வெள்ளி, பிப்ரவரி 01, 2013

தில்லி சீக்கிய குருத்வாரா ப்ரபந்தக் கமிட்டி தேர்தல்



சென்ற வருடம் நடந்த நகராட்சித் தேர்தலுக்குப் பிறகு அடுத்த மாநிலத் தேர்தலுக்கு இடையில் தில்லி நகரம் எதிர்பார்த்திருந்த ஒரு முக்கிய அரசியல் நிகழ்வு என்றால் அது தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகச் செயற்குழுவின் தேர்தல்கள் தான்.

தில்லி சீக்கிய குருத்வாரா ப்ரபந்தக் கமிட்டி (தில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகச் செயற்குழு) என்பது சிரோன்மணி குருத்வாராப் பிரபந்தக் கமிட்டி அமிர்தசரஸின் பொற்கோவிலைத் தலைமையகமாகக் கொண்டு பஞ்சாப், ஹிமாசல், ஹரியானா ஆகிய மாநிலங்களின் குருத்வாராக்களை நிர்வகிப்பது போல், தில்லியில் உள்ள குருத்வாராக்களையும் அவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி, சேவை நிறுவனங்களை நிர்வாகிக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு ஆகும். சிரோன்மணி குருத்வாரா கமிட்டியின் நியமன உறுப்பினர் ஒருவரும் இந்த தில்லி நிர்வாகக் குழுவில் இடம் பெறுவார்.

பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் கட்சி சிரோன்மணி அகால் தள். 1999-இல் தற்போதைய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கும் குருசரண் சிஞ் தோரா (இவர் ஆப்ரேஷன் ப்ளூ ஸ்டார் சமயத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்) ஏற்பட்ட பிளவின் காரணமாக இதன் தில்லி கிளையும் இரண்டாக உடைந்தது. தற்போது இது சி.அ.த (பாதல்), சி.அ.த.(சர்னா) என்ற இரண்டு பிரிவுகளாக இயங்கி வருகிறது. இதில் பாதல் பிரிவிற்கு பாஜக-வின் ஆதரவும் சர்னா பிரிவிற்கு காங்கிரஸின் ஆதரவும் உண்டு.

கடந்த 10 வருடங்களாக இந்த சர்னா பிரிவின் தலைவர் பரம்ஜித் சிங் சர்னா இதன் தலைவராக இருந்து வருகிறார். தில்லியில் பாஜக ஆட்சி வலுவிழந்து காங்கிரஸ் வலு பெற்ற பொழுது இந்த நிர்வாகக் குழுவிலும் மாற்றம் வந்து இவர் வெற்றி பெற்றார்.

சென்ற வாரத்தில் இந்த நிர்வாகக் குழுக்களின் தேர்தல் நடந்தது. மொத்தம் 51 உறுப்பினர்கள் கொண்ட இந்த நிர்வாகக் குழுவில் நியமன உறுப்பினர் ஐவரைத் தவிர்த்து மீதி 46 இடங்களுக்கு நடந்தத் தேர்தலில் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மகன் சுக்பீர் சிங்கின் (பஞ்சாப் துணை முதல்வர்) தலைமையில் பாதல் பிரிவு 37 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

சென்ற வருடம் நவம்பர் மாதத்தில் தேர்தலுக்கு முன்னர் நடைபெற்றச் செயற்குழுக் கூட்டத்தில் இரண்டுக் குழுக்களும் மோதிக் கொண்டன. இதில் இரு தரப்பினரும் நடுத்தெருவில் வாள் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். 11 பேர் காயமடைந்தனர்.

இதைத் தொடர்ந்து தேர்தலில் கடுமையான போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்து பஞ்சாப் அரசின் மந்திரி சபையே இதில் இறங்கி வேலை செய்தது. சர்னாவும் சும்மா இல்லை; தன் பங்கிற்கு பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அம்ரேந்தர் சிங்-ஐ வரவழைத்து பிரசாரம் செய்தார். போதாதற்கு தில்லி காங்கிரஸ் கட்சியும் அவருக்கு உதவியது. இருந்தும் எந்த  பயனும் கிட்டவில்லை.

தில்லியைப் பொறுத்தவரை சீக்கியர்கள் ஓரளவு கணிசமான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். அவர்களின் ஓட்டுக்கள் 15-18 சட்ட மன்றத் தொகுதிகளின் வெற்றித் தோல்வியைத் தீர்மானிக்கும்.

காங்கிரஸ் கட்சி தன் ஆதரவாளரான சர்னா-வின் தோல்வியையும் தொடர்ந்த அரசியல் நிகழ்வுகளையும் கவலையுடன் கவனித்து வருகிறது. இந்த ஆண்டு நடக்க இருந்க்கும் மாநிலத் தேர்தலிலும் இது எதிரொலிக்காமல் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் கவலை.

2 கருத்துகள்: