வெள்ளி, நவம்பர் 09, 2012

த்ரிகர்தம்


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.

த்ரி என்றால் மூன்று; ‘கர்தம்’ என்றால் குழி அல்லது பள்ளம் [ஹிந்தி மொழியில் ‘காடி’ (घाटि – ghati – பள்ளத் தாக்கு) என்ற வார்த்தை இதிலிருந்து வந்தது தான்]. இங்கு மூன்று நதிப்பள்ளத்தாக்குகளை இது குறிக்கிறது. அந்த மூன்று நதிகள் சட்லஜ், பியாஸ், ராவி ஆகியவையே. இது இன்றைய ஹிமாசலப் பிரதேசமாக அழைக்கப்படும் பகுதி. த்ரிகர்தம் என்ற இந்த இடத்தின் முக்கியப் பகுதி ஹிமாசலத்தின் காங்ரா(டா) மாவட்டம்தான். இதன் தலைநகராக விளங்கியது ப்ரஸ்தலம் என்ற பெயரில் விளங்கிய இன்றைய பஞ்சாப் மாநில நகரமான ஜலந்தர் தான்.

பானினியின் அஷ்டத்யாயி-இல் பொதுவாக த்ரிகர்த்தம் ஆறு பகுதிகளை உள்ளடக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. அவை..

(1)         கௌண்டோபரத்
(2)         தண்டகி
(3)         கௌஷ்டகி
(4)         ஜலமணி
(5)         ப்ரஹ்மகுப்தா
(6)         ஜானகி

இந்த பகுதி வேறுபாடுகள் பற்றி வேறு எங்கும் குறிப்புகள் கிடைக்கவில்லை.

த்ரிகர்தர்களைப் பற்றிய புராண குறிப்பு என்றால் அது ப்ரஹ்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்படும் ராஜனக பூமி சந்த் என்பவரைப் பற்றியதே. (ராஜனக என்பது சக்ரவர்த்தி என்பது போன்ற பட்டப் பெயர்) இவர் கடோச வம்சத்தைத் தோற்றுவித்தவர். சந்திர வம்சத்தைச் சேர்ந்த இவர் பார்வதி தேவிக்கு அசுரர்களை வெல்ல உதவியதால் அதற்குப் பரிசாக இந்த த்ரிகர்தம் அவருக்கு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. இவருடையக் காலமாகக் குறிப்பிடப்படுவது கி.மு. 4300.

இந்த வம்சத்தினர் பின்னர் 4 கிளை வம்சங்களாகப் பிரிந்து ஹிமாச்சலப் பிரதேசம் முழுவதையும் ஆண்டு வந்துள்ளனர். அந்த வம்சங்கள் ஜஸ்வால், குலேரியா, சிபையா, தாட்வால் ஆகியவை.

ராமாயணத்திலும் த்ரிகர்த ராஜா ராமருடன் போரிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் த்ரிகர்த வம்சத்தின் 234-ஆவது ராஜா சுசர்ம சந்த்ரன் மஹாபாரதத்தில் கௌரவர்கள் சார்பில் போரிட்டு அர்ஜுனனால் கொல்லப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. த்ரிகர்தர்களுக்கும் விராட மத்ஸ்ய மன்னர்களுக்கும் தொடர் பகை. கீசகன் இறந்ததைத் தொடர்ந்து விராட தேசத்தின் பலம் குன்றியதை அறிந்த சுசர்மன் ஒரு பக்கத்தில் இருந்து தாக்க அவனுடன் போர்புரிய விராட மன்னன் சென்ற பொழுது கௌரவர்கள் விராட தேசத்தின் மீது போர் தொடுத்தனர். அவர்களை விராட மன்னனின் மகன் தடுத்து நிறுத்தினான். அவனுக்கு உதவியாக ப்ருகன்நளை (அர்ஜுனன்) வந்தது நாம் அறிந்ததே. மஹாபாரத யுத்தத்தின் பொழுது த்ரோணர் சக்ரவியூகம் அமைத்து தர்மரை கைது செய்ய நினைத்த பொழுது அர்ஜுனனை அங்கிருந்து அகற்ற சுசர்மன் அவனை வலிந்து தனியாக யுத்தம் செய்ய அழைத்து அலைக்கழித்தான். அங்கிருந்து சுசர்மனைத் தொடர்ந்து அர்ஜுனனும் வெகு தொலைசில் செல்ல சக்ர வியூகத்தைப் பிளந்து அபிமன்யு உள்நுழைய அந்தப் பிளவை ஜயத்ரதன் அடைத்தான். சக்ரவியூகத்தில் மாட்டிய அபிமன்யு கொல்லப்பட்டான். தற்போதைய காங்டா கோட்டை இந்த சுசர்மனின் காலத்திலேயே கட்டப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. மஹாபாரதப் போருக்குப் பின் இது பீமன் கோட்டை என்று வழங்கப்பட்டது.

அலெக்ஸாண்டருடன் போரிட்ட போரஸ் காந்தாரத்தை ஆண்டாளும் கடோச் வம்சத்தினரால் அவர்களைச் சேர்ந்தவனாக (இராஜா பரமானந்த சந்த்ரன் என்ற பெயரில்) குறிப்பிடப்படுகிறான். பின்னர் அசோகரிடம் முல்தான் பகுதியை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

பின்னர் நிகழ்ந்த அரேபிய மங்கோலிய படையெடுப்புகளிலும் கடோச் வம்ச அரசர்கள் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். தைமூரின் படையுடன் ராஜனக ரூப்சந்த் சண்டையிட்டுத் தடுத்ததால் துக்ளக் இந்த வம்சத்தினருக்கு ‘மியான்’ என்ற பட்டத்தைத் தந்தனர்.

முகலாயர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர் 1600-வரை முகலாயர்களால் கூட காங்டா கைப்பற்றப் படவில்லை. 1620-ஆம் ஆண்டு தான் காங்டா முகலாயர் வசம் வந்தது. பின்னர் 1700-இல் கடோச் வம்சத்தினர் குரு கோவிந்த் சிங்-உடன் சேர்ந்து ஔரங்கசீப்-இடம் இருந்து காங்டா-வை மீண்டும் கைப்பற்றினர்.

1775-1820 வரை ஆண்ட இரண்டாம் ராஜா சன்சார் சந்த் இன் ஆட்சி தான் பிற்கால கடோச் வம்சத்தின் பொற்காலம் என்று கூறப்படுகிறது. ஆனால், இதே சன்சார் சந்த்-இன் காலத்திலேயே இந்த வம்சம் இதன் சீரையும் இழந்தது என்பது தான் இதில் முரண்நகை.

காஷ்மீரம் போலவே இந்த கடோச வம்சத்தினரும் தற்போது வரைத் தங்கள் வம்சாவழியை எழுதிவைத்துள்ளனர். இந்த வம்சாவழியில் 500 அரசர்களின் பெயர்கள் வரிசையாக எழுதிவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் இவற்றை கற்பனையாக எழுதப்பட்டவை என்று கருதுகின்றனர். ஆனால், இவற்றை ஓரளவுக்கு நம்பலாம் என்று சிலர் கருதுகின்றனர். அதற்கான காரணங்களாக அவர்கள் கூறுவது, இதில் 234-ஆவதாக வரும் சுசர்மன் மஹாபாரத காலமான கி.மு. 3300-ஆவது வருடமாகக் கொண்டு ஒரு அரசருக்கு சுமார் 20-25 ஆண்டுகள் கொண்டால் தற்போதைய 500 மன்னர்கள் வர சுமார் 5000 ஆண்டுகள் ஆகும் (265 *20 = 5300 ஆண்டுகள் - சில மன்னர்கள் இளைய சகோதர்களாகவும் இருந்து குறைந்த காலம் ஆள சாத்தியம் இருப்பதால்) என்பதால் இந்த வம்சவழி சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும், மேலும் பழம் பெருமை ஒன்றே கொள்கையாக இருந்தால் வேறு பெரிய ராஜாகளின் வம்சமாகக் கூறிக் கொள்ளாமல் பெருமளவில் எங்கும் குறிப்பிடப்படாத த்ரிகர்தர்களைச் சொல்ல அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர்.

10 கருத்துகள்:

  1. த்ரிகர்தம் - இந்தப் பெயரும் புதியது, நீங்கள் தந்திருக்கும் விவரங்களும் நான் அறியாதவையே. மிக்க நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  2. அறிய தகவல்களை எப்படி சேகரித்தீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் முயற்சி பாராட்டத் தக்கது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றில் ஆர்வம் உண்டு. அதன் காரணமாக அது சம்பந்தப்பட்ட புத்தகங்களைப் படிப்பதுண்டு.


      புராண இதிகாச கதைகளில் இந்த பழைய தேசங்கள் நகரங்களைப் பற்றிய தகவல்களும் கிடைக்கும். சிறுவயதில் மகாபாரத ராமாயண கதாபாத்திரங்களை ஒரு நோட்டில் குறித்து வைத்து வந்திருந்தேன். [பின்னர் அந்த ’கெட்ட’ பழக்கத்தால் கவிதைகள் - நீங்கள் வெளியிடும் முதலைக் கவிதைகள் உட்பட - ஆகியவற்றை எழுதி வைக்கும் வழக்கம் வந்தது]. இதற்கு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ‘Ancient India', அக்னி புராணம், ப்ரம்மாண்ட புராணம் ஆகியவையும் அவற்றிலிருந்து பதுக்கி வைத்திருந்த தகவல்களும், படித்ததில் நினைவில் இருப்பவையும் போதாக்குறைக்கு இணையத்தில் கிடைக்கும் பல தகவல்களும் உதவுகின்றன.

      மற்றபடி தகவலைச் சேகரிக்க அதிக சிரமமெல்லாம் படவில்லை என்பது தான் உண்மை. இது வெறும் படித்த தகவல்களை ஒரு தலைப்பின் கீழ் திரட்டும் ஒரு முயற்சி. அவ்வளவு தான்.

      தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றிகள்!

      நீக்கு
  3. எத்தனை தெரியாத தகவல்கள் கொடுத்திருகீர்கள் ஸ்ரீனி!
    படிக்கப் படிக்க வியப்பு மேலிடுகிறது.

    மேலே நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 'கெட்ட' பழக்கங்களால் எங்களுக்கு தகவல்கள் வைரங்களாகவும், வைடூரியங்களாகவும் கிடைக்கின்றனவே!

    கெட்ட பழக்கம் தொடர வாழ்த்துக்கள்.

    எனக்கும் இந்தக் கெட்ட பழக்கம் உண்டு!

    உங்களுக்காக எனது பதிவு இப்போது முழுவதும் ப்ளாக்ஸ்பாட்டிலேயே!

    இணைப்பு:http://thiruvarangaththilirunthu.blogspot.in/2012/11/blog-post_9.html

    பதிலளிநீக்கு
  4. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள் ஜெயக்குமார்.

      தங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்!

      நீக்கு