வியாழன், ஜூலை 18, 2013

அஸ்வ தேசம்




56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.
அஸ்வ தேசம்.

அஸ்வம் என்றால் குதிரை. அதனால், அஸ்வ தேசம் என்பது காந்தாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் வந்து குடியேறிய இடம் என்று இப்பெயர் வந்ததாக நினைக்கலாம்.

ஆனால், இந்த ’அஸ்வ’ என்ற சொல் பாலி மொழியில் வழங்கப்படுகிறது (இதுவே, பிரகதி மொழியில் அஸாகம் என்றும் அழைக்கப்படுகிறது). வடமொழியில் இதை அஷ்மக தேசம் என்றுக் குறிப்பிடுகிறார்கள். ’அஷ்ம’ என்றால் கல்/கனிமக்கல்/பாறை என்று பொருள்படும். இந்த தேசத்தை கோதவரி நதிக்கும் அதன் துணைநதியான மாஞ்சிரா நதிக்கும் இடைப்பட்டப் பகுதியாக் குறிப்பிடுகிறார்கள். இப்பகுதி கனிம வளத்திற்கு மிகவும் பிரசித்தி பெற்றது. அதனால் தான்  இந்த தேசத்திற்கு அஷ்மக தேசம் என்று பெயர். இதன் தலைநகர் பஹுதான்யபுரம். இது நாளடைவில் போதாலி, போதான் என்றழைக்கப்பட்டு தற்போது பதோனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது மேற்கு ஆந்திரத்தின் எல்லையில் மஹாராஷ்டிரத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ளது.

ராமாயணம், மஹாபாரதம், வாயு புராணம், ப்ரஹ்மாண்ட புராணம், விஷ்ணு தர்மோத்ர புராணம், மத்ஸ்ய புராணம், மார்கண்டேய புராணம் ஆகியவை அஸ்மாகர்களை வரிசைப் படுத்தும் பொழுது அவர்களை அவந்தி தேசத்தவருடனேயே குறிப்பிடுகின்றனர். வராஹமிஹிர்ரின் ப்ருஹத் சம்ஹிதையும், பத்மபுராணமுமே இவர்களை மத்ர தேசத்தவருடன் வரிசைப்படுத்துகின்றன. பாணினியின் அஷ்ட்த்யாயி-இல் வடமேற்குப் பகுதியைச் (ஹிந்துகுஷ் பகுதி) சேர்ந்தவர்களைக் கூறும் பொழுது அஸ்வகாயனர்கள் என்றும் இந்த பகுதி மக்களை அவந்தி தேசத்தவருடன் சேர்த்து அவந்த்யஸ்மாகர்கள் என்று இணைத்தும் கூறுகிறார்.

மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில் அஸ்மாகர்கள் பிறந்த கதை மேம்போக்காகக் குறிப்பிடப்படுகிறது. பிரஹநாரதீய புராணத்தில் இந்த கதைச் சற்று விரிவாகக் கூறப்படுகிறது. அந்த கதை பின் வருமாறு…

இஷ்வாகு வம்சத்தின் பகீரதனின் பேரன் ரிதுபர்ணன். அவனுடைய பேரன் சுதாஸ். ஒருமுறை சுதாஸ் கானகத்தில் வேட்டையாடச் சென்ற போது அங்கு ஒரு புலியைக் கொன்றான். ஆனால், அந்தப் புலியோ உடனே ஒரு பெரிய ராட்சத வடிவம் எடுத்தது. அதை அழிக்க அவன் ஒரு வேள்வி நட்த்தினான். வேள்வி முடிவில் வசிஷ்டர் நீராடச் சென்றார். அந்த நேரத்தைப் பயன்படுத்தி அந்த ராட்சதன் வசிஷ்டரின் உருவம் எடுத்து வந்து வேள்வி நிறைவேற தனக்கு மாமிசம் உணவாகப் படைக்கும் படி கூறிச் சென்றார். மன்னன்  அதைத் தன் சமையற்காரனிடம் கூற அவனைக் கூப்பிட, ராட்சதன் சமயற்காரனாக மாறி நர மாமிசத்தைக் கொண்டு வந்தான். உண்மையான வசிஷ்டர் வந்து உணவு உண்ண உட்கார்ந்த பொழுது அவருக்கு நரமாமிசம் பரிமாற்ப் பட்டது. அதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் அரசனை ராட்சதனாக மாற சாபமிட்டார். மன்னன் தான் அவரின் கட்டளையையே நிறைவேற்றியதாகக் கூற வசிஷ்டர் நடந்ததைத் தன் ஞான சக்தியால் உணர்ந்தார். மன்னனின் சாபத்தை ஒரு நாள் விட்டு ஒருநாள் இரவு மட்டும் 12 ஆண்டுகளாக்கு என்று குறைத்தார். ஆனாலும் தவறு செய்யாதத் தன் மீது சாபமளித்த வசிஷ்டர் மீது கோபம் கொண்டு அவரை சபிக்க நீரை எடுத்தான்.  அவன் மனைவி மத்யந்தி அவனைத் தடுத்து குருவின் மீது சினங்கொள்வது தவறு என்று எடுத்துரைத்தாள். அந்த சாப நீரைத் தன் காலின் மீதே போட்டுக் கொள்ள, அவன் கால் கருநிறமாக மாறியது. அது முதல் அவன் ‘கல்மிஷபாதன்’ என்று அழைக்கப்பட்டான். அது முதன் அவன் நாட்களுக்கு ஒரு முறை ராட்சதனாக உருமாறி காட்டில் சுற்றி அலைந்து நரமாமிசம் உண்டு வந்தான். ஒரு முறை உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவனைக் கொன்று அவனை உண்ண அவன் மனைவி அரசனை மனைவியுடன் உறவு கொண்டால் இறப்பாய் என சாபமிட்டாள். 12 ஆண்டுக்குப் பிறகு, ராட்சதனாகும் சாபம் நீங்கினாலும் மனைவியுடன் உறவு கொள்ள முடியாமல் அந்தப் பெண்ணின் சாபம் தடுத்தது. வம்சம் தொடர மத்யந்திக்கு வசிஷ்டர் மூலம் குழந்தை உண்டாகியது. ஆனால், 8 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த குழந்தை கர்பத்திலிருந்து வெளிவரவில்லை. அதனால், மத்யந்தி ஒரு பாறையில் தன் வயிற்றை மோதி குழந்தையை வெளிக் கொணர வேண்டியதாகியது. ’அஷ்ம’ என்ற கல்லிருந்து பிறந்ததால் அவன் அஸ்மாகன் என்றழைக்கப்பட்டான்.

பவிஷ்ய புராணத்தில் அஸ்மாகன் சுதாஸின் மகனாகக் குறிப்பிடப்படுகிறான்.

மத்ஸ்ய புராணத்தில் அஸ்மாக வம்சத்தின் 25 அரசர்கள் வரிசைப்படுத்தப்பட்டு இவர்களில் சிலர் மகதத்தின் சிசுநாகனின் சமகாலத்தவராகக் குறிப்பிடப்படுகின்றனர்.

ஜாதகக் கதைகளில் அஸாக அரசர்கள் என்று இவர்கள் குறிப்பிடப்படுகின்றனர். புத்தரின் சீடர்களில் மஹாகாஸ்யபர் முதன்மையானவர். இவர் தொடர்பான ஒரு கதையில் பொட்டன்னநகர (இது வட கர்நாடகத்தில் உள்ளது) என்ற இடத்தை ஆண்ட அஸாக அரசன் தன் இளைய ராணியின் அழகில் மயங்கி அவள் கேட்ட வரத்தை அளிப்பதாக உருதியளித்தான். சில காலம் கழித்து, அவன் முதல் மனைவியின் மகன் சுஜாதனுக்கு பட்டமளிக்க எண்ணிய போது இளைய ராணி அவனை வனவாசத்திற்கு அனுப்பித் தன் மகனுக்கு பட்டமளிக்க வரம் கேட்டாள் (ராமாயணம்?). அரசன் மறுத்தாலும், முடிவில் சுஜாதன் காட்டிற்கு அனுப்பப்பட்டான். அங்கு அவன் மஹாகாஷ்யபரைச் சந்தித்து புத்த பிக்குவாக மாறியதாக விவரிக்கப்படுகிறது. இதிலிருந்தும் அஸ்மாகர்கள் தேசம் கோதாவரிக் கரையில் இருந்ததாகக் கொள்ளலாம்

மற்றொரு ஜாதகக் கதையில் ஒருமுறை தந்த புரத்தை ஆண்ட கலிங்க மன்னன் தன் நான்கு அழகிய ராஜகுமாரிகளை தன்னை வெல்லும் அரசனுக்கும் மணமுடித்து வைப்பதாக அறிவிக்க, போதாலியின் அஸாக அரசன் கலிங்கத்துடன் போரிட்டான். அஸ்மாகனின் மதிமந்திரி நந்திசேனரின்  ஆலோசனையில் அஸ்மாகன் கலிங்க அரசனைத் தோற்கடித்தான். பின் கலிங்க அரசன் தன் மகள்களை அஸ்மாகனுக்கு மணமுடிக்க இரு நாட்டவரும் நட்புடன் இருந்ததாக கூறுகிறது. இதிலிருந்தும் இது கோதாவரிக் கரையில் இருந்திருக்கும் சாத்தியம் புலப்படுகிறது.

4 கருத்துகள்:

  1. அருமையான, சுவாரசியமான தகவல் தொகுப்பு. வாழ்க.

    (வசிஷ்டர் என்னமாப் ப்ளான் பண்ணி சாபம் போட்டிருக்காரு! சாமியாருங்ககிட்டா சாக்கிரதையா இருங்கப்பா)

    பதிலளிநீக்கு
  2. பல தகவல்கள்.....

    பத்மநாபன் சாபம் கொடுப்பதற்கென்றே க்ளாஸ் ஏதும் போயிருப்பாங்களோ! :)

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கு நன்றிகள்!

    [’வசிஷ்டர் மூலம் குழந்தை’ என்பதற்கு வசிஷ்டருடன் உறவு கொண்டு என்றும் எடுத்துக் கொள்ளலாம், வசிஷ்டர் ஆசியால் (குழந்தை இல்லாதவர்கள் இந்த டாக்டரால் தான் குழந்தை பிறந்தது என்று கூறினால் தவறாக அர்த்தம் கொள்ளக் கூடாது; அது அவர் வைத்தியத்தினால் அல்லது டெஸ்ட் ட்யூபினால் என்று கொள்வதைப் போல) என்றும் எடுத்துக் கொள்ளலாம். மஹாபாரதத்தில் வியாசருடன் உறவு கொண்டு த்ருத்ராஷ்டிர, பாண்டு, விதுரர் பிறந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கதையில் அதுபோல குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. அதை ஊகத்திற்கே விட்டு விட்டார்கள். ஆனால், 8 வருடங்களாக அக்குழந்தை பிறக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. அதனால், இது வேறு விதமாகவும் இருக்கலாம் என்றும் கூற வழியுண்டு]

    பதிலளிநீக்கு