குறி கேளீர்
[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
அறமும் திறமும் கொண்டோரை
அறச்சொல் ஏதும் செய்வதில்லை
அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை
நற்சிந்தைக் கொண்டு வாழ்வோரை
நாளும் கோளும் கெடுப்பதில்லை
இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
இன்பம் வாழ்வில் தொலைவதில்லை
நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
நித்தமும் நிறைவு தேய்வதில்லை
சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
சுகத்துக்கு எப்போதும் கேடில்லை
கடமையைத் தொடர்ந்துச் செய்திருக்கக்
காலம் கணியாமல் போவதில்லை
கட்டுப்பாடும் கலந்திருந்தால்
கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை
எறும்பாய் என்றும் உழைத்திருக்க
எதிர்காலக் கவலை ஏதுமில்லை
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்க
குறிச்சொல் கேட்கத் தேவையில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக