வியாழன், அக்டோபர் 18, 2012

பஹாலிகா


56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.

முந்தைய பகுதிகள் காம்போஜம், தராடம், காந்தாரம் மற்றும் காச்மீரம்.

பஹாலிகா என்றால் வேற்றாள் அல்லது வெளி ஆள் என்று முன்னரே பார்த்தோம். சப்த-சிந்துவின் கிழக்குப் பகுதி தொடங்கி கங்கை பகுதியை உள்ளடக்கிய ஆர்யவர்த்தம் என்ற ஆரியகளின் தேசத்தவரைப் பொறுத்தவரை சிந்துவிற்கு மறுகரையில் (மேற்குப்பகுதி) உள்ளவர்கள் பஹாலிகர்கள் தான்.

புராணங்களில் புவனகோசம் என்று ஒன்று உண்டு. புவனகோசம் என்றால் புவியியல். தேசங்களும் அவற்றின் புவியியலையும் பற்றிக் குறிப்புகள் இந்த புவனகோசத்தில் அடங்கியிருக்கும். காம்போஜ, காந்தார வரிசையில் மஹாவர்கள் (பஞ்சாப்), முஜாவந்த் (ஹிந்துகுஷ், பாமிர் பகுதியில் ஒரு மலை) ஆகியவற்றைத் தொடர்ந்து பஹாலிக நாடு குறிப்பிடப்படுகிறது. ப்ரமாண்ட புராணம் ’சக்‌ஸு’ நதி (தற்போதைய ஆக்ஸஸ் என்று அழைக்கப்படும் அமு தரியா) பஹாலிக தேசம் வழியாகப் பாய்வதாகக் குறிக்கிறது. தில்லி இரும்புத் தூணில் சந்த்ரகுப்தன் சிந்துவின் ஏழு வாய்களைத் தாண்டி பஹாலிகர்களை வென்றதாகக் குறிப்பிடுகிறது.

மஹாபாரதக் கதை ஒன்றைப் பார்ப்போம்…

குருவம்சத்தில் குருவின் மகன் ஜிஹ்ணுவிற்கு 10 தலைமுறைகள் பிறகு ப்ரதீபன் என்ற அரசன் இருந்தான். அவனுக்கு மூன்று மகன்கள். இவர்களில் இரண்டு பேர் அவர்களின் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறார்கள். அவர்கள், ப்ரதீபனின் முதல் மகன் தேவபி-யும் மூன்றாவது மகன் சந்தனு-வும் தான்.

ப்ரதீபன் தனக்குப் பின் தன் மகன் தேவபி-யை நாட்டின் அரசனாக்க நினைத்தான். ஆனால், தேவபி ஊனமுற்றவன் என்பதால் சாத்திரங்கள் அவனை அரசனாக நியமிக்கக் கூடாது எனக் கூறுவதாகப் பண்டிதர்களாலும் மூத்தோர்களாலும் மறுக்கப்பட்டது. தேவபியும் தனக்கு ராஜ்ஜியம் வேண்டாம் என்று சன்யாசம் மேற்கொண்டான். ப்ரதீபனின் இரண்டாவது மகன் தன் அண்ணனுக்குக் கிட்டாத தன் நாடு தனக்கு வேண்டாம் என்று மறுத்ததுடன் தன் நாட்டைத் துறந்து தன் தாய் வழிப் பாட்டனிடம் சென்று விட்டான். இவன் பெயர் குறிப்பிடப்படாமல் பஹாலிகன் என்று அழைக்கப்பட்டான். மூன்றாவது மகன் சந்தனு நம் அனைவருக்கும் அறிமுகம் ஆனவன்; கங்கை, சத்யவதி ஆகியோரை மணந்த பீஷ்மரின் தந்தை தான் அவன்.

காசி அரசனின் மகள்களைத் தன் தம்பி விசித்ரவீர்யனுக்காகத் தூக்கி வந்தப் பொழுது அம்பா எழுப்பியப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண பீஷ்மர் தன் பெரியப்பாவான பஹாலிகரிடம் ஆலோசனைக் கேட்டதாக மஹாபாரதம் கூறுகிறது. பஹாலிகன் என்பது அவர் பெயர் அல்ல. அவனுடையத் தாய் வழிப் பாட்டனின் பஹாலிக தேசத்தை ஆண்டதால் தான் அந்தப் பெயரால் அழைக்கப்பட்டான்.

பஹாலிகன், அவனுடைய மகன் சோமதத்தன், பேரன் புரிசிரவஸ் ஆகியோர் பாரதப் போரில் கௌரவர்கள் சார்பில் போட்டியிட்டனர். சோமதத்தனும், புரிசிரவஸும் கௌரவ சேனையின் பதினோறு அக்ரோனி சேனைகளில் இரண்டின் தலைவர்கள். பாரதப் போரில் போர்ப்புரிந்த வீரர்களில் மிகவும் வயதானவர் என்று குறிப்பிடுவது பீஷ்மரைத் தான். ஆனால், போரில் பஹாலிகரை பீமன் கொன்றதாகக் குறிப்பிடப் படுகிறது. எனவே, தேவபியின் தம்பி பஹாலிக மன்னனுக்கு அடுத்து ஒரு மகன் (பஹாலிகன்) இருந்து அவனுடைய மகனாக சோமதத்தன் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சோமதத்தனும் அவன் மகன்கள் புரிசிரவஸ், சாலன் (சகாலன் என்றும் கூறப்படுவதுண்டு) ஆகியோர் துரியோதனனை விரும்பாதவர்கள். ஆனால், பஹாலிகர்கள் பீஷ்மருக்காகவும் திருதராஷ்ட்ரனுக்காகவும் அதைவிட குரு வம்சக் கொடிக்கு (கௌரவர்களுக்கு) எதிராகவும் இருக்கக் கூடாது என்பதால் கௌரவர்கள் பக்கம் போரிட்டார்கள். மேலும் மற்றொரு காரணம் சாத்யகி. சாத்யகி-க்கும் புரிசிரவஸுக்கும் பரம்பரைப் பகை. அது தனிக் கதை…

தேவகி என்ற ராஜகுமாரிக்குச் சுயம்வரம் நடை பெற்றது. இதில் பல மன்னர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்குள் பல போட்டிச் சண்டைகள் நடைபெற்றன. இறுதியில் எஞ்சியது இருவர். அதில் ஒருவர் சாத்யகியின் தந்தை சினி; மற்றொருவர் சோமதத்தன். இருவருக்கும் ஏற்பட்டக் கடும் சண்டையில் சினி சோமதத்தனைத் தோற்கடித்தான். சினி இந்தப் போரில் தன் உறவினன் வசுதேவன் சார்பாகக் கலந்து கொண்டார். அவருக்கே தேவகியை மணமுடித்து வைத்தார். ஆம்! இந்த தேவகி வேறுயாருமல்லள்; கிருஷ்ணரின் தாயே தான். இந்தப் பகை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அடுத்தத் தலைமுறைக்கும் பரவி புரிசிரவஸும் சாத்யகியும் எதிரிகளாக இருந்தனர்.

கிருஷ்ணருக்கு அர்ஜுனனுடன் எவ்வளவு நட்பு உண்டோ அதே அளவு நட்பு சாத்யகியுடனும் உண்டு என்று குறிப்பிடுகிறார்கள். பாண்டவருக்காக கிருஷ்ணர் அஸ்தினாபுரத்திற்கு சமாதானம் பேச வந்த பொழுது அவரின் மெய்காப்பாளனாக வந்தது சாத்யகிதான். கௌரவர் சபையில் கிருஷ்ணர் நிந்திக்கப்பட்டப் பொழுது கோபத்துடன் வாளை உறுவிய சாத்யகியை கிருஷ்ணர் சமாதானம் படுத்தியதாகக் குறிப்பிடப்படுகிறது.

சோமதத்தனும் புரிசிரவஸும் பாண்டவர்கள் சார்பில் போரிட்ட சூரசேன மன்னன் சத்யகியினால் கொள்ளப் பட்டனர். சாலன், த்ரௌபதியின் ஐந்தாவது மகன் ச்ருஷ்டணனால் கொல்லப் பட்டான். பஹாலிகர்களுக்கு இறுதிச் சடங்கை, பங்காளிகள் என்பதால், த்ருதராஷ்டரனேச் செய்ததாகக் குறிப்பிடப்படுகிறது. [சாலன் சில இடங்களில் சகாலன் என்றும் கூறப்படுவதுண்டு; தற்போதைய சியால்கோட் நகரத்தின் முந்தைய பெயர் சகாலா; அதனால் இந்தப் பெயரால் வழங்கப் பட்டிருக்கலாம்]. சியால்கோட் பகுதி மத்ர தேசத்தைச் சேர்ந்தது.  என்றாலும், மஹாபாரதத்தில் மத்ர தேசத்தவர்கள் பஹாளிகர்கள் என்று இகழப்படுகிறார்கள். அதனால், அவர்கள் ஒரே பரம்பரையில் வந்து பின்னர் பிரிந்திருக்கலாம். சாலனின் கட்டுப்பாட்டில் சியால்கோட் (சகாலா) நகரம் இருந்திருக்கலாம்; அல்லது தாய் வழியில் அந்தப் பகுதி அவன் வசம் வந்தும் இருக்கலாம்.

பஹாலிகர்கள் குதிரையேற்றத்திற்கும் பஹாளிக தேசம் குதிரைக்கும் பெயர் போனவை. சிகண்டியின் மகன் க்ஷத்ரதேவன் பஹாலிகக் குதிரைகளில் ஏறிப் போர்புரிந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. சுபத்திரையின் திருமணத்தில் அர்ஜுனனுக்கு பஹாலிகக் குதிரைகள் பரிசளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப் படுகிறது.

பழைய குறிப்புகளில் வடமேற்கு பகுதிகளில் குறிப்பிடப்படும் பஹாலிக தேசம் பிற்காலக் குறிப்புகளில் மெல்ல பஞ்சாப், சௌராஷ்ட்ரம், ஆபீரம் ஆகிய தென் மேற்கு பகுதி மக்களோடுத் தொடர்பு படுத்தப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் நாளடைவில் மங்கோலிய, அரேபிய படையெடுப்புகளால் மெல்ல தெற்கு நோக்கி புலம் பெயர்ந்திருக்கக் கூடும் என்பது புலப்படுகிறது.

9 கருத்துகள்:

  1. பஹாலிகக் குதிரையின் வேகத்தில் படித்து முடிக்க வைத்த பதிவு. மஹாபாரதத் தகவல்கள் பல ஏற்கனவே நான் அறிந்தவை. எனினும் புதிய சில விஷயங்களையும் மனதில் பதித்துக் கொள்ள முடிந்தது. சத்யகியா, சாத்யகியா? சாத்யகி என்று ராஜாஜியின் வியாசர் விருந்தில் படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தெரியாத பல புராணச் செய்திகளையும் கதைகளையும் தெரிந்து கொண்டேன்.பகிர்வுக்கு நன்றி தொடர்வேன்

      நீக்கு
    2. கணேஷ் அது சாத்யகிதான்; திருத்திவிட்டேன். தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள்.

      முரளி, வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  2. மஹாபாரதக் கதையுடன் விளக்கம் அருமை...

    அறிந்து கொண்டேன்... தொடர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. தெரியாத பல செய்திகளை விளக்கிச் செல்லும் வரிகள்.

    பதிலளிநீக்கு