செவ்வாய், ஜூலை 31, 2012

முஹமத் ரஃபி


 சினிமாத் துறையில் ஜாம்பவானாக இருந்து அவர் இறந்துவிட்டால் அனைவராலும் சில வருடங்களில் மறக்கப்பட்டு விடுவார். சூப்பர் ஸ்டார்களே (எ.கா. எம்.கே.தியாகராஜ பாகவதர்) ஆனால், அவர் இறந்து 30 வருடங்களுக்குப் பின்னும் இன்னமும் மக்களால் நினைவில் வைத்துக் கொண்டாடப்படும் ஒரு கலைஞன் என்றால் அவர் முஹமத் ரஃபி தான்.

1980-ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி இறந்த அவரை, இருபது ஆண்டுகளுக்குப் பின் 2000-ஆம் ஆண்டில் ’இந்த நூற்றாண்டின் சிறந்த  பாடகர்’ என்று Stardust பத்திரிக்கை நடத்திய தேர்வில் பொதுமக்களின் 70%க்கும் அதிக வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கும் அளவுக்குப் புகழ் பெற்றவர். இந்த வருடம் கூட சென்னையில் சென்ற வாரம் (காமரஜர் அரங்கம்) அவர் நினைவுநாள் அவர் பாடல்களுடன் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் அவர் தமிழில் ஒரு பாடல் கூட பாடவில்லை.

சாதாரணமாக ஒவ்வொருவருக்கும் பிடித்த பாடகர் என்றால் யாராவது ஒருவரைக் காட்டுவர். ஆனால், இந்திய திரைத் துறையில் (அவர் எந்த மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும்) எந்த ஒரு பாடகரையும் அவருக்குப் பிடித்த பாடகர் என்றால் அது பெரும்பாலும் முஹமத் ரஃபி-யாகத் தான் இருக்கும்.

1924-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் எல்லை கிராமத்தில் பிறந்த அவர் 1944-ஆம் ஆண்டு பம்பாய் வந்து திரைத் துறையில் பிரவேசித்தார். கோரஸ் பாடுவதுடன் கே.எல்.ஸெஹகல், ஜி.எம்.துராணி ஆகியோருக்கு track பாட ஆரம்பித்து மெல்ல இரண்டு மூன்று பேர் பாடும் பாடல்கள் மற்றும் மற்ற கேரக்டர் ஆர்டிஸ்டுகளுக்குப் பாடுவது என்று இருந்த அவர் நௌஷாத்-ஐ சந்தித்தது பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நௌஷாதின் அபிமானப் பாடகர் தலாத் முஹமத், நௌஷாதின் ஸ்டுடியோவில் புகைப்பிடிக்க, அதைக் கண்டித்த நௌஷாதுக்கும் தலத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட, வேறு பாடகரைத் தேடிக் கொண்டிருந்த நௌஷாதின் கண்ணில் ரஃபி பட (இல்லை காதில் ரஃபி-யின் குரல் விழ) அது முதல் அவருக்கு ஆஸ்தான பாடகரானார் ரஃபி. இன்றும் ஹிந்துஸ்தானி க்ளாஸிகலுக்கு எடுத்துகாட்டு என்றால் இவர்கள் இணைந்து பணியாற்றிய ’பைஜு பாவ்ரா’ [இவரும் தான்சேன்-உம் விருந்தாவனத்தில் ’பாங்கே பிஹாரி’ சிலை வைத்து வழிபட்டு வந்த ஸ்வாமி ஹரிதாஸ்-இன் சீடர்கள். தன் தந்தை இறப்பிற்குக் காரணமான அக்பரின் அரசாங்கப் பாடகரான தான்சேனைப் பழிவாங்க குவாலியரின் அரசாங்கப் பாடகரான இவர் பாடல் போட்டிக்கு அழைத்து – பரிசு மற்றவரின் தலை – அதில் தான்சேன்-ஐத் தோற்கடிக்க அவர் பைஜு-வின் காலில் விழுந்தவுடன் பழியுணர்சி நீங்கி தான்சேன்-ஐ மன்னித்ததாக வரலாறு. அபுல் ஃபசல்-இன் (அக்பர் நாமா என்ற அக்பரின் சரிதத்தை எழுதியவர்) குறிப்புகளிலும் இது இடம் பெற்றுள்ளது]. பாரம்பரிய இசையின் பல நுணுக்கங்களைக் கொண்ட இப்படம் இன்றும் ரஃபி ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டு வருகிறது.  இதில் இடம் பெற்ற ‘மன் தர்பட் ஹரி தர்ஷன் கோ ஆஜ்’ என்ற பாடல் அனைத்து பஜனைகளிலும் இடம் பெறும் ஒரு முக்கிய பாடல் ஆகும்.

இதன் பின்னர் 1970-கள் வரை ரஃபி-யின் ராஜ்ஜியம் தான். 70-ன் இறுதியில் ‘ஆராதனா’ படத்தில் S.D.பர்மன் ராஜேஷ் கன்னாவிற்கு இரண்டு பாடல்களில் (குன்குனாரஹேன் ஹைன் பவ்(ன்)ரே, பாகோன் மேம் பஹார் ஹை) ரஃபியை பயன்படுத்திய நிலையில் உடல் நலக் குறைவால் அவர் மகன் R.D.பர்மன் மற்ற பாடல்கள் அனைத்திலும் கிஷோர்குமாரைப் பயன்படுத்தினார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஃபி-யின் வாய்ப்புகள் குறைந்தன. 1970-1974 மிகப் பெரிய வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். இடையில் லதா மங்கேஷகருடன் வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அவர் இவருடன் பாட மறுத்தார். [இதற்கு மூல காரணம் Royalty பிரச்சனை. லதா பாடகருக்கும் பங்கு வேண்டும் என்று கேட்க ரஃபி-யோ பாடுவதோடு பாடகரின் கடமை முடிந்துவிட்டது என்று அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து ஒரு பாடலின் போது  இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட லதா அவரோடு பாடமாட்டேன் என்று அறிவித்தார்]

ஆனால், 1974-ஆம் ஆண்டு உஷா கன்னா மூலம் அவருக்கு மறுவாய்ப்பு கிட்டி அவரது இரண்டாவது இன்னிங்க்ஸ் 1980-ல் அவர் இறக்கும் வரைத் தொடர்ந்தது. 1977-ஆம் ஆண்டு R.D.-யின் இசையிலேயே அவருக்கு மீண்டும் சிறந்த பாடகருக்கான தேசிய விருது  கிடைத்தது.

1980-ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி அன்று அவரின் ஃபேவரெட் லக்ஷ்மிகாந்த்-ப்யாரேலால் (இவர்கள் இசையில் தான் அதிக பாடல்கள் பாடியுள்ளார்) இசையில் ’ஆஸ்-பாஸ்’ படத்தின் பாடல்களைப் பாடிமுடித்து அன்று இரவு 10.30க்கு மாரடைப்பால் தன் 56-ஆவது வயதில் காலமானார்.

ஹிந்தி பட உலகில் ராஜேந்த்ர குமார், ஷம்மி கபூர், ரிஷிகபூர் ஆகியோருக்கு  ரஃபி-யின் குரல் போல வேறு குரல்கள் சரியாக இருந்ததில்லை. ஷம்மி கபூர் ஒரு பேட்டியில் ரஃபி இல்லை என்றால் தானே இல்லை என்று கூட குறிப்பிட்டுள்ளார். தேவ் ஆனந்த், சஷிகபூர் ஆகியோருக்கும் ஆரம்பகாலங்களில் இவர் தான் பாடியுள்ளார்.

தெலுங்கில் N.T.ராமாராவ் (கண்டசாலா இல்லாத பொழுது) இவரை பல பாடல்கள் பாட வைத்துள்ளார். தமிழில் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது சற்று வருத்தமான விஷயம் தான்.

அவர் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்தவை…

1.    சௌத்-வின் கா சாந்த் ஹோ (சௌத்-வின் கா சாந்த்)
2.    பஹாரோன் பூல் பர்ஸாவோ (படம்:சூரஜ்)
3.    மேரே மெஹபூப் துஜே (மேரே மெஹபூப்)
4.    பர்தேஸியோன் ஸே அக்கியான் மிலா நா (பர்தேஸி)
5.    க்யா ஹுவா தேரா வாதா (ஹம் கிஸிஸே கம் நஹி)
6.    கிலோனா ஜான்கர் முஜ்கோ (கிலோனா)
7.    சாஹூன்கா மே துஜே (தோஸ்தி)
8.    சூ லேனே தோ நாஸுக் ஹோட்டோன் கோ (காஜல்)
9.    மேனே பூச்சா சாந்த் ஸே (அப்துல்லா)
10. தர்த்-ஏ-தில் (கர்ஸ்)

புதன், ஜூலை 25, 2012

புலிகளின் கா(த)வலர்

முப்பது வருடங்களில்  19 புலிகள் 14 சிறுத்தைகள் ஆகியவற்றைக் கொன்ற ஒருவனை நாம் என்ன செய்யலாம்?...

வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் படி தண்டனை கொடுத்து ஆயுள் முழுதும் சிறையில் தள்ளலாமா?...

அது தான் இல்லை. ஏனென்றால், அந்த மனிதனுக்கு வேறு முகம் இருக்கிறது…இந்தக் கொலைகளுக்கான காரணமும் இருக்கின்றன. அவைதான் ஆயிரக்கணக்கன மனித உயிர்கள். ஆம்… இவர் கொன்றது அனைத்தும் Man-eaters.

இந்தியாவின் பாரம்பரிய இடங்களின் (29) பட்டியலில் மனிதனால் உருவாக்கப்படாத இயற்கை இடங்கள் ஐந்து உண்டு. அவற்றில் முக்கியமானது ஜிம் கா(ர்)பெட் தேசிய வனவிலங்குப் பூங்கா. இது வட இந்தியாவின் உத்ராகாண்ட் மாநிலத்தின் நைனிதால் பகுதிக்கு அருகில் உள்ளது. இந்தப் பகுதியை குமாவ்(ன்) மலைப்பகுதி என்று கூறுவர்.முதலில் ஹெலி தேசிய பூங்கா என்று மால்கம் ஹேலி பிரபுவின் பெயரால் அழைக்கப்பட்டு வந்த இதன் பெயர் 1957-ல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் (1908) இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு புலி 459 பேரைக்  கொன்றது. அப்பொழுது, அப்புலியை அடக்க/கொல்ல வரவழைக்கப் பட்டவரின் பெயர் ‘ஜிம் கா(ர்)பெட்’. மேலே குறிப்பிடப்பட்ட அந்த வேட்டைக்காரர் ஜிம் தான். ஜிம் தன் உயிரையும் பொருட்படுத்தாது அதை வேட்டையாடினார். தொடர்ந்து அவர் ருத்ரப்ரயாகில் பத்ரிநாத-கேதார்நாத் பகுதிகளில் பயணிக்கும் சுமார் 400 பேரைக் கொன்ற சிறுத்தையையும் கொன்றார். தொடர்ந்து பல இடங்களில் பல புலி/சிறுத்தைகளை (Man-eaters) வேட்டையாடியுள்ளார்.

புலிகளையும் சிறுத்தைகளையும் (Man-eaters–ஆக இருந்தாலும்) கொன்றது மட்டுமே இவரது சாதனைகளா? அதற்காக இந்தியாவில் முதல் தேசிய வனவிலங்கு பாதுகாப்பிற்காக அதிலும் புலிகளைப் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் இடத்திற்கு பெயர் மாற்றம் செய்யும் அளவிற்கு என்ன தேவை?

இன்றைக்கு இந்தியாவில் புலிகள் பாதுகாப்பிற்காக அரசு பல முயற்சிகளை எடுத்துவருகிறது. 20 நூற்றாண்டின் ஆரம்பங்களில் நிலைமை இவ்வாறு இல்லை. உலக அளிவிலேயும் சுற்றுச் சூழல் வனவிலங்கு பராமரிப்பு ஆகியவை யாராலும் எடுத்துரைக்கப் படாத நிலைதான். இச்சமயத்தில் தான், ஜிம் கா(ர்)பெட் புலிகளை வேட்டையாடுவதை மட்டுமே தன் தொழிலாகக் கொள்ளாமல் அதற்கானக் காரணங்களை ஆராயமுற்பட்டார். புலிகளை வேட்டையாடும் முன் அவற்றின் பழக்கங்களை கண்டிறிந்து கொல்லாமல் அவற்றை பிடிக்கவும் பராமரிக்கவும் முயன்றும் பார்த்துள்ளார். தவிர்க்க இயலாத நிலைகளிலேயே அவற்றைக் கொன்றுள்ளார். அவை இறந்த பின்னும் அவற்றின் உடல்களை அறிவியல் முறையில் ஆராய்ந்தார். அவை மனிதக் கொல்லிகளாக மாறும் காரணத்தையும் கண்டறிந்தார்.

சாதாரண புலிக்கும் Man-eaters-கும் வித்தியாசம் இருக்கிறது. சாதாரண புலிகள் (அல்லது சிறுத்தைகள்) மனித நடமாட்டம் இருக்கும் பகுதிகளைத் தவிர்த்து வேறு இடங்களில் வாழும். மனிதர்களைப் பார்த்தால் பெரும்பாலும் காட்டிற்குள் ஓடிவிடும். ஆனால், மனிதர்கள் தொடர்ந்து காடுகளுக்கு ஊடுருவும் பொழுது அல்லது இந்தப் புலிகளைத் தாக்க முற்படும் பொழுது இவையும் திருப்பித் தாக்கத் தொடங்கிவிடுகின்றன. காயமடைந்த புலிகளும் விலங்குகளை வேட்டையாட முடியாத அல்லது விலங்குகள் கிடைக்காத புலிகளும் மனிதர்களைத் தாக்கும். (மற்ற விலங்குகளை விட மனிதர்களைத் தாக்குவது எளிது). ஒருமுறை மனித ரத்தத்தை ருசித்த இவை தொடர்ந்து அவற்றைத் தேடி நாட்டிற்குள் புகுந்து Man-eaters ஆகிவிடுகின்றன.

இவற்றை அவர் அனுபவப் பூர்வமாகவே உணர்ந்தார். அவரால் வேட்டையாடப்பட்ட ருத்ரப்ரயாகை சிறுத்தையின் உடலில் வேறு இரண்டு குண்டுகள் இருந்தன. அதனால் ஏற்பட்ட காயம் புரையோடி போகும் அளவிற்கு இருந்தது. தன் அனுபவத்தைக் கொண்டு, வனவிலங்களைத் தனியே பராமரிக்கும் அவசியத்தை அரசுக்கு எடுத்துரைத்தார். மேலும் இப்பகுதி மக்களுடன் தங்கி அவர்களுக்கு வன பராமரிப்பின் அவசியம் மற்றும் புலிகள் மட்டுமல்ல மற்ற வனவிலங்குகளின் பழக்கங்கள் ஆகியவற்றைப் பற்றி நேரடியாக விளக்கியுள்ளார். இப்பகுதி மக்கள் அவரை ஒரு யோகியாகவே பார்த்தனர்.

வனவிலங்குகளுடனுன் தனக்கான அனுபவங்களை அவர் புத்தகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார்.
  • Man-eaters of Kumaon.
  • The Man-eating Leopard of Rudraprayag
  • My India.
  • Jungle Lore.
  • The Temple Tiger and more man-eaters of Kumaon
  • Tree Tops.
  • My Kumaon: Uncollected Writings.
தவிரவும் அவரைப் பற்றி Jim Corbett's India - Selections by R.E. Hawkins என்ற புத்தகமும் உள்ளது. ’Man-eaters of Kumaon ’ ஹாலிவுட் படமும் வெளியாகியுள்ளது. (ஆனால், இதில் அவர் எழுதிய சம்பவமோ அல்லது அவரைப் பற்றியோ எதுவும் இல்லை. இப்படத்தைப் பார்த்த ஜிம் இதில் புலி மட்டுமே நடித்துள்ளது என்று வேடிக்கையாக்க் குறிப்பிட்டிருந்தார்).  
அவரின், நீண்ட பல கால முயற்சிக்குப் பின் முதலில் இந்த தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. 1955-ல் அவரது மறைவுக்குப் பின், இந்திய அரசு இந்த பூங்காவிற்கு அவரின் பெயரை வைத்தது.

இன்று (ஜூலை 25) அவரின் பிறந்த நாள். இதையொட்டி, இவ்வருடம் அமர்சித்ரகதை குழுமம் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த அவரைப் பற்றி புதிதாக 45 பக்கங்களைக் கொண்ட காமிக்ஸ்-ஐ வெளியிட்டுள்ளது. (விலை 50 ரூபாய்).

இதனால் வனவிலங்குகள் பராமரிப்பு பற்றி நம் குழந்தைகளிடம் ஒரு விழிப்புணர்வு கிட்ட வாய்ப்பு இருக்கிறது.

அமர்சித்ரகதை குழுமத்திற்கு நன்றிகள்…

திங்கள், ஜூலை 23, 2012

தில்லியின் நீர் வளம்

என்றென்றும் வற்றாத ஜீவநதியான யமுனை ஓடும் தில்லியின் தற்போதைய நிலை என்று எடுத்துக் கொண்டால் நீருக்கு ஹரியானாவை நோக்கி கையேந்தியிருக்கும் நிலை. யமுனை மட்டும் தான் தில்லியின் நீராதாரமா?

’வீடு திரும்பல்’ திரு. மோஹன் குமாரின் தில்லியைப் பற்றிய இந்த பதிவில், பதிவர் வவ்வால் அவர்களின் ஒரு கருத்திற்கு நான் இட்ட கருத்துக்கள் இதோ…
                        
வவ்வால் :  டில்லில எல்லா இடத்துக்கும் பேரு கஞ்ச், சவுக்,விகார்னு இருக்கு.எதுக்கு அப்படி பேரு வைக்கிறாங்க தெரியலை

நான்:        சவுக் (chowk) என்றால் சந்தி அல்லது கூடல் - இரண்டு தெருக்கள் கூடுமிடம். உதாரணத்திற்கு சாந்தினி சௌக் என்றால் முகலாயர் காலத்தில் பௌர்ணமி நிலவில் கூடுமிடம்.

விகார் என்றால் வசிக்கும் இடம். தமிழில் சரித்திர நாவல்களில் படித்த (புத்த) விகாரம் தான். [விகாரமாக இருப்பதாஎன்று விவகாரமாகக் கேட்கக் கூடாது]

கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை.

கஞ்ச்-ஐயும் குஞ்ச்-ஐயும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம். வசந்த் குஞ்ச் என்று ஒரு இடம் உள்ளது. அது வசந்த் கஞ்ச் அல்ல. குஞ்ச் என்றால் மரங்கள் நிறைந்த தோப்பு அல்லது பண்ணை. குஞ்ச் என்பது பண்ணை வீடுகள் (farm house) நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

வவ்வால் : நன்றி!
//கஞ்ச் என்றால் சந்தை. பஹாட் கஞ்ச் என்றால் குன்றுச் சந்தை.//
இப்போ புரியுது , தார்யா கஞ்ச் என்ற இடத்தில் ஏகப்பட்ட புத்தக கடைகள், சாலையோரம் எல்லாம் புத்தகக்கடைகள் தான்,புது புத்தகமே மலிவாக கிடைக்குது,எல்லாம் பைரேட்டட் புக் தானாம்.
புத்தகசந்தைனு சொல்வது பொருத்தம் தான்.
நான்:        /தார்யா கஞ்ச் //
வவ்வால், தர்யா என்றால் நீரோட்டத்தைக் குறிக்கும்; அதாவது நூலோட்டம் போலத் தொடர்ச்சியாக இடைவிடாது நீர் ஓடுவது. [தமிழில் கூட தாரைத் தாரையாக் கண்ணீர் வழிந்தது என்று சொல்வோமே. தாராஎன்று எண்ணெய் பிராண்ட் கூட இருக்கிறது. அது இடைவிடாமல் தொடர்ச்சியாக எண்ணெய் கிடைப்பதைக் குறிக்கும்]

இங்கே இது (யமுனை) ஆற்றை ஒட்டியச் சந்தை என்று பொருள் கொள்ள வேண்டும். [நீங்கள் குறிப்பிட்டது போல் இங்கு புத்தகங்கள் தண்ணீர் பட்ட பாடுதான்]
தொடர்ந்து தில்லியின் பல்வேறு இடங்களைப் பற்றி எண்ணிப் பார்த்த பொழுது பெரும்பாலான இடங்களின் பெயர்கள் - சந்தை என்பவற்றைத் தவிர்த்து - தோப்பு, கிணறு, தோட்டம் என்று நீராதாரங்களையும் அதைச் சார்ந்த குறிப்புகளையும் கொண்டிருந்தது.

இப்பொழுது அவற்றில் சிலவற்றின் பெயர்களைப் பார்ப்போம்…

தௌலா குவான் : தில்லியில் மிக முக்கிய பகுதிகளில் ஒன்று தௌலா குவான் என்று அழைக்கப்படும் தூலா குவான். தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் இது அமைந்திருக்கிறது. ’குவான்’ என்றால் கிணறு; ‘தூலா’ என்றால் தூய்மையான அதாவது வெண்மையான கினறு. வரலாற்றிலும் மிக முக்கியமான இடம். தில்லி-குர்கா(வ்)ன் வழிப்பாதையில் அமைந்திருக்கும் இது ஷா ஆலம் காலத்திலிருந்து உபயோகத்தில் இருந்தது. சிந்தியா மஹாராஜா-வால் ஆங்கில கிருஸ்த்துவ பாதிரியார்களுக்கு கத்தீட்ரல் கட்ட முதலில் இதன் அருகில் உள்ள நிலம் தான் கொடுக்கப் பட்டது. ஆனால், அதற்கு முன்னரே கிழக்கிந்திய நிறுவனம் இந்த இடத்தை ராணுவத்திற்காக ஒதுக்கீடு செய்து விட்டதால் கதீட்ரல் பின்னர் ’டாக் கானா’ என்றழைக்கப்படும் தில்லியின் மையப்பகுதிக்கு அருகில் கட்டப்பட்டது.

லால் குவான்: இது ஷாஜகானாபாத் என்றழைக்கப்படும் பழைய தில்லியில் ஷாஜகானின் காலத்திற்கு முன்னரே துக்ளக் அல்லது லோதி வம்ச அரசர்களால் கட்டப்பட்டது (ஃபெரோஸ் ஷா காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்பது பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கருத்து). இது இன்றும் சாந்தினி சௌக் பகுதியில் செயற்கை நீருற்றுடன் இருக்கிறது. பகதூர் ஷா ஸஃபர்-இன் மனைவி ஜீனத் மஹல் இதன் அருகில் தான் வசித்து வந்தார். அது இன்று பறவைகளின் மருத்துவமனையாக இயங்கி வருகிறது.

ஜங்லி குவான்: இது திஸ் ஹஸாரி கோர்ட் வளாகத்தின் அருகில் இருந்தது. ஒரு காலத்தில் இது வனப்பகுதியாக இருந்திருக்கிறது. பின்னர், இந்த பகுதியில் இருந்த பேகம்-கா-பாக் (ராணியின் தோட்டம்) என்ற பெயரில் ஜஹனாரா, ரோஷனாரா, குட்ஸியா பேகம் போன்றவர்களால் பராமரிக்கப்பட்டத் தோட்டத்திற்கு இந்தக் கிணறு தான் நீராதாரமாக இருந்துள்ளது. இது இன்று உபயோகத்தில் இல்லை.

இவற்றைத் தவிர பாவ்லி (படிக்கிணறு) என்று பல இருந்தன. உக்ரசேனரின் பாவ்லி, காரி பாவ்லி (காரி  என்ரால் உப்புகரித்த; இதன் நீர் உவர்ப்பாக இருக்கும் என்பதால்  இப்பெயர்) இந்த பகுதியின் நீராதாரங்களும் சரி, நிஜாமுதின் பாவ்லி, மெஹ்ரோலி பாவ்லி ஆகியவையும் உபயோகத்தில் இல்லை. நிஜாமுதின் பாவ்லி ஒரு காலத்தில் ஹஸரத் நிஜாமுதின் தர்காவிற்கு இளவரசர் ஜௌனா (முகமது-பின்-துக்ளக் தான்), ஹஸன் கங்கூ (பாமினி வம்சத்தைத் தோற்றுவித்தவர்) போன்ற அரச வம்சத்தினர் இந்த தர்காவிற்கு வரும் பொழுது அவர்களின் பரிவாரங்களுக்கு நீர் வழங்கும் ஆதாரமாக இருந்தது இந்த நிஜாமுதின் பாவ்லிதான்.

இந்திய தேசிய கலை மற்றும் கலாசார பாரம்பரிய அறக்கட்டளை, இது போன்ற  25-20 கிணறு/நீராதாரங்களைப் பட்டியலிட்டுள்ளது. அவற்றில் சில பெயர் மட்டுமே இருக்கிறது. அவை, லௌண்டோன்-கா-குவான் (விடலைப் பயல்களின் குளம்), ரண்டியோன்-கா-குவான் (பறத்தையர் குளம்), சிடிமாரோன்-கா-குவான் (பறவையை அடிப்பவர் குளம்), பேரிவாலா குவான் (இலந்தைமரக் குளம்),  நீம்-கா-குவான் (வேப்பங்குளம்), பீபல்-கா-குவான் (அரசமரக்குளம்), கிகர்-கா-குவான் (கருவேலமரக்குளம்)ஆகியவை சாவடி பஜார் பகுதியில் இருந்தன. தௌல காவ்ன் பகுதிக்கு அருகில் மச்சிமாரன்–கா-குவான் (மீனவர் குளம்) என்றும் ஒன்று இருந்ததைக் குறிப்பிடுகிறது.

இன்று ராம்லீலா மைதானம் என்று பெரிய அளவில் பிரபலமாக இருக்கும் இடத்தில் ஷாஜி-கா-தலாப் (தலாப் என்றால் குளம்) இப்பொழுது புதுப்பிக்கப் பட்டுள்ளது. ஆனால் இதன் அருகில் இருந்த மற்றொரு கிணறு இன்று இல்லை. அது தேவ்ராணி,ஜேட்டானி-கா-குவான் [தேவ்ராணி என்றால் சின்ன மருமகள்; ஜேட்டானி என்றால் பெரிய மருமகள். மாமியார் கொடுமை தாளாத இரண்டு மருமகள்களும் நீரெடுக்க இங்கு வந்து தங்களின் வேதனையை தினமும் பகிர்ந்து கொண்டு, முடிவில் வேதனைத் தாங்காமல் இதில் விழுந்து தற்கொலைச் செய்து கொண்டதாகக் கதை.]

மெஹ்ரோலி பகுதியில் மெஹ்ரோலி பாவ்லி-யைத் தவிர ஹவ்ஸ் (Hauz) என்ற குளங்களும் நிறைந்திருந்தன. ஹவ்ஸ்-காஸ் இன்றும் தில்லியின் பிரபல பகுதி. ஆனால், இங்கு குளத்தை இதுவரை நான் பார்த்ததில்லை. ஹவ்ஸ்-எ-ஷம்மி என்று குதும்பினாருக்கு அருகில் இருக்கிறது.  இது அல்டாமிஷால் கட்டப்பட்டது. இதில் படகுப் போக்குவரத்தும் நடைபெற்று வந்தது.  உயர் நீதிமன்றம் 2000-ஆம் ஆண்டு  இதன் பராமரிப்பை தில்லி மாநகராட்சியிடமிருந்து ASI-யிடம் மாற்றிய பின் தற்போது இது புதுப்பிக்கப் பட்டுள்ளது.

இத்தனை நீராதாரங்கள் இருந்தும் இன்று தில்லியின் நிலை தண்ணீருக்கு ஹரியானா, உ.பி ஆகியவற்றை எதிர்பார்த்திருப்பது தான். முக்கிய காரணம் மக்கள் தொகை என்றாலும் நீராதாரங்களைச் சரிவர பராமரிகாமல் இருப்பதும் ஒரு காரணம் தான். ஹவ்ஸ்-எ-ஷம்மி-யைப் போன்று ஒவ்வொன்றிலும் உயர் நீதிமன்றம் தலையிட்டப் பின் தான் சீர் செய்ய வேண்டுமென்றால். நாட்டில் தெருவுக்குத் தெரு உயர்நீதி மன்றம் தேவைப்படும்.

வெள்ளி, ஜூலை 20, 2012

நூற்றுக்கு நூறு


பதிவு எழுத ஆரம்பித்து ஒரு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது…

இதுவரையில் அப்படி என்ன தான் எழுதியிருக்கிறேன்….

கிட்டத்தட்ட 2001-இன் ஆரம்பங்களிலேயே பதிவுலகில் நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைத் தொடர்ந்து படித்துவந்தாலும் அவ்வப்போது gmail கணக்கின் மூலம் கருத்துகள் எழுதியிருந்தாலும் நானே ஒரு வலைப்பக்கக் கணக்குத் துவங்கி பதிவுகள் எழுத வேண்டும் என்ற எண்ணம் முதலில் தோன்றவே இல்லை.

என் தந்தையார் சிறு வயதில் அவர் எனக்கு நேரடியாகவும் சில சமயங்களில் அவரது நண்பர்கள் மற்றும் பிறருடன் பேசும் போது அறிந்து கொண்ட தகவல்கள் பிற்காலத்தில் எனக்கு  பல விஷயங்களில் உபயோகமாக இருந்தன. பெரும்பாலும் அவை ஆன்மீக, வானவியல் (சிறுவயதில் கோடைஇரவுகளில் நாங்கள் மொட்டை மாடியில் தூங்குவது வழக்கம் என்பதால் நட்சத்திரக் கூட்டங்களைப் பற்றி அவ்வப்பொழுது கூறியதுண்டு. அதில் எனக்கு ஆர்வம் என்பதால் அவற்றில் பெரும்பாலானவை இன்றும் ஞாபகம் இருக்கிறது). அவர் இறந்த பொழுது அத்தகவல்களைத் தொகுத்திருந்தால் எத்தனை உபயோகமாக இருந்திருக்கும் என்று பல முறை நினைத்ததுண்டு.

அப்பொழுது ஒருநாள் திடீரென நாமும் நமக்குத் தெரிந்த தகவல்களைத் தொகுத்து எங்காவது  பதிய வைக்க வேண்டும் என்றுத் தோன்றியது. இடைப்பட்ட வலைபதிவுகளைத் தொடர்ந்து படித்து வந்திருந்ததால் ஒருநாள் இவற்றைப் பதிவாக் எழுதாலாமே என்ற எண்ணம் தோன்றி  எழுதவும் துவங்கினேன்.

எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் மனதில் எழுந்த கேள்வி. அப்படி என்ன தான் எழுதப் போகிறோம். நமக்கும் எழுதும் அளவுக்கு நமக்கு அப்படி என்ன தெரியும்? எதை எழுதுவது? என்ற கேள்விகள் எழுந்தன. உடனே, அதற்கு பதிலாக சிறுவயதில் ஔவைப் பாட்டி கூறியது தான் நினைவுக்கு வந்தது.  அது ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்பது தான். எனக்குத் தெரிந்த அந்த கையளவு மண்ணை பதிய வைப்பதன் மூலம் அந்த மண்ணில் இருக்கும் குறைகளை மற்றவர்கள் சுட்டிக் காட்ட முடியும் என்பதால் அதையே என் வலைப்பக்கத்தின் தலைப்பாகவும் தேர்ந்தெடுத்தேன்.

அனுபவம், அரசியல், வரலாறு, கல்வி, குழந்தை வளர்ப்பு, நாட்காட்டிகள் அதைச் சார்ந்த வானவியல், ஆன்மீகம் என்று பலதரப்பட்ட   பதிவுகள் எழுதியுள்ளேன்.

தில்லி, உத்திர பிரதேச பகுதிகளில் கடந்த 20 வருடங்களாக வசித்துவருவதன் இதைப் பற்றி எழுதினால் இப்பகுதியைப் பற்றி அவ்வளவாக அறியாதவர்களுக்கும் இது பயன் தரலாம் என்பதால் என்பதிவுகளில் இதைப் பற்றியே அதிகமாக எழுதி வருகிறேன்.

ஒரு வார்த்தை ஒரு லட்சம்’ ‘இன்று சுடுவது நிச்சயம்’ என்ற இரண்டு கதைகள்  'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’ என்ற ஆன்மீகக் கதை கூட எழுதியுள்ளேன்.

மொத்தமாகப் பார்த்தால் இது என் நூறாவது பதிவு.

நூறு பதிவு எழுதி ‘நூற்றுக்கு நூறு’ என்று தலைப்பிட்டுவிட்டால் அது நான் என்பதிவிற்குத் தரும் மதிப்பெண்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

நூறு பதிவுகள் எழுதிய நிலையில் இதுவரை என் வலைப்பக்கத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் மேல். அதாவது சராசரியாக ஒரு பதிவை பார்த்தவர்களின் எண்ணிக்கை நூறு. அதனால் தான் பதிவின் தலைப்பு ’நூற்றுக்கு நூறு!!’

என்பதிவுகளைத் தொடர்ந்து படிக்கும் அனைவருக்கும் நன்றிகள்….

புதன், ஜூலை 18, 2012

ராஜேஷ் கன்னா

இந்தி திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் ராஜேஷ் கன்னா சற்று முன் காலமானார்.

1966-ல் தேவ் ஆனந்தின் அண்ணன் சேதன் ஆனந்தின் படமான ’ஆக்ரி கத்’ (கடைசி கடிதம்) படத்தின் மூலம் அறிமுகமான ராஜேஷ் கன்னா தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் 1969-ல் வெளிவந்த ‘ஆராதனா’ பட்த்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார்.  அதன்பின் 1969-க்கும் 1972-க்கும் இடைப்பட்ட காலத்தில், 15 தொடர் வெற்றிப் படங்களைத் தந்ததன் மூலம் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார். இந்த சாதனை இன்றுவரை இந்திய திரை உலகில் யாராலும் முறியடிக்கப் படவில்லை.

1973-ல் அப்போதைய கனவுக்கன்னி டிம்பிள் கபாடியாவை மணந்தது அன்றைய தினங்களின் பரபரப்புச் செய்தி. ஏனென்றால், அப்பொழுது டிம்பிள்-க்கு 16 வயது தான். ராஜேஷ் கன்னா-வோ அவரைவிட 16 வயது மூத்தவர். பின்னர், விவாகரத்து ஆகிவிட்டாலும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உண்டு (ஒருவர் நடிகை ட்விங்கிள் கபாடியா; அக்ஷய் குமாரின் மனைவி).

70-களின் முன் பகுதி வரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் முன்னணியில் இருந்தார். 75-களுக்குப் பிறகு அமிதாப் பச்சனின் வருகையும், காதல் கதைகளை அடிப்படையாக்க் கொண்ட கதைக் கலத்தில் இருந்து action படங்கள் வர ஆரம்பித்தப் பின்னரும், அந்த சூப்பர் ஸ்டார் அந்தஸ்து சற்று சரிய ஆரம்பித்தது.

1980-களின் முற்பகுதிகளிலும் தெற்கிலிருந்து இறக்குமதியான படங்களில் நடித்தார் என்றாலும் ஜிதேந்த்ரா அளவிற்கு அவை வெற்றி பெறவில்லை. இதில் ’முந்தானை முடிச்சு’ படத்தின் இந்தி பதிப்பில் (மாஸ்டர்ஜீ –  ஸ்ரீதேவி-உடன் நடித்ததும் அடங்கும்.

பின்னர் ’ஸ்வர்க்’, ‘அவதார்’ (தமிழில் சிவாஜி-அம்பிகாவுடன் நடித்து ‘வாழ்க்கை’ இதன் ரீமேக் தான்) போன்ற படங்களில் அவர் வயதுக்கான கேரக்டரில் நாயகனாக நடித்து(ம்) பார்த்தார்.  

90-களில் திரையிலிருந்து விலகி காங்கிரஸ் சார்பின் புது தில்லி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சமீபத்தில் ‘பால்கி’ அவரை மீண்டும் திரையில் தோன்ற வைக்க முயற்சி செய்து வந்தார்.
சில தின்ங்களுக்கு முன் அவர் ஒரு 'Fan' விளம்பரத்தில் தோன்றிய போது அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியிருந்தார்.

எது எப்படியிருந்தாலும் ராஜேஷ் கன்னா – கிஷோர் குமார் ஜோடி என்பது இந்தித் திரையுலகின் ஏன் இந்திய திரையுலகின் என்று கூட கூறலாம் மிகச் சிறந்த பாடல்களைக் கொடுத்த ஜோடி என்று கூறலாம்.

ராஜேஷ் கன்னா-வின் படங்களில் அனைவரின் நினைவை விட்டு நீக்க இயலாத் ஒரு படம் இருக்கும் என்றால் அது ஹ்ரிஷிகேஷ் முகர்ஜி-யின் ‘ஆனந்த்’ படம் தான். அதில் அவர் வெளிப்படுத்தியிருக்கும் நேர்த்தியான நடிப்பு அனைவரின் மனத்திலும் நீங்காதிருக்கும். குரலில் கூட நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்பதற்கு இப்படத்தின் இறுதிக் காட்சியே சாட்சி.

துனியா எக் ரங்க்மன்ஷ் ஔர் ஹம் சப் கட்புத்லி ஹே. கப் கிஸேடோர் கட் ஜாயே கோயி நஹி ஜான்தா பாபுமோஷாய்’ என்ற அவரது ஆனந்த் படத்தின் இறுதி வசனம் (அவரது குரல் மட்டுமே ஒலிக்கும்) இந்தி படங்களின் மிகப் பிரபலமான வசனங்களில் ஒன்று. அது தான் இப்பொழுது ஞாபகம் வருகிறது. காரணம் இதன் பொருள் “உலகம் ஒரு மேடை; நாம் அனைவரும் அதில் பொம்மைகள்; எப்பொழுது யாருடைய நூல் அறுபடும் என்பது யாருக்கும் தெரியாது”. 

இந்தித் திரையுலகில் அவருடைய இடம் இன்னமும் நிரப்பப்படாமல் இருக்கிறது என்பது தான் உண்மை.

திங்கள், ஜூலை 16, 2012

மூன்று புத்தகங்களின் அரசியல்

சமீபத்தில் மூன்று புத்தகங்கள் வெளிவர இருக்கின்றன.

ஒன்று முன்னாள் குடியரசுத் தலைவர் திரு. அப்துல் கலாம் எழுதிய Turning Points.

இரண்டாவது முன்னாள் மத்திய பிரதேச முதல்வரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு.அர்ஜுன் சிங் எழுதிய A Grain of Sand in Hourglass of Time.

மூன்றாவது மூத்த பத்திரிக்கையாளர் திரு. குல்தீப் நய்யர் எழுதிய ‘Beyond the Lines’.

பொதுவாக இது போன்ற சுயசரிதை அல்லது நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும் புத்தகங்கள் அரசியல் ஆர்வலர்கள்,  ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் சலசலப்பை உறுவாக்கும். (சில நேரங்களில் இந்த சலசலப்புகளே அப்புத்தகங்களின் விற்பனை வெற்றிக்கு உதவும் என்பதால் வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பும் விஷயங்கள் நுழைக்கப்படுவது உண்டு). இப்பொழுது, இந்த மூன்று புத்தகங்களும் கிளப்பியுள்ளச் சர்ச்சைகளைப் பார்ப்போம்....

இதில் முதலில் கலாம் அவர்களின் புத்தகத்தை எடுத்துக் கொண்டால், அவர் தன் புத்தகத்தில் 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு முன்னணி ஆட்சி அமைக்க இருந்த சமயத்தில் சோனியாகாந்தி பிரதமராக ஆவதை அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த கலாம் அதை விரும்பாமல் மறுத்ததாகவும் அதைத் தொடர்ந்து மன்மோஹன் சிங் பிரதமராக ஐமுமு-வால் தேர்ந்தெடுக்கப் பட்டதாகவும் உலவிய வதந்தியை மறுத்துள்ளார். மேலும், 2002-இல் குஜராத் கலவரங்கள் நடந்த பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்ததன் பின்னர் நிகழ்ந்த அரசியல் நிகழ்வுகளையும்  குறிப்பிட்டு இருப்பது. இதில், கலாமை காங்கிரஸ் மீண்டும் குடியரசுத் தலைவராக நியமிக்க மறுத்துவிட்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது சோனியாவை (பிரதமராக) நியமிக்க மறுத்த கிசுகிசுதான். இந்த முறை கலாமை பாஜக முதலில் வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. பின்னர், பிரணாப் முகர்ஜியின் பெயர் வெளியிடப்படக் கூடும் என்றவுடன் மம்தா பானர்ஜி அவர் பெயரை முன் மொழிந்ததைத் தொடர்ந்தும் முகநூல், எலெக்ட்ரானிக் ஊடகங்களில் அவர் பெயருக்குக் கிடைத்த ஆதரவைத் தொடர்ந்து தான் கலாமின் பெயரை பாஜக அவர் பெயரை வெளியிட்டது. இதற்கு, குஜராத் சம்பவமும் காரணமாக இருக்கலாம். ஆனால், இதே புத்தகத்தில் குஜராத் சுற்றுப் பயணத்தில் மோடியும் அவரது அரசும் அளித்த ஒத்துழைப்பைச் சிலாகித்துள்ளதைப் பற்றி ஊடகங்கள் எதுவும் கூறவில்லை என்பதையும் நாம் பார்க்கவேண்டும்.

அடுத்து அர்ஜுன் சிங்-இன் புத்தகத்தில் இரண்டு விஷயங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. 1984-ஆம் ஆண்டு போபால் விஷ வாயு விபத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் வாரன் ஆண்ட்ர்சன்ஐ இந்தியாவிலுருந்துத் தப்பிக்க உதவியர் அப்போதைய காங்கிரஸ் முதல்வரான அர்ஜுன் சிங் மற்றும் அப்போதைய பிரதமர் இராஜீவ் காந்தி தான் என்பது அனைவராலும் எழுப்பப்படும் குற்றச்சாட்டு. இதை இந்நாள் வரை மறுத்துவந்த அர்ஜுன் சிங், தற்போது தன் புத்தகத்தில் இதற்குக் காரணம் தானோ அல்லது பிரதமர் இராஜீவோ அல்ல என்றும் அப்போதைய மத்திய உள் துறை அமைச்சராக இருந்த காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்-தான் என்று கூறியுள்ளது தான் முதல் சர்ச்சை. இரண்டாவதாக தான் எப்பொழுதுமே நேரு குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்துள்ளதாகவும் ஆனால், ஐமுமு இரண்டாம் முறை அரசு அமைத்த பொழுது தான் வேண்டுமென்றே ஓரங்கட்டப் பட்டுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்திருப்பதே.

இதில் நரசிம்மராவ் அவர்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு காலந்தவறியதாகவே படுகிறது. மேலும் இராஜீவை குற்றமற்றவர் என இவர் சான்றளித்து இருப்பது ஒருவேளை பிரணாப் முகர்ஜியால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இவர் பெற முயற்சி செய்கிறார் என்பது போலத்தான் தோன்றுகிறது. அதனால் தான் நேரு குடும்பத்திற்கானத் தன் விசுவாசத்தை மீண்டும் புணர்ப்பிக்கச் செய்யும்  முயற்சிகள்.

http://releasedateindia.in/book/wp-content/uploads/2012/06/Beyond-the-Lines-An-Autobiography-by-Kuldip-Nayar.jpgமூன்றாவதாக, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது அப்போதைய பிரதமர் அதை தடுக்காமல் கண்டும் காணாமலும் இருந்தார் என்பது அனைவராலும் சொல்லப் படும் குற்றசாட்டு. இதற்கு, மேலும் வலு சேர்க்கும் வண்ணம் குல்தீப் நய்யாரின் புத்தகத்தில் நரசிம்மராவ் அந்த சம்பவம் நடந்த நேரம் கரசேவகர்கள் மசூதிமேல் ஏற்யவுடன் அவர் பூஜையில் அமர்ந்துவிட்டதாகவும் மசூதி இடிக்கப்பட்டச் செய்தி அவருக்குச் சொல்லப்பட்ட பின்னரே பூஜையிலிருந்து வெளிவந்ததாகவும் மது லிமாயே தனக்குச் சொன்னதாகக் கூறியுள்ளார். நய்யாரைப் பொறுத்தவரை அவர் பொதுவாக காங்கிரஸுக்கு எதிராகத்தான் எழுதுவார் (காரணம், எமெர்ஜென்ஸியில் பாதிக்கப்பட்ட முக்கிய பத்திரிக்கையாளர்களில் அவரும் ஒருவர் என்பதால் கூட இருக்கலாம்) ஆனால், அதே நேரம் பாஜக ஆதரவாளரும் இல்லை [ஹேமந்த் காக்ரே இறப்பில் வலதுசாரி அமைப்புகள் காரணம் என்று முதலில் கூறியவர் அவர்தான்].

இந்தக் குற்றச்சாட்டைப் பொறுத்தவரை நரசிம்ம ராவின் மகன் திரு. ரங்காராவ், குற்றச்சாட்டை மறுக்கவோ தன்னிலை விளக்கம் அளிக்கவோ தன் தந்தை உயிருடன் இல்லாத நிலையில் நய்யார் இதைச் சொல்வது சரியில்லை என்று கூறியுள்ளார். லிமாயே-வோ 1995-லேயே காலமாகிவிட்டார்.

மேற்கூறிய மூன்று புத்தகங்களில் இரண்டில் நரசிம்ம ராவ் அவர்களைக் குற்றஞ்சாட்டப்பட்டுக் கூறப்படும் சம்பவங்கள் அவர் ஆட்சியில் இருந்த பொழுதோ அல்லது அதன் பின்னர் அவர் உயிருடன் இருந்த பொழுதோ வெளிவந்திருக்க வேண்டும். தற்போது அதை மீண்டும் கிளறுவது சரியில்லை தான்.

 இது அதீதம் மின்னிதழில் வெளிவந்தது.