வியாழன், ஆகஸ்ட் 11, 2011

திரு P.C. அலெக்ஸாண்டர் மரணம்

நேற்றைய செய்திகளில் தமிழக முன்னாள் ஆளுநர் திரு. பி. சி. அலெக்ஸாண்டர் மரணச் செய்தியைக் கேள்வி பட்டதும் என் மனதில், 1988-89 இல் அவர் ஆளுநராக இருந்ததும் அப்பொழுது நடந்தவைகளும் நினைவுக்கு வந்தன.

அப்போது நான் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்த நேரம். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் ஜானகி அம்மாளால் சட்டசபையில் தன் பலத்தை காட்ட முடியாவில்லை. ஜெயலலிதாவோ ராஜீவ் காந்தி தன்னை ஆதரிக்க வைக்க தன்னால் முயன்றதை செய்து பார்த்தார். ஆனால் அதிமுக உறுப்பினர்களிடையே போதுமான ஆதரவு இல்லை. மூப்பனாரின் ஆலோசனையில் ராஜீவ் தன் சமையலறை பொம்மைகளில் (Kitchen Cabinet) இருந்து திரு அலெக்ஸாண்டரை ஆளுநராக அனுப்பி வைத்தார். [சேஷன் போலவே. அவர் அரசு கட்டுபாட்டிலிருந்தவரை காங்கிரஸ் மற்றும் நேரு குடும்ப (இரண்டும் ஒன்றுதானோ) விசுவாசியாகவும் விடுபட்ட பின் அதற்கு நேர் மாறாக மாறினார்; இவர் மாறவில்லை அத்தான் வேறுபாடு). ஆனால், பொதுவாக, இவர் ஒரளவு நேர்மையாகவே நடந்து கொண்டார் எனக் கூறலாம் - ஒருவேளை அரசியல்வாதியாக இல்லாமல் அரசு அதிகாரியாக இருந்ததால்.

மாநிலத்தில் இவர் ஆட்சி நேரத்தில் பொதுவாக, குறிப்பாக சென்னையில், சட்டம் ஒழுங்கு நன்றாகவே பேணிக் காக்கப்பட்டது. ஆளுநராக இருந்த போது பொதுவாக கட்சி (வேறு ஏது காங்கிரஸ் தான்) சார்பாக இவர் செயல்படவில்லை என்றே கூறாலாம். [ஒரு வேளை பல குழுக்கள் (கோஷ்டிகள்) இருந்ததினாலோ?]

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இவரை கருப்பு ஆடாகவே கருதுவர். காரணம், இவர் (இவரும் ஒரு மலையாளி!!!)  காலத்தில் தான் IPKF - விடுதலை புலிகள் சண்டை வலு பெற்றன. ராஜீவ் தன் இலங்கைப் பிடிவாதத்தை தொடரவே இவரை பயன்படுத்தியதாகவும் இவர் மத்திய (ராஜீவ்) அரசின் கைபாவையாக செயல் பட்டார் எனவும்  குற்றச்சாட்டு உண்டு..

இவர் ஆட்சியில், தனிப்பட்ட முறையில் அந்நேரத்தில் எனக்கு ஒர் சிக்கல் நடந்தது. அதுதான் செய்தியை பார்த்தவுடன் என் நினைவுக்கு வந்தது.

நான் மத்திய அரசு பணிக்காகத் தேர்வு எழுதி முடிவுகள் வெளிவந்து பணி நியமனத்திற்காகக்  காத்திருந்த நேரம் (காவலர் ஆய்வு தகவலறிக்கை தர வேண்டும்), ஒரு தனியார் தணிக்கையாளர் ஒருவரிடம் வேலை செய்து வந்தேன். ஒரு நாள் பேருந்தில் கூட்ட நெரிசலில் உள்ளே நுழைய எத்தனித்த பொழுது வண்டி கிளம்பி விட்டது. அடுத்த நிறுத்தம் காவல் நிலையம். உள் நுழைவதற்குள் காவலர்கள் என்னை  (யும் கூட ஒரு சிலரையும்) இழுத்து பிடித்துவிட்டனர். பின்னர், எங்கள் அனவரையும் நீதி மன்றம் கூட்டிச் சென்று அபராதம் விதிதனர் (50 ரூ). [சம்பளமே 400ரூ தான்] என்னிடம் 78 ரூ இருந்தது. கூடவே எங்கள் குடியிருப்பில் வசிக்கும் வேறு ஒரு பையன். அவனிடம் 10 ரூ தான். எப்படியோ எங்களை பிடித்த காவலிரிடமே  கெஞ்சி மீதி கடன் வாங்கி அவர் வண்டியிலேயே (திரும்பி வர பணம் இல்லை) திரும்பினோம். அவரிடம் பேச்சு கொடுத்ததில் - மாத இறுதி என்பதால் அவர்கள் கணக்குக் காட்ட வேண்டும் என்பதும் ஆளுநர் ஆட்சி என்பதால் அது கடுமையாக கடைபிடிக்கப்படும் என்பதும் - தெரியவந்தது.

அன்றிலிருந்து வேலையில் சேர தாமதமாகும் ஒவ்வொரு நாளும் இதனால் தானோ என தினமும் மன உளச்சல்.

கிட்டத்தட்ட 2 மாதங்களுக்குப் பின், ஒரு நாள் வேறு வழியில்லாமல் காவல் நிலையத்திற்கே நேரில் சென்று விசாரித்தால் அவர்கள் இது சாதாரண அபராதம் தான் என்றும், மத்திய அரசின் கடிதத்திற்கு உடனேயே பதில் அளிக்கவேண்டும் என ஆளுநர் உத்தரவு என்பதால் நிலையத்தில் (கிரிமினல்) குற்றப் பதிவு எதுவும் இல்லாததால் ஏற்கனவே அனுப்பிவிட்டதாகக் கூறினர். அப்பொழுதுதான் சற்று நிம்மதியாக இருந்தது.

பின் ஓரிரு நாட்களில் பணி நியம உத்தரவும் கிட்டியது.

அப்பொழுதுதான் அவரின் நிர்வாகத்திறன் புரிந்தது.

மத்திய பணியிலும் அவர் பணி பற்றி நேர்மறை செய்திகள் கிட்டின.

எப்படியிருப்பினும் ஒரு நல்ல நிர்வாகியை இழந்துள்ளோம்.

4 கருத்துகள்:

 1. பி.சி.அலெக்சாண்டர் ஒரு திறமையான ஆளுநராக (தமிழகம், மகாராஷ்டிரம்)இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. அவரது மறைவுக்கு அஞ்சலிகளும், அவரது குடும்பத்தாருக்கு அனுதாபங்களும்!

  ஆனால், தான் எழுதிய ஒரு புத்தகத்திலும் எமர்ஜென்ஸி குறித்தோ, இந்திரா காந்தி கொலையைத் தொடர்ந்து தில்லியில் சீக்கியர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டது குறித்தோ, ராஜீவ் காந்தியின் காலத்தில் பிரதம மந்திரியின் அலுவலகத்திலிருந்து அரசாங்க ரகசியங்கள் ஓற்றர்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு போனது குறித்தோ, குடியரசுத்தலைவராக விரும்பி முயன்றது குறித்தோ குறிப்பிடவில்லை. இதனால், அவரது நடுநிலையை சரித்திரம் நிச்சயம் சந்தேகிக்கும்!

  பதிலளிநீக்கு
 2. நன்றி சேட்டைக்காரன்,

  அவர் ஏற்கனவே குறிப்பிட்டது போல், சேஷன் - தேர்தல் ஆணையர் பணி நியமனத்திற்குப் பின், தன் நேரு குடும்ப விசுவாச நிலையை மாற்றிக் கொண்டது போல் இவர் மாற்றிக் கொள்ளவில்லை. இறுதி வரை நேரு குடும்ப விசுவாசியாகவே இருந்தார்.

  அதனால், தனிப்பட்ட முறையில் நேர்மையாளராக இருந்தாலும் விசுவாசம் கண்ணை மறைத்துதான் இருக்கிறது. ஆங்கிலத்தில் “Beggers can't be choosers" என்று கூறுவார்கள், அது "Slaves(!!!)"-க்கும் பொருந்துமோ?

  பதிலளிநீக்கு
 3. நல்ல தோர் அலசல் சீனு... அரசியலில் எல்லாருமே இப்படித்தான் இருந்து விடுகிறார்கள். திறமை இருந்தாலும், இல்லையென்றாலும் ”ஆமாம் சாமி” போடுபவர்களுக்குத் தான் இங்கே பதவிகள்....

  அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....

  பதிலளிநீக்கு