வியாழன், ஜூன் 27, 2013

ஸௌராஷ்ட்ரம்




முதலில் ஸௌராஷ்ட்ரம் என்பது தென் குஜராத்தின் ‘கத்யவார்’ பகுதி என்றழைக்கப்படும் பகுதியாகும். இதில் முக்கியமாக 7 பகுதிகளைக் குறிப்பிடுவர். அவை ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர், ஜௌநகத், போர்பந்தர், அம்ரேலி, சுரேந்திரநகர் ஆகியவை. அதாவது கட்ச் வளைகுடாவிற்கும் கம்பத் வளைகுடாவிற்கும் இடைப்பட்ட கிண்ணம் போன்ற பகுதியே ஸௌராஷ்ட்ரம் என்று வழங்கப்படும்.

ஸௌராஷ்ரடம் என்பதன் பொருளை இரண்டு விதமாகக் குறிப்பிடுவர்.

ஸு + ராஷ்ரம் – ’ஸு’ என்றால் நல்ல; ’ராஷ்ட்ரம்’ என்றால் நாடு. நன்னாடு என்ற பொருளில் வழங்குவதாகக் கூறுவர்.

மற்றொரு விளக்கமாக ஸௌர் + ராஷ்ட்ரம் – ஸௌர் என்றால் சூரியன். சூரிய வழிபாட்டைக் கடைபிடிப்பவர்களின் நாடு என்று பொருள். ஒரிஸாவின் கொனாரக் சூரியக் கோவிலைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைப் போலவே குஜராத்தின் மதேரா சூரியக் கோவிலும் பழம் பெருமை வாய்ந்தது. இதிலிருந்தே அக்காலத்தில் அப்பகுதி மக்களின் சூரிய வழிபட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இதைத் தவிர இந்தியில் ஸோ என்றால் நூறு என்பதால் இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான நாடுகள் (சிற்றரசுகள்) இருந்ததால் ஸௌராஷ்ட்ரம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். ஆனால், இந்தி/உருது மொழி பிறப்பதற்கு முன்னரே இப்பெயர் வழங்குவதை நாம் அறிய முடியும்.

ஸௌராஷ்ட்ரத்தின் முக்கிய நகரங்களாக சூரத், ராஜ்கோட், மதேரா, சோம்நாத் (பிரபாசப்பட்டணம் என்ற பெயரும் உண்டு), துவாரகா (இதன் பழைய பெயர் குஷஸ்தலி) ஆகியவை ஆகும்.

பாகவதப் புராணத்தைப் பொறுத்தவரை ஸௌராஷ்டரம் ஆபிரர்களின் நாடுகளின் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆபிரர்கள் என்றால் யாதவர்கள் என்று பொருள். கட்ச் பகுதியின் பிரந்தாரியா, மூச்சாயா, போரீச்சா, சுராயா, வகாடியா, பர்வாதா ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை யாதவ குல (யது வம்சம்) வழித்தோன்றலாகவே குறிப்பிடுகின்றனர். யாதவ குலத்தில் முக்கியமான கிருஷ்ணரும் துவாரகையை ஆண்டது குறிப்பிடத்தக்கது.

மஹாபாரதத்தில்  கிருஷ்ணர் பாண்டவர் பக்கம் நின்று போரிட அவரின் நாராயண சேனை கௌரவர் பக்கம் நின்று போரிட்டதை நாம் அறிவோம். அந்த நாராயண சேனையின் தலைவர் ‘க்ருதவர்மன்’. இவர் ஸௌராஷ்டிரர் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் தான் பாரதப் போரின் கடைசி நாள் இரவில் அஸ்வத்தாமன் பாண்டவர்கள் என்று நினைத்து த்ரௌபதியின் ஐந்து மகன்களைக் கொன்ற பொழுது அவனுக்கு உதவியாக வெளியில் நின்று காவல் காத்தவர். பாரதப் போரில் கௌரவர் பக்கத்தில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். பின்னர், காந்தாரியின் சாபத்தால் யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட பொழுது கிருஷ்ணரின் நண்பனான சத்யகியால் கொல்லப்பட்டார்.

பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் மாமனார் (சத்யபாமாவின் தந்தை) சத்ரஜித்-இடம் இருந்த ஷ்யமாந்தக மணியை கவர விரும்பிய மூவரில் இவரும் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். மற்ற இருவர் அக்ரூரரும் (கோகுலத்திலிருந்து கிருஷ்ணரை கம்சனிடம் அழைத்துவந்த அதே அக்ரூரர் தான்), சத்ரஜித்தைக் கொன்று மணியைக் கவர்ந்துச் சென்ற, சததன்வனும் தான்.

பின்னர் மௌரியர் காலத்தில் ஸௌராஷ்ட்ரம் சோமசர்மனாலும், சாக வம்சத்தைச் சேர்ந்த ருத்ரதாமனாலும் குப்தர்கள் காலத்தில் சந்தரகுப்தராலும் (விக்ரமாதித்யன்) குமாரகுப்தனாலும் ஆளப்பட்டது.

உலகப் பட்டு நூல் தர வரிசையில் ஸௌராஷ்ட்ரத்தின் பட்டும் மிக பிரபலமானது. பொதுவாக மஹாராஷ்ட்ரத்தின் வட கடலோரப் பகுதிகள் இந்தியாவின் மான்சிஸ்டர் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. அதன் காரணம் அப்பகுதியில் நூற்பதற்கு சாதகமாக இருந்ததுடன் அவர்களின் நூற்புத் திறனும் தான்.

1024 கஜினி முகமது கத்யவார் பகுதியில் (சோம்நாத்) தாக்குதல் நடத்தியதை நாம் படித்திருப்போம். அப்பொழுது, இந்த ஸௌராஷ்ட்ர மக்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்து குடிபெயர்ந்து முதலில் சூரத்-இலும் பின்னர், அதைத் தாண்டி தெற்குப்பகுதிகளுக்கும் குடியேறினர். அதன் பின்னர் மெல்ல விஜய நகரப் பேரரசின் காலத்தில் துங்கபத்ரா  நதிக்கரையில் (தாசப்புரா) குடிபெயர்ந்து, பின்னர் நாயக்கர் காலத்தில் தமிழகத்திலும் (தஞ்சை, மதுரை) குடியேறினர். நாயக்கர் காலத்தில் ஸௌராஷ்டிரர்கள் ’பட்டுநூல்காரர்கள்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இன்று அவர்கள் தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுப் பெருமைச் சேர்க்கின்றனர்.

10 கருத்துகள்:

  1. எங்களின் வரலாற்றை சுருக்கமாக விளக்கி சிறப்பித்தமைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைகும் வாழ்த்திற்கும் நன்றிகள் தன்பாலன்!

      நீக்கு
  2. ஸௌராஷ்ரடம் பொருளும் விளக்கமும் அருமை.

    பதிலளிநீக்கு
  3. தமிழகத்திலும் மதுரை, தஞ்சாவூர் பக்கங்களில் நிறைய சௌராஷ்டிர மக்கள் இருக்கிறார்கள்.....

    அவர்கள் பற்றிய வரலாற்றினைப் பகிர்ந்தமைக்கு நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  4. ஸெளராஷ்டிர சமூகத்தில் எனக்கு நண்பர்கள் உண்டு. ஓரளவு அந்த சமூகத்தின் வரலாறு தெரியும் ஸ்ரீனி. இப்போது விவரமாக முழுவதையும் அறிய முடிந்ததில் மகிழ்ச்சி. தொடரட்டும் இந்த வரிசை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் கணேஷ்!

      எனக்கு தில்லியிலும் சில ’தமிழ் ஸௌராஷ்டிர’ நண்பர்கள் உண்டு.

      [இந்த வரிசையைத் தொடர்ந்து எழுத வேண்டும் என்று தான் ஆரம்பித்தே. நடுவில் சொந்த/அலுவலக வேலைகளால் சற்று சுணக்கம். இருந்தாலும் தங்களைப் போன்றவர்களின் தொடர்வருகையின் ஊக்குவிப்பினால் அவ்வப்போது எழுத முயற்சிக்கிறேன்.]

      நீக்கு
  5. சௌராஷ்டிர தமிழ் சோதரர்கள் நல்ல கலை ஆர்வலர்கள் .இசை ,இலக்கியம்,சினிமா வில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்.தேசிய உணர்வாளர்கள் .சமையல் கலையில் விற்பன்னர்கள் .சேலம் ஜில்லாவில் அவர்கள் உணவு விடுதிகள் மிகவும் பிரசித்தம்.என்ன அவர்களிடம் உள்ள மிக பெரிய குறைபாடு என்றால் ரத்த சம்பந்த திருமணங்களால் மிகவும் சோனியான குழந்தைகள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் தங்கள் கருத்துக்களுக்கும் நன்றிகள் விஜயன்!

      பொதுவாக ஓர் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் குடிபெயரும் பொழுது தங்கள் இனத்திற்குள்ளேயே திருமண உறவு வைத்திருக்க நேரிடும். ஸௌராஷ்டிரியர்களும் அவ்வாறு குடியேறிய பொழுது நடைமுறையில் இருந்தது நாளடைவில் பழக்கமாகத் தொடர்ந்திருக்கக் கூடும். நம் தமிழ்நாட்டில் (மற்ற சமூகத்தினரிடமும் கூட்) ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் (மாமன் மகள், அத்தை/அக்கா மகள் போன்றவை) இருந்து தான் வந்திருக்கின்ரது/வருகின்றது.

      மற்றபடி நீங்கள் கூறியது போல் பல்வேறு துறைகளில், அதிலும் குறிப்பாகக் கலைத்துறையில், அவர்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்துவருகின்றது.

      நீக்கு