புதன், டிசம்பர் 21, 2011

கலவை – 12

தில்லியில் தற்ப்பொழுது மாலையில் கடுமையான பனிமூட்டமும் காலையில் குளிர் காற்றும் வீசத் துவங்கி குளிர்காலம் முழு வீச்சுடன் ஆரம்பமாகிவிட்டது. முன் போலில்லாமல் கடந்த மூன்று நான்கு வருடங்களாக குளிர் திடீரென அதிகமாகி பின் திடீரென குறைவது என்பது நடக்கிறது. இருக்கும் 15-20 நாட்களில் முன் வருடங்களை விட அதிக குளிர் அளவை எட்டுவதும் வழக்கமாகியுள்ளது.

அதன் தாக்கமோ என்னவோ அரசியலிலும் சற்று சூடு குறைந்துள்ளது. ஆரம்பத்தில்  முரண்(டு) பிடித்த எதிர்கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தை நடத்த விடும் அளவிற்காவது இறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடர் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு நாட்கள் வேலையே நடக்கவில்லை என்பதை நினைக்கும் பொழுது இது அந்த இழப்பை ஓரளவிற்காவது ஈடு செய்தால் சரிதான்.

மத்திய மந்திரி சபை சென்ற வாரம் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 60 கோடி மக்களுக்கு (75 சதவீத கிராம மக்களுக்கும் மீதி நகர்புறத்தினரும்) மாதம் குறைந்தபட்சம் 7 கிலோ உணவு தானியம் வழங்கப் படும்). இதனால் உணவுக்கான அரசு மானியம் `65000 கோடி யிலிருந்து `12000 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இது மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஏழைகளுக்கான நல்லத் திட்டம் போல் தெரிந்தாலும், இது மறைமுகமாக விலையேற்றத்திற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நாம் ஏற்கனவேப் பார்த்து வருவது போல் அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டாலும் மற்ற பொருட்கள் விலை வெகுவாக ஏறுவதற்கே அது வழி வகுத்தது. மேலும் அதற்கான வருவாய் “டாஸ்மாக்” மூலம் ஈடுகட்டப்பட்டு வருகிறது. மேலும், இது தமிழ்நாட்டில் உள்ளது போல் போலி ரேஷன் அட்டைகளை உருவாக்கி ஊழலை  வளர்க்கவும் உதவும். ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் என்று சட்டம் இயற்றிவிட்டாலும், இன்றளவில் அது ஏட்டில் தான் உள்ளது. இதன் நிலையும் சற்றேறக்குறைய அது மாதிரி தான் ஆகும். ஆனால், அரசியல் ரீதியாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சாதனையாகச் சொல்லிக் கொள்ள உதவும்.

லோக்பால் மசோதா நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கலாம். லோக்பாலின் கீழ் பிரதமரைச் சேர்த்துள்ளனர். C-D பிரிவு அரசு ஊழியர்கள் (Clerks, Peons), சி.பி.ஐ. ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் லோக்பாலின் கீழ் சேர்க்கப் படவில்லை. C-D பிரிவு ஊழியர்களின் மீதானக் குற்றச்சாட்டுகளை மத்திய விஜிலென்ஸ் ஆணையமே விசாரிக்கும். சி.பி.ஐ. சேர்ப்பது பற்றி தான் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடக்கும் என்று நினைக்கிறேன். சி.பி.ஐ, தேர்தல் ஆணையத்தைப் போல அரசு தலையீடு இல்லாமல் இருப்பது தான் நல்லது. சி.பி.ஐ.யின் விசாரணையில் லோக்பாலின் தலையீடும் இருக்கக் கூடாது. நாளை லோக்பாலின் உறுப்பினர்கள் மீதான ஊழலை விசாரிப்பதில் அவர்கள் தலையீடும் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனிடையில் அரசின் இந்த மசோதாவை அன்னா குழுவினர் வலுவற்றது என்று விமரிசித்துள்ளனர். அவர்களின் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சிங்வி, அரசு அன்னா குழுவினருக்கு பதிலளிக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். பாஜக-வும் இந்த மசோதா வலுவற்றது என்று கூறியுள்ளது. நாடாளுமன்ற விவாதத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீண்டும், அம்மா மன்னார்குடி குடும்பத்தைத் தள்ளி வைத்துள்ளார். 1996-ல் தேர்தல் தோல்வியின் எதிரொலி. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. சாதாரணமாக இதன் பின்ன்ணி வெளிவராது. இப்பொழுதும், பெரும்பாலும் அப்படித்தான் நடக்கும். அதிமுக –வின் தொண்டர்கள் இதனால் உற்சாகமடைந்திருந்தாலும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் (அப்படி யாராவது இருக்கிறார்களா?) இதைப் பற்றி கருத்து வெளியிடவில்லை. இது ஊழல் வழக்கைச் சமாளிக்க நீதிமன்றத்தில் தனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று கூற உதவும் என்பதற்கான நாடகமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அம்மாவிடம் எதையும் எதிர்பார்க்கலாம். அண்ணா கூறியதைப் போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அதிமுகவினர்.

ஆஸ்த்ரேலியத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் கங்குலி, நெஹ்ரா போன்றவர்கள் க்ரேக் சேப்பலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஆஸி ஊடகங்கள் வந்திருக்கும் அணியின் மன வலிமையை குலைப்பதற்காக இது போன்ற விஷயங்களை வெளியிடுவர். இம்முறை இந்திய ஊடகங்களும் இதைச் செய்ய முயல்கின்றனவா?

இலங்கை, தென் ஆப்பிரிக்காவில் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. சென்ற வருடம் இதே சமயத்தில் இந்தியாவும் அவர்களிடம் முதல் போட்டியை இழந்தது (முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள்; எனவே, இரண்டாம் இன்னிங்ஸில் சச்சினின் சதமும் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை). ஆனால், இரண்டாம் போட்டியில் (boxing day) இந்தியா வென்றது. இலங்கையால் அது முடியுமா என்பது சந்தேகமாத்தான் இருக்கிறது. காரணம், துவக்க ஆட்டக்காரர்கள்.  தில்ஷான் அடித்து ஆடுபவர் என்றாலும் அவர் சேவாக் இல்லை. உபுல் தரங்கா அவரை விட consistent-ஆக ஆடுவார். அதே போல் பந்து வீச்சும் சுமார் தான். அல்விகதலா களமிறக்கப் படலாம். தென் ஆப்பிரிகா, சுசுபே-வை மார்கெலுக்கு பதிலாக களமிறக்கலாம்.

வெள்ளி, டிசம்பர் 16, 2011

மார்கழி



மார்கழி மாதம் முன் பனிக் காலம். இம்மாதத்தின் விடியற் காலையில் குளிர் அதிகமாக இருக்கும். அனைவருக்கும் நன்றாகப் போர்வையை இழுத்துத் தூங்குவதென்றால் மிகவும் விருப்பமாக இருக்கும். ஆனால் இப்படிச் சோம்பி இருக்கக் கூடாது என்பது தான் பெரியோரின் எண்ணம்.

சாதாரணமாக அறிவுரையாகக் கூறினால் யாருக்கும் பிடிக்காது என்பதால் இது போன்ற விஷயங்களை மதத்தில் இணைத்துக் கூறுவது மரபு. அதனால் தான், கீதையில் கண்ணன்

बृहत्साम तथा साम्नां गायत्री छन्दसामहम् ।
मासानां मार्गशीर्षोऽहमृतूनां कुसुमाकरः ॥१०- ३५॥
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
[ததா² ஸாம்நாம் ப்³ருஹத்ஸாம:= சாமங்களில் (வேதம்) ‘பிருஹத்சாமம்’ என்ற பெரிய சாமம்
ச
²ந்த³ஸாம் கா³யத்ரீ அஹம்       = சந்தஸ்களில் நான் காயத்ரி
மாஸாநாம் மார்க
³ஸீ²ர்ஷ: அஹம் = மாதங்களில் நான் மார்கழி
ருதூநாம் அஹம் குஸுமாகர:      = பருவங்களில் நான் மலர் சான்ற இளவேனில்]

என்று, மாதங்களில் தான் மார்கழியாக இருப்பதாகக் கூறுகிறான். கவியரசு கண்ணதாசன் இதன் தாக்கத்திலேயே தன் தாயைப் பற்றிய கவிதையில் “மாதங்களில் அவள் மார்கழி” என்று எழுதினார் [அதுவே பின் திரைப்படத்தில் நாயகியை எண்ணிப் பாடப்படுவதாக வரிந்து கொள்ளப் பட்ட்து].

இம்மாதத்தில் வைகறையில் துயில் நீக்கி, நன்னீராடி, உடலும் உள்ளமும் தூய்மையாக்கி கடவுளைப் பாடி வழிபடுவர். ஆலயங்களில் விடியலிலேயே நடை திறந்து மக்கள் கூடி இறைவனை வணங்குவர்.

வைணவக் கோயில்களில் திருப்பாவையும், சைவக் கோயில்களில் திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் பாடி வழிபடுவார்கள். திருப்பாவை ’சூடிக்கொடுத்த சுடர் மணி’ கோதைநாச்சியார் என்று அழைக்கப் படும் ஆண்டாள் அருளியது; திருவெம்பாவையும் / திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகர் அருளியது.

திருப்பாவையில் ஆண்டாள் தன்னைக் கோகுலத்தில் பிறந்த ஒரு பெண்ணாகவே வரிந்து அவர்கள் நேர்த்ததாகக் கூறப்பட்ட பாவை நோன்பை தானும் தன் தோழியருடன் (உண்மையாகவே இருந்தார்களோ இல்லை கற்பனைத் தோழியரோ !!!)   சேர்ந்து இருப்பதாக எழுதப்பட்ட பாடல்கள்.  மிக எளிமையான தமிழ், பக்தி சுவை, நாயக-நாயகி பாவம் இயல்பாக அமைந்தது ஆகியவை இதன் சிறப்பு

சாதாரணமாக அணைவரும் மாணிக்கவாசகர், ஆண்டாள் அருளிய திருப்பாவை வைணவர்களுக்கு வேதமாக இருப்பது போல் சைவப் பெண்டிரும்  நாயகி பாவத்தில் சிவபெருமானை வணங்கி வழிபட அருளிது என்று எண்ணுவர். ஆனால், மாணிக்கவாசகர் வாழ்ந்தது மூன்றாம் நூற்றாண்டு என்பது சில வரலாற்று ஆசிரியர்களின் கருத்து. வேறு சிலரோ அவர் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்று குறிப்பர். ஆண்டாள் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பதால், எப்படியிருப்பினும் மாணிக்கவாசகர் காலத்தால் முந்தியவர்.

ஒரு காலத்தில் மாணிக்கவாசகர், உபநிஷத்-இலுள்ள கருத்துக்களை எழுதியுள்ளார்; அவற்றை ஓதினாலேயே வீடுபேறு கிட்டும். எனவே, அவரின் பாடல்களுக்கு உரை எழுதக் கூடாது என்ற கருத்து நிலவி வந்திருந்துள்ளது.

திருவெம்பாவை, இருபது பாடல்கள் கொண்டது. முதல் எட்டு பாடல்களில் தோழியர் ஒருவரை ஒருவர் (நீராடி இறைவனைத் தொழ) கூப்பிடும் பாடல்கள். [இவைத் தத்துவரீதியாக அஷ்ட சித்திகள் ஒன்றை ஒன்று உசுப்பி எழுப்புவதைக் குறிப்பதாகக் கூறுவர்.] பின்னர், சில பாடல்கள் இறைவனைப் புகழ்ந்தும், அதன் பின் அவன் சக்தியை வியந்தும், அதன் பின் அவன் எளிமையையும் அவன் அருளாலே அவனை வணங்க முடியும் (அவனருளாலே அவன் தாள் பணிந்து என்ற சிவபுராண கருத்தை வலியுருத்தல்) என்பதை விளக்கியும் உள்ளன. இறுதிப் பாடல் “போற்றி போற்றி” என்று இறை வணக்கத்துடன் முடியும்.

திருப்பள்ளியெழுச்சி பத்து பாடல்களைக் கொண்டது. அணைத்தும் இறைவனைத் துயில் எழுப்பி தமக்கு அருளுமாறு வேண்டும் பாடல்கள்.

பொதுவாக முதல் இருபது நாட்கள் திருவெம்பாவையும் பின் அடுத்த பத்து நாட்களும் திருப்பள்ளியெழுச்சியும் பாடப்பட்டாலும் இரண்டும் வேறு வேறு காலங்களில் பாடப்பட்டவை. திருவெம்பாவை திருவண்ணாமலையில் பாடப்பட்டது. திருப்பள்ளியெழுச்சியோ அதில் குறிப்பிட்டுள்ளபடி திருப்பெரும்துரை சிவபெருமானை நேக்கிப் பாடப்பட்டது.

சிறு வயதில் எங்கள் வீட்டில் என் தாயார், விடியல் காலையில் எழுந்து (தினமும் ஒரு) திருப்பாவையும் திருவெம்பாவையும் (அ) திருப்பள்ளியெழுச்சியும்  பாடிக்கொண்டே பொங்கல் செய்வார். அந்த பாடலைக் கேட்டுக் கொண்டே மெல்ல கண் விழிப்போம். அதே நேரம் அருகிலுள்ள கோவில்களிலும் பக்திப் பாடல்கள் (குறிப்பாக ஐயப்பன் பாடல்கள்) மற்றும் பக்தி திரைப்படங்களின் ஒலிக்கோப்புகள் (திருவிளையாடல், சரஸ்வதி சபதம்), ஒலிபரப்பு ஆரம்பமாகும்.

தில்லி வந்த பின்பு இழந்ததில் இதுவும் ஒன்று. ஆனால், சமீபகாலமாகத் (கடந்த 3-4 ஆண்டுகளாக) தொலைக்காட்சிகளில் பாவையும் பாடல்களும் (டிசம்பர் சீசன்) ஒளிபரப்ப ஆரம்பித்தது என் போன்றவர்களுக்கு ஒரு வரமே.


செவ்வாய், டிசம்பர் 13, 2011

புதுதில்லி - நூறு வயது


தில்லி என்றுமே இந்தியாவின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் வகித்துதான் வந்துள்ளது. வரலாற்றின் ஆரம்பங்களில் பாட்னாவே (பாடலிபுத்திரம்) இந்திய அரசியலின் மையமாக இருந்தாலும் புராண காலங்களிலேயே  தில்லி (இந்திர பிரஸ்தம் என்ற பெயரில்)  ஒரு முக்கிய நகரமாகவே இருந்துள்ளது. மகத குப்த பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பின் கி.பி.700 களின் பிற்பகுதியில் தோமர்களால் மறுசீரமைக்கப் பட்ட தில்லி முகமது கோரியால் (சஹாபுதின் முகமது இயர்பெயர்; கோர் என்பது அவரது ஊர்/வம்ச பெயர் – இது இன்றைய ஆஃப்கானிஸ்தானத்தில் உள்ளது) 1192-ல் கைப்பற்றப்பட்டதுதான், கெட்டவற்றிலும் ஒரு நன்மைபோல, மிகப் பெரிய திருப்புமுனை. கோரி முகமதின் மறைவிற்குப் பின் அவரது அரசு அவரின் அடிமைகளால் பிரித்துக் கொள்ளப் பட்டு தில்லி, குத்புதின் ஐபக் வசம் 1206-ல் வந்தது (தஜுதின் இல்தொஸ் – கஜினி; நஸ்ரூதின் குல்பச்சா – முல்தான்;  இக்தியார் உதீன் முகம்மது – வங்காளம் என மற்றவர்களால் பிரித்துக் கொள்ளப் பட்டது). அதன் பின் தில்லி இந்திய வரலாற்றின் ஓர் முக்கிய அங்கமாகவும் இந்தியத் துணைகண்டத்தின் அறிவிக்கப்படாதத் தலைநகராகவும் இருந்து வந்துள்ளது. 1200களுக்குப் பின் தில்லி பின் வரும் வம்சங்களால் ஆளப்பட்டது. அவை,

1206-1290       அடிமை வம்சம்
1290-1320       கில்ஜி வம்சம்
1321-1398       துக்ளக் வம்சம்
1414-1451       சையது வம்சம்
1451-1526       லோதி வம்சம்
1526-1857       முகலாயர்கள்

