செவ்வாய், அக்டோபர் 02, 2012

காந்தித் தலைகள்


1947-ஆம் ஆண்டு முதல் இதுவரை காந்தியடிகளைச் சிறப்பித்து 35 அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இவற்றில் 14 தலைகளை வடிவமைத்தவர் பெயர் திரு. சங்கா சமந்தா.

Philatelists – அதாவது அஞ்சல் தலை சேகரிப்பவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒரு பெயர் என்றால் அது சமந்தா என்று நிச்சயமாக்க் கூறலாம். ஏனெனில், காந்தித் தலைகள் என்று மட்டும் அல்ல கிட்டத்தட்ட 350 மற்ற அஞ்சல் தலைகளையும் இவர் வடிவமைத்துள்ளார்.

அஞ்சல் தலை வடிவமைப்பில் இவர் செய்த சாதனைகள் பலபல. அவற்றுள் சில…

·        Embossed – அதாவது புடைப்புறுவ – அஞ்சல் தலைகளை இந்திய அஞ்சல் துறைக்கு முதன் முதலாக வடிவமைத்துக் கொடுத்தவர் இவர் தான்.
·        வாசனை அஞ்சல் தலையை முதலில் வடிவமைத்த்து (அஞ்சல் தலையைத் தடிவினால் சந்தன வாசம் வீசும்)
·        ப்ரெய்லி (கண் பார்வையற்றவர்கள் படிக்கும் எழுத்துறு) முறையில் அஞ்சல் தலை வடிவமைத்த்து
·        காதித் துணியில் காந்தி வடிவத்துடன் அஞ்சல் தலை வெளியிட்டது  

என பல சாதனைகளைப் புரிந்தவர் இந்த சமந்தா.

2004 ஆம் ஆண்டு, இந்திய அஞ்சல் துறை தனது 150 வருடக் கொண்டாட்டங்களைச் சிறப்பித்து வெளியிட எண்ணிய பொழுது அவர்கள் தேர்ந்தெடுத்தது சமந்தாவைத் தான். இதற்காக வடிவமைக்கப் பட்ட அஞ்சல் தலைதான், தன்னால் வடிவமைக்கப் பட்டதில் மிகவும் கடினமானது என்று இவர் குறிப்பிடுகிறார். காரணம், இதற்காக, இந்திய அஞ்சல் துறையின் ஆரம்பங்களை கண்டறியும் முயற்சியும், இடையில் ஓய்வு பெற்ற மூத்த அஞ்சல் துறையைச் சேர்ந்தவர்களிடம் நேர்முகம் என்று நான்கு மாதங்கள் நீண்ட பல்முனை ஆய்வு மேற்கொள்ள நேர்ந்த்தைக் குறிப்பிடுகிறார். இதிலிருந்தே இவரின் அர்பணிப்புப் புரியும்.

காந்தித் தலைகளை வடிவமைப்பதைக் கூறும் பொழுது, அதற்காக நாட்டின் பல நூலகங்கள் ஆவணப் பாதுகாப்பு நிலையங்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் பலமுறை சென்று பார்த்துக் குறிப்புகள் எடுத்ததாக்க் கூறுகிறார். காரணம், அஞ்சல் தலைகள் வெறும் படங்கள் அல்ல. அவை அந்த உருவத்தில் இருக்கும் மனிதரின் வாழ்க்கை, தியாகம் ஆகியவற்றை வெளிக் கொணர வேண்டும் என்றுக் கூறுகிறார்.

இவர் வடிவமைத்த அஞ்சல் தலைகளில் காந்தியைத் தவிர விவேகாநந்தர். நேதாஜி, தாகூர் ஆகியவையும் மிக அதிகமாக விற்பனையானவை.

அஞ்சல் தலைகளைத் தவிர சுவரோவியங்கள், புத்தக அட்டைகள், மரப்பட்டையங்கள் ஆகியவற்றையும் இவர் வடிவமைக்கிறார். தற்போது இந்தியத் திரைத் துறையின் 100-ஆவது வருட சிறப்பு வெளியீடாக இந்தியத் திரையுலகில் தங்களின் கால் தடங்களை அழிக்க முடியாதபடி இருந்த 100 சாதனையாளர்களின் உருவங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அஞ்சல் தலைகளை வடிவமைப்போது மட்டுமல்லாமல் அஞ்சல் தலைச் சேகரிப்பிலும் ஈடுபட்டுள்ளார்.

ஆனாலும் இவர் வருத்தப் படும் செய்திகளும் உண்டு. இந்திய அஞ்சல் தலைகளின் தரத்தை உலகளவில் ஒப்பிடும் பொழுது இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கிள்ளை என்பதை த் தன் மனக்கிலேசமாக வெளிப்படுத்துகிறார். சென்ற வருடம் இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதைச் சிறப்பிக்கும் வகையில் இவருக்குக் கொடுக்கப்பட்ட அஞ்சல் தலை பணி முடிவடைந்து ஒப்புதல் பெற்ற பின்னரும் வேறு சில காரணங்களுக்காக இன்னமும் வெளியிடப்படாததை குறைப்பட்டுக் கொள்கிறார்.

ஒரு அஞ்சல் தலை வடிவமைப்பு ஏற்கப்பட்டால் அதற்காக இவருக்குக் கிடைக்கும் ஊதியம் ரூ.9300/- வரைக் கிட்டும்;  வடிவமைத்த அஞ்சல் தலை ஏற்கப்படாவிடில் ரூ.2300 வரைத் தான் கிட்டும்.  பொதுவாக அஞ்சல் தலைகளின் வடிவமைப்பை அஞ்சல் துறையின் பொது-இயக்குநர் தான் ஒப்புதல் அளிப்பார். ஆனால், சில நேரங்களில் அஞ்சல் தலையின் மகத்துவத்தைப் பொறுத்து அமைச்சர், பிரதமர் வரைக் கூட ஒப்புதல் கேட்கப்படுவதுண்டு. இதில் ஒரு நிலையானக் கொள்கையை வரையறுக்கப் படாததையும் குறிப்பிடுகிறார்.

காந்திப் பிறந்த நாளில் காந்தித் தலையை வடிவமைக்கும் இவரைப் பற்றித் தெரிந்துக் கொள்வோம்!

6 கருத்துகள்:

  1. இன்றைய நாள் ஒரு மகத்தான நாள் காந்தி தொடர்புடைய பல விஷயங்களை அறிய முடிகிறது.புதிய தகவ. நன்றி ஸ்ரீனிவாசன்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் பகிர்வு. நிறைய தகவல்களை தெரிந்து கொள்ள முடிந்தது.

    பதிலளிநீக்கு
  3. J.N.U. வில் அஞ்சல்தலைகளைப் பற்றி நாங்களே ஆராய்ச்சி செய்த மாதிரி இருக்கு.

    (காந்தித் தலை வடிவமைப்புக்கு மாதிரி தேவைப்பட்டால் தொடர்பு கொள்க)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றிகள் பத்து.

      [உங்கள் புகைப்படம் என்னிடம் ஏற்கனவே உள்ளது. அதனால் காந்தி படம் வரைவதற்கு சிரமம் இருப்பதில்லை]

      நீக்கு