வெள்ளி, அக்டோபர் 05, 2012

காச்மீரம்

56  புராதன இந்திய தேசங்களின் வரிசையில் காம்போஜம்தராடம், காந்தாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து அடுத்ததாக... 

காச்மீரம்

இந்திய புராதன தேசங்களைப் பொறுத்தவரைப் புராணங்களைத் தவிர்த்துத் தொடர்ச்சியான எழுத்து வடிவான பரம்பரை வரலாறு உள்ள நாடுகளில் காச்மீரம்-உம் ஒன்று.  12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘கல்ஹணர்’ எழுதிய ராஜதரங்கிணி மகதத்தின் ஜராசந்தன் காலத்தைச் சேர்ந்த முதலாம் கோநந்தன் காலத்திலிருந்து பரம்பரையான வரலாறு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் [இதில் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கூறுகள் இல்லாமல் இல்லை; உதாரணமாக, ராமாதித்யன் என்ற மன்னரின் காலம் 300 ஆண்டுகளாகக் கூறப்பட்டுள்ளது. தோரோமனு என்ற ஹூண வம்ச மன்னனின் தந்தை என்று வரலாற்று ஆசிரியர்கள் ஆதாரத்துடன் கூறும் மிஹிரகுலன் அவருக்கு 700 வருடங்கள் முந்தைய அரசனாகக் குறிப்பிடப் பட்டுள்ளது].

நிலமத புராணம் காச்மீரத்தை கச்யப முனிவருடன் தொடர்பு படுத்துகிறது. சப்த ரிஷிகளில் கச்யபரும் ஒருவர். இவர் ப்ரஹ்மா-வின் பத்து மானஸ புதல்வர்களில் (மனதிலிருந்து உதித்தவர்கள்) ஒருவரான மரீசியின் மகன். காச்மீரம் இப்பொழுது இருந்த இடத்தில் தக்ஷப்பிரஜாபதி-யின் மகளும் சிவனுடைய மனைவியுமான சதிதேவியின் பெயரில் அமைந்த சதிசரஸ் என்ற ஓர் ஏரி அமைந்திருந்தது. அங்கு ஜலோத்பவன் என்ற ராக்ஷசன் வசித்து வந்தான். அவன் அப்பகுதியில் உள்ளவர்களைத் துன்புறுத்தி வந்தான். கச்யபர் அவனைக் கொல்வதற்காக வந்த பொழுது அவன் அந்த சதிஸரஸ்-உக்குள் ஒளிந்து கொண்டான். அவர் கத்ரு (இவளும் தக்ஷனின் மகள் தான்) மூலம் பிறந்த நாகர்களின் வம்சத்தைச் சேர்ந்த அனந்தன் முதலிய நாகர்களின் உதவியுடன் ஏரியை வற்றச் செய்தான். அனந்தனால் வற்றச் செய்யப்பட்ட இடம் ‘அனந்தநாக்’ அதேப்போல் ‘நாக்’ என்ற பெயரில் இருப்பவை மற்ற நாகர்களால் வற்றச் செய்யப்பட்ட இடங்கள். விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்து பூமியிலிருந்து ஜலோத்பவனை வெளிக் கொணர்ந்தார். அந்த இடம் வராஹ மூலை – இன்றைய பாராமுலா பள்ளத்தாக்கு – என்று அழைக்கப்படுகிறது

[தத்துவ ரீதியில் நாகர்கள் இருக்கும் இடங்களாகக் கூறப்படுபவை எரிமலையின் ஊற்றுவாய்கள் என்ற கருத்தும் உண்டு.  எரிமலையில் பூமியில் மையத்தில் இருக்கும் குழம்பு வெளிவருவது நாகத்தின் சீற்றத்தைக் குறிக்கும். ஆதிசேஷன் தன் தலையில் உலகைத் தாங்குவதாகக் கூறுவது பூமி மையத்தை உள்ள மூலக்குழம்பை - ஆதி என்றால் முதல் அல்லது மூலம்; சேஷம் என்றால் மீதி (மூல நெபுலா வெடிப்பிலிருந்து பிரிந்த மீதி) என்று – குறிப்பதாகவும் கூறுவது உண்டு. ஆனால், இந்த தத்துவ விளக்கம் பிற்காலத்தில் அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கு ஏற்ற வகையில் திரிக்கப் பட்டதாகவும் இருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. ஏனெனில் இது போன்ற விளக்கம் புராணங்களிலோ அல்லது வேறு எந்த புத்தகங்களிலோ இல்லை என்றும் கூறுகிறார்கள். அதே நேரம், நாகர்கள் பாதாள உலகைச் சேர்ந்தவர்கள் என்றே புராணங்கள் கூறுகின்றன என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்].

ஆசியக் கண்டமும் இந்தியத் துணைக்கண்டமும் இணைந்த பொழுது, கடலால் சூழப்பட்ட இந்த பகுதி உயர்ந்து இமயமலை உருவானதாக புவியியல் அறிஞர்கள் கருதுகிறார்கள். 

கஷ்யபரின் பெயரால் கஷ்யப புரம் என்று அழைக்கப்பட்டு, அது நாளடைவில் காச்மீரமாகத் திரிந்தாகக் கூறுவர்.

இதற்கு சற்று மாறுபாடாக, வடமொழியில் (சம்ஸ்க்ருதம்) ‘க’ என்றால் நீர். ’ஷ்மீரா’ என்றால் வற்றிய அல்லது உயிரற்ற என்று பொருள். நீர் வற்றி பூமி தோன்றிய இடம் கஷ்மீரம் என்ற பெயரில் வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.

க்ரேக்க அறிஞர் டால்மியின் உலக வரைபடத்தில் காஷ்மீர், கஸ்பேரியா என்று அழைக்கபடுவதாகக் கூறுவர்.  
ஜம்மு-வைப் பொறுத்தவரை கி.மு. 14-ஆம் நூற்றாண்டிலேயே ஜம்புலோசனன் என்ற மன்னனால் நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேட்டியாடிக் கொண்டே வந்த ஜம்புலோசனன் ஓரிடத்தில் ஆடும் சிங்கமும் சேர்ந்து நீர் பருகுவதைக் கண்டு அந்த இடத்திலேயே நகரை நிர்ணயித்ததாகத் தொன்மங்கள் கூறுகின்றன. ஜம்பூ என்று அவன் பெயராலேயே வழங்கப்பட்ட நகரம் நாளடைவில் ஜம்மு என்று திரிந்ததாகக் கூறுகிறார்கள்.

மஹாபாரதம் கர்ணனின் காம்போஜ விஜயத்தைக் கூறும் பொழுது, அதன் தலைநகரம் சிங்கபுரமாக இருந்தாலும், காம்போஜர்களின் கட்டுப்பாட்டில் ராஜபுரம் (தற்போதைய ரஜோரி) இருந்ததாகவும் அதைக் கர்ணன் வென்றதாகவும் குறிப்பிடுகிறது. பின்னர், பாஞ்சாலர்களின் கட்டுப்பாட்டிலும் சிலகாலம் இருந்தது. அப்பொழுது அவர்களால் மையப்படுத்தப்பட்ட நகரம் பஞ்சால் என்று அழைக்கப்பட்டு, பின்னர் பகீர் சித்தர் என்ற சூஃபி ஞானி வசித்ததால் பீர் பஞ்சால் என்று தற்போது வழங்கப்படுவதாகக் கூறுகின்றனர்.

ராஜதரங்கிணி கி.மு 3-2 நூற்றாண்டுகளில் காச்மீரம் மௌரியர் வசமாகவும் (குறிப்பாக அசோகரும் அவருடைய மகன் ஜலூகா-வின் கீழும்) இருந்ததாகக் கூறுகின்றது. பின்னர், தாமோதர மௌரியனுக்குப்பின் கி.மு. முதல் நூற்றாண்டில் குஷாணர்களின் (ஹுஸ்கர், ஜுஷ்கர், கனிஷ்கர்) கட்டுப்பாட்டிலும் அதன் பின் மீண்டும் கோநந்தர்கள் வசம் வந்ததாகக் கூறுகிறது. இதிலிருந்து கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை ராஜதரங்கிணியில் பல தகவல் பிழைகளை வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். பின் 5-ஆம் நூற்றாண்டில் ஹூணர்கள் (தொரமானா, மிஹிரர் என்று கூறினாலும் ஹூண வம்சம் என்று குறிப்பிடப்படவில்லை) வசம் காச்மீரம் இருந்தது. பின் மீண்டும் கோநந்தர்கள் வசம் வந்தது. 7-ஆம் நூற்றாண்டில் கோநந்த வம்சத்தைச் சேர்ந்த பாலாதித்யன் என்ற மன்னர் தனது மகளையும் தனது ஆட்சியையும் கார்கோடக வம்சத்தைச் (கார்கோடகன் என்பதும் நாக வம்சத்தின் ஒரு பிரிவுதான்) சேர்ந்த லலிதாதித்ய முக்தபீடனிடம் ஒப்படைத்தார். லலிதாதித்யன் இந்தியாவின் அலெக்ஸாண்டர் என்று அழைக்கப்படும் அளவிற்கு  பெரிய மாவீரன். லலிதாதித்யன் காலத்தில் மத்திய ஆசியாவரை காச்மீரத்தின் எல்லை விரிவடைந்தது. லலிதாதித்யனின் பின் அவன் மகன் வசம் நாடு வந்தது என்றாலும் பின்னர், நீண்ட வாரிசு போராட்டங்களுக்குப்பின் லலிதாதித்யனின் ஆசைநாயகியின் பேரன் உத்பலன் வசம் காஷ்மீரம் வந்தது. உத்பலனுக்குப்பின் கர்கோடக வம்சத்தின் திவானாக இருந்த ஷம்கரவர்மனின் குடும்பி வம்சம் வசம் சென்றது. பின் 9-10ஆம் நூற்றாண்டில் இது அவர்களின் ஓலை எழுதுபவர்கள் வம்சமான ‘திவிரர்’கள் வசம் சென்றது. பின்னர் இது லோஹரர்கள் வசம் சென்றது. இந்த லோஹரர்கள் வம்சம் தார்வாபிசாரன் என்ற வியாபாரியால் துவங்கப்பட்டது. இந்த லோஹரர்கள் தன் அரசாக ஆளாமல் தனிதனி ஊர்களை பல தலைமுறைகளாக ஆண்டு வந்தனர்.  கல்ஹனரின் தந்தை சம்பகர் இந்த வம்சத்தைச் சேர்ந்த ஹர்ஷன் என்ற மன்னனின் மந்திரிகளுல் ஒருவர்.

கல்ஹனரின் காலத்தில் இந்த லோஹரர்களும் வலிமை இழந்தனர். மங்கோலிய, துருக்கிய, அரேபிய படையெடுப்புகளாலும் வாரிசுப் போர்களாலும் சிற்றரசர்களின் எல்லைப் பிரச்சனைகளாலும் காச்மீரம் கலவர பூமியாகவே மாறியிருந்தது. ராஜதரங்கிணியைத் தொடர்ந்து ஜோனராஜா என்பவர் கல்ஹனர் விட்ட இடத்திலிருந்து 1412 – ஜைனுலப்தீன் காலம் வரை - பிற்சேர்க்கையிட்டார். தொடர்ந்து 1486 – ஃபாஷா காலம் வரை ஸ்ரீவரர் தொடர்ந்து எழுதினார். பின்னர் ப்ராஜினிய பட் என்பவர் 1588-இல் அக்பர் காச்மீரத்தைக் கைப்பற்றும் வரை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட 19-ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை காச்மீரம் ஆஃப்கானின் துரானி வம்சம், சீக்கியர்கள் வசம் (லாஹூரின் ரஞ்சித் சிங்) என்று நான்கு நூற்றாண்டுகள் வெளியாட்களாலேயே ஆளப்பட்டது. பின்னர் காச்மீரின் தியோ வம்சத்தைச் சேர்ந்த குலாப் சிங், ரஞ்சித் சிங்னால் காச்மீரத்தின் ஆட்சியின் கண்கானிபாளராக நியமிக்கப்பட, நாளடைவில் தன்னிச்சையாக காச்மீரத்தின் தனி மன்னராகவே செயல்பட ஆரம்பித்தார். அச்சமயத்தில் லாஹூரின் சீக்க்யர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் இவர் இருவருக்கும் இடையில் சமாதானத் தூதுவராகச் செயல் பட்டார். அப்பொழுதைய ஒப்பந்தத்தின் பலனாக 1856-இல் காச்மீரம் முழுவதும் தியோ வம்சத்தினரின் வசம் வந்தது. 1949-இல் ஹரிசிங் தியோ (குலாப் சிங், ரன்வீர் சிங், ப்ரதாப் சிங், ஹரிசிங் என்பது இவர்களின் வரிசை) காச்மீரத்தின் மன்னராக இருந்தார். இந்திரா காந்தியின் அரசில் மந்திரியாக இருந்த கரண்சிங் இந்த மன்னரின் வம்சமே…

10 கருத்துகள்:

  1. வியப்பில் புருவத்தை உயர்த்த வைக்கிறது காச்மீரத்தின் துவக்க கால வரலாற்றுப் பின்னணி. கலவர பூமியாக ஆரம்ப நாட்களிலேயே இருந்திருப்பது மற்றொரு வியப்புத் தகவல். அருமை.

    பதிலளிநீக்கு
  2. பல தகவல்களை அறிந்து கொண்டேன்
    நன்றி பாஸ்

    பதிலளிநீக்கு
  3. எங்களையும் வரலாற்றுப் புலிகளாக்கிட்டுத்தான் விடுவீங்க போல. பலருக்கும் தெரியாத தகவல்கள். பலே.(அப்படியே வாஸ்து நிபுணரிடம் சொல்லி காச்மீரத்தை சரி பண்ணச் சொல்லுங்கள்)

    //‘க’ என்றால் நீர். ’ஷ்மீரா’ என்றால் வற்றிய அல்லது உயிரற்ற என்று பொருள்.//

    காஷ்மீரா ஷா - ன்னு ஒரு குத்தாட்ட நடிகை இருக்காளாமே. அவர் பெயருக்கு என்ன அர்த்தம்ன்னு நினைச்சுப் பார்த்தேன். ஒரே சிப்பு சிப்பா வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வரலாற்றுப் புலிகள் ஆனால் தவறில்லை; வரலாறு புளித்துப் போகாமல் இருந்தால் போதும்.

      //காஷ்மீரா ஷா//
      90-களின் மத்தியில் திரையுலகில் வந்தவர். இவரது தாத்தா (அம்மாவின் அப்பா) பெரிய ஹிந்துஸ்தானி பாடகர் என்பதால் அப்பொழுது மீடியாக்களின் செல்லம். 'Yes Boss' படத்தில் (தமிழில் குரு த பாஸ்) ஆதித்ய பஞ்சோலி-யின் மனைவியாக நடித்தவர். ஆ.பஞ்சோலி எனக்குப் பிடித்த நடிகர் என்பதால், இவரது பெயரும் ஞாபகம் இருக்கிறது. சில படங்களில் இடம் பெற்று பின் Big-boss நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

      நீக்கு
  4. பாஸ்,

    // [இதில் வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத சில கூறுகள் இல்லாமல் இல்லை; //

    நீங்க எழுதி இருப்பது புராணத்தினை வைத்து அப்புறம் எப்படி ,வரலாற்று ஆசிரியர்கள் ஒற்றுக்கொள்வார்கள்.

    கி.மு 1700க்கு முன்னர் இந்த பக்கம் கஷ்யபரும் கிடையாதும் , வால்மீகியும் கிடையாது :-))

    கஷ்யபர் எல்லாம் இருந்தது இன்றைய இராக்(மெசபடோமியா) கஷ்யபர் பேரு தான் காஸ்பியன் கடல், ஆக்ஸ் நதி அமு டர்யானு தொல்லியல் ரீதியாக சொல்லி இருக்காங்க.

    சரஸ்வதி நதி தான் யூப்ரடிஸ் , அங்கே இருந்து மக்கள் சிந்து சமவெளிக்கு வந்து இந்தியாவுக்கு இடம் பெயர்ந்ததை தான் ஆரிய ஊடுருவல் என்பது. உலகம் முழக்க ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாறு இதுவே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நீங்க எழுதி இருப்பது புராணத்தினை வைத்து அப்புறம் எப்படி ,வரலாற்று ஆசிரியர்கள் ஒற்றுக்கொள்வார்கள்.//
      வவ்வால்,
      நான் கூறியது கல்ஹணரின் ராஜதரங்கினியைப் பற்றி. இதைப் பெரும்பாலான வரல்லாற்று ஆசிரியர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் இதிலும் சில ஏற்றுக் கொள்ள முடியாதவை உள்ளன, அதைத் தான் குறிப்பிட்டுள்ளேன்.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு