வியாழன், அக்டோபர் 11, 2012

மோனோ லிசாவும் டூயல் லிசாவும்



லியனோர்டோ-டா-வின்ஸி தான் மோனா லிஸா ஓவியத்தை வரைந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் டா-வின்ஸி மோனா லிஸா-வின் ஓவியத்தை வரைவதற்குச் சுமார் 10-வருடங்கள் முன்னரே அதேப் போன்ற ஒரு ஓவியத்தை (அது மோனோ லிஸா-வின் சகோதரியாக இருக்கலாம்) வரைந்ததாக அறிவித்துள்ளனர்.

இது இப்பொழுது புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்டதல்ல. இதன் வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம்…

இங்கிலாந்தைச் சேர்ந்த ஹ்யூக் ப்ளாக்கர் என்ற கலைப் பொருட்களைச் சேகரிப்பவர் தான் முதன் முதலில் 1913-ஆம் ஆண்டு மோனா லிஸா-வைப் போன்ற கான்வாஸ் ஓவியம் ஒன்று கிடைத்தது. [அசல் மோனா லிஸா ஓவியம் மரத்தில் வரையப் பட்டது]. இதைத் தொடர்ந்தே இந்த ஓவியத்தின் உண்மைத் தன்மை அலசப் பட்டு வந்துள்ளது. இந்த ஓவியம் ப்ளாக்கர்-க்கு ஐல்வொர்த் (Isleworth) என்ற புகழ் பெற்றக் குடும்பத்திடமிருந்து கிட்டியதால் இந்த ஓவியத்தின் பெயர் ஐல்வொர்த் மோனா லிஸா என்றும், ஒரிஜினல் மோனா லிஸா பாரிஸ் நகரத்தில் லௌர் என்ற இடத்தில் வைக்கப் பட்டுள்ளதால் அது லௌர் மோனா லிஸா என்றும் அழைக்கப்பட்டு வந்தன.

1915-ஆம் ஆண்டு ப்ளாக்கர்-இன் வளர்ப்புத் தந்தை ஜான் இயர் என்ற கலை வரலாற்று நிபுணர் தன் புத்தகத்தில் டா-வின்ஸி உண்மையான மோனா லிஸா ஓவியத்தை வரையும் முன் இந்த ஓவியத்தைப் பயிற்சி ஓவியமாக வரைந்ததாக எழுதியிருந்தார்.

ப்ளாக்கர் இந்த ஓவியத்தை அமெரிக்காவின் ஹென்றி புலிட்சர் என்பவருக்கு விற்றார். அது பின்னர் அவருடையத் தோழியிடமிருந்து பல கைகள் மாறி மோனோ லிஸா பவுண்டேஷனிடம் வந்தது.

கடந்த 40 வருடங்களாக ஐச்வொர்த் லிஸா-வின் படம் ஸ்விஸ் வங்கியின் பெட்டகத்தில் மோனோ லிஸா ஃபவுண்டேஷனால் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.

புலிட்சர் இதைப் பற்றிப் பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார். அதிலும் அவர் தன் ஆராய்ச்சியை இயர் எழுதியவற்றைக் கொண்டு அதன் உண்மையை ஆராய்ந்தார்.

லியனார்டோ 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் (1452-ல் வின்ஸி நகரத்தில் பிறந்தவர் – டா-வின்ஸி என்றால் வின்ஸியைச் சேர்ந்தவர் என்று பொருள் – என்று கூறப்படுகிறது). இதனால் புலிட்சர் 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கியார்கியோ வசாரி (1511-1574) என்ற கலை-வரலாற்று ஆசிரியரின் ’கலைஞர்களின் வாழ்க்கை (Lives of Artists)’ என்ற குறிப்புகளை ஆராய்ந்தார். வசாரியின் குறிப்புகளில், ப்ளோரண்டைனின் பட்டு வியாபாரி ஃப்ரன்செஸ்கோ டெல் கியோகாண்டோ என்பவரின் மனைவியான லிஸா க்ஹெரார்தினி என்பவரின் ஓவியத்தை லியணார்டோ 1503-1506 ஆகிய நான்கு வருடங்கள் வரைந்து அதை அரைகுறையாக விட்டுவிட்டதாகவும் எழுதியிருந்தது. 1516-ஆம் ஆண்டு லியனார்டோ, தான் இறப்பதற்கு மூன்று வருடங்கள் முன்பு, முழுவதுமாக வரையப்பட்ட மோனா லிஸா ஓவியத்தை முதலாம் ப்ரான்ஸிஸ் ராஜாவிற்கு விற்றுள்ளார். இதற்குச் சான்றாக புலிட்சர் கியோவானி லொமசோ என்பவர் 1584-இல் வெளியிட்ட கலைஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளில், லியணார்டோவின் ஓவியங்களாக கியோகாண்டோ & மோனா லிஸா என்பவற்றைக் குறித்துள்ளதைக் கூறுகிறார்.