இதில் 1398-1414 வரை தில்லி மட்டுமள்ள வட இந்தியாவின் பெரும்பகுதி தைமூரின் படையெடுப்பால் சின்னாபின்னமாகி இருந்திருக்கிறது. குறிப்பாக 1398 (17th December) தைமூரின் படைகள் தில்லியைத் தாக்கி சரணடைந்த சுமார் 1 லட்சம் பேரை ஒரே நாளில் கொண்று குவித்தது. இத்தனைக்கும் தில்லி சுல்தான் அவரை, வழியில் குறுக்கிட்ட ஜாட்டுகள் அளவுக்குக் கூட எதிர்க்கவில்லை. [இந்த மத்திய ஆசிய அரசர்களின் படையெடுப்பும் கில்ஜிகளால் வெல்லப்பட்டத் தென்னிந்தியாவில் ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ளவும் தான் முகமது பின் துக்ளக் தலைநகரை தேவ்கர் நகருக்கு மாற்ற நினைக்கக் காரணம்; ஆனால், அது முழுவதுமாக நிறைவேறாமல் இருந்ததால் தைமூரின் படையெடுப்பு வடக்கோடு நின்று விட்டது]  1399 இறுதியில் தைமூர் ஹரித்வார் வரைச் சென்று அதை அங்கு அழிவுகளை நிகழ்த்திவிட்டு தன் தலைநகர் திரும்பினான். 1405-ல் தைமூர் மறைந்தாலும் அவரது மகன்களிடம் இருந்த பயமும் வேறு பெரிய வம்சம் எதுவும் உயிர்ப்புடன் இல்லாததாலும் 1414 வரை அது தைமூர் வம்சத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த தில்லியின் அரசாட்சியை மீட்க யாராலும் முடியவில்லை. 1414-ல் சையது வம்சமும் தைமூர்களால் முல்தானின் கவர்னர்களாக நியமிக்கப் பட்டவர்களே. ஆனால், அவர்கள் தில்லியையும் தம் வசமாக்கிக் கொண்டனர். பின், தில்லியின் ஆட்சி லோதி வம்சத்திற்குக் கிட்டியது. பின்னர் 1526 பானிபட் (முதல்) போருக்குப் பின் அது முகலாயர் வசமானது. [இடையில் 1540-1553 வரை சூரி வம்சத்தினராலும் 1553-56 வரை ஹெமு விக்ரமாதித்யா என்ற இந்து மன்னராலும் ஆளப்பட்டது]. 1707-ல் ஔரங்கசீப்-இன் மறைவிற்குப் பின் தில்லி பல சோதனைகளைச் சந்தித்தது. குறிப்பாக, மத்திய ஆசிய அரசர்கள் தில்லியைக் கைப்பற்றி ஆள்வதை விட அதன் செல்வங்களைக் கொள்ளையிடவே நினைத்தார்கள். காரணம், இமயமலை; மத்திய ஆசியாவிலிர்ந்து தொடர்ந்து அதை அரசாள்வதைவிட ஓரிரு முறை கொல்லையடிப்பது எளிதாக இருந்தது தான். மீண்டும் 1738-ல் நாதிர் ஷா வினால் தில்லி சூறையாடப் பட்டது. 1752-ல் மராத்தியர்கள்(!!!) முகலாயர்களுக்கு தில்லியைக் காப்பதில் உதவினர். மராத்தியர்களின் ஆட்சி தில்லியைத் தவிர வட இந்தியா முழுவதும் பரவியிருந்தது. மூன்றாம் பானிபட் போரில் (1761) மராத்தியர்களின் தோல்விக்குப் பின் அஹ்மத் ஷா அப்தலியால் மீண்டும் சூறையாடப் பட்டது. பின் முகலாயர் வசம் இருந்த தில்லியை கிழக்கிந்திய கம்பெனி 1803-ல்  கைப்பற்றியது. பெயரளவுக்கு அரசர்களாக முகலாய வாரிசுகள் இருந்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகத்தின் (முதல் இந்திய சுதந்திர போர்!!! என்று அழைக்கப்படும்) காரணமாக பகதூர் ஷா பர்மாவுக்கு நாடு கடத்தப்பட்டப் பின் தில்லி பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்து பஞ்சாப் மாகாணத்தில் அடங்கியிருந்தது.

பிரிட்டிஷ் அரசர் ஐந்தாம் ஜார்ஜின் இந்திய வருகையின் பொழுது 1911 (December 11)-ல் கல்கத்தாவிலிருந்து தில்லி இந்திய தலைநகராக மாற்றப் பட்டது. தொடர்ந்து எட்வின் லுடைன்ஸ் புது தில்லி வடிவமைக்கப் பட்டு 20 வருடங்களில் அது செயல் படத் துவங்கியது. புதுதில்லியின் வைச்ராய் ஹவுஸ் (தற்போதைய குடியரசுத் தலைவர் மாளிகை), பரோடா ஹவுஸ், ஹைதராபாத் ஹவுஸ், பிகானிர் ஹவுஸ், படியாலா ஹவுஸ், ஜெய்பூர் ஹவுஸ் ஆகியவை லுடைன்ஸால் வடிவமைக்கப் பட்டவையே.

முதலில் தில்லி அரசு இந்த நூறாவது ஆண்டு நிறைவை, இது காலணி அதிகாரத்தின் மிச்சம்; அதனால் அலுவலகப் பூர்வமாகக் கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்தது. ஆனால், வரலாற்று ரீதியாக இது ஒரு முக்கியமான நிகழ்வு. இதைச் சரிவர விளம்பரப் படுத்தி இருந்தால் சுற்றுலா பயணிகளையும் வரலாற்று ஆர்வலர்களையும் ஈர்த்திருக்கலாம். பிரிட்டிஷ் காலணி ஆதிக்கத்தை இதனால் வரலாற்றிலிருந்து அகற்றிவிட முடியுமா? அரசு அதிகாரப் பூர்வமாகக் கொண்டாடாவிட்டாலும், சுற்றுலாத் துறையாவது சரியாக விளம்பரம் செய்து தனி நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க இடங்களை புதுப்பித்திருக்கலாம்.
 கடைசியில், இது தனியாரும் பள்ளிகளும் கொண்டாடுவார்கள் என அறிவித்தது. நேற்று முன் தினம் இந்தியா கேட் பகுதியில் கொண்டாட்டங்கள் நடந்தன. ’ஆலையில்லா ஊருக்கு இலுப்பை பூ போல்’ வரலாற்று சிறப்புமிக்க ஒரு நிகழ்வு, சாதாரணமாகக் கொண்டாடப் பட்டுள்ளது.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

கலவை – 11


நான் முன்பே எழுதியபடி, தில்லியில் VVIP-களின் ஊர்திகளில் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்துவது என்பது அடிக்கடி நடக்கும் பிரச்சனை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் protocol சரியில்லை என்றும். அவர்களின் ஊர்திகளுக்கும் மத்திய அமைச்சர்களின் ஊர்தி போல் விளக்குகள் பொறுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது மட்டும் நடந்துவிட்டால், தில்லி காவல் துறைக்கு நிரந்தர தலைவலிதான். ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சர்கள், நீதிபதிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மேலும் 500 பேரை சேர்த்துவிட்டால் அவ்வளவுதான். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா உறுப்பினர்களின் சலுகைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பீகாரைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேறு தங்களுக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணச்சீட்டு முன்பதிவு கிட்டுவதில் சிரமம் இருப்பதாகப் புகார் கூறியுள்ளனர். நாடாளு மன்றம் ஒரு வாரம் நடைபெறவே இல்லை, இதைப் பற்றி மக்கள் யாரிடம் முறையிட முடியும். ’பண்டாரம் சோத்துக்கு அலைகிறது, லிங்கம் பஞ்சாமிர்த்துக்கு அழுகிறது’ என்று கூறுவார்கள்; அது இதுதான்.

இந்திய அரசு கூகுள், முகநூல் ஆகியவற்றில் காட்டப்படும் 255 தகவல்களை நீக்கும்படிக் கோரியுள்ளது (அவற்றில் 8 வெறுப்பைக் காட்டும் பதிவுகள்). ஒரு புறம் அமெரிக்கா (ஹிலேரி கிளிண்டன்) மற்ற நாடுகளை வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் அவர்கள் இதற்குச் சம்மதிப்பது கடினமே. நம் நாட்டில் நம் பத்திரிக்கை மற்றும் மற்ற ஊடகங்களையே கட்டுப் படுத்த முடியவில்லை. அதே நேரம் நம் வலைத் தலங்களிலும் சில நேரங்களில் எல்லைகள் மீறப் பட்டு வருவதையும் மறுக்க முடியாது. வலை தளங்களில் சீண்டல்கள் சில நேரங்களில் வெறுப்புத் தீயை வளர்க்கத் தான் செய்கின்றன. எல்லைகள் மீறப் படாத வரை அனைத்தும் சரி. அது மீறிவிட்டால் சில நேரங்களில் கடிவாளங்கள் அவசியமாகிவிடுகின்றன.

2-ஜி வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் சாமியின் வாதத்தை டிசம்பர் 17-ம் தேதி அளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.  

பெட்ரோல் விலை சற்று குறைத்திருக்கிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் விலையேற்றத்தில் அது தலைகீழ். முழம் ஏற்றினால், விரல்கடை அளவு குறைப்பார்கள்.

அருகாமை நாடுகளைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தான்  தற்போது (விலை குறைப்பிற்கு பின்னரும்) பெட்ரோல் விலை அதிகம்.

            பாகீஸ்தான்                 -           `.48.64
            பங்களாதேஷ்              -           `.52.42
            இலங்கை                    -           `.61.38
           
            இந்தியாவில் விலைகுறைப்பிற்கு பின்னரும் இது `.66.42  (தில்லியில்) ஆக உள்ளது. அமெரிக்காவில் வெறும் `.44.88 (ஹூம்). ஆனால், டீசல் விலை `.40.91 க்கு விற்பது மற்ற நாடுகளைப் பார்க்கும் பொழுது குறைவுதான். அதற்காகத் தேற்றிக் கொள்ளலாம். முக்கிய காரணம் excise duty தான் அது லிட்டருக்கு `.14.78.

நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைகளுக்கு மக்கள் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான மசோதாவை மத்திய நாடாளுமன்ற நிதிக் குழு நிராகரித்துள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையிலேயே அதற்கு போதிய வரவேற்பில்லை. குறிப்பாக சிதம்பரம், நந்தன் நிலேகனி கூடுதல் நிதியாகக் கேட்ட 15000 கோடியை ஏற்கவில்லை. இதில் இந்த சட்ட சிக்கல் வேறு. ஆனால், பிரதமர் இதில் முனைப்புடன் இருப்பதால் குழுவின் எதிர்ப்பை மீறியும் மசோதா அறிமுகப் படுத்தப் படலாம்.

சென்ற வாரம் ஹிந்தி திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் காலமானார். 1940 களின் ஆரம்பத்தில் நடிக்க வந்த அவர் அப்போதைய முன்ணனி நடிகை சுரையா-வுடன் இணைந்து தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்தாலும் அதன் பெருமைகள் சுரையாவிற்கே சென்றதைக் கண்டு, தன் பயணத்தை வேறு பாதையில் திருப்பினார். பின்னர் நடிகர் அசோக் குமாரால் அவரது திறமை கண்டெடுக்கப் பட்டு வெற்றி கண்டார். தன் வெற்றியால் தன் நண்பர் குருதத் (என்னைப் பொறுத்தவரை ஹிந்தி திரையின் மிகத் திறமை வாய்ந்த நடிக இயக்குனர் என்றால் அது குருதத் தான்). வசனங்களை வேகமாக உச்சரிப்பார்;  Style மன்னர் (ரஜினிகாந்த் ஞாபகம் வருகிறதா?). 50-60, ராஜேஷ் குமார் வரும் வரை, பெண்களின் கனவு நாயகன்; அதற்கு பின் வித்யாசமான கதையமைப்புகளைக் கொண்ட படங்கள், 70களின் பின்னால் கவர்ச்சி நாயகிகள் என்று எப்பொழுதும் தன்னைப் புதுபித்துக் கொண்டே வந்துள்ளார். ஆர்.கே.நாரயணின் கதையை “கைட்” என்று தனக்கேற்றவாறு திருத்தி அவரது தம்பி விஜய் ஆனந்தால் இயக்கப் பட்ட படம் இந்திய திரைப்படங்களுக்கு ஒரு மைல் கல். அவரது இசை ஆர்வம் அவர் படங்களின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. அவரது படத்தின் அணைத்து பாடல்களுமே ஹிட் தான்.  60களுக்கு முன் வரை முஹமத் ரஃபியுடனும், பின் கிஷோருடனும் இணைந்து அவர் அளித்துள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

நேற்று சேவாக் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது ஆட்டக்காரர். சேவாக் அதிரடி ஆட்டக்காரர். ஆனால், இவ்ரால் மட்டும் எப்படி நீண்ட innings ஆட முடிகிறது. பொதுவாக, இது போன்ற அதிரடி மட்டையாளர்களின் பலமே அவர்களின் hand-eye coordination தான். சேவாகிடம் அது இருக்கிறது. சாதாரணமாக சேவாகின் footwork தான் அவர் பலவீனம் என்று கூறுவார்கள். ஆனால், அதுவே cut விளையாடுவதற்கு நிறைய நேரம் தருகிறது என்று நினைக்கிறேன். அவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்துவது அவரின் அதிரடிகள் offside-ல் இருப்பதுதான். சாதாரணமாக அதிரடி ஆடுபவர்கள் leg-sideல் தான் பலமாக அடிப்பார்கள்; அதனால் cross-bat விளையாடி ஆட்டமிழ்ப்பார்கள். ஆனால் சேவாக் பொதுவாக சுழல் பந்தை தான் leg-sideல் ஆடுவார். அதுகூட அவர் நீண்ட innings ஆடுவதற்கு காரணமாக இருக்கிறது போலும்.

வியாழன், டிசம்பர் 08, 2011

புறநானூற்றில் சிவன்




சங்கத்தமிழ் பாடல்களில் மிகவும் சிறப்பித்துக் கூறப்படுவது எட்டுத்தொகை நூற்களில் ஒன்றான புறநானூறு. அதன் முதல் பாடல் கடவுள் வாழ்தாகும். இதை எழுதியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். [பெருந்தேவனார் – இயற்பெயர்; தமிழில் பாரதத்தைப் பாடியதால், இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். பாரத வெண்பா வென்னும் நூல் இவர் பாடிய தென்று கூறுவர்.]

புறநானூறு தவிர, சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு ஆகியவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவரே. இவர் பெரும்பாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார் (எனினும், நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரைகாணப்பட்டுள்ளது).

இனி பாடலைப் பார்ப்போம் :

கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதினெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரறவு அறியாக் கரகத்துத்,
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே

கண்ணி
திருமுடிமேற் சூடப்படுங் கண்ணி
[தலையில் சூடப்படுவது கண்ணி என்றும், மார்பில் அணியப்படுவது மாலை என்றும் வழங்குவது மரபு].
கார் நறுங் கொன்றை
கார்காலத்து மலரும் வாசமிகு கொன்றைப்பூ
காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை
அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் கொன்றைப்பூ
ஊர்தி வால் வெள்ளேறு
ஏறப்படுவது தூய வெள்ளை ஆனேறு(காளை)
சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப
மிக்க பெருமைபொருந்திய கொடியும் அந்த காளை என்று சொல்லுவர்
கறை மிடறு அணியலும் அணிந்தன்று
நஞ்சினது கறுப்பு திருமிடற்றை (கழுத்து/கண்டம்) அழகு செய்தலும் செய்தது
அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும்
அக்கறுப்புத்தான் மறுவாயும் - வானோரையுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் - அந்தணரால் புகழவும் படும்
பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று
பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று
அவ்வுறு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்
அந்த வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்
பிறை நுதல்வண்ணம் ஆகின்று
பிறை திரு நுதற்கு (நெற்றி / முன் தலை) அழகானது
அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும்
அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்.  

[“கின்னரர் கிம்புருடர் விச்சாதரர் கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர்- மன்னும், உரகர் சுரர்சாரணர் முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போக புவி யோருடனே, ஆகாச வாசிகளாவார்” என்பவை சிவனின் 18 கணங்கள் என, அடியார்க்கு நல்லார் பழைய வெண்பாக்களால் குறிப்பிடப் படுவதாகப் பழைய உரைகளில் உள்ளது].
எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய
எவ்வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய
நீர் அறவு அறியாக்கரகத்து
நீர் தொலைவறியாக் குண்டிகை (குடம்) ஆகவும்
(கங்கை என்றும் கூறுவர்)
தாழ் சடை
தாழ்ந்த திருச்சடையானும்
பொலிந்த
சிறந்த
அருந்தவத்தோற்க
செய்தற்கரிய தவத்தை யுடையோனுக்கு

இப்பாட்டில் பெருந்தேவனார், சிவனை அருந்தவத்தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் காளை என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற் சூடிய பிறையும் முறையே அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும் படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார்.

இத் திருக்கார்த்திகை நன்னாளில் அச்சிவனை வணங்கி அவன் அருள் பெறுவோம்.