புதன், பிப்ரவரி 27, 2013

கழிவு அகற்றல் - தடை



தில்லி மாநிலத்தில், கழிவு நீக்கப் பணிகளில் மனிதர்கள் நேரடியாக ஈடுபடுத்தப் படுவது நேற்று முதல் தடை செய்யப்படுத்தப் பட்டுள்ளது.

 தில்லி துப்புரவுப் பணியாளர் ஆணையத்தின் சார்பில் செய்யப்பட்ட ஒரு விழாவில் தில்லி முதல்வர் ஷீலா தீக்ஷித், ‘இந்நேரம் முதல் எந்த மனிதரும் கழிவுகளை அகற்ற நேரடியாக ஈடுபடுத்தப்படமாட்டார்’ என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

2012 ஆம் ஆண்டிலிருந்தே ‘கைமுறை துப்புரவுத் தொழிலாளி வேலை தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வுக்கான மசோதா நாடாளுமன்றத்தின் விவாதத்திற்காகக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சென்ற மாதம் உச்ச நீதி மன்றம் இதில் மத்திய அரசின் இயலாமையைக் கண்டித்தது.

இந்நிலையில் தில்லி அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டு, இந்தியாவிலே இத்தடையைச் செய்த முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது.

மாநகராட்சிகள் (தில்லியில் மூன்று மாநகராட்சிகள் உள்ளன) இதற்கான உரிய நடவடிக்கைகள் எடுக்க ஆணையிடப்பட்டுள்ளன.

தில்லி அரசின் இந்த நடவடிக்கை நாடு முழுவது விரைவில் அமல் படுத்தப்பட வேண்டும்!

அமிர்கான் நடத்திய சத்யமேவ ஜயதே தொடரிலும் மனிதர்கள் நேரடியாக கழிவு அகற்றுவது பற்றிய ஒரு episode வந்தது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்

[யூட்யூபில் இதன் தமிழ் வடிவம் கிடைக்கவில்லை]




 

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

அரிது அரிது

அரியது எது? என்று ஔவையிடம் வினவிய போது அவள் கூறியது - 
 
அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறந்த காலையின்
ஞானமும் கல்வியும் நயத்தல் அறிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்ததாயினும்
வானவர் நாடி வழி பிறந்திடுமே!

என்பதாகும். இவ்வாறு அரிதாகக் கிடைத்த மானிட வாழ்வை சிலர் சரிவரப் பயன்படுதடாமல்  அதில் குற்றங்கள் பல புரிந்து தண்டனைக்கும் உள்ளாகிறார்கள்.

மனிதர்கள் செய்யும் பல்வேறு குற்றங்களுக்குத் தண்டனையாக பல்வேறு அரசாங்கங்கள் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றன.

பொதுவாக இவ்வாறு தண்டனை வழங்குவதற்கானக் காரணமாகக் கூறப்படுவதற்கு காரணமாக அக்குற்றங்களைச் செய்பவர்கள் அதற்கு வருந்தித் திருந்துவதற்கு வாய்ப்பளித்து ஒரு காரணமாகக் கூறப்படுவதுடன் மற்றவர்கள் அத்தகையக் குற்றங்களைச் செய்ய ஒரு அச்சத்தை அல்லது தயக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்பது தான்.

மற்ற தண்டனைகளைப் பொறுத்தவரை மேற்கூறிய காரணங்கள் பொருந்தினாலும் மரணதண்டனையைப் பொறுத்தவரை திருந்துவதற்கு வாய்ப்பு என்பதைக் காரணமாகச் சொல்லும் வாய்ப்பு இருப்பதில்லை.

இன்றைக்கு உலகம் முழுவதும் மரண தண்டனைத் தேவையா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. உலகில் பல்வேறு நாடுகள் மரண தண்டனையைக் கைவிட்ட நிலையில் இந்திய அரசாங்கம் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்குவது என்ற நிலையைக் கொண்டுள்ளது.

இதனை, உச்ச நீதி மன்றமும் 1983-ஆம் ஆண்டு அளித்த ஒரு தீர்ப்பில் மரண தண்டனை அரிதினும் அரிதான வழக்குகளிலேயே வழங்கப் பட வேண்டும் என்று உறுதி படுத்தியது.

ஆனால் இதன் இன்றைய நிலைமை என்ன?

இந்தியாவில் மரண தண்டனை கொலை, கொள்ளை, குழந்தைகள் மற்றும் மனநோயாளிகளைத் தற்கொலைச் செய்து கொள்ளத் தூண்டுவது, நாட்டின் மீது போர் தொடுப்பது (War on the nation) ஆகியவற்றிர்காக அரிதினும் அரிதான வழக்குகளில் அளிக்கப்படலாம். போதை மருந்து சட்டத்தின் கீழ் போதை மருந்துகள் கடத்தலில் இரண்டாவது முறையாகவும் குற்றம் புரியும் பட்சத்தில் அதை கட்டாயமாக மரண தண்டனையாக விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது என்றாலும் பம்பாய் நீதி மன்றம் அதை மாற்றி வழக்கை விசாரிக்கும் நீதிபதியின் தீர்ப்பிற்கே விட்டு விடத் தீர்ப்பளித்தது. இவற்றைத் தவிர தீவிரவாதச் செயல்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது. சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கௌரவக் கொலைகள், என்கௌண்டர் போன்ற போலிஸ் அத்து மீரல்களுக்கும் மரணதண்டனை வழங்க சட்டத் திருத்தங்களைப் பரிந்துரைத்துள்ளது.

இந்திய மனித உரிமைகள் மையம், சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்  தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி இந்தியாவின் இன்றைய தினம் 1455 பேர் மரண தண்டனையை விதிக்கப்பட்டு தூக்கை எதிர் நோக்கியுள்ளதாகக் கூறுகிறது. மேலும், 2001 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் வெவ்வேறு நீதி மன்றங்களால் 4321 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டுள்ளது.

ஒருபுறம் அரிதினும் அரிதான வழக்குகளில் மரண தண்டனை வழங்கப்படுவதாகக் கூறுகிறது. மறுபுறம் ஆண்டுக்கு 132 பேருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

ஒருபுறம் அரசியல் கொலைகளுக்கு மட்டும் மரண தண்டனை என்று விதித்தாலும் தொடர்ந்து மரண தண்டனை நிறைவேற்றிய பிறகும் இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி, பஞ்சாபின் முதல்வர் பியாந்த் சிங் என்று பெரிய தலைவர்கள் துவங்கி ஆலடி அருணா மாநில அளவில் உள்ள அரசியல் பிரமுகர்கள் மட்டுமன்றி தா.கிருட்டினன், ராமஜெயம் போன்ற மாவட்ட அளவு பிரமுகர்கள் கூட அரசியல் காரணங்களுக்காகத் தொடர்ந்து படுகொலை செய்யப் பட்டுள்ளனர் / செய்யப்பட்டு வருகின்றனர்.

 சரி, மரண தண்டனைகள் மூலமாக குற்றங்கள் தடுக்கப்படுகின்றன என்பதற்காவது ஏதாவது ஆதாரமும் இருக்கிறதா என்று பார்த்தாலும் அதற்கு விடை இருப்பதாகத் தெரியவில்லை.

கடந்த 15 ஆண்டுகளில்  இந்தியாவில் (கசாப் மற்றும் அப்சல் குரு தவிர) இரண்டு பேர் மட்டுமே (1995-இல் ஆட்டோ சங்கரும், 2004-இல் தனஞ்ஜய் சட்டர்ஜியும்) தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

ஆனால், இந்தியாவில் 2001 ஆம் ஆண்டில் 36,202 பேர் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில்  2011 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 34,305 ஆக குறைந்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை 19 கோடி  உயர்ந்த நிலையிலும் கொலைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகத்தின் புள்ளி விபரங்களில் கூறப்பட்டு உள்ளது.

ஆக, இந்த மரண தண்டனை மற்றவரின் குற்றங்களை தடுப்பதிலும் பெரும் பங்களித்துள்ளதாகத் தெரியவில்லை.

நீதி மன்றங்களும் இந்த மரண தண்டனையை அரிதினும் அரிதாக அளிப்பதாகவும் தோன்றவில்லை!


வெள்ளி, பிப்ரவரி 15, 2013

விண்கல் - (அழையா) விருந்தாளி


இன்று நள்ளிரவு இந்திய நேரம் 12 மணியளவில் பூமிக்கு வெகு அருகில், பூமியிலிருந்து ஏவப்பட்ட துணைக்கோள்கள் இருக்கும் தூரத்திற்கும் குறைவான நெருக்கத்தில், சுமார்  சுமார் 46 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு விண்கல் வந்து செல்ல உள்ளது.

பூமியிலிருந்து விண்ணில் அனுப்பப்பட்ட (தொலைத் தொடர்பு, வானியல் ஆராய்ச்சி போன்றவற்றிர்கான) செயற்கைக் கோள்கள் சுமார் 32000 கி.மீ.க்கும் அதிகத் தொலைவிலேயே நிலைநிறுத்தப் பட்டிருக்கின்றன. நிலவின் தூரமோ சுமார் 4½ லட்சம் கி.மீ. தொலைவில் இருக்கிறது. ஆனால் இந்த விண்கல்லோ சுமார் 27500 கி.மீ. அருகில் வந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளாகவே பூமியைத் தாக்கும் சாத்தியக் கூறுள்ள விண்கற்களை விண்ணாய்வாளர்கள் நோக்கி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், சென்ற ஆண்டு பிப்ரவரி 23-ஆம் தேதி ஸ்பானிய விண்நோக்கர்களால் இந்தக் கல் பூமியை நோக்கி வருவது கண்டறியப்பட்டது. அப்போது அது பூமிக்கு அருகில் வந்துச் சுற்றி பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருந்த்து. இதை நாசா-விற்குத் தெரியப்படுத்த நொடிக்குச் சுமார் 13 கி.மீ வேகத்தில் பூமியை இந்தக் கல் சுற்றுவதைக் கண்டறிந்த அவர்கள், இது பூமியைத் தாக்கும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தனர்.

இதன் வேகம் மற்றும் பாதை மிகவும் கூர்ந்து கணிக்கப்பட்டு 2013-இல் இது பூமிக்கு மிகவும் அருகில் வருவதும் அதே நேரம் இது பூமியில் மோதும் சாத்தியக் கூறும் இல்லை என்பவை நாசாவால் அறிவிக்கப்பட்டன.

இந்தக் கல்லுக்கு 2014 DA14 என்று பெயரிடப்பட்டது. 46 மீட்டர் சுற்றளவுடன் நொடிக்கு 13 கி.மீ. வேகத்தில் வரும் இக்கல் பூமியில் மோதினால் அதன் விளைவு சுமார் டன் டைனமைட் வெடி குண்டு போடப்பட்ட பாதிப்பைத் தரும்.

தற்போதைய இந்தக் கல் பூமிக்கு அருகில் வரும் பொழுது அது இந்தோனேசியா/சுமத்ரா-வை ஒட்டி இருக்கும். கிழக்கு ஆசியா, ஆஸ்த்ரேலியப் பகுதியில் இருப்பவர்கள் இது வரும் பக்கத்தில் இருந்தாலும் சாதாரணமாக இது கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பூமியை நெருங்கும் சில நொடிகளில் இது ஒரு ஒளிக் கற்றை போல தெரிந்து மறைய வாய்ப்பிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அடுத்து இந்தக் கல் இதுபோல் பூமிக்கு அருகில் வரும் சாத்தியக் கூறு 2046 ஆம் ஆண்டு இருப்பதாகவும் அப்பொழுது சுமார் 1½ லட்சம் கி.மீ அருகில் (தற்போதையதை விட ஐந்து மடங்கு அதிக தூரம்) வரும் சாத்தியம் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இதற்கு முன்பு இது போல் பல விண்கற்கள் பூமிக்கு அருகில் வந்துச் சென்றுள்ளன. சில பூமியில் மோதியும் உள்ளன. ஆனால் ஒரு விண்கல் பூமிக்கு அருகில் வர இருப்பது முன் கூட்டியே உணர்ந்து பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை.

கடந்த சில ஆண்டுகளாக விண்கற்களின் ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தாலும் இதுவரையில் பெரிய கற்கள், குறிப்பாக பூமியை முற்றிலும் அழிக்கும் சாத்தியக் கூறு உள்ள கற்களும் வால் நட்சத்திரங்களும் மட்டுமே பெருமளவு ஆராயப்பட்டு வந்துள்ளன. பூமி மற்றும் மற்ற கோள்கள் உருவாகும் முன்னரே இந்த கற்கள் இருந்ததாகக் கருதப்படும் நிலையில் இந்தக் கற்களின் ஆராய்ச்சி கோள்களின் உருவாக்கம் பற்றியக் குறிப்புகளை உணர்வதில் உதவும் என்பதும் இந்தக் கற்களைப் பற்றிய ஆராய்ச்சியின் நோக்கம். 2007 ஆம் ஆண்டு நாஸா டா(வ்)ன் (Dawn) என்ற விண்கலம் மூலம் வெஸ்டா, செரஸ் ஆகிய விண்கற்களை ஆராய்ந்த்து இதில் வெஸ்டா பாறைப்படிமம் போன்று கடினமாக இருப்பதும் செரஸ் பனிக்கட்டி போல இருப்பதும் கண்டறியப்பட்டன. 10000-க்கும் மேற்பட்ட விண்கற்கள் கண்டறியப்பட்டாலும், DA14 போன்ற சிறுசிறு கற்கள் பெருமளவில் ஆராயப்படாமலேயே உள்ளன.

இந்தச் சிறுகற்களால் பூமிக்கும் முழுவதுமான அழிவு ஏற்படாது என்றாலும் இதன் விளவு ஒரு நகரத்தை அழிக்கும் அளவுக்கு இருக்கும். 1908 ஆம் ஆண்டு ரஷ்யாவின் சைபீரியாவில் (துங்குஸ்தா நதிக் காடுகளில்) விண்கல் மோதியது என்றும்  அதன் அளவு இது போன்றே இருக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. அப்போது அதன் பாதிப்பு சுமார் 2000 சதுர கி.மீ. பரப்பைப் பாதித்து அங்குள்ள மரங்களை அழித்ததாக கூறப்படுகிறது.

இக்கல் கடல் பகுதியில் விழுந்தாலும் அதனால் சுனாமி போன்ற பெருஞ்சேதங்கள் நிகழும் சாத்தியக் கூறும் உள்ளது. மேலும் தற்போது இக்கல் பூமியின் செயற்கைக் கோல்கள் நிலை நிறுத்தப்படும் 32000 கி.மீ.க்கும் உட்பகுதியில் வருவதால் (அதிர்ஷட வசமாக எந்தச் செயற்கைக் கோளிலும் இந்தக்கல் இந்த முறை மோதும் சாத்தியம் இல்லை என்று நாசா அறிவித்துள்ள நிலையிலும்) தொலைத் தொடர்பு சாதனங்கள் பாதிக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பதைப் பற்றி எந்த தகவுலும் தரவில்லை.

இன்று இரவுதான் இதனால் ஏற்படும் விளைவுகளை அறிய முடியும். 

ம்ம்ம்...  பார்க்கலாம்!

திங்கள், பிப்ரவரி 11, 2013

நிஷாதம்



56 புராண இந்திய தேசங்களைப் பற்றியத் தொடர்பதிவு.


நிஷாதம்

மற்ற தேசங்களைப் போலல்லாமல் நிஷாதம் என்பது தனி தேசமா என்பதே ஒரு கேள்வி தான். மஹாபாரதத்தில் நிஷாதம் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் இது எந்தப் பகுதியில் இருக்கிறது என்பது சரியாகக் குறிப்பிடப்பட்டதாகவேத் தெரியவில்லை.

நிஷாதர்கள் என்பவர்கள் பொதுவாக மலைபகுதிகளில் இருக்கும் ஆதிவாசி மக்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு நாளடைவில் ஆரவல்லி மலைத்தொடர்கள் இருக்கும் இராஜஸ்தான் பகுதியில் அவர்கள் வாழ்ந்த இந்தப் பகுதி நிஷாத தேசமாகக் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.

புராணங்களில் ஸ்வயம்பாஹு மனுவும் அவரது  மகன் உத்தமபாதனுக்குப் பிறந்த துருவனின் வம்சமும் வரிசைப் படுத்தப் படுகின்றன. அந்த வரிசையில் சாஷுச மனுவிற்கும் நத்வதாவிற்கும் பிறந்த 10 மகன்கள் வரிசைப் படுத்தப்படுகின்றனர். அதில் முதல் மகன் ஊரு-விற்கும் அவன் மனைவி ஆக்ஞேயிக்கும் மகனாகப் பிறந்தவர் அறுவர். அந்த ஆறு பேரில் முதல் மகன் அங்கனுக்கும் சுநிதா-விற்கும் மகனாகப் பிறந்தவன் வேணி. இந்த வேணியின் கதை ருக்வேதத்திலும் குறிப்பிடப்படுகிறது.

வேணி-யின் காலத்தில் நற்காரியங்கள் நடக்காமல் பூதேவி தன் சிறப்புகள் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு பாதாளத்தில் அடைக்கலம் புகுந்தாள். சப்தரிஷிகள் வேள்வி செய்ய வேணியை அவ்வேள்வித் தீயில் தன்னையே அவிர்பாகமாக அளித்தான். வேணியின் உடம்பிலிருந்த பழைய எண்ணங்கள் ஒரு உருவமாக மாறி வெளியேறியது. அதனை அத்ரி முனிவர் ‘நி ஷத்’ (இங்கே அமர்க) என்று கட்டளையிட்டு அங்கேயே இருக்கச் செய்தார் என்றும், பின்னர் அது நிஷாதன் என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டதாகவும் கூறுகிறது. மீதியிருந்த வேணியின் உடலிருந்து தோன்றியவன் ‘ப்ரித்வி’. [ப்ர்த்வி-யின் கதையை முன்னரே இங்கே எழுதியுள்ளேன்]. தத்துவ ரீதியாக இது பனியுகத்திற்க்குப் (ice age) பிறகு வேட்டுவத் தொழிலிலிருந்து விவசாயத் தொழிலுக்கு மாறியதைக் குறிக்கும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து நிஷாதர் என்பது வேட்டுவரைக் குறிக்கும் என்பது புலப்படுகிறது.
[பாகவத புராணம், அக்னிபுராணம் ஹரிவம்ச புராணம் போன்ற வெவ்வேறு புராணங்களில் இந்த கதை வெவ்வேறு விதமாகக் குறிப்படுகிறது]

இராமாயணத்தில் வரும் குகன் நிஷாதனாகவேக் குறிப்பிடப்படுகிறான். ஆனால் அவன் இருந்த பகுதி ஆரவல்லி மலைப்பகுதி அல்ல; அது விந்திய மலையின் வடக்குப் பகுதியே. எனவே வனப்பகுதி/மலைப்பகுதி வேட்டுவர்கள் நிஷாதர்களாகவே குறிக்கப்படுகின்றனர். இராமாயணத்தில் சபரி-யும் நிஷாதப் பெண்ணாகவே குறிக்கப்படுகிறாள்.

நிஷாதர்களில் முக்கிய இனமாகக் குறிக்கப்படுவர்கள் ’பில்’ என்ற இனத்தவர்கள். தற்போதைய இராஜஸ்தானின் பில்வாரா மாவட்டம் இவர்கள் வாழ்ந்த பகுதியே. [இராமாயண மஹாபாரதங்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வழக்கில் சொல்லப்படுவது நாம் அனைவரும் அறிந்த்தே. இந்த பில் இனத்தவரின் ராமாயண மஹாபாரத செவிவழிக் கதைகள் மிகவும் பிரபலமானவை. பின் வேறு சமயத்தில் அந்தக் கதைகளை எழுத முயற்சிக்கிறேன்]. சில இடங்களில் இந்த பில் இனத்தவர்கள் துங்கார்-பில் என்று இவர்களைக் குறிப்பர். இதில் துங்கார்புர் என்ற இடமும் இராஜஸ்தானில் தான் உள்ளது. இதுவும் ஆரவல்லி மலைகளை ஒட்டியே உள்ளது (BCCI-இன் முன்னாள் தலைவர் ராஜ்சிங் துங்கார்புர் இந்த ராஜவம்சத்தைச் சேர்ந்தவரே. ஆனால் அவர் பில் இனத்தவர் அல்லர். பின்னர் பில் இனத்தவரிடமிருந்து இவரது முன்னோர்கள் இந்த இடத்தைக் கைப்பற்றினர்)

மஹாபாரதத்தைப் பொறுத்தவரை இரண்டு முக்கிய நிஷாதர்கள் வருகிறார்கள். அவர்கள் இருவருமே இராஜஸ்தானின் ஆரவல்லி பகுதையையேச் சேர்ந்தவர்கள். இருவருமே நமக்கு நன்கு அறிமுகமானவர்கள்.

முதலில் நளன். இவனைப் பற்றி நாம் ’வெண்பாவிற்கு ஒரு புகழேந்தி’ என்று சிறப்பித்துக் கூறக் காரணமான நளவெண்பா-வில் படித்துள்ளோம். இவன் தந்தையின் பெயர் வீரசேனன். அன்னம் தூதுவிட தமயந்தியைச் சுயம்வரத்தில் அக்னி, இந்திரன், சோமன், வாயு ஆகிய நான்கு தேவர்களின் குறுக்கீட்டையும் மீறிக் கைப்பிடித்தவன், தன் தமையன் புஷ்கரனிடம் (அவனுக்கு கலி உதவியதால்) சூதாட்டத்தில் தோல்வியுற, புஷ்கரன் நாட்டிற்கு பதிலாக மீண்டும் தமயந்தியை வைத்து சூதாட அழைக்க அதை மறுத்து கானகம் சென்றான். தமயந்தியை விதர்ப தேசத்திற்குச் சென்று அவள் தந்தையிடம் இருக்கும் படிக் கூற அவள் மறுத்து அவனுடனேயே சென்றாள். அங்கும் விதி அவனைப் பின் தொடர அடித்தப் புழுதிப் புயலில் அவன் துணிகளும் பறந்துவிட தமயந்தியின் புடவையின் மேல் பகுதியைச் சுற்றிக் கொண்டான். தன் துரதிர்ஷ்டம் தன் மனைவியையும் வாட்டுவதை அறிந்து/உணர்ந்து அவள் புடவையின் மேல் பகுதியைக் கிழித்துக் கொண்டு அவளை அங்கேயே விட்டுச் சென்றான். காலையில் கணவனைக் காணாத தமயந்தி நீண்ட போராட்டங்களுக்குப் பின் தன் தந்தையை அடைந்தாள்.

தமயந்தியைப் பிரிந்த நளன் நீண்டப் போராட்டத்துடன் காட்டில் அளைந்து கொண்டிருக்கும் பொழுது தீயில் மாட்டிக் கொண்ட ஒரு பாம்பிற்கு நளன் உதவ அந்தப் பாம்பு அவனைக் கடித்தது. அப்பாம்பின் விஷத்தால் அவன் நெடிய உடம்பு  குறுகி முகம் கருத்துப் பொலிவிழந்து விகாரமாக மாறியது. பின்னர் அப்பாம்பு தான் ஜனமேஜயன் நாகங்களை அழிக்க ஏற்படுத்திய வேள்வித் தீயில்  தான் மாட்டிக் கொண்ட கார்கோடகன் என்றும் தன் விஷம் நளனைக் காப்பாற்றும் என்றும் அவன் விரும்பும் பொழுது விஷத்தை வெளியேற்றிக் கொண்டு மீண்டும் பழைய உருவை அடையலாம் என்றுக் கூறி அவனை ரங்கராஜன் ரிதுபர்ணன் என்ற அரசனிடம் சென்று சேர்ந்து அவன் நம்பிக்கைக்குப் பாத்திரம் ஆகும் படியும் அவனிடமிருந்து சூதாட்டத்தின் சூட்சமங்களை அறிந்து கொள்ளும் படியும் கூறியது. அவ்வாறே, ரங்கராஜ ரிதுபர்ணனின் சமையலறையில் வேளைக்குச் சேர்ந்து படிப்படியாக அவனின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகினான்.

கணவன் வேறு நாட்டில் தக்கச் சந்தர்பத்திற்காகக் காத்திருப்பதை உணர்ந்த தமயந்தி அவனைக் கண்டுபிடிக்க பல்வேறு தேசங்களுக்கும் ஒற்றர்களை அனுப்பி அவர்களிடம் ‘மனைவியைக் கானகத்தில் தவிக்க விட்டுச் செல்பவன் ஆண்மகனா?’ என்ற கேள்விக்கு விடை பெற்று வருமாறு அனுப்பி வைத்தாள். தக்க விடை எங்கும் வராத நிலையில் ‘தன் கஷ்டம் தன் மனைவியைத் தாக்காமல் அவள் தந்தையிடம் செல்ல வழி செய்பவன் தான் ஆண்மகன்’ என்ற பதில் ரங்கராஜ ரிதுபர்ணன்னின் நாட்டிலிருந்து ஒருவன் கூறியதாகவும் ஆனால் அவன் உருவத்திற்கும் நளனின் உருவத்திற்கும் பொருந்தவில்லை என்ற தகவல் கிட்டியது.

நிலைமையை ஊகித்த தமயந்தி தன் தந்தையிடம் மீண்டும் தனக்கு சுயம்வரம் நடத்த கூறி அதற்கான நாளை ரங்கராஜன் ரிதுபர்ணன் நாட்டிலிருந்து தன் நாட்டை அடைய குறைந்த பட்சம் தேவையான நாளிலேயே சுயம்வரத்தை வைக்க ரங்கராஜனுக்கு நளன் தேரோட்டி வந்தான். வரும் வழியில் ரங்கராஜனின் மேலங்கி கீழே விழ அதை எடுக்கச் சொல்ல அதற்கு நளன் குதிரைக் குளம்படியைக் கணித்து அதைத் தாண்டி வந்த தூரம் எத்தனை என கணித்துக் கூறினான். பின் காற்றில் மரத்திலிருந்து சருகள் விழ மொத்தம் எத்தனைச் சருகள் விழுந்ததென்றும் கூறினான். இதைக் கணிக்கும் முறைகளை கற்பிக்கும் படி அவன் நளனிடம் கேட்க பதிலுக்கு நளனுக்கு சூதாட்டத்தின் நுணுக்கங்களைக் கற்றுக் கொடுத்தான். இரவு தமயந்தி விருந்தினர் மாளிகையில் ரங்கராஜ ரிதுபர்ணனின் உணவுகளை வரவழைத்து உண்ண அதில் நளனின் கைப்பக்குவத்தைக் கண்டு நளன் அங்கிருப்பதை உணர்ந்து அவனைத் தேடிச் சென்றாள்.

அதே நேரத்தில் நளன் தன் உடம்பிலிருந்த விஷத்தை கக்கி வெளியேற்றி மீண்டும் பழைய உருவத்தை அடைந்தான். தமயந்தியும் நளனும் ரங்கராஜ ரிதுபர்ணனுக்கும் உண்மையை விளக்கி அவனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின் மீண்டும் தன் தமையன் புஷ்கரனை சூதாட்டத்திற்கு அழைக்க, இம்முறை கலியின் உதவியில்லாத புஷ்கரன் தோல்வியுற்றான். அவனை மன்னித்து அவனுக்கு தன் நாட்டில் ஒரு பகுதியையும் அளித்தான். இது தான் நளனின் கதை.

மற்றொரு நிஷாதன் ஏகலவ்யன். ஏகலவ்யன் என்ற பெயரில் இருவர் இருக்கிறார்கள். முதலாமவன் ஹிரண்யதனுஸ் என்ற நிஷாத அரசனின் மகன். பில்வாரா பகுதி பில்-கள் தங்களை ஏகலவ்யனின் வாரிசுகளாகக் கூறுகிறார்கள். துரோணரிடம் அர்ஜுனனுக்காகக் கட்டை விரலை இழந்த ஏகலவ்யன் கிருஷ்ணருடன் ஏற்பட்டப் போரில் இறந்தான். நிஷாதர்கள் பாரதப் போரில் கௌரவர் சார்பில் போரிட்டனர்.

மற்றொரு ஏகலவ்யன் பாரதப் போருக்குப் பிறகு அஸ்வமேத யாகம் செய்ய வந்த அர்ஜுனனுடன் போரிட்டுத் தோல்வியுற்று தெற்கு நோக்கி நகர்ந்து சென்று விட்டதாகக் குறிப்பிடப்படுகிறான்.

இவர்களைத் தவிர கேதுமதன் என்ற நிஷாத மன்னனும் பாரதப் போரில் பங்கு பெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால் இவன் மேற்கூறிய நிஷாதர்களுடன் கூறப்படாமல் கலிங்கப்படையுடன் சேர்த்துக் கூறப்படுகிறான். இவற்றைத் தவிர ஆந்திரம் கலிங்கம் ஆகிய இடங்களிலும் சில நிஷாத தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. கேதுமதன் இந்தப் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கலாம்.

ஆக, பெரும்பாலும் இவை மலைவாழ், வனவாழ் வேட்டுவர்களின் நாட்டைக் குறித்திருக்கக் கூடும் என்றேத் தோன்றுகிறது.