வெள்ளி, டிசம்பர் 25, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-5)

யோவான்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-5)

(இதன்  பகுதி-1பகுதி-2பகுதி-3, பகுதி-4)

யூதத் தொன்மத்தில் ஏசுவைப் பற்றி ஓரளவு அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் நாம் இங்கு முதலில் பார்க்க இருக்கும் தொன்மம் வேறொருவர் தொடர்புடையது. அவர் பெயர் யோவான் (ஜான் - John). ஜான் என்பதை விட 'ஞானஸ்நான ஜான்' (John, the Baptist), அல்லது "ஞானத்தில் மூழ்கடிப்பவர்” (John the immerser), ஸ்நானகர் (baptizer) என்பவை தான் அனைவராலும் அறியப்படும் பெயர். இவர் கிருஸ்துவமதத்தின் மிக முக்கியமானவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். இவர் தான் பழைய ஏற்பாடுக்கும் புதிய ஏற்பாடுக்கும் (Old Testament and New Testament) பாலமாக இருப்பவர் இவர் ஏசுவுக்கு முன்னவராக தேவதூதனின் வரவை அறிவிப்பவராகவும் தேவதூதன் மீது பரிசுத்த ஆசி இறங்கியதற்கு சாட்சியாகவும் இருப்பதாகக் கருதப்படுகிறார். பழைய ஏற்பாடுகளில் கூறப்படும் தேவதூதன் எலியாஸ்-இன் மறுவடிவம் தான் இவர் என்றும் சிலர் கூறுகின்றனர்.

புதிய ஏற்பாடுகளின் படி  இவரும் ஏசுவும் உறவினர்கள். ஏசுவைவிட வயதில் சில மாதங்கள் மூத்தவர். இவரது தாய் எலிசபெத் மரியாளின் உறவினர். அவருக்கு 60 வயதில் ஜான் பிறந்ததாகக் கூறுவர். மரியாள் கன்னியாக கருவுறுவாள் என்பதை நம்பாததால் அதை மெய்பிக்க தாய்மை பருவம் தாண்டிய எலிசபெத் கருவுற்று அதை நிரூபித்ததாகவும் கூறப்படுவதுண்டு. அதையும் முதலில் நம்பாத செக்கரியாவை ஜான் பிறக்கும் வரை ஊமையாக ஆகும் படி சபித்ததாகவும் பின்னர் குழந்தைப் பிறந்தவுடன் அதற்கு யாருடைய பெயர் வைக்கவேண்டும் என்று கேட்ட பொழுது ‘ஜான்’ என்ற பெயர் வைக்குமாறு செக்கரியா சொல்லும் பொழுதுதான்  அவருக்கு மீண்டும் பேச்சு வந்ததாகக் கூறப்படுகிறது. மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் பொழுது மரியாள்-ஜோசப் உடன் எலிசபெத் அவள் கணவன் செக்கரியா, குழந்தை ஜானுடன் ஜெருசெலம் சென்றதாகவும் கூறப்படுவதுண்டு.

இவர் ஏசுவிற்கு முன்னரே ஜோர்டான் நதிக்கரையில் அனைவருக்கும் ஞானஸ்நானம் செய்வித்தவர் என்பதால் இவருக்கு ‘ஞானஸ்நான யோவான்’ என்ற பெயரே நிலைத்தது. பழைய ஏற்பாடுகளின்படி, இவர், ஏசு அறிவிக்கபடுவதற்கு முன்வரை பாலை நிலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்ரேலியர்களை (யூதர்கள்)ப் பொருத்தவரை இவர் பாலைவனத்தில் இருந்த பல துறவிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். அப்பொழுது, இறைவாக்குப்படி தேவதூதனின் வருகையை அறிவித்து அனைவருக்கும் ஞானஸ்நானம் செய்வித்ததாகக் கூறுவர். ஏசுவிற்கும் கூட இவரே ஞானஸ்நானம் செய்வித்தவர் என்றும் கூறுவர். ஏசுவிற்கு ஞானஸ்நானம் செய்யும் பொழுது அவர் ஜோர்டான் நதியில்  இறங்க, வானைப் பிளந்து, பரிசுத்த ஆவி ஒரு புறாவைப் போல அவர்மீது இறங்கியதாகவும் கூறுவர்.

யோவான் ஒட்டகமுடியால் செய்த ஆடையை அணிந்து, தோல் கச்சையை கட்டியவராகவும் வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் உண்டு வாழ்ந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறார்.

ஏசுவே இவரைப் பற்றிக் கூறும் பொழுது, மனிதராய் பிறந்தவர்களுள் ஞானஸ்நானம் செய்ய யோவானைவிடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை என்று புகழ்ந்ததாகக் கூறுவர்.

ஏசுவைப் போலவே இவர் அதிகாரத்தில் இருந்தவர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. அதனாலேயே, ஹெராத் மன்னன் அண்டிபஸ் அவன் தமையன் பிலிப்-இன் மனைவி ஹெராதியாவை தன் மனைவியாக்கிக் கொண்டதைக் (இருவரும் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே, தங்களுடைய கணவன், மனைவி ஆகியோரை தள்ளி வைத்தனர்) கண்டித்தார். இதனால், ஹேராதியா அவரை தண்டிக்க நினைத்தாள். ஆனால், அண்டிபஸ் அவருக்கு எதிராக எதுவும் செய்ய அஞ்சினான். ஆனால், ஹெராதியா அவரைக் கொல்ல தகுந்த சந்தர்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். தன் பிறந்தநாள் விழாவில் ஹெராதியாவின் மகள் ஆடிய நடனத்தைக் கண்டு மகிழ்ந்த மன்னன் அவளிடம் அவளுக்கு வேண்டிய பரிசைக் கோருமாறு கூறினான். அவள், தன் தாயின் தூண்டுதலால், யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்துத் தருமாறு கோர, ஹெராத் தன் வீர்ர்களிடம் அதை நிறைவேற்றுமாறு கட்டளியிட, அவர் கொல்லப்பட்டார்.

இஸ்லாமியர்களைப் பொறுத்தவரை அவர்கள் இவரை ஜெஹியா (அ) யாஹியா என்று குறிப்பிடுகிறார்கள். மிராஜ் இரவு வான் பயணத்தின் பொழுது முகமது நபி ஸல் அவர்கள் பல நபிகளைச் சந்தித்த்தையும் சிலருடன் பேசியதையும் – ஆபிரகாம் (இப்ராஹிம்), ஏசு (ஈசா), ஜான் (யாஹியா), மோசஸ் (மூசா) - குறிப்பிடுகிறார்கள். அதில் இரண்டாம் தளத்தில்/அடுக்கில் ஏசு, ஜான் (ஈசா, யாஹியா) சகோதரர்களை சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றனர்.

இதன் அடுத்த பதிவு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக