குழந்தைச் செல்வம்
ஏழையெங்கள் இல்லத்திலே
வாழைக்குறுத்து முளைத்ததுவே
பாழுமெங்கள் வாழ்வினிலே - செல்வ
பேழையாய் வந்துச் சேர்ந்ததுவே
தொட்டிலில் இட்டிட வசதியில்லை
கட்டிலில் போட்டிட வாய்ப்புமில்லை
கட்டிய துணிக்கு மாற்றுயில்லை - இருந்தும்
மட்டிலா மகிழ்ச்சிக்குங் குறைவுமில்லை
எட்டு மாடி வீடு கட்டி-அதில்
பட்டு விரிப்போடு குளிரூட்டி
தொட்டு நிலா காட்டி - தினம்
ஊட்டிடச் சோறு கிட்டுவதில்லை
இருந்தும்…
வெட்டவெளியே வீடாகும்
கொட்டும் சூரியன் விளக்கேற்றும் - அன்னை
வேர்வைத்துளி பன்னீர்த் தெளிக்கும் - அவள்
சேலை தினமும் தூளி கட்டும்
இலவம் பஞ்சில் செய்த மெத்தை
இல்லை என்கிற போதிலுமே
உலவும் தென்றல் வாசல் வந்து
குளிரும் சாமரம் வீசி நிற்கும்
பட்டு நிலா பாய்விரிக்கும்
வெட்டவெளி உண்டு-அது
நித்தமிங்குக் காட்டும் பல
வித்தைகளும் உண்டு
கட்டி, இன்பங்கொட்டி -
இதழ்தொட்டு முத்தமிட்டு
விளையாடபெரும் சுற்றமுண்டு; அவர்
காட்டும் அன்பும் நன்று
மாடி
வீடும் மெத்தையணையும்
காட்டிடாத
நிம்மதியை
வாடி
நிற்கும் காலந்தன்னில் - அன்னை
மடியின்
அன்பு சுகந்தந்திடுமே!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக