இன்று வரலட்சுமி நோன்பு (விரதம்).
பெரும்பாலும், இந்த நோன்பு, தெலுங்கர்களால் அதிகமாகவும், தமிழ் நாட்டில் சிலராலும் [பார்ப்பனர்களில் அஷ்ட ஸஹஸ்ரம் எனப்படும் “எண்ணாயிரம்” பிரிவில் அனைவராலும், மற்ற பிரிவில் சிலராலும்] கொண்டாடப்படுகிறது.
உடனே நினவுக்கு வருபவை, சிறுவயதில் அதற்கு அம்மா செய்யும் ஆயத்தங்களும் அதற்கு செய்த உதவிகளும் [அது உதவியா அல்லது இடையூறா (உபத்ரவமா) என அம்மாவிடம் தான் கேட்க வேண்டும்].
வீட்டில் சுவரில் படம் வரைவது, சொம்பில் சுண்ணாம்பு தடவி அதில் முகம் வரைவது அதற்காக சுண்ணாம்பு, நீர் வண்ணம் (Water Colour – Paint வாங்குவது செலவு அதிகம் தவிர பல வண்ணங்கள் தேவை என்பதால்] வாங்கி வருவது முதலியவை எங்கள் பொறுப்பு.
அதிலும் படம் வரைய நான் செய்யும் அலப்பரை இருக்கிறதே அது சில பொழுது என் அம்மாவிற்கு கோபம் வந்து தானே வரைந்து கொள்கிறேன் என்பது வரை போகும். இருந்தாலும் சமாதானம் செய்து கொள்ளுவோம், அது சரி கோபமே (?) என் அலப்பரையைக் குறைக்கத்தானே.
நோன்பு அன்று பூஜைக்கு, நைவேத்தியங்கள் செய்ய உதவுவது என்றும் எங்கள் பணி தொடரும்
பிறகு, பூசை நடக்கும்.
ஆனால் இப்பொழுதெல்லாம் சுவரில் படம் வரயப்படுவதே இல்லை. எல்லாம் Tiles தான். சொம்பும் முகம் பதிக்கப்பட்டே கிடைத்து விடுகிறது. அதனால் அந்த ஆயத்தப் பணிகள் சுருங்கிவிட்டன.
ஆனாலும் ஏனோ முழுமையே கிடைப்பதில்லை. இது இளம் வயது Nostalgia-வா அல்லது இயந்திரமயமானதாலா?
தெரியவில்லை.
அதிகமாக தெலுங்கர்களால் கொண்டாடப்படுவதாலோ அல்லது கர்நாடக இசையில் தெலுங்கு கீர்த்தனைகளின் தாக்கத்தாலோ, பொதுவாகவே லட்சுமி அழைப்பில் தெலுங்கு பாடலான “லக்ஷ்மி ராவே மா இண்டிக்கு” என்ற பாடல் பாடப்படும்.
ஆனால், எங்கள் வீட்டில் எங்கள் அம்மா, தன் தாய் வீட்டில் பாடப்படும், கீழ்கண்ட தமிழ் பாடலைப் பாடுவார். அது
வருவாய் லட்சுமி தாயே
[பல்லவி]
வருவாய் லட்சுமி தாயே – என் க்ரஹம் தனில்
மகிழ்வாகவே நீயே (வருவாய்)
[அனுபல்லவி]
வருவாய் லட்சுமி தாயே
திருவாய் மலர்ந்து நீயே
தருவாய் புத்திர பாக்யம்
பெருவாய் என்றருள்வாயே (வருவாய்)
[சரணம்]
தாயே இங்கு வந்து உதித்து – எந்நாளும்
நீ சலியாமல் வரம் அருள்வாய்
தூயே உன் பாதமே துணையென்று நம்பினேன்
அடியவள் கலி தீர்க்க - திரு
மாங்கல்ய வரம் தருவாய் (வருவாய்)
[ஒரு முறை என் அம்மாவிடம், பாட்டி ஒவ்வொரு முறையும் இந்த பாடலை பாடுவதால் தான் அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்துள்ளன, அதனால் வேறு வரம் கேட்கச் சொல் எனக் கூறி தி(கு)ட்டும் வான்கினேன். புத்திர பாக்கியம் என்றால் பிள்ளை வரம் மட்டுமல்ல அது தன் சந்ததியின் நல் வாழ்க்கைதான் என்று அப்போது கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது.]
அனைவரும் அன்னையைத் துதித்து “புத்திர பாக்கியம்” பெறுவோம்.
வரலட்சுமி விரத நன்னாளில் எல்லோருக்கும் எல்லா நலங்களும் வளங்களும் கிடைக்கட்டும்.
பதிலளிநீக்கு//[ஒரு முறை என் அம்மாவிடம், பாட்டி ஒவ்வொரு முறையும் இந்த பாடலை பாடுவதால் தான் அவருக்கு பத்து குழந்தைகள் பிறந்துள்ளன, அதனால் வேறு வரம் கேட்கச் சொல் எனக் கூறி தி(கு)ட்டும் வான்கினேன்.//
பதிலளிநீக்குநமக்கெல்லாம் இது சகஜமப்பா.... என்று நீ அப்போ சொன்னது இப்பவும் காதுல கேட்குது....
அந்நாளைய பண்டிகைகளின் ஆயத்தங்களும், அதன் குதூகலமும் இப்போதெல்லாம் இல்லை என்பது மறுக்கமுடியா உண்மை...
வருவாய் லட்சுமி தாயே – என் க்ரஹம் தனில்
பதிலளிநீக்குமகிழ்வாகவே நீயே