வியாழன், ஆகஸ்ட் 18, 2011

கலவை


சென்ற வாரம் அன்னா ஹசாரே-தான் மிக முக்கிய செய்திகளில் இடம் பிடித்தவர். இதைப் பற்றி ஏற்க்கனவே எழுதி விட்டேன். இப்பொழுது அரசு அவருக்கு, 15 நாட்கள் ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடத்த / உண்ணாவிரதம் இருக்க அனுமதித்துள்ளனர். என்னத் திருப்பங்கள் நடக்கிறது என பொருத்திருந்து பார்ப்போம்.

அடுத்த முக்கிய நிகழ்வாக நான் கருதுவது கொல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி சௌமித்ரா சென்னின் பதவி நீக்கம் தொடர்பாக மாநிலங்கள் அவையில் நடைபெற்ற விவாதம். கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரியால், சென்னுக்கு எதிராக மாநிலங்கள் அவையில் கொண்டுவரப்பட்ட “impeachment (குற்றப்பழி!!!) தீர்மாணம் நிறைவேற்றப்பட்டால் இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒர் நீதிபதி நாடாளுமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்படுவார். இதில் காங்கிரஸுகு இரு தலைக் கொள்ளி நிலை தான். ஏனென்றால் பதவி நீக்கத்திற்கு ஆதரவு அளித்தால், நீதித்துறையின்  வெறுப்பை சந்திக்க வேண்டும்; எதிராக வாக்களித்தால் எதிர் கட்சிகளின் வாய்க்கு மேலும் அவல் கிட்டும். ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் மாட்டிக் கொண்டு அல்லலுறும் காங்கிரஸ், முன்னர் நீதிபதி ராமதாஸ்-க்கு உதவியது [மக்களவையில் அவருக்கு எதிராக கொண்டு வந்த (முதல்) impeachment தீர்மானத்தில் வாக்கெடுப்பின் பொழுது வெளிநடப்பு செய்து] போல் செய்ய மாட்டார்கள் என்று தான் நினக்கிறேன். ஆனாலும், சென்-ஐ அவர்கள் தானாக பதவி விலகுமாறு நிர்பந்திப்பார்கள் என்று தான் நினைக்கிறேன். ஆனால், அவரோ மாநிலங்கள் அவையில் தான் (நீதித்துறைத் தூய்மை படுத்துதல் என்ற பெயரில்) பலி ஆடு ஆக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். ஆனால் இது நீதித்துறைக்கும் நாடாளு மன்றத்திற்கும் அவ்வப்போது நடக்கும் யார் பெரியவர் என்ற போட்டியை மேலும் அதிகரிக்காமல் இருந்தால் சரி. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

அடுத்து தில்லியில், உத்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை. யமுனையில் வெள்ளம் அபாய நிலையைத் தொட்டுள்ளது. இத்துணைக்கும் இந்த ஆண்டு,  வானிலைத் துறை அறிக்கையின் படி, சாதாரண மழைதான். ஆனாலும் ஆறுகளில் வெள்ளம். காரணம் மணல் கொள்ளை!! மேலும், பல்வேறு நீர் பிடி துறைகளை (ஏரி, குளம் அனைத்தையும்) வீட்டுமனைகளாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் மாற்றிவிட்டுள்ளோம். இதன் பயன் மழைக்காலங்களில் வெள்ளம், கோடையில் நீர் பற்றாக்குறை.

வீட்டுமனை என்றவுடன் ஒன்று நினைவுக்கு வருகிறது. சமீப காலமாக எல்லா சேனல்களிலும் (குறிப்பாக தமிழ் சேனல்களில்) வீட்டு மனை விளம்பரங்கள் பெருகியுள்ளன. இதற்கும், நில ஆக்கிரமிப்பு செய்திகளுக்கும் தொடர்பு இருக்கிறது என்றேத் தோன்றுகிறது. இதைப் பற்றி விவரம் தெரிந்தவர்களிடம் கேட்க வேண்டும்.

