புதன், அக்டோபர் 24, 2012

எல்லைக் காவல்


எல்லைக் காவல் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது நம் ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகள் தான்.

ஆனால், நம் தேசப் பாதுகாப்பில் இம்முப்படைகளைத் தவிர பலவிதமான துணை-ராணுவங்களில் முக்கியமானவையாகக் கருதப்படும் இந்திய-திபெத் எல்லைக் காவல் (ITBP – Indo-Tibet Border Police), எல்லைக் காவல் படை (BSF – Border Security Force), மத்திய ரிசர்வ் போலிஸ் படை (CRPF – Central Reserve Force) ஆகிய மூன்றும் அடங்கும். இதில் CRPF தேசத்தின் உள்நாட்டு பாதுகாப்பிற்கும், BSF எல்லைத் தரைப் பகுதியின் பாதுகாப்பிற்கும் பொறுப்பேற்கின்றன.

மேற்கூறியவற்றைப் போலவே ITBP-யும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளது. அது தான் இந்திய எல்லையின் மலைப்பகுதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு ஆகும். இந்த ITBP துவக்கத்தில் சுமார் 2115 கி.மீ. தூரத்தைக் கொண்ட இந்திய-திபெத் எல்லைப்பகுதிகளைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டது. 1978-ஆம் ஆண்டிலிருந்து மெல்ல மெல்ல இதற்கு வேறு சில பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன. 1992-ஆம் ஆண்டு ITBP சட்டம் உருவாக்கப்பட்டு அது 1994 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.

தற்போது இது எல்லையின் 3488 கி.மீ (காஷ்மீர லடாக் பகுதியின் கரகோரம் கணவாய் முதல் அருணாசலத்தின் ஜீசுப் லா வரை விரிந்த இந்திய-சீன எல்லைப்பகுதி) தூரத்தைப் பாதுகாக்கிறது. இவற்றின் பல மையங்கள் (outposts) 9000 முதல் 18000 வரை உயரமுள்ள பனிபடர்ந்த மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இவற்றில் பல இடங்களுக்கு வீரர்கள் ஹெலிகாப்டரின் உதவியுடன் செல்ல முடியும்.  

மேற்கூறிய பாதுகாப்புப் பணிகளைத் தவிர வேறு சில பொறுப்புகளும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றுள் முக்கியமானது கைலாஷ்-மானசரோவர் யாத்திரையில் இவர்களின் பணி. யாத்திரிகர்களின் பாதுகாப்பைத் தவிர, 1981-முதல், குன்ஜி முதல் லிபு லேக் பகுதிவரையில் மருத்துவம், தகவல் தொடர்பு ஆகியவற்றின் பொறுப்பும் இவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அதனாலேயே இவர்கள் இமய வீரர்கள் (Himveers) அல்லது மலைக்காவலர்கள் (Protectors of the mountains) என்று அழைக்கப்படுகிறார்கள்.

இதைத் தவிர ITBP-யின் தேசிய மையம் தான், ஐநா-வின் சிவிபோல் (CIVIPOL) சிவிலியன் காவலர்களுக்குப் பயிற்சி அளிக்கிறது. இங்கு பயின்ற  காவலர்கள் அங்கோலா, போஸ்னியா, கம்போடியா, காங்கோ, ஹைதி, ஹெர்ஸெகோவினா, கொசாவோ, மொசாம்பிக், சிரியா, லியோன், சூடான், மேற்கு சகாரா பகுதிகளில் இவர்கள் பயிற்றுவித்தவர்கள் தான் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப் பட்டார்கள். தற்போது ஐநா சமாதானப் படையின் காங்கோ, ஆஃப்கானிஸ்தான் நாடுகளில் ITBP வீரர்கள் உபயோகப் படுத்தப் படுகிறார்கள்.

தவிர 1965, 1971 ஆகிய போர்களில் ஸ்ரீநகர், பூஞ்ச், பதான் கோட் ஆகிய பகுதிகளில் போருக்கும் பயன்படுத்தப் பட்டார்கள். தவிர உத்ராகாண்ட் மாநிலத்தின் அவ்லி பகுதியில் மலையேற்றப் பயிற்சி மையம் அமைத்து இந்திய மலையேற்றக் குழுவினருக்கு மலையேற்றப் பயிற்சியும் வழங்குகிறார்கள். தவிர, நம் நாட்டின் குடியரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்றம், சிக்கிம் மாநிலத்தின் ரூம்டெக் மாண்டெசரி,  ராஜ் பவனின் பாதுகாப்பும் இவர்கள் பொறுப்பில் தான் உள்ளது. பாக் தீவிரவாதி அஜ்மல் கசாப்-ஐ கண்கானிப்பதும் இவர்களே.

1962-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி துவக்கப்பட்ட இந்த ITBP இன்று தன் பொன்விழாவைக் கொண்டாடுகிறது.

இந்திய அஞ்சல் துறையும் இவர்களின் சேவையைச் சிறப்பிக்கும் வகையில் இந்த பொன்விழா ஆண்டின் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டுள்ளது.

ITBP-யும் தங்கள் பொன்விழாவை சென்ற ஒரு ஆண்டாக பலவிதங்களில் கொண்டாடிவருகிறார்கள். தங்கள் பணிகளின் சிறப்புத் தருணங்கள், நவீனகரணம், மலையேற்றம், விளையாட்டு, சர்வதேசப் பொறுப்பேற்புகள் அவற்றில் பெற்ற பதக்கங்கள், பட்டங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் புத்தகங்கள், கண்காட்சிகள் என்று நடத்தினர். இதற்காக  அவர்களின் மூலக் கொள்கையாக இருக்கும் ஷௌர்யா (பலம்), த்ருடதா (திடம்), கர்மனிஷ்டா (செயல்திறன்) ஆகியவற்றை ஒட்டி சிறப்பு லொகோ-வையும் வடிவமைத்துள்ளனர். 

இதற்காக ‘Ganga Punardarshan (கங்கையின் மறுதரிசனம்)’ என்ற பெயரில் கங்கை உருவாகும் கோமுக் பகுதியிலிருந்து கங்கை கடலில் கலக்கும் கங்காநகர் வரையிலான 2525 கிமீ தூரத்தை படகுப் பயணம் மேற்கொண்டு ஐம்பத்தி ஏழே நாட்களில் கடந்துள்ளார்கள்.

இந்தப் பொன்விழா நாளில் நாமும் இவர்களின் சேவையைச் சற்றே நினைத்துப் பார்ப்போம்....

9 கருத்துகள்:

  1. அறியாத தகவல்கள்... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... இவர்களின் சேவைகளை வாழ்த்துவோம்... போற்றுவோம்...

    பதிலளிநீக்கு
  2. நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள். இவர்களது புகழ் மேலும் மேலும் பரவட்டும்.

    நல்ல பகிர்வு சீனு. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  3. அருமையான தேசப்பற்றுடன் கூடிய தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி! ITBP பற்றி அறிந்துகொண்டோம்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1962-இல் சீனப் படையெடுப்பிற்குப் பின்னரே அரசு இதன் அவசியத்தை உணர்ந்து இந்தத் தனிப்படையை அமைத்தது. மற்ற படையினரைப் போல் எதிரிகளை சமாளிப்பதைத் தவிர இயற்க்கையுடனும் இவர்கள் தினம் தினம் போராட வேண்டும் என்பது தான் இந்தப் படையின் கூடுதல் பொறுப்பு.

      முதல் வருகைக்கு நன்றிகள் சுப்ரமணி!

      நீக்கு
  4. அவரவர் தேடலுக்கு நடுவே இவர்களை மறந்து தான் போகின்றோம் . வணங்கி பாராட்டுதலை தெரிவித்துக்கொள்வோம் . பகிர்வுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  5. நிச்சயம் வணங்கி பாராட்டப்பட வேண்டியவர்கள். தெரியாத தகவல்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு