா சென்றவுடன் மெதுவாக, தன் சட்டைப் பாக்கெட்டில் கை விட்டவருக்கோ அதிர்ச்சி. ரமணி கொடுத்த குறிப்பு எங்கே என்று தலையை பிய்த்து கொள்ள, மெதுவாக தான் அங்கேயிருந்த புத்தகத்துக்குள் வைத்தது ஞாபகம் வந்தது. ஆனால், எந்த புத்தகம் என்பது சரியாக நினைவுக்கு வரவில்லை. சே!! என்ன ஞாபக மறதி. இப்படி காலை வாருகிறதே இன்றைக்கு விட்டு விட்டால் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டுமா?  அதுவுமின்றி அந்த காகிதம் மட்டும் ரூபலாவிடம் கிடைத்தால் தன் கதி என்ன நினைக்க நினைக்க அவருக்கு மீண்டும் வேர்த்தது. என்ன ஆனாலும் சரி இன்று நிச்சயம் சுட்டுவிட வேண்டும் என்று ’குறிப்பு’ வைத்த புத்தகத்தைத் தேட ஆரம்பித்தார்.

அப்பாடா ஒருவழியாக குறிப்பு கிடைத்தவுடன் தான் கோகுலுக்கு போன உயிர் திரும்பி வந்த்து.

முதலில் “S W H2 6F“.என்றிருந்த அந்த குறிப்பு அவருக்குப் புரிபடவில்லை. சற்று யோசித்தவருக்கு காதலித்த போது விஷ்ணு வீட்டிற்குத் தெரியாமல் தகவல் அனுப்பும் கோட் ஞாபகம் வர மெதுவாகத் தெளிவு வர ஆரம்பித்த்து.

பல வருடங்களுக்குப் பின், சில நாட்களாக ரூபலா தன்னை அனுமதிகாத, அந்த அறைக்குள் நுழைந்தவர் அந்த வாசனையிலேயே சற்றுத் தன்னை மறந்து நின்றார். மெதுவாக சுய நினைவு அடைந்தவராய், அந்த கபோர்டை திறந்து கண் முன் இருந்த அந்த கண்டெய்னரைக் கண்டார். மெல்ல அதைத் திறந்து பார்த்தவுடனேயே அவர், போதை பழக்கம் கொண்டவன் போதை மருந்தைப் பார்த்தால் ஏற்படும் உன்மத்த நிலையை அடைந்தாலும், நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து அதில் கையை விட்டார். கையை விட்ட அவருக்கோ அதிர்ச்சி. ஆம், அதனுள்ளும் ஒரு காகிதம். அது என்ன? ஏதோ எழுதியுள்ளது தெரிகிறது. ஆனால், அந்த அறை வெளிச்சத்தில் அதில் என்ன எழுதியுள்ளது என்பது விளங்கவில்லை.

மெல்ல தன் வாசிப்பு மேசைக்கு வந்தவர் ”To Vivek” என்று எழுதப் பட்டிருந்த அந்த காகிதத்தைப் பார்த்தார். அந்த துரோகி விவேக், தனக்கு வந்த லெட்டரை ரூபலாவிடம் படிக்க்க் கொடுத்திருகிறானா அல்லது ரூபலா அந்த துரோகிக்குக் கொடுக்க வைத்திருக்கிறாளா என்ற கேள்வியுடன் விவேக்-இற்கு சாபமிட்டபடியேப் பேப்பரைப் பிரித்துப் படித்தார்.

படித்ததும் அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் கண்களை மட்டுமா நம்ப முடிய வில்லை. தன் கண் – அடச்சே கண் என்ன கண் – தன் உயிரே அவன் தான் என்று நினைத்த தன் நண்பன் விஷ்ணுவின் துரோகம் அவர் கண் முன்னே விரிந்து அவரை நிலை குலையச் செய்தது.

அதில் விவேகிடம், “சார், எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்” என்று விஷ்ணு எழுதியிருந்த்தைக் கண்டால் அவரால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா என்ன?.

சற்று நேரம் கற்சிலையாய் அமர்ந்த அவருக்கு விஷ்ணுவின் இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, அதுவும் அவருடைய தற்போதைய விரோதி அந்த விவேக்-உடன் சேர்ந்து அவன் செய்த இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, என்ன செய்யலாம் என்று புரியாமல் விழித்தார். மெல்ல மெல்ல தன்நிலையை அடந்தவருக்கு காலை முதல் விஷ்ணு ஏன் இன்னமும் Phone செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. சட்டென்று செல்லை எடுத்தவருக்கு அதுவும் துரோகம் செய்தது.

ஆம், சார்ஜ் இல்லாமல் அணைந்திருகிறது.


சார்ஜ் செய்தவுடன் போன் “நண்பனே எனது உயிர் நண்பனே” என்று அழைத்தது. ஆம் விஷ்ணுவின் போன் தான். அந்த நம்பருக்குத்தான் அந்த ரிங்டோன்.

“சே!! எத்தனை அப்பாவியாக  இருந்திருக்கிறேன். இந்த விஷ்ணு கூட அவர்கள் பக்கம் தான்” என்று நினைத்தாலும் அவன் துரோகம் தனக்குத் தெரிந்துவிட்டதை அவனுக்குக் காட்டக் கூடாது என்று நினைத்து போனை இயக்க, விஷ்ணுவோ “டேய், எஸ்.பி.ஜீ, என்னாடா காலையிலிருந்து போனில் யாரை பிலேட் போட்டுக்கொண்டிருக்கிறாய்” என்று கேட்கவும் வாசலில் காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்த்து.

விஷ்ணுவின் போன்காலை அணைத்து வாசல் கதவைத் திறந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

ஆம் அவர் முன்னே, ரூபலா, விவேக், பாமா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் மட்டுமா? பின்னாலேயே விஷ்ணுவும், ரமணியும் நின்றிருந்தனர்.

கதவைத் திறக்க இவ்வளவு நேரமா என்று கூறியபடியே வீட்டில் நுழைந்த அவர்களின் கண்ணிற்கு நேரேயே அந்த காகிதங்கள் மேசையில் இருந்தன. அவை நேராக ரூபலா கண்ணிலும் பட்டுவிட, அவள்  கோகுலையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்த்தாள்.

மெல்ல அவள் கோகுலிடம், ”என் மீது இத்தனைக் கோபமா. உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தானே நான் கேக் சாப்பிடவிடுவதில்லை. அதற்காக நீங்களே அவனில் கேக் சுடுவதா? உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்வேன். இதுக்கு இவன் வேறு “Sugar as Wish; Honey 2 (Spoon); 6 (cup) Flour“ என்று recipe கொடுதிருக்கிறான்”, என கோபத்துடன் விஷ்ணுவைப் பார்க்க அவன் தலையை குனிந்து கொண்டான்.

“நல்ல வேளையாக இந்த ரமணி பொண்ணு போனில் என்னிடம் சொன்னதால் இப்படி ஒரு மாற்று காகித்தத்தை சர்க்கரை டப்பாவில் வைத்தேன். இனிமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். நான் கேள்வி கேட்க மாட்டேன். நான் ஒருத்தி இருப்பது உங்களுக்கு சுமைதானே!!” என்று கோபமாகக் கூறினாள்.

”என்னை மன்னித்து விடு ரூபலா. இரண்டு வருடம் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு தானே இருந்தேன். அன்னிக்கு இந்த விவேக் பிறந்த நாளில் எங்களுக்கு ஒரு துண்டு கேக் கூட கொடுக்காமல் நீங்க மூணு பேரும் சாப்பிட்டதுதான் என்னை இப்படி ஆக்கிவிட்ட்து” என்று கோகுல் அவளைத் தேற்றினார்.

உடனே விஷ்ணு, ”போதும் ரூபலா அவனை ரோம்ப படுத்தாதே. இன்று அவனுக்கு 60-வது பிறந்த நாள்; அதற்கு தான், “Sweet Wishes Here to (complete) 6 Full Decades“ என்பதுதான் அதன் விளக்கம் என்பதை சொல்லி, அவன் சர்க்கரை அளவு சரியாகிவிட்டதால் அவன் கேக் சாப்பிடலாம் என்று டாக்டர் விவேக் சார் கொடுத்த ரிபோர்டையும் காட்டி கொண்டு வந்த கேக்கை கட் பண்ணச் சொல்” என்று சொல்ல, “அவர் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கட்டுப்பாட்டுடன் இருந்ததால் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் அவர் சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு இன்னமும் சர்க்கரையும் குறையல; கொழுப்பும் குறையல. அதனால், உங்களுக்கு கேக் கிடையாது” என்று பாமா கூற, விஷ்ணு ”ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  

புதன், நவம்பர் 02, 2011

சட் பூஜை




வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக பிகார் மாநிலத்தில் மிக முக்கிய பண்டிகையாகக் கொண்டாடப் படுவது சட் (Chhath – छठ) பூஜை தான். இது வட இந்தியாவின் கார்த்திகை (சந்திர மாதம்) மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஷஷ்டி அன்று கொண்டாடப்படுகிறது.  ஹிந்தியில் சஹ் என்றால் ஆறு;  சட: என்றால் ஆறாவது. இது ஆறாவது நாள், அதாவது தீபாவளி (அமாவாசை) முடிந்து வரும், நாம் கந்த  ஷஷ்டியாகக் கொண்டாடும் அதே ஆறாவது நாளை அவர்கள் சட் பூஜையாகக் கொண்ட்டாடுகின்றனர்.

நாம் இதை கந்த ஷஷ்டியாக்க் கொண்டாடினாலும், இவர்கள் இதை சூரியனுக்காகவே கொண்டாடுகின்றனர். ”சடி மாதா” என்று இவர்கள் சூரியனின் மனைவியான உஷாதேவியை (உஷா என்றால் இளங்காலை பொழுது; வட மொழியில் இதை உஷா காலம் என்று கூறுவர்) வணங்குகின்றனர். இந்த வருடம் நாம் கந்த ஷஷ்டியை திங்கள் கிழமையன்றே கொண்டாடினோம். காரணம், திங்கள் அன்று மாலையே ஷஷ்டி துவங்கிவிட்டது.  ஆனால், இவர்கள் செவ்வாயன்று தான் சட் விரதம் இருக்கிறார்கள், ஏனென்றால் அன்றும் ஷஷ்டி மீதி இருந்தது. இதை இவர்கள் (சதுர்த்தியிலிருந்து) 4 நாட்களாகக் கொண்டாடுகின்றனர்.

முதல் நாள், அதாவது சதுர்த்தியன்று, இதை ”நஹாய் ஔர் காய்” அதாவது குளித்து உண்  என்று கூறுகிறார்கள். அன்று, காலையில் நதியில் குளித்து பின் கத்து, கடலை பருப்பு, பச்சரிசி ஆகிய்வற்றை உண்பர்.

இரண்டாம் நாள் லோஹாந்தா என்று கொண்டாடுகின்றனர். அன்று, கீர் தான் முக்கிய உணவு.

மூன்றாம் நாள்  பகல் முழுக்க மாலை பூஜைக்கான் பிரசாதங்கள் தயாரித்து மாலை முழுவதும் நீரில் நின்றபடி விரதம் இருப்பர். இதில் கலந்து கொள்ளும் பெண்கள் பொதுவாக மஞ்சளில் நனைத்த வெள்ளைப் புடவைகளை அணிவர்.

மறுநாள் காலை சூரிய உதயத்தில் சூரியனை அவன் மனைவி உஷாதேவியுடன் வணங்கி நீர் (அர்க்யம்) சமர்ப்பித்து விரதம் முடிப்பர். பிரச்சாதங்களை அங்கிருக்கும் அனைவருக்கும் வழங்குவர்.

பொதுவாக இது வேதகாலத்திலிருந்தேக் கொண்டாடப் படுவதாகக் கூறப்பட்டாலும், இது தற்ப்பொழுது பிகாரில் முக்கியமாகக் கொண்டாடப்படுகின்றது. அதிலும் குறிப்பாக இது  பிகாரின மங்கேரி மாவட்ட்த்தில் மிகப் பெரிய பண்டிகை. இந்த மங்கேரி மாவட்டம் தான் மகாபாரத காலத்தில் அங்க தேசம் என்று துரியோதனனால் கர்ணனுக்கு வழங்கப்பட்ட இடம். ஒருவேளை, கர்ணன் காலத்தில் ஆரம்பிக்கப் பட்ட சூரிய வழிபாடாகக் கூட இருக்கலாம்.


தில்லி வந்த புதிதில் இவ்வளவு விளம்பரமும் பரபரப்பும் இருந்த்தில்லை. இப்பொழுது, குறிப்பாக லல்லு யாதவ் மத்திய அமைச்சராக இருந்த பின்பு, தேசிய சேனல்கள் அனைத்திலும் இதுதான் முதல் செய்தி. இந்த வருடம் மும்பையிலும் பெரிய கொண்டாட்டங்கள். அனைத்து (குறிப்பாக பீகாரைச் சேர்ந்த மனோஜ் வாஜ்பேய் போன்றவர்கள்) இந்தி திரை நட்சத்திரங்களும் முக்கிய இடம் பிடித்து கொண்டாடுகின்றனர்.