வசாரி-யின் குறிப்புகளில் மோனாலிஸா-வின் புன்னகைப் புத்துணர்ச்சி தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புலிட்சர் இதைப்பற்றிக் குறிப்பிடுகையில்,  அசல் மோனாலிஸா-வின் ஓவியத்தின் புன்னகை அனைவருக்கும் புதிரானதாகவே இருக்கும். ஆனால், ஐல்வொர்த் லிசா-வின் புன்னகை வெளிப்படையாக இருக்கும். எனவே வசாரியின் குறிப்பில் உள்ளது ஐல்வொர்த் லிசா-வாகத் தான் இருக்கும் என்கிறார்.

ஐல்வொர்த்-இல் இருக்கும் படத்தில் இருக்கும் மோனா லிஸா லோவர் படத்தில் இருக்கும் மோனா லிஸாவை விட இளமையாக இருப்பதால் அது லியனார்டோ லோவர் படத்தை வரைவதற்கு 10 வருடங்களுக்கு முன்னரே ஐல்வொர்த் படம் வரைந்துள்ளார் என்பதைக் காட்டுவதாகவும் புலிட்சர் கூறுகிறார்.

ஆனால், ஆக்ஸ்ஃபொர்ட் பல்கலைக் கழகத்தின் கலை வரலாற்றுத் துறைத் தலைவர் மார்டின் கெம்ப் லியனார்டோ-வின் புகழ் பெற்ற ஓவியங்கள் அனைத்துமே மரத்தில் வரையப்பட்டவை. கான்வாஸ் ஓவியம் எதுவுமே இல்லை. இந்த ஐல்வொர்த் படம் லியணார்டோ-வின் ஓவியத்தைப் பிற்காலத்தில் யாராவது நகல் எடுத்திருக்கலாம் என்று கூறுகிறார். அதில் இருக்கும் உருவம் மோனாலிஸா-வை விட இளமையாக இருப்பதால் அது மோனாலிஸா இளமையாக இருக்கும் பொழுது வரைந்தது என்றுக் கொள்வதை விட, நகலெடுத்தவர் அதை இளமையாக வரைந்திருக்கலாம் என்பதே காரணமாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

ஆக லியர்ணாடோ வரைந்தது 'மோனொ' லிஸாவா 'டூயல்' லிசாவா என்ற சர்ச்சை இன்னமும் தீரவில்லை…

13 கருத்துகள்:

  1. இப்படி எத்தனை பேர் கிளம்பு போறாங்களோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த படத்தை வெளியிட்டுள்ளது ‘மோனோலிஸா பவுண்டேஷன்’ என்பது தான் இதன் நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவும் தலைப்பட்டுள்ளார்கள்.

      வருகைக்கு நன்றிகள் ஹாரி.

      நீக்கு
  2. எனக்கு தலைசுத்துதுப்பா. மோனாலிசா டூயல் லிசா விவகாரத்தைப் பத்தி விரிவாத் தெரிஞ்சுக்கிட்டதுல சந்தோஷம். எப்ப தெளிவான விடை கிடைக்குமோ?

    பதிலளிநீக்கு
  3. மோனோலிசா ஓவியம் புதிராக இருப்பதாலே அதன் மகத்துவம் அதிகரித்து விடுகிறது. சுவையான தகவல்களை அளித்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓவியம் போலவே அதை வரைந்ததிலும் ஒரு புதிர் இருப்பது தான் வியப்பை உண்டாக்குகிறது.

      வருகைக்கு நன்றிகள்.

      நீக்கு
  4. சில விஷயங்கள் தெரிஞ்சிக்காம இருந்தாதான் ரசிக்க முடியும் போல !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நதி மூலம், ரிஷி மூலம் ஆகியவற்றைப் போல கலை மூலத்தையும் ஆராயக் கூடாது.

      ‘என்ற’ கமலஹாசன் சொல்வது போல் இதை (கலையை) ஆராயக் கூடாது; அனுபவிக்கனும் - என்று சொல்கிறீர்கள்

      நீக்கு
  5. நல்ல அலசல்.... நல்லா இருக்கு இரண்டுமே - ரசிச்சுட்டு போவோம்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரசனைக்கு இரண்டுமே நன்றாகத் தான் இருக்கிறது என்பது உண்மை.
      நமக்கு அது தான் தேவை.

      ஆனால், இதை வைத்திருக்கும் நபர்களைப் பொறுத்தவரை இது டா-வின்ஸி வரைந்தது/இல்லை என்பதைப் பொறுத்து இதன் மதிப்பு நிர்ணயிக்கப் படும்!!

      வருகைக்கு நன்றிகள்

      நீக்கு
  6. புதிய தகவலுக்கு நன்றி...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
    Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_13.html) சென்று பார்க்கவும்...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுலகின் பின்னூட்டத் திலகம் (அதிலும் குறிப்பாக முதல் பின்னூட்டம் இடுவதில்)என்ற சிறப்புடையத் தங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

      தங்களை இங்கு வரவழைத்த ரஞ்சனியம்மாள் அவர்களும் நன்றிகள்.

      நீக்கு