அடுத்து, ஆந்திர உயர் நீதி மன்ற ஆணைப்படி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில், ஜகன்நாத ரெட்டியின் வீடு(கள்), அலுவலகங்கள் மற்றும் அவரின் சாக்ஷி தொலைக்காட்சி அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. அவருக்கும் (ரத்த சரித்திரம் புகழ்) படுதல ரவிக்கும் இருந்த சண்டை அனைவரும் அறிந்த்தே. அதற்கு அடிப்படையே சுரங்கத் தொழில் தான். ஏற்கனவே கர்நாடகத்தில் சுரங்கத்தொழிலில் நடைபெறும் முறைகேடுகள் வெளிவந்துள்ளன. ஆந்திராவில் “தோண்டினாலும் மேலும் பூதங்கள் வெளிவருமோ என்னவோ?

பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷம்மி கபூர் சென்ற வாரம் காலமானார்.  மிகப்பெரிய் வெற்றிப் படமான  ஜங்லீ (காட்டுவாசி என்று பொருள்) படம் வெளிவந்த பின் அதே போன்ற படங்களிலேயே நடித்த்தால் மிக நல்ல நாயக நடிகர் என்று கூற முடியாது. ஆனால் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நன்றாகவே நடித்துள்ளார் [தமிழில்  கார்த்திக் -உடன் ”அமரன் ” திரைப்படத்திலும் நடித்துள்ளார்]. இவரும் அசோக் குமாரும் நடித்த “பான் பராக்” விளம்பரம்  1980-90 களில் மிகப் பிரபலம். எனது அபிமான பாடகர் முகமத் ரஃபி தான் இவர் நடிக்கும் படங்களில் அநேகமாக பாடுவார். அதனாலேயே இவர் படங்களை விரும்பிப் பார்த்துள்ளேன்.  அவர் குடும்பத்தினருக்கு இரங்கல்கள்.

மூன்று போட்டிகளில் தோல்வியைத் தழுவிய பின் இன்று  இந்திய இங்கிலாந்து அணிகளிடையே நான்காவது  கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது. சென்ற போட்டியைப் போலவே சேவாக் நடக்கும் நிலையில் இருந்தாலேயே அணியில் இடம் பெறுவார் என்று கூறாமல், முழு உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே கலமிறக்கப் பட வேண்டும். மேலும், நான்கு வேகப் பந்தாளர்கள் இல்லாமல் கலம் இறங்கினால் இதிலும் தோல்விதான் கிட்டும். ஏழு மட்டையாளர்களாலேயே இதுவரை, 300 எட்ட முடியவில்லை. அதை ஆறாகக் குறைத்தாலும் ஒன்றும் குறைந்துவிடப் போவதில்லை.   முழு வெள்ளையடிக்கப்படுமா அல்லது கொஞ்சமாவது தேறுமா என்று பார்ப்போம்.

7 கருத்துகள்:

 1. நல்ல கலவை சீனு. அரசியல், சினிமா, விளையாட்டு என்று எல்லாம் கலந்து ஒரு கலவை... பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வெங்கட்,

  நன்றிகள். (நீ அனுப்பிள்ள மற்றொரு தனிப்பட்ட பின்னூட்டத்திற்கும் சேர்த்து. ம்ம்... என்ன செய்வது ஆர்வக்கோளாறு தான்.)

  பதிலளிநீக்கு
 3. //ஏழு மட்டையாளர்களாலேயே இதுவரை, 300 எட்ட முடியவில்லை.//

  நம்ம ஊரில் டாஸ்மாக் போய் பாருங்கள். சிலர் 100-லேயே மட்டையாகி விடுகிறார்கள்.

  (கலவை என்றதும் வேலூர் பக்கமுள்ள ‘கலவை’ என்ற ஊரின் தலபுராணம் சொல்லப் போகிறீர்களோ என்று நினைத்து காலவை த்தேன். செய்திகளை கலந்து கட்டிவிட்டீர்கள். )

  பதிலளிநீக்கு