திங்கள், அக்டோபர் 01, 2012

மஹாராஷ்டிரத்தில் மங்காத்தா


மஹாராஷ்டிரத்தில் காங்கிரஸும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் சேர்ந்து கூட்டணி ஆட்சி நடத்திவருவது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சென்ற வாரம் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்த மஹாராஷ்டிர துணைமுதல்வர் அஜித் பவார் [சரத்பவாரின் அண்ணன் மகன்]  பதவி விலகுவதாக அறிவிக்கக் கூட்டணியில் மீண்டும் குழப்பம்.

காங்கிரஸும் தேசியவாத காங்கிரஸும் கூட்டணி ஆட்சி நடத்தினாலும் அதன் நிலை மத்திய ஐக்கிய முன்னேற்ற முன்னணியின் ஆட்சியைப் போலவே ‘நித்திய கண்டம்; பூரண ஆயுள்’ என்ற நிலையிலேயேத் தொடர்கிறது.

மங்காத்தா விளையாட்டைப் போலவே உள்ளே வெளியே என்று தேசியவாத காங்கிரஸ் விளையாடிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சிகளுமே கூட்டணி வைத்திருந்தாலும் இரண்டுமே எலியும் பூனையும் போலவே இருக்கின்றன. சந்தர்ப்பவாத அரசியலின் உச்ச கட்டம் தான் இந்த கூட்டணி (எல்லாக் கூட்டணியுமே அப்படித் தானோ?) என்றால் அது மிகையல்ல.

இந்த இரண்டு கட்சிகளிடையே அப்படி என்னத் தான் பிரச்சனை. கொஞ்சம் பார்க்கலாம்….

  • 1999-இல் சரத்பவார் தனிக் கட்சி ஆரம்பிக்கக் காரணமே சோனியா-வின் அரசியிலுக்கு வரக் கூடாது என்பது தான். ஆனால், அதே சோனியாவின் காங்கிரஸுக்கு தற்போது ஆதரவு கொடுக்கிறார்கள். கேட்டால் பாஜக-வை வரவிடக் கூடாது; சோனியா பிரதமராக வருவதைத் தான் எதிர்க்கிறோம் என்று சமாளிப்பார்கள்.

  • 2003-இல் விலாஸ் ராவ் தேஷ்முக், சரத்பவார் மேல் 1993-இல் போடப்பட்ட என்ரான் சக்தி வாங்குவதில் ஊழலுக்காக நீதிமன்ற விசாரணைக்கு அனுமதித்தது தான் இந்த விரிசலின் ஆணிவேர் என்று கூறலாம்.

  • தொடர்ந்து தே.வா.காங்கிரஸ் மந்திரிகள் மேல் ஊழல் குற்றச்சாட்டுகள் வருவதற்கு ஏதுவாக ஊடகங்களுக்குத் தகவல்களை தேஷ்முக் தருவதாக தே.வா.காங்கிரஸ் நினைத்தது.

  • விதர்பா-வில் நீர் பற்றாக்குறை ஏற்பட்ட பொழுது அதற்கு சரத்பவார் மேற்கு மராட்டியத்திலேயே தன் கவணத்தைச் செலுத்துவதாகக் கூறப்பட்டது. இதில் உண்மையும் உண்டு. ஏனென்றால், விதர்பா பகுதியில் சரத்பவாருக்குச் செல்வாக்குக் குறைவு. அதே நேரம், மேற்கு மராட்டியத்தில் (பம்பாய், பூனே பகுதிகள்) அவரின் வாக்கு வங்கி நிறைந்த பகுதி.

  • தேஷ்முக் நீக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் பதவி தங்களுக்குக் கிட்டும் என்ற தே.வா. காங்கிரஸின் ஆசையை மண்ணைக் கவ்வ வைத்ததால் ப்ரித்விராஜ் சௌகானையும் எதிரியாகவே பார்க்கிறார்கள்.

  • ப்ரித்வி-யும் தன் பங்குக்கு, தே.வா.காங்கிரஸ் தலைவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவு வங்கிகளுக்கு பொருளாதாரப் பிரச்சனை வந்த பொழுது அதற்கு உதவ மறுத்துவிட்டார்.

  • துணைமுதல்வர் வசம் இருந்த நீர்வள துறை புது மசோதா கொண்டு வந்த பொழுது அவற்றில் பல மாற்றங்களைச் செய்தது காங்கிரஸ் [காரணம், மசோதாவில் தே.வா. காங்கிரஸுக்குச் சொந்தமான தொழில் நிறுவனங்களுக்கே  அதிக நன்மைகள் கிடைக்கும் வகையி இருந்தது என்பது தான்]
  • பட்ஜெட்-இல் நீர்வளத்துறையின் நிதியைக் குறைத்தது.
                       
இதைத் தவிர தே.வா.காங்கிரஸின் உட்கட்சிப் பூசல் வேறு தனி கதை. சரத்பவாருக்குப் பின் கட்சி தனக்குக் கிட்டும் என்று அஜித்பவார் காத்திருந்தார். காத்திருந்தவன் பொண்டாட்டியை நேற்று வந்தவன் கட்டிப் போனான் என்பது போல் காத்திருந்த கட்சித் தலைவர் பதவி நேற்று வந்த சரத்பவாரின் மகள் (சுப்ரியா) வசம் சென்றுவிடும் என்பது அஜித்துக்கு புரிந்திருக்கிறது. பவாரும் மகள் செல்வாக்கு பெறும் வரை அஜித்தை சமாளித்து ’கண்கள் பனித்து இதயம் குளிர்ந்தது’ கொண்டிருப்பது போல் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அஜித் தற்போது தன் மீது ஊழல் குற்றச்சாட்டு (அதிகம் இல்லை ஜெண்டில்மேன் வெறும் 20000 கோடி தான்) வந்ததைக் காரணம் காட்டி பதவி விலகியுள்ளார். இதனால், அதிகம் கொதிப்படைந்திருப்பது தே.வா. காங்கிரஸைச் சேர்ந்த மற்ற அமைச்சர்கள் தான். ஏனெனில், அவர்கள் மேலும் இது போல் ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் அவர்களும் இதை முன் உதாரணமாகக் கொண்டு பதிவி விலக வேண்டும் என்பதால். அவர்கள் அனைவரும் கூடி அஜித் பதவி விலகலை வாபஸ் பெற வேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளார்கள். அஜித் இதில் சரத்தின் முடிவு தான் கடைசி என்று கூறினார்.

மஹாராஷ்டிரத்தில் மற்ற சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்தித்த சரத் இப்போதைக்கு அஜித்தை சந்தித்துள்ளார். மற்ற உறுப்பினர்களைப் பதிவி விலக நிர்பந்திக்கக் கூடாது என்ற நிபந்தனை/கோரிக்கையுடன் அஜித்தின் பதவி விலகலை ஏற்றிருக்கிறார் என்றேத் தோன்றுகிறது.

எஸ்.வி. சேகர்-இன் ஆ.த.வா.அ.சிகாமணி நாடகத்தில் ’இன்னிக்கு நான் எந்த கட்சில இருக்கேன்னு பேபர் பாத்தா தான் எனக்கே தெரியும்’ என்று ஒரு வசனம் வரும். அது போல, தினமும் அன்றைய தினம் கூட்டணியில் இருக்கோமா என்பது சரத்பவார் காலையில் சொன்னால் தான் அவரது கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியும்.

சீட்டு கட்டு மங்காத்தைவை விட இது சுவாரசியமாக இருக்கிறதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக