வியாழன், ஜனவரி 26, 2012

குடியரசு தினம்

நேற்று  நமது நாட்டின்  63வது குடியரசு நாள். மக்களாட்சித்  துவங்கி  62 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளது.  நாம் விதவிதமான ஆட்சி முறைகளையும் அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும் பார்ப்போம். 
மக்களாட்சி
Republic Government / Democracy
ஒற்றையாட்சி
Unitary Government
கூட்டாட்சி
Federal Government
நாடாளுமன்ற ஆட்சி
Parliamentary Government
செங்கோலாட்சி
Benign Government
கொடுங்கோலாட்சி
Despotic Government
நாடாளுமன்றமற்ற ஆட்சி
Non-Parliamentary Government
முதாலாளித்துவ ஆட்சி
Capitalistic Government
தொழிலாளியர் ஆட்சி
Proletarian Government
அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி
Constitutionalism
கூட்டுடமை
Socialism
பொதுவுடமை
Communism
பேரரசாட்சி
Imperialism
சிற்றரசாட்சி
Feudalism
கட்டுடைமை
Fascism
அரசாங்கம் அற்ற நிலைமை

Anarchism / Nihilism
[Nihilism பொதுவாக மாயை போன்ற நிலையைக் குறித்தாலும் சில இடங்களில் கட்டுபாடு அற்ற நிலைமை என்ற பொருளிலும் வழங்கப்படும்]
உழைப்பாளராட்சி
Ergatocracy
மன்னராட்சி / ஏகாதிபத்யம்
Monocracy
கும்பலின் ஆட்சி
Mobocracy / Ochlocracy
தனி மனித ஆட்சி
Autocracy / autarchy
சர்வாதிகார ஆட்சி
Dictatorship / Absolutism  / Shogunate / Totalitarianism / Despotism / Authoritarianism
அறிவியல் தொழில் நுட்பவியலியரின் ஆட்சி
Technocracy
தேவ (தேவதூதர்களின்) ஆட்சி / மதகுருக்களின் ஆட்சி
Theocracy
அனைவரின் ஆட்சி
Pant-isocracy
குருக்களாட்சி
Hierocracy
உயர்ந்தோர்/சீரியோர் ஆட்சி
Aristocracy
பணக்காரர்கள் ஆட்சி / செல்வராட்சி
Plutocracy
அறிஞராட்சி
Meritocracy
படை ஆட்சி
Stratocracy
அன்னிய ஆட்சி
Xeno-cracy
ஆண்கள் ஆட்சி
Androcracy
பெண்கள் ஆட்சி
Gynecocracy / Gynarchy
தந்தை ஆட்சி
Patriarchy
தாய் ஆட்சி
Matriarchy
சிலர் ஆட்சி
Oligarchy
இருவர் ஆட்சி
Diarchy / Dyarchy
கிழவராட்சி
Gernotocracy
பலர் ஆட்சி
Polyarchy
கள்வர்கள் ஆட்சி
Kleptocracy
அமைச்சரவை அரசு 
Limited Monarchy
நாடுளுமன்ற மன்னராட்சி
Parliamentary Monarchy
நாட்டாண்மை
City State
எதேச்சாதிகாரம்
[ஒரு நாடோ அல்லது ஒரு இனமோ மற்றதை அடிமைப் படுத்துதல்]
Hegemony / Super-power
[Domination of one nation or one social group over other]
காமன்-வெல்த் நாடுகள்
[ஐக்கிய நாடுகளைத் தலைமையாகக் கொண்டு பிரிட்டிஷ் அரசின் அதிகாரத்தை மதிக்கும், தற்போது சுயாட்சி பெற்ற, பிரிட்டனின் முன்னாள் காலணிகளின் கூட்டமைப்பு ]
Commonwealth Nations
[Association of nations consisting of United Kingdom and several former British colonies that are now sovereign states but still pay allegiance to the British Crown]


இப்போது representative republican monarchy (under foreign guidence) என்ற புதிதான ஒன்றை இந்தியாவில் கண்டுபிடித்திருப்பதாகக் கூறுகிறார்கள்!!!.

இந்திய அரசியல் வரலாற்றில் மாபெரும் அரசாங்கங்களைத் தந்த பீகாரில் spousocracy முயற்சி செய்தாகிவிட்டது.

தமிழகமும் இதில் சளைத்த்தல்ல;  kinsocracy (குடும்ப ஆட்சி), companianocracy (உடனிருப்பவர் ஆட்சி) என்று புதிது புதிதான முயற்சிகளைச் செய்த வண்ணம் இருக்கிறது.

இருந்தாலும், மக்களுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை, இந்த ஆட்சி அமைப்பை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்க (இவற்றைத் தவிர வேறு வழியும் இல்லாததால்) வாய்ப்பு கொடுக்கிறார்கள். அதனால், பெயரளவிலாவது, மக்களாட்சி தான் நடந்து கொண்டு இருப்பதாக நாமும் சொல்லிக் கொள்ளலாம்.


வெள்ளி, ஜனவரி 13, 2012

லோஹ்ரி

 
லோஹ்ரி (Lohri) – லோடி (Lodi) என்று உச்சரிப்பர் - என்பது பஞ்சாபியர்கள், அவர்களின் புஸ் மாதம் நிறைவு பெறுவதை ஒட்டி நடத்தப்படும் விழா. புஸ் மாதம் என்பது பஞ்சாபி மொழியில் புஷ்ய மாதம் என்பதன் திரிபு. இது மக மாதத்தின் முந்தைய மாதம். புஷ்ய மாதம் என்பது நமது தை மாதம் தான். வட இந்தியாவில் தை மாதம் அதாவது புஷ்ய மாதம் 9-ம் தேதி (பௌர்ணமி) அன்றோடு முடிந்து மக மாதம் ஆரம்பமாகி விட்டது. வடஇந்திய மாதங்களைப் பற்றி என் முந்தைய இரண்டு பதிவுகளில் (1,2 )  எழுதியுள்ளேன். இது போதுவாக ஜனவரி, 12 அல்லது 13-ம் தேதியன்று தான் வரும். சாதாரணமாக லோஹ்ரி, நம் போகிக்கு முதல் நாள் கொண்டாடப் படும்.

இந்த லோஹ்ரி நாள் இரவில் பொது இடத்தில் கட்டைகள் மற்றும் வறட்டிகளால் நெருப்பு வளர்த்து, அதைச் சுற்றி ஆடிப் பாடிக் களித்திருப்பர். எள் உருண்டை, வேர்கடலை, சோளப்பொரி ஆகியவற்றை நெருப்பிலிட்டும், வந்திருக்கும் அனைவருக்கும் கொடுத்து உண்டும் மகிழ்வர், ஆனால், நம் போகி போல பழையப் பொருட்களை எரிப்பதுக் கிடையாது; வறட்டி மரக்கட்டைகளைத் தான் எரிப்பர். வட இந்தியாவில் இது குளிர்காலம்; அதனால் இரவில் ஏழை மக்கள் குளிர்காய நெருப்பு வளர்த்து சுற்றி அமர்ந்திருப்பது வழக்கம். எனவே, இதனால் ஏற்படும் சுற்றுப்புற மாசு நம் தமிழகத்தில் போகியன்று இருக்கும் அளவிற்கு அதிகம் இருப்பதில்லை. மேலும், இதில் டயர் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதில்லை என்பதும் கூடக் காரணமாக இருக்கலாம்.

லோஹ்ரி என்பது தில் (எள்) - ரோர்ஹி (வெல்லம்) ஆகியவை இணைந்து திலோர்ஹி என்று வழங்கி நாளடைவில் லோஹ்ரி-யாக மருவியது என்றும் கூறுகிறார்கள்

முந்நாளில் கிராமங்களில் இந்த லோரிக்கு சில நாட்கள் முன்பு சிறுமிகளும் கன்னிப் பெண்களும் வீடுவீடாகச் சென்று வறட்டிகளைச் சேகரித்து, லோரி அன்று மாலை கிராமப் பொது இடத்தில் அவற்றை லோரிக்காகக் கொளுத்த ஆயத்தம் செய்வர். நெருப்பைச் சுற்றிப் பாடும் பாடலில் இந்த நெருப்பு சூரியனின் கிரணங்களுக்கு வலுவூட்டி அதை சூடுபடுத்தி குளிர்காலத்திலிருந்து வேனில் காலத்தை உருவாக்குவதாக பொருள் கொண்டு இருக்கும்.

பின்னர் அக்பர் காலத்தில் இது துல்லா பட்டி (Dulla Bhatti) என்ற சிற்றரசனின் பெயரால் – திலகர் விநாயக சதுர்த்தியை கணேஷ் சதுர்த்தியாக மராட்டிய மக்களை அரசியல் ரீதியாக ஒன்று திரட்டியது போல் – பஞ்சாபியர்கள் அக்பருக்கு எதிராக ஒன்று திரள இதை உபயோகப் படுத்திக் கொண்டனர். இந்நாளைத் தங்கள் பெண்களுக்கு வரன் பார்க்கும் நிகழ்வாகவும் கொண்டுள்ளனர். தலை தீபாவளிபோல் பஞ்சாபியர்கள் தலை லோஹ்ரியை சிறப்பாகக் கொண்டாடுவர். நிச்சயதார்த்தத்திற்கும் திருமணத்திற்கும் இடைபட்டக் காலத்தில் லோஹ்ரி பண்டிகை வந்தால் அதையே ஒரு திருமண நிகழ்வு போல் விமர்சையாகக் கொண்டாடுவர்.

துல்லா பட்டி (வரலாற்றில் சில இடங்களில் இவனைக் கள்வன் என்றும் குறிப்பிடுவர்- [எப்படி கட்ட பொம்மன் / மருதநாயகம் போன்றவர்கள் ஒரு சிலரால் போராளிகள் என்று புகழப்படும் வேளையில் வேறு சிலரால் கள்வர்கள் என்று குறிப்பிடப்படுவது போல்; பாரதியார் கூட கட்டபொம்மனைப் பற்றி ஒரு கவிதையில் கூடக் குறிப்பிட்டதில்லை. காரணம் அவர் எட்டப்பன்–இன் பாளையமான எட்டயபுரத்தைச் சேர்ந்தவர் என்பது தான்]

கள்வனாக இருந்தாலும் அவன் பெரிய பண்ணையார்களிடம் பொருள் சேகரித்து ஏழைகளுக்குக் கொடுத்து உதவியதாகக் கூறுவர். செவிவழி கதைகளின் படி,  அவன் வெளி தேசத்திற்கு கடத்தப்பட இருந்த கன்னிப் பெண்களைக் காப்பாற்றி அவர்களின் திருமணத்தை நடத்தி வைத்ததாக லோரி பாடல்களில் உள்ளது.

ஒரு பாடலைப் பார்ப்போம்:

சுந்தர் முண்டிரி ஹோ                                   அழகானப் பெண்ணே
தேரா கௌன் விசாரா ஹோ                       உன்னை யாரு நினைச்சான்
துல்லா பட்டி வாலா ஹோ                          துல்லா பட்டிக் காரனா
துல்லே தி தீ வ்யயே ஹோ                          துல்லா-வின் மகள் கல்யாணம்
சேர் ஷக்கர் பாயே ஹோ                             (ஒரு) சேர் சர்க்கரைத் தந்தான்
குடி தா லால் பட்கா ஹோ                           பெண் சிவப்பு அங்கி அணிந்துள்ளாள்
குடி தா ஸாலு பாடா ஹோ                         அவள் மேலங்கி கிழிஞ்சிருக்கு
சலு கௌன் சமேடே                                     அதை யாரு தைத்தது
சாசே சூரி குட்டி                                            சித்தப்பா வளை செஞ்சாரு
ஜமீந்தாரா லுட்டி                                         ஜமீந்தார் திருடிட்டாரு
ஜமீந்தார் சுதாயே                                         ஜமீந்தார் உதைவாங்கினாரு
படே போலே ஆயே                                     அப்பாவி பசங்க வந்தாங்க
ஏக் போலா ரெஹ் கயா                                ஒரு அப்பாவி மாட்டிகிட்டான்
சிப்பாஹி ஃபர் கே லே கயா                        சிப்பாய் கைது செஞ்சான்
சிப்பாஹி நே மாரி ஈட்                                 சிப்பாய் செங்கல்லால் அடிச்சான்
சன்னு தே தே லோரி                                    எனக்கு லோரி (சன்மானம்) தா
தே தேரி ஜீவே ஜோடி                                 (உங்க) ஜோடி நல்லா வாழ்க
(ஹோ ஹோ)                                                 [சந்தோஷமாக  கத்துகிறார்கள்]
பான்வே ரோதே பான்வே பிட்                   இல்லாட்டி பிறகு தலைய முட்டிகங்க.

ஆனால், இப்பொழுதெல்லாம் சில இடங்களில் மட்டுமே இந்த மாதிரி பாடல்களைப் பாடுகிறார்கள். குருதாஸ் சிங் மான், தலேர் மெஹந்தி பாடிய் பாடல்களும் உள்ளன. குருதாஸ் மான் சற்று மெலடியாக கொஞ்சம் traditional  பாடல்கள் பாடுவார். தலேர் மெஹந்தி பஞ்சாபி ராக் பாடல்கள் தான். ஆனால், பெரும்பாலான இடங்களில், அவர்கள் தோளைக் குலுக்கி ஆடும் (பாங்க்டா) நடனம் ஆடும் விதத்தில் புது புது ஹிந்தி குத்து பாடல்கள் தான் இருக்கின்றன. சென்ற வருடம் அதிகமாக ஓடவிட்ட பாடல் “ஷீலா! ஷீலா கீ ஜவானி”. இந்த வருடம் “Why this கொலவெறி” ஆகத்தான் இருக்கும்.

நாங்கள் நோய்டா வந்து குடியேறிய பின், இங்கே எங்கள் குடியிருப்பில் (கிட்டத்தட்ட பாரத விலாஸ் தான்) அனைத்து மத இன பண்டிகைகள் சமூகக் கூடங்களில் அனைவரின் பங்களிப்புடன் நடைபெறுவது ஒரு சிறப்பு. இது போன்ற மற்றவர்களின் பண்டிகைகளைப் பற்றி அறிந்து கொள்ள நல்ல வாய்ப்பு. நான் சாதாரணமாக இது போன்ற வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை.

வியாழன், ஜனவரி 12, 2012

கூடாரவல்லி


இன்று (மார்கழி 27-வது நாள்) கூடாரவல்லி என்று சிறப்பித்துக் கூறப்படும் நாள். இன்றைக்கு, குறிப்பாக வைணவர்கள், சிறப்பாக நெய் வடியும் பாலில் செய்த ’சர்க்கரைப் பொங்கல்’ செய்து வழிபடுவர். வைணவர்கள் அல்லாத சிலரும் கூட இதைச் செய்து வருகிறார்கள்/வருகிறோம். காரணம், கோதைநாச்சியார் பாடிய இந்த 27-வது திருப்பாவைப் பாசுரம்தான்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

திருப்பாவையின் முதல் பத்து பாடல்களில் தன் தோழியரை எழுப்பிய ஆண்டாள், பதினோராவது பாடல் முதல் வாயில் காப்போன், நந்தகோபன், யசோதை, பலராமன் என்று அனைவரையும் எழுப்பி 18-ஆவது பாடலில் கண்ணனுடன் துயிலிருக்கும் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்பி 19 -22 பாடல்களில் கண்ணனைத் துயில் எழுப்புகிறாள்.

திருவெம்பாவையில் முதல் எட்டு பாடல்கள் தோழியை எழுப்புவதாக இருக்கும். அதற்கு அட்டமா சித்திகளை எழுப்புவதாக பெரியோர் பொருள் கூறுவர். ஆனால்,  ஆண்டாளோ பத்து பாடல்களில் தோழியைத் துயில் எழுப்பக் காரணம் என்ன? மஹாசித்திகளை எழுப்புபவர்கள் சித்தர்கள்;  சித்தர்கள் போக்கு சிவன் போக்கு, ஆண்டாளுக்கு சிவன் போக்கு வேண்டாம்; விஷ்ணு வழிதான் வேண்டும் என்பதாலா?

அப்படியில்லை, முதல் பாட்டு (பாவை) நோன்பு ஆரம்பிக்கும் முன் அதன் பலனை எடுத்துக் கூறுவது (நாராயணனே நமக்கே பறை தருவான்). இரண்டாம் பாட்டு, நோன்பு விதிகளைக் கூறுவது (செய்யும் கிரிசைகள் கேளீரோ : பரமனடி பாடி, நெய்யுண்ணோம்; பாலுண்ணோம், நாட்காலே நீராடி; மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்; செய்யாதன செய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்). அடுத்த எட்டு பாடல்கள் அஷ்டமஹா சித்திகளை எழுப்புவதுதான்.

23-ம் பாடல், கண்ணன் சிங்கம் போல எழுந்து வந்து சிங்காசனத்தில் அமர்ந்ததைக் கூறுகிறது. அப்படியானால் இனிமேல் கண்ணனைத் துயில் எழுப்பத் தேவையில்லை. சுப்ரபாதம் முடிந்துவிட்டது. கண்ணன் அலங்கரித்து வந்துவிட்டான். அவனை, நாம் வந்த நோக்கத்தை அவனே அறிந்து அருளும்படி (காரியம் ஆராய்ந்து அருள்- என)ப் பணிக்கிறாள், ஆண்டாள். [நாம் கேட்கத் தெரியாமல் உளறிவிடுவோம் என்பது ஆண்டாளுக்குத் தெரிந்திருக்கிறது.]

24-ம் பாடல், அர்ச்சனை (போற்றிகள்)

25-ம் பாடல், தூப-தீபம். நெருப்பை ஒளித்து வைத்தால் புகையும்; இந்த பாட்டில், கண்ணனை ஆயர் பாடியில்  ஒளித்து வளர்த்தால் அவன், அங்கே ஒளிந்து கொள்ளாமல், கம்சன் வயிற்றில் (பய) நெருப்பாக மாறி ஒளிந்து கொண்டு விடுகிறான். அதுதான் தூப-தீபம். [கண்ணனும் தீபச் சுடரும் ஒன்று – என்று விசிஷ்டாத்தைவத்திலும் இப்படி அத்வைதம் பார்க்கலாம்].

26-ம் பாடல் வாத்திய முழக்கம். தூப-தீபம் முடிந்து நைவேத்யம் படைப்பதை அனைவருக்கும் அறிவிக்க மணி முதலிய வாத்தியங்கள் முழங்க வேண்டும். [மாலே மணிவண்ணா – பாடலில் சங்கம், பறை, விளக்கு, கொடி எல்லாம் காட்டப்படுகின்றன].

27-ம் பாடல் தான் நைவேதயம்; என்ன படைக்கிறார்கள் – பால்சோறு மூட நெய் பெய்து. அதை கண்ணன் முழங்கை வழிவாரக் கூடியிருந்து (வயிறு) குளிர உண்ண வேண்டுகிறாள். 

இரண்டாம் பாடலில் சொன்ன விரதங்கள் முடிந்துவிட்டன. காரணம், கண்ணன் கொடுத்த சன்மானம் – சூடகம் (வளை), தோள்வளை, தோடு, செவிப்பூவே (காதைச் சுற்றிய வளையம்), பாடகம் (கொலுசு) – அதனால் அதை அணிந்து கொள்ளவேண்டியதுதான். ஆடை  உடுப்போம், கண்ணன் முழங்கை வழி வழிந்த நெய்ச்சோறை உண்டு விரதம் முடிப்பதைக் கூறுகிறது.

காஞ்சி பெரியவர், ’நைவேத்யம் பகவானுக்கு இல்லை; பக்தனுக்குத் தான்’ என்று கூறியுள்ளார். அதனால், பொதுவாக விரதம் இருந்தாலும், பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள். அதனால் தான் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு படுத்திக் கொள்கிறாள்.

28-ம் பாடல் பிழைப் பொருத்தருள வேண்டுதல் (சாதாரணமாக பூஜைகளில் “யதக்ஷர பதப்ரஷ்டம்” என்ற ஸ்லோகத்தைக் கூறுவர்; அதே போல் ‘சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே’ – கண்ணன் சீறுவது கூட ஆண்டாளுக்கு அருள்தான் – என்று பொறுத்தருள வேண்டுகிறாள்).

29-ம் பாடல் திரும்பவும் வணங்குதல் (புனர் பூஜை என்று வடமொழியில் கூறுவார்கள். பூஜையை ஒரே நாளில் முடித்துவிடாமல் தினமும் தொடர வேண்டும் என்பதற்காக அடுத்த நாள் காலையில் செய்வார்கள்). ஆண்டாள் ‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உற்றமேயாவோம் உமக்கே யாம் ஆட்செய்வோம்’ என்று அடுத்த தினம் மட்டுமல்லாமல் அடுத்தடுத்தப் பிறவிகளிலும் தொடர்ந்து வணங்குவதை உறுதிச் செய்கிறாள்.

30-வது பாடல் பலச்ருதி – அதாவது பூஜையினால் அடைந்த/அடையும் பலன்களைக் கூறுவது. என்ன பரிசு – ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் – என்று அவன் அருளைத் தவிர பெரிய பரிசு தனக்கு எதுவுமில்லை என்று மீண்டும் உறுதி செய்கிறாள் ஆண்டாள்.

27-வது நாள் இவ்வாறு நைவேத்யம் படைப்பதால் ”கூடாரை வெல்லும்” என்ற அந்த பாசுரத்தின் பெயராலேயே, இந்த நாள் கூடாரை வெல்லும் கோவிந்தனின் மனதுக்கு உகந்தவளான “கூடார வல்லி” கோதை நாச்சியார் பெயரால் வழங்கப் படுகிறது.

இந்த நோன்பு நிறைவைக் கொண்டாடும் விதமாக இந்நாளில், பாலில் செய்த சர்க்கரைப் பொங்கலை நெய் விட்டுப் படைப்பர்.

ஞாயிறு, ஜனவரி 08, 2012

திருவாதிரை - உமா மஹேச்வர ஸ்தோத்ரம்

திருவாதிரை

இன்று திருவாதிரை தரிசனம் ; இது நாம் அனைவரும் அறிந்த்தே. ஆனால், இதற்கு முதல் நாள் மாலை ஆருத்ரா அபிஷேகம் என்று சிவாலயங்களில் நடைபெறும்.

தொன்மம்,  தில்லையில் சேந்தனாருக்கு அருள சிவபெருமான் சிவனடியாராக வந்து களி தின்றதாகக் கூறினாலும், அனைத்து சிவாலயங்களிலும் இது கொண்டாடப் படுகிறது.

தில்லையில் வாழ்ந்த சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் தினமும் விறகு வெட்டி அதில் ஈட்டும் பொருளில் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்புதான் தன் உணவை உண்ணுவார். அவ்வாறு, தினமும் தடையில்லாமல் நடந்தால் அது கதையாக, தொன்மமாகக் கூறப்பட்டிருகாது.

ஒரு பெருமழைக் காலத்தில் அரிசி கிடைக்காமல், வீட்டில் சிதறியிருந்த குருணையைத் தொகுத்து அதைக் களியாக்கி, மண்ணில் வீழ்ந்திருந்த காய்களைக் கூட்டாக்கி, வெகுநேரம் கழித்து மாலை/இரவில் சிவனடியார் உருவில் வந்த சிவபெருமான் உண்டார். மறுநாள் காலை தில்லையம்பதி கோவில் வழிநடை முழுதும் களி சிதறிக்கிடக்க அதைத் தொடர்ந்து சேந்தனார் வீட்டையடைந்த மன்னன், கோவிலை அசுத்தப் படுத்தியமைக்காக அவரைத் தண்டிக்க, சிவபெருமான் அவன் முன் தோன்றி, சேந்தனாரின் களி உண்டுத் தான் களிநடம் புரிந்ததைக் கூறி அவரைத் தடுதாட்கொண்டார்.

இதனால், சிவாலயங்களில் காலையில் சிவ நடனம் நடப்பதும் உண்டு. எங்கள் அம்மா, திருவாரூரில் நடக்கும் சிவ நடனம் தில்லையைவிடச் சிறப்பாக இருக்கும் என்று சிலாகித்துக் கூறுவார். (என்ன இருந்தாலும் ஊர் பாசம் விடுமா?)

தில்லையில் ஆடுவது ஆனந்த நடனம்.
ஆரூரில் ஆடுவது அஜபா நடனம். பொதுவாக, சிவன் விஷ்ணுவின் இதயத்தில் இருப்பதாக கூறுவர். அதிலும், குறிப்பாக தியாகராஜ ஸ்வாமி (திருவாரூர் சிவபெருமானின் பெயர்) தான் திருமாலின் இதயத்தில் இருப்பதாகக் கூறுவர். அப்படி, விஷ்ணுவின் இதயத்தில் அதன் இயக்கத்திற்கு ஏற்ப தாளகதியில் ஆடுவது அஜபா நடனத்தின் சிறப்பு.

நட்சத்திரங்களில் இரண்டிற்கு மட்டும் தான் திரு என்ற அடைமொழி உண்டு. ஒன்று திருவோனம்; அது விஷ்ணுவுக்கு உகந்தது. மற்றொன்று திருவாதிரை; இது சிவனுக்கு உகந்தது.

இந்நன்னாளில் ஒரு சிவ ஸ்தோத்திரம்

உமா மஹேச்வர ஸ்தோத்ரம்
 
நம: சிவாப்யாம் நவயௌவ நாப்யாம்
பரஸ்பராஸ்லிஷ்ட்ட வபுர்த்தாப்யாம்
நாகேந்த்ர கன்யா வ்ருஷகை தனாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் சரஸோத்வவாப்யாம்
நமஸ்க்ருதாபீஷ்ட வரப்ரதாப்யாம்
நாராயணோனார்ச்சித பாதுகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விருஷவாஹனாப்யாம்
விரிஞ்சி விஷ்ணுவீந்த்ர சுபூஜிதாப்யாம்
விபூதி பாடிர விலேபனாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜகதீஸ்வராப்யாம்
ஜகத் பதீப்யாம் ஜய விக்ரஹாப்யாம்
ஜம்பாரி முக்யை அபிவந்திகாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பரமோஷதீப்யாம்
பஞ்சாக்ஷரி பஞ்சர ரஞ்சி தாப்யாம்
ப்ரபஞ்ச ச்ருஷ்டி ஸ்திதி சம்ஸ்ரதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் அதிசுந்தராப்யாம்
அத்யந்தமாசக்த ஹ்ரதம் புஜாப்யாம்
அசேஷ லோகைக ஹிதங்கராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் கலி நாசனாப்யாம்
கங்காள கல்யாண வபுர்தராப்யாம்
கைலாச சைலஸ்தித தேவதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் சுபாபஹாப்யாம்
அசேஷ லோகைக விசேஷிதாப்யாம்
அகுன்டிதாப்யாம் ஸ்ம்ருதீ சம்பூதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ரதவாகனாப்யாம்
ரவீந்து வைச்வானர லோசனாப்யாம்
ராகா சசாங்காப முகாம் புஜாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் ஜடிலந்தராப்யாம்
ஜராம்ருதிப்யாம் ச விவர்ஜிதாப்யாம்
ஜனார்தன அப்ஜோத்பவ பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் விமோக்ஷணாப்யாம்
விச்வச் சதா மல்லிகா தாம்ப்ருதுப்யாம்
சோபாவதீ சாந்தவதீஸ்வராப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

நம: சிவாப்யாம் பசுபாலகாப்யாம்
ஜகத்ரய ரக்ஷண பத்தாஹ்ருதிப்யாம்
சமஸ்த தேவாசுர பூஜிதாப்யாம்
நமோ நம: சங்கர பார்வதீப்யாம்

ஸ்தோத்ரம் திரிசந்த்யம் சிவ பார்வதீப்யாம்
பக்த்யா படேத் த்வா தசகம் நரோய
ச சர்வ சௌபாக்ய பலானி புங்க்தே
                        சதாயுரன்தே சிவலோக மேதி.

[சிவ: என்றால் சிவன்;
சிவா என்றால் உமை
இங்கு சிவாப்யாம் என்பது சிவனையும் உமையையும் சேர்த்து வணங்குவதை குறிக்கும்]