செவ்வாய், ஜனவரி 28, 2020

குறிஞ்சிப் பண்

குறிஞ்சிப் பண்
[வல்லமை இதழின் 242-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

 

வண்டு சுழன்றிடும் சோலைமிடை காதல்
கண்டு உயிர்வாழ்ந்து பரிணமிப்பாய்
வெட்கங் கொண்டக் கொடிச்சியினை - கடுவனே
வேட்கையுடனேச் சேர்ந்திருப்பாய்

கொட்டும் சாரல் வெட்கைத் தவிர்க்க
கானவன் தோள்களில் சாய்ந்திடுவாய் - அது
வானவர் உலகையே காட்டுமென்ற
வள்ளுவன் வாக்கை மெய்பிப்பாய்

நேற்று இன்று நாளையின்றி
நித்தமும் நிலைக்க வைத்திடுவாய்
காற்றிடை நுழையாக் காதல் கொண்டு - குறிஞ்சிக்
காவியம் தளிர்க்கச் செய்திடுவாய்

திங்கள், ஜனவரி 20, 2020

மனிதம் பழக்கு

மனிதம் பழக்கு
[வல்லமை இதழின் 241-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


அலை வீசும் கடற்கரையின் அழகை ரசிக்க வேண்டும்
அலைபேசிச் சத்தம் இன்றி அமைதி கொள்ள வேண்டும்
கணினியிலே விளையாடல் நிறுத்தி வைக்க வேண்டும்
களத்தினிலே ஆட வைத்துக் களித்திருக்க வேண்டும்

மணற்வீடு கட்டி மழலை மகிழ்ந்திருக்க வேண்டும்
புணல்தோறும் ஆடி நாளும் பொலிந்திருக்க வேண்டும்
சோர்வளிக்கும் தனிமையினைத் தூரந்தள்ள வேண்டும்
கூடி வாழ்ந்து கோடி நன்மைப் பெற்று வாழ வேண்டும்

வீட்டினிலே அடைந்திடாமல் வெளியில் பார்க்க வேண்டும்
ஏட்டுப் படிப்பு மட்டுமன்றி எல்லாந் தெரிய வேண்டும்
கிணற்றுத் தவளையல்ல உலகஅறிