வியாழன், ஆகஸ்ட் 25, 2011

லோக்பால் (தொடர்ச்சி)

பொதுவாக லோக்பால் குறித்து என் ஆதரவைத் தெரிவித்திருந்தேன். இதில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை

இருந்தும் இதில் மேலும் சில கருத்துகள் இருக்கின்றன. அவை என்ன?

(1)  அரசு கொணர்ந்த சட்ட வரைவு எதற்கும் உதவாத ஒன்று என்பதில் மாற்றம் இல்லை. ஆனால், அன்னா ஆதரவாளர்கள் அவர்களின் “ஜன் லோக்பால்”  மட்டுமே ஏற்போம் மற்றவற்றைப் பார்க்கக் கூட மாட்டோம் என்று கூறுவதை யாரும் விரும்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

(2)  30-ம் தேதிக்குள் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்பதும் சற்று இயலாத செயல் தான். அதனால், அவர்களின் முக்கியக் கோரிக்கையான பிரதமர் மற்றும் உயர் அதிகார வர்க்கத்தை (நீதித் துறை உட்பட) இதன் கீழ் கொண்டுவந்து அந்த சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை ஏற்று போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்பதே நடைமுறை சாத்தியமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கொல்கத்தா உயர் நீதி மன்ற நீதிபதி சௌமித்ரா சென்னின் “impeachment தீர்மாணம் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதில் சமாஜ்வாதி ஜனதாகட்சி தவிர அனைவரும் ஆதரவாக வாக்களித்துள்ளனர். முதல் நாள் சென்னின் தன்னிலை விளக்கம் கேட்டவர்கள் யாராக இருந்தாலும் அவருக்கு ஆதரவு அளித்திருப்பார்கள். அடுத்த நாள், சமாஜ்வாதி உறுப்பினர் சதீஷ் சந்தர் யாதவ் அவருக்கு ஆதரவாக (தீர்மாணத்தை எதிர்த்து) நன்றாக வாதாடினார். ஆனால், அவர்களின் வாதத்தை கம்யூனிஸ்ட் உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, பாஜகவின் அருன் ஜெட்லி ஆகியோர் திறமையாக தகுந்த ஆதாரங்களோடு நன்றாகவே தகர்த்தனர். சென்னின் விளக்கத்தில் இருந்த திசை திருப்பல்களையும் பொய்களையும் தகுந்த ஆதாரத்துடன் உடைத்தனர். இது போன்ற ஒரு விவாதம் லோக்பால் மசோதாவிற்கும் நடந்து அது நிறைவேற்றப்பட வேண்டும். அதுதான் நல்லது. அதற்காகவாவது அன்னாவின் காலவரையை அரசு ஏற்கக் கூடாது.

(3)  லோக்பால் விவகாரத்தைப் பொருத்தவரை பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறது. பாஜக செய்தித் தொடர்பாளர் சந்தன் மித்ராவோ அன்னா ஏழு வருட ஆட்சியில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான போராட்டம் இது என்கிறார். ஆனால், அன்னா ஆதரவாளர்கள், சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு 45 வருடங்கள் அவகாசம் தந்துவிட்டதாகவும் அதனால் 30-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். 45 வருடங்களில் பாஜக வின் ஆட்சியும் அடங்கும். அவர்கள் ஆட்சியில் இது ஏன் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. “கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

(4)  அன்னா ஆதரவாளர்களிடையே உணர்ச்சி அதிகமாகத் தெரிகிறதே தவிர தர்க்க ரீதியாக விவாதிக்க குறைவான நபர்களே உள்ளனர். [அதிலும், கிரன் பேடி கூறிய “அன்னா தான் இந்தியா; இந்தியா தான் அன்னாஅபத்தத்தின் உச்சம். 1970-80-களில் இந்திரா ஆதரவாளராக இருந்திருப்பாரோ? (அதே கோஷம். “Why blood? Same blood”)]. அதனால் இந்தப் போராட்டம் வன்முறைக்கு மாறிவிடுமோ என்ற அச்சம் அவ்வப்போது வருகிறது - குறிப்பாக கேஜ்ரிவால் பேசும் போதெல்லாம். [பேச்சு வார்த்தைகளில் பாஜகவின் சுஷ்மா காங்கிரஸின் சிபல் போல அன்னாவுக்கு கேஜ்ரிவால் – அவரிருக்கும் வரை பேச்சுவார்த்தை வெற்றி பெறுவது கடினம்].  

இருந்தும் வலுவான லோக்பாலுக்கு எனது ஆதரவு நிலையில் மாற்றம் இல்லை. அன்னாவின் இந்த போராட்டத்தில் – வன்முறையாக மாறாத பட்சத்தில் -  தவறு இருப்பதாகவும் கருதவில்லை. ஆனால் எதற்கும் ஒரு வரை இருக்கிறது. அது மீறப்படாமல் இருக்கும் வரை நல்லது

ஓர் அளவுக்கு மேல் வளைத்தால் எதுவும் ஒடிந்து தான் போகும். ஆனால், அந்த அளவு எது என்ற கேள்விக்கு தான் பொதுவாக விடைத் தெரிவதில்லை.

3 கருத்துகள்:

  1. எனக்கு இந்த கிரண் பேடி அண்ட் க்ரூப் மேல பயங்கர கடுப்பு. அவர்கள் அண்ணாவை தவறாக வழிநடத்துகின்றனர். தேவை இல்லா பிடிவாதம். அப்புறம் எனக்கு தெரிஞ்சு இந்த லோக்பாலை வைத்து இன்னும் சில பல அரசியல் பழிவாங்கல்கள் நடக்கலாம். அடிமட்ட லஞ்சவாதிகள் சிக்குவார்கள். வழக்கம்போல் மந்திரிகள் / பிரதமந்திரிகள் தப்பிச்சிடுவாங்க சார்.

    பதிலளிநீக்கு
  2. ஓர் அளவுக்கு மேல் வளைத்தால் எதுவும் ஒடிந்து தான் போகும். ஆனால், அந்த அளவு எது என்ற கேள்விக்கு தான் பொதுவாக விடைத் தெரிவதில்லை. “Why blood? Same blood”

    பதிலளிநீக்கு