ஞாயிறு, அக்டோபர் 07, 2012

கண்ணைப் பறித்த கணை


கண்ணைப் பறித்த கணை

1556-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் நாள்….

ஒரு புறம் காபூலிலிருந்து புறப்பட்டு வந்த படை. மற்றொரு புறம் தில்லி அரசைக் காப்பாற்ற தில்லி அரசின் படை. இரண்டும் சந்தித்த இடம் ஹரியானாவின் யுத்த பூமி பானிபட்.

இதிகாச காலத்திலிருந்தே ஹரியானா பல போர்களை சந்தித்துள்ளது. 18-நாட்கள் தொடர்ந்து நடந்த பாரதப் போர் நாம் அனைவரு அறிந்ததே. பிற்காலத்திலும் அங்கு போர்கள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஏற்கனவே 30 வருடங்களுக்கு முன் இங்கு தான் தைமூர் மரபு வந்த பாபரும் லோதி வம்சத்தைச் சேர்ந்த இப்ராஹிமும் மோதிய போர் அனைவரின் நினவிலும் நீங்காமல் இருந்து வந்துள்ளது. இந்த போரில் பாபர் வென்று முகலாய அரசை தில்லியில் நிறுவி இருந்தார். ஆனாலும், அந்த அரசு ஐந்து ஆகியிருக்காத நிலையில் பாபர் மறைய அவருடைய மகன் ஹுமாயூன் வசம் தில்லி வந்தது. ஆனால், அவரால் நீண்ட நாள் அரசைக் காப்பாற்ற முடியவில்லை. ஷெர்ஷா அவரை தில்லி-யிலிருந்து விரட்ட அவர் காபூலை தஞ்சம் அடைந்து விட்டார். அவரது மகன் அக்பர் 14-வயது கூட நிரம்பாத பாலகன் தான்; என்றாலும் பெரிய மாவீரன். தவிர, அவரது மாமன் பைராம்கான் போர் யுக்திகளைக் கையாள்வதில் பெரிய நிபுணர். எனவே, காபூலில் இருந்து படை தில்லி நோக்கி வருவதை அறிந்த தில்லி மன்னன் அடில்ஷா இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, நிலைமையை சமாளிக்க ஒரு பெரிய மாவீரனைத் தேர்ந்தெடுக்க நினைத்தான். உடனே, அவர் நினைவுக்கு வந்தவர் ஹேம் சந்த்; சுருக்கமாக ‘ஹேமு’.

யார் இந்த ஹேமு ?

நாம் நம் பாடபுத்தகங்களில் இரண்டாம் பானிபட் யுத்தத்தில் அக்பர் ஹெமு-வை வீழ்த்தி தில்லியை மீண்டும் கைப்பற்றியதைப் படித்துள்ளோம். அவரின் முழு பெயர் கூட பெரும்பாலும் நம் பாடபுத்தகங்களில் இல்லை. அக்பரை வீழ்த்த அடில்ஷா இந்த ஹேமு-வை நாடும் அளவுக்கு அவர் என்ன அத்தனைப் பெரிய மாவீரனா? அவரது கதை தான் என்ன? பார்ப்போம்…

ஹேமு 1501-ஆம் ஆண்டு ராஜபுதனத்தின் அல்வார் மாவட்டத்தில் மஞ்சேரி கிராமத்தில் பிறந்தார். அவர் ராஜஸ்தானில் பிறந்தார் என்றவுடன் ராஜபுதன அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று நினைக்க வேண்டாம். அவரது தந்தை பெயர் ராய் பூர்ணதாஸ்; பிராமண குலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் இவர்கள் செய்த்து வியாபாரம் தான். மேலும், அந்த காலகட்டத்தில் ராஜபுதனத்தில் இருந்த போர் சூழலால் சிறுவயதிலிருந்தே அவருடைய தோழன் சகதேவனுடன் மல்யுத்தம், குதிரையேற்றம், வாள் பயிற்சி ஆகியவற்றை பயின்றார். 1516-ஆம் ஆண்டு இவர்கள் குடும்பம் வியாபாரத்திற்காக ரேவ்டியின் கத்தோபூருக்கு இடம் பெயர்ந்தார்கள். பின் அவருடைய தந்தை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டு விருந்தாவன் (மதுரா) சென்றார். குடும்ப வியாபாரம் ஹேமு-விடம் வந்த்து. முதலில் பயறு வகைகளை விற்று வந்த ஹேமு வியாபாரத்தை விஸ்தரிக்கும் முகமாக வெடி பொருள்களை விற்க ஆரம்பித்தார். ஷேர்ஷா சூரி-யின் படைகளுக்கு வெடிமருந்துகள் விற்று வந்ததில் அவருடைய நட்பும் கிடைத்தது கிடைத்தது. ஷேர்ஷா-வின் நிலசீர்திருத்தமும் வரி வசூலில் அவர் செய்த சீர்திருத்தமும் மிகவும் பிரபலமானவை. வரிவசூல் பொறுப்புகளை மையத்தில் குவிக்காமல் பரவலாக்கியது அதன் சிறப்பம்சம். எனவே, அவருக்கு நம்பிக்கையான அலுவலகர்கள் தேவைப்பட ஹேமுவிற்கு அப்பொறுப்பு வழங்கப்பட்ட்து.  1545-இல் ஷேர்ஷா-வின் மறைவிற்குப் பின் அவரது மகன் இஸ்லாம் ஷா, ஹேமு-வை தில்லிக்கு அழைத்து தில்லிச் சந்தை-யின் முழு பொறுப்பையும் அவரிடம் கொடுத்தார். பின் ஹெமு-வை தன்னுடைய அந்தரங்க பாதுகாப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். பின்னர் உடல் நிலை சரியிலாத்தால் தன் தலைமையிட்த்தை குவாலியருக்கு மாற்றிக்கொண்டார்.  1553-இல் இஸ்லாம் ஷா இறந்த பின் அவரது மகன் (12-வயது) ஃபெரோஸ்ஷா பதவியேற்க, அவரை,  அடில் ஷா கொன்று தில்லியைக் கைப்பற்றினார். (அடில்ஷா, ஹுமாயூனை வென்று தில்லியில் சூரி வம்சத்தை நிறுவிய ஷேர்ஷா சூரி-யின் தம்பியின் மகன்; இஸ்லாம் ஷா-வின் மகளின் கணவன்.) அடில்ஷா, ஹெமு-வைத் தன் சேனாபதியாக நியமித்து காபூல் படையெடுப்பைத் தடுத்து நிறுத்தும் பொறுப்பைக் கொடுத்தார். மூன்று வருடங்களாக 20க்கும் மேற்பட்டப் படையெடுப்புகளை ஹெமு தடுத்து நிறுத்தினார். இதற்கிடையில், அடில்ஷா புத்திநிலையில் மாற்றம் ஏற்பட்டு ஏறக்குறைய கொடுமையான ஆட்சியை நடத்தினார். மெல்ல அவர் புத்தி ஸ்வாதீனம் இழந்து பைத்தியமானார்.

இதைத் தொடர்ந்து ஹெமு கிட்ட்த்தட்ட நியமன மன்னராகவே செயல்பட்டார். இதை விரும்பாத தளபதிகளை-யும் எதிர்பாளர்களையும் விரட்டுவதிலேயே - மேற்கே பஞ்சாப் முதல் கிழக்கே வங்கம் வரை போரிலேயே - அவருடைய நாட்கள் கழிந்தன. ஹேமு வங்க தேசப் போரில் ஈடுபட்டதை அறிந்த ஹுமாயூன் மீண்டும் தில்லியைத் தாக்க முற்பட்டார். அடில்ஷா-வின் தம்பி சிகந்தர் ஷா-வைக் கொன்று தில்லி நோக்கி முன்னேறினார். சுமார் 15 வருடம் கழித்து, 23 ஜூலை, 1555 அன்று, ஹுமாயூன் மீண்டும் தில்லியைக் கைப்பற்றினார். இந்நேரத்தில் வங்கத்தில் முகமது ஷா-வுடன் ஹேமு போர் புரிந்து வந்தார். 1555 டிசம்பரில் வங்கத்தில் வெற்றி பெற்று தில்லி நோக்கித் திரும்பினார். ஆனால், அவர் தில்லி திரும்புவதற்குள் ஜனவரி, 1556-இல் ஹுமாயூன் தில்லி பழைய கோட்டையின் (புரானா கிலா) படிகளில் தடுக்கி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டு மூன்று நாட்கள் கழித்து இயற்கை எய்தினார்.

இடையில் ஹெமு ஆக்ரா கோட்டையைக் கைப்பற்றினார். தில்லி தளபதிகள், அக்பர்-பைராம்கான் க்குச் செய்தியை அனுப்ப அவர்கள் தங்களின் முக்கிய தளபதியான பீர் முகமதுகானை அனுப்பி வைத்தார்கள். ஆக்ராவைக் கைப்பற்றிய ஹெமு, தில்லி நோக்கி முன்னேற, பீர் முகமத் கானும் மேலும் ஐந்து முக்கிய தளபதிகளும் அக்டோபர் 6 ஆம் தேதி (1556) தில்லி அருகே துக்ளகாபாத்-இல் [இது தெற்கு தில்லி-யில் தில்லி-ஹரியானா எல்லையில் உள்ளது. நம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஹரியானாவை விட்டு தில்லியில் நுழைந்ததும் வரும் முதல் ரயில் நிறுத்தம் துக்ளகாபாத்-தான்] ஹெமுவை தடுத்து நிறுத்தியது. மிகப் பெரிய படையைப் போர் தந்திரத்தால் பிரித்து அவர்களின் ஒரு பகுதியைக் கைப்பற்றி அவர்கள் மூலமே முகலாயர்களைத் தாக்கினார். இதனால், நிலைகுலைந்த படை கலக்கமுற்றது. தளபதி பீர்முகமது போர்களத்தை விட்டே ஓடிவிட்டார். ஹெமு ஒரே நாளில் தில்லியைக் கைப்பற்றினார்.

தில்லி-யைக் கைப்பற்றிய ஹேமு இம்முறை மன்னராகவே அரசேறினார்.  1556 –இல் இதே அக்டோபர் 7-ஆம் தேதி, விக்ரமாதித்யன் என்ற பட்டப் பெயருடன் சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின் தில்லியின் முதலும் கடைசியுமான இந்து மன்னராகப் பதவியேற்றார்.

பதவியேற்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், 1556-ஆம் ஆண்டு நவம்பர் 5-ஆம் தேதி மீண்டும் அக்பரின் படை பானிபட்-இல் ஹெமு-வை சந்தித்தது. இம்முறை முகலாயர்கள் ஹேமு-வை குறைத்து மதிப்பிடவில்லை. படையின் பின்பகுதியில் 8 மைல்கள் தூரத்தில் அக்பர் நிறுத்தி வைக்கப்பட்டார் (போரின் முடிவில் ஹேமு-வின் கை ஓங்கினால் பஞ்சாப் நோக்கிச் செல்ல வசதியாக). முன்னணியில் போராட தளபதிகள் அனைவரும் அஞ்சினர். அதுவரைத் தோல்வியே காணாத ஹேமு மீண்டும் வெற்றி பெற்றுவிடுவார் என்றே அனைவரும் நினைத்தனர். அதற்கேற்ப போரில் ஹேமு-வின் கையே ஓங்கி நின்றது.

அப்பொழுது தான் அந்த விபத்து நிகழ்ந்தது. போரின் பொழுது ஒரு கணை ஹெமு-வின் கண்ணைத் தாக்க, அவர் மெல்ல நிலை குலைந்து போனார். சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அக்பர் ஹெமு-வின் படையைச் சிதறடித்தார். காயமடைந்து மயங்கிக் கிடந்த ஹேமு-வை பைராம்கான் சிறைபிடித்து அக்பரிடம் கொண்டு சென்று அவரைச் சிரச்சேதம் செய்யச் சொன்னார். ஏற்கனவே இறந்து போனது போல் இருக்கும் இவரைச் சிரச்சேதம் செய்ய வேண்டாம் என்று அக்பர் கூற, பைராம்கானோ அவரை மீண்டும் வற்புறுத்தி சிரச்சேதம் செய்வித்தார்.

ஹேமுவின் தலையும் அவருடைய உறவினர்கள் தலைகளும் தில்லி பழைய கோட்டையில் தொங்கவிடப்பட்டன.

குறிப்பு:      சமீபத்தில் ஜோதா அக்பர் படத்தில் இந்த ஹேமு-வைப் பற்றித் தவறாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அக்தொடர்ந்து இது சர்ச்சைக்கு உள்ளானது. வரலாற்று ஆசிரியர்களால் இந்தியாவின் நெப்போலியன் என்று வர்ணிக்கப்படுபவர் ஹேமு. ஹரியானா அரசு ஹேமு-வைப் பற்றிய உண்மைகள் வெளிக் கொணர முயற்சிகள் எடுத்து வருகிறது.
 

6 கருத்துகள்:

  1. பல அரிய வரலாற்றுத் தகவல்கள் தேர்நிந்து கொண்டேன் நன்றி வெங்கட் ஸ்ரீனிவாசன்

    பதிலளிநீக்கு
  2. எத்தனை சரித்திர விஷயங்கள் சீனு.... இதெல்லாம் முன்னாடி நீ பேசினதே இல்லையே.... :)

    நல்ல பகிர்வுடா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வர்லாற்றில் சற்று ஆர்வம் உண்டு.

      ’மே(ன்) தில்லி ஹூ(ம்), சஞ்சய்கானின் அக்பர் த க்ரேட் ஆகிய சீரியல்கள் நாங்கள் பார்ப்போம். நீ பார்க்கவில்லை/பார்த்ததில்லை. மதனின் வந்தார்கள் வென்றார்கள் (சங்கருடைய புத்தகம்) படித்துள்ளேன்.

      அதனால் பேச வாய்ப்புக் கிட்டவில்லை என்று நினைக்கிறேன்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  3. தலைப்பைப் படித்ததும் சாண்டில்யனின் ‘மஞ்சள் ஆறு‘ கதை நினைவுக்கு வந்தது. ஹேமுவைப் பற்றிய விரிவான தகவல்கள் எனக்குத் தெரியாது. ஓரளவுதான் தெரியும். இப்போது அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி. உங்களுக்கு ‘சரித்திர (தகவல்) சிங்கம்’ என்று பட்டம் தரலாமென்று தோன்றுகிறது ஸ்ரீனி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ’மஞ்சள் ஆறு’ கதை ராணா சங்கா-வின் கதை. [ராணா சங்கா தன் பக்த மீரா-வின் மாமனார். பாபரை எதிர்த்துப் போரிட்டவர்].

      வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றிகள்.

      நீக்கு