சனி, ஜூலை 01, 2017

மங்காத்தா

மங்காத்தாவிட்டு விடுதலையாகி
தடைகளை உடைத்து
கட்டுக்கள் நீக்கி
பறந்திட நினைக்கும் ஒருகணம்
மறுகணம்…
சாவுவீட்டு வைராக்கியம் போல்
உலகவாழ்வில்
கட்டுண்டு வீழ்ந்து
காண்பதெலாம் விரும்பி
சிக்கலில் சேர்ந்து
உழன்றிங்கு நிற்கும் மனம்.

பெண்ணே தாய்
அவளேத் தெய்வம்
பெண்ணுரிமை பெண்ணியம் – என
பெரும் பெரும் வார்த்தைகள்
சொல்லி நிற்கும் ஒரு புறம்.
மறுபுறம்….
பெண்ணடிமைச் செயல் புரிந்து
மாதர்தம்மை இழித்துரைக்கும்
மடமைகள் பலசெய்து
ஆணாதிக்க அதிகார
அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்

ஒருபொழுது
பிறர் நலம் விரும்பி
நன்மை பல நாடிச்
செயும் செயல்கள் நூறு
மறுபொழுது…
சுயநலம் தலைத்தூக்கி
சுற்றத்தின் நலம் மறந்து
அழுக்காறுற்று அவ்வியம் பேசி
பிறர் நலம் கெடுக்கச்
செய்திடும் பல்லாயிரம்.

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசி
உள்ளே வெளியே என்று
மனம் காத்தில் ஆடி
நிலைமாறி அலைபாயும் - நான்
நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.

சனி, ஜூன் 24, 2017

துளிர்துளிர்

பழையன கழிதலும்
புதியன புகுதலும்
வழுவல என்பதால்
பழையதை ழித்தோம்
பழமையைக் களையவில்லை
புதியனக் கொண்டுவந்தோம்
புதுமையைப் புகுத்தவில்லை

விலை போன மனிதர்களால்
கலை குலைந்து தலை தாழ்ந்து
சுயம் இழந்து பாழ்பட்டு நின்றோம்
உயர் தொழில் விடுத்து
செயற்திறம் மறந்து
உயிர் மட்டும் கொண்டு வாழ்கின்றோம்

வீண்ஜம்ப வார்த்தை வீசும் வித்தகனில்
கூன்போட்டு கால்பிடிக்கும் அடிமைகளில்
வெள்ளித்திரை வலம்வந்த நாயகனில்
கொள்கையற்று குழுமாறும் வஞ்சகனில்
தலைவர்களைத் தேடுகின்றோம் - அவர்
தகுதிகளைப் பார்க்கவில்லை - வெற்று
கூட்டத்தைப் பார்த்திருந்தோம்
கொள்கைகளைப் பார்க்கவில்லை

வெள்ளி பல அள்ளித்தரும்
வெளிநாட்டு வேலை,
எட்டடுக்கு மாடிதன்னில்
குடியமர்த்த வழிசெய்யும் குலமகள்,
சுற்றிபலர் அடிபணியும் ஆடம்பரம்
பெற்றிங்குத் தந்திடவே வழிசெய்யும்
பட்டமதைப் படித்திடவே
பாடசாலை தேடுகின்றோம்
சகமனிதன் தனைக் காத்து
சமுதாயம் உயர்த்துமொரு
வாழ்க்கைக்கல்வி கற்பதற்கு 
ஒரு நாளும் விழையவில்லை


சக மனித உணர்வுகளை
சமுதாய விழுப்பங்களை
இழைந்தளிக்கும் கல்விதனை
இளைய சமுதாயம் பெற
இன்றேனும் முயன்றிடுவோம்

அவர் மனதில்
அதிகார போதை நீக்கி
எதிர்கால அச்சம் தவிர்த்து
கதிர்நெல் போல் பலனளிக்கும்
மதியூகத் தலமைதனைத் 
துளிர்விடச் செய்திடுவோம்.

வெள்ளி, மே 26, 2017

நெடுவாசல் திற!

நெடுவாசல் திற!
[வல்லமை இதழின் 113-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

ஆற்றில் போட்டாலும்
அளந்து போடச் சொன்னார்கள்
ஆற்று மணல் தானெடுத்து
அழிவு நோக்கிப் போகின்றோம்

அணைக்கட்டி நீரதனைக்
காக்கும்வழிக் கண்டார்கள்
மனை போட்டு விற்றுவிட
சூழ்ச்சி பல செய்திட்டோம்

சுட்டெறிக்கும் சூரியன்
வெட்டவெளிக் காடு
பட்டுப்போன நிலமென்று-கை
கட்டி தினம் நின்றிருந்தோம்

பட்டினியைப் போக்குமொரு
பயிர் வளர்க்கும் பருவந்தனில்
கொட்டுகிற மழைக்குக்
காத்துக்கண் பூத்திருந்தோம்

கொட்டும் மழைக்காலத்திலோ-நீர்க்
காக்கும்வழி விட்டுவிட்டு
வறட்டு வாதம் பேசி நம்முள்
பிளவுபட்டு நின்றிருந்தோம்

மாரிமழைப் பொழியுமுன்னே
ஏரி குளம் வாவியெனும்
நீராதாரம் தூர்வாரி
சீரமைத்துக் காத்திடுவோம்

வீட்டுமனையாகிவிட்ட நிலம்
மீட்டு, தேன் குடிக்கும் ஊழல் நரி
கொட்டமதை அடக்கிடுவோம்;
நன்நீர் கிட்ட வழிசெய்வோம்.

பயிர் வளர்த்து உயிர் காக்கும்
அய்யாக்களைக் கண்ணாகக் 
காக்க வழிசெய்யும் தலைமைக்கு
நெடுவாசல் திறந்துவைப்போம்!!!

திங்கள், மே 22, 2017

குழந்தைச் செல்வம்குழந்தைச் செல்வம்

ஏழையெங்கள் இல்லத்திலே
வாழைக்குறுத்து முளைத்ததுவே
பாழுமெங்கள் வாழ்வினிலே - செல்வ
பேழையாய் வந்துச் சேர்ந்ததுவே

தொட்டிலில் இட்டிட வசதியில்லை
கட்டிலில் போட்டிட வாய்ப்புமில்லை
கட்டிய துணிக்கு மாற்றுயில்லை - இருந்தும்
மட்டிலா மகிழ்ச்சிக்குங் குறைவுமில்லை

எட்டு மாடி வீடு கட்டி-அதில்
பட்டு விரிப்போடு குளிரூட்டி
தொட்டு நிலா காட்டி - தினம்
ஊட்டிடச் சோறு கிட்டுவதில்லை

இருந்தும்…

வெட்டவெளியே வீடாகும்
கொட்டும் சூரியன் விளக்கேற்றும் - அன்னை
வேர்வைத்துளி பன்னீர்த் தெளிக்கும் - அவள்
சேலை தினமும் தூளி கட்டும்

இலவம் பஞ்சில் செய்த மெத்தை
இல்லை என்கிற போதிலுமே
உலவும் தென்றல் வாசல் வந்து
குளிரும் சாமரம் வீசி நிற்கும்


பட்டு நிலா பாய்விரிக்கும்
வெட்டவெளி உண்டு-அது
நித்தமிங்குக் காட்டும் பல
வித்தைகளும் உண்டு

கட்டிஇன்பங்கொட்டி -
இதழ்தொட்டு முத்தமிட்டு
விளையாடபெரும் சுற்றமுண்டு; அவர்
காட்டும் அன்பும் நன்று

மாடி வீடும் மெத்தையணையும்
காட்டிடாத நிம்மதியை
வாடி நிற்கும் காலந்தன்னில் - அன்னை
மடியின் அன்பு சுகந்தந்திடுமே!!!செவ்வாய், மே 16, 2017

பாதம் கூறும் பாடம்

[வல்லமை இதழின் 111-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
பாதம் கூறும் பாடம்

பெண்ணவளின் பாதத்திற்கு
புது நகைகள் தான் கொடுத்தார்
வெள்ளியில் மிஞ்சியென்றார்
தங்கத்தில் சதங்கை தந்தார்

பிஞ்சு விரல் சொடுக்கெடுத்து
ஆலிவ் எண்ணெய் பூசி வந்தார்
நகக்கீறுத் தனைத்தீட்டி
நளினம் நீயென்றுரைத்தார்.

இத்தனையும் பழக்கி அவளை
இத்தரணி மீதினிலே
போகப்பொருள் ஆக்கிவைத்து
சுயந்தொலைத்து  நிற்கவைத்தார்

பென்னவளின் பாதமலர்
எண்ணிலாத கதைகள் சொல்லும்
விண்ணவரும் பெற்றிடாத
திண்ணமதை தானியம்பும்

சீதையவள் பாதங்களோ
ஸ்ரீராமன் பின் சென்றும்
பெருந்துன்பம்  அடைந்ததொரு
பெருங்காதை நினைவுறுத்தும்

கடவுளையே பின்தொடர்ந்தும்
காரிகையாய் பிறந்தோர்க்கு
கட்டமது நீங்காதென்று
திட்டமாகச்  சொல்லிவிடும்

பாஞ்சாலி பாதங்களோ
பார்த்திபனின் கரம்பிடித்தும்
பலதாரப் பெண்ணென்ற
பரிகாசம் தனையேற்கும்

பலதாரந்தனை மணந்த
பலராமன் உடன்பிறப்பை
பரந்தாமன் எனப்போற்றுவதை
பாரோர்க்குப் பறைந்து நிற்கும்

கண்ணகியின் காற்சிலம்போ
கற்புநிலைக் கற்பித்து
கல்மனதுக்  கணவனையும்
காத்து நிற்க போதிக்கும்

தாழ்வுற்று, வாழ்வதனைத் தானிழந்து
பாழ்பட்டு  நின்றதற்கு
ஆடவனை விடுத்து அவள்
ஊழ்வினையைச் சாடி நிற்கும்..

அகலிகையின் நிலைகூறும்
அருந்ததியைப் பார்க்கச் சொல்லும
நளாயினியின்  கதைச் சொல்லி
வேசியிடம் தூதனுப்பும்

வேண்டா இந்நிலை விடுத்து
தீண்டாமைத் தனைத் துறந்து
முண்டாசு கவிஞனவன்
கண்ட பெண்ணாய் நீ வருவாய்

தடுமாற்றந்தனை விடுத்து
சுயமாற்றந்தனைச் செய்து
புதுப்பாதைத்தனைக் கண்டு
முழுவுருவும் காட்டி நிற்பாய்!!!

திங்கள், மே 01, 2017

உழைப்பாளர் தினம்

மேதினி உயர்ந்திட உழைப்பவரை
மேதினம் தனிலே வாழ்த்திடுவோம்

உடலே விதையாக விதைத்திட்டார்
உழைப்பே உரமாகத் தூவிவிட்டார்
வியர்வை நீராகத் தெளித்திட்டார்
முயற்சியே ஏராக  உழுதிட்டார்

எண்ணமே வினையாகப் புரிந்து நின்றார்-மனத்
திண்ணமே துணையாக இருந்திருந்தார்
சன்னமும் சோர்வின்றிக் காத்து நின்றார்
இன்னமுன் பல வேலைப் பார்த்து வந்தார்

கையிலே பெருவேலைத் திறனிருந்தும் - பிறர்
பையிலே  பெருந்தனந்தான் சேருதிங்கே
பொய்மையே மிக நிறைந்த புவனியிலே
உழவுக்கும்  தொழிலுக்கும் நிந்தனையோ?

தனியொருவன் பசி போக்க ஜகமழிக்கச்
சொன்னவனின் தேசத்திலே - உழவு
பணிபுரியும் தொழிலாளி பட்டினியால்
மடிவதுவும் நியாயம் தானோ?

வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு- அவர்
செய்தொழிலை தினம் நாமும் போற்றிடுவோம்
தொழிலாளி தன் தேவைக் காத்திடுவோம்- அவர்
உய்திடவே உபாயங்கள் செய்திடுவோம்.

நெற்றி வேர்வை நிலம் சேர்ந்து காயும் முன்னே
சுற்றந்தன் தேவை தீர்க்கும் கூலி பெறும்
சட்டம் தனைத் திறம்படவே செயலாக்கும்
திட்டமொன்று சீராகச் செய்திடுவோம்

எட்டு போகம் விளைந்த நிலம் தரிசாக
ஓட்டு துணி கட்டி தினம் அவர் வாட
மெத்தனமாய் கண்மூடி தவிர்த்திடாத
வித்தக தலைமையை நாம் தேர்ந்தெடுப்போம்

உழவையேத் தொழிலாகக் கொண்டவர் தம்
உரிமையை மீட்டெடுக்கச் செய்திடுவோம்.