வெள்ளி, அக்டோபர் 26, 2012

பொன்னானக் கைகள்


நான்கு புறமும் மணல் மேடுகள். வெகு வேகமாக மணலை அடித்துக் கொண்டு மணலுடன் நீர் கலந்து ஓடும் ஆறு. இது தான் சோம நதி. இது ஹரியானாவில் இருக்கும் ஒரு மழைக்காலச் சிற்றாறு. தில்லி அருகே ஹரியானாவில் யமுனாநகர் என்ற இடத்தில் இது யமுனையில் கலக்கிறது.

இந்த நதியில் ஆங்காங்கே நதியில் நின்று எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். நதியில் நின்று அதில் கைவிட்டு உற்றுப் பார்த்துத் தேடிக் கொண்டிருந்தால் மீன்பிடிப்பாகத் தான் இருக்கும் என்று நினைப்போம். ஆனால், இந்த நதிக்கரையில் இருக்கும் 25 கிராமங்களில் மீன் பிடித்தல் தொழில் இல்லை. பிறகு என்ன தான் செய்கிறார்கள்?

இந்த 25 கிராமங்களின் பரம்பரைத் தொழில் மீன் பிடித்தல் அல்ல; மாறாக தங்கம் சேகரித்தல். ஆம் இந்த நதியின் மணல் துகள்களில் தங்கத் துகள்களும் கலந்துள்ளன. அவற்றைச் சேகரிப்பது தான் அவர்கள் பரம்பரைத் தொழில். இதற்கு இவர்கள் பயன்படுத்துவதுத் தங்கள் கண்களையும் கைகளையும் மட்டுமே; வேறு எந்த உபகரணங்களையும் உபயோகிப்பதில்லை. ஒரு கையளவுமண்ணில் தங்கம் கலந்திருக்கிறதா இல்லையா என்பதை பார்வையிலேயே கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

தினமும் காலை 8 மணியளவில் சூரிய வெளிச்சம் நன்கு வெளிவந்த பின்பு இவர்கள் தங்கம் சேகரிப்பதுத் துவங்கி விடுகிறது. கையில் ஒரு மரப்பட்டையை எடுத்துக் கொள்கிறார்கள். இதில் கொஞ்சம் மணலைப் போடுகிறார்கள். பின் மெல்ல மெல்ல நீரால் அதை கழுவுகிறார்கள். வழிந்தோடும் மணலில் தென்படும் தங்கத்தை மறுகையால் பிடித்து மீண்டும் அதை கழுவி கழுவி தங்கத்தைப் பிரிக்கிறார்கள்.

இப்படி இவர்கள் நாள் முழுதும் வேளை செய்தால் சில மில்லி கிராம் தங்கம் கிடைக்கிறது. இந்த வேளை வருடத்தில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் – மழைக்காலங்களில் மட்டும் தான் – நடக்கும். காரணம், மழைப் பெய்யும் பொழுது தான் மலையிலிருந்து பாறைகள் உருண்டு மணல் துகளாக அடித்துவரும் அந்த மணல் துகளிலிருந்து தான் இவர்கள் தங்கம் எடுக்கிறார்கள்.

இந்த தங்கம் எடுக்கும் தொழில் வருடா வருடம் குத்தகைக்கும் விடப் படுகிறது. வருடத்தில் (2-3 மாதங்களில் மட்டுமே வேலைச் செய்ய முடியும் என்றாலும் குத்தகை வருடம் முழுவதற்குமாகத் தான் நடைபெறும்) குத்தகைத் தொகை மட்டுமே லட்ச ரூபாய்க்கு இருக்கும். அக்டோபர் மாதத்தில் தான் இந்த ஏலம் நடைபெறுகிறது.

மிகவும் லாபமான தொழிலாக இதைச் சொல்ல முடியாது ஏனெனில் நாள் முழுவதும் சேகரித்த மில்லி கிராம் அளவிருக்கும் தங்கத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு பாரா என்ற ரசாயனத்தைக் கலக்கிறார்கள். அப்பொழுது கொஞ்சம் தங்கம் கரைந்து விடுகிறது. பிறகு, இதை சந்தையில் நேரடியாக விற்க முடியாது. அதற்கும் இடைத் தரகர்கள் இருக்கிறார்கள். கண்கள் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டே இருப்பதால் சீக்கிரமே கண்களில் பொறை விழுந்து விடுகிறது. வயதானவர்களின் கண் பார்வைத் திறன் குறைபாடுகளால் அவர்களால் இதைச் செய்ய முடிவதில்லை. இளைய தலைமுறைக்கு இத்தொழிலில் ஆர்வம் இருப்பதில்லை. அதனால், மெல்ல மெல்ல இந்த தொழில் அழிந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

பரம்பரை பரம்பரையாகக் கைகளாலேயே தங்கம் எடுக்கும் இவர்களின் கைகளைப் ‘பொன்னானக் கைகள்’ என்று பி.பி.ஸ்ரீநிவாஸ் போல பாடலாமா என்றால் முடியாது. காரணம் நாள் முழுவதும் தண்ணீரிலும் மண்ணிலும் கைகளை உழப்பியபடியே இருப்பதால் அவர்களின் கைகள் புண்ணானக் கைகளாகவே இருக்கின்றன.

13 கருத்துகள்:

  1. எந்த ஒரு பொருளையும் அடைவதற்கு மிகக் கடின உழைப்பு வேண்டும். தங்கம் எடுப்பதென்றால் எத்தனை சிரமம் தேவைப்படுகிறது? கண் பார்வையில் குறைபாடு.. கைகளில் புண்... வியப்பான தகவல்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உழைத்தால் தான் கிடைக்கும் என்றாலும் அவர்களின் உழைப்புக் கேற்ற ஊதியம் கிட்டுகிறதா என்பது தான் தெரியவிலை.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  2. இதைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றாலும் கூடுதல் விவரங்கள் தெரிவித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. ஆச்சரியமான தகவலாக இருக்கிறது. பாவம் புண்ணான கைகளாகி விடுகிறதா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீரிலேயே நின்று கொண்டிருந்தால் சேற்றுப் புண் வரும். அது போல கைகளால் நீர் விட்டு அலசிக் கொண்டே இருந்தால் புண் வருவது இயல்புதானே!

      வருக்கைக்கு நன்றிகள்

      நீக்கு
  4. அறியாத தகவல்...

    எல்லா தொழிலும் ஓரளவு இவ்வாறு தான்... அதிகம் கிடைக்கும் - கஷ்டம் மட்டுமே...

    விளக்கங்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //அதிகம் கிடைக்கும் - கஷ்டம் மட்டுமே//
      மிகவும் சரி!

      வருகைக்கு நன்றிகள் தனபாலன்

      நீக்கு
  5. வித்தியாசமான இதுவரை அறியாத விஷயங்களை தங்க சேகரிப்பது போல சேகரித்து சொல்கிறீர்கள்.நன்று. தொடர்க ஸ்ரீநிவாசன்.

    பதிலளிநீக்கு
  6. கடினமான பணி தான்.... இவர்கள் பற்றி வந்த செய்தி ஒன்றை சில வருடஙக்ள் முன் படித்திருக்கிறேன்.

    த.ம. 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்! வெங்கட், சில மாதங்களுக்கு முன் ndtv-யிலும் ஒரு நிகழ்ச்சி வந்தது.

      வருகைக்கும் த.ம. ஓட்டுக்கும் நன்றிகள்.

      நீக்கு
  7. புண்ணான கைகள் சிறந்த விளக்கக் கட்டுரை.

    பதிலளிநீக்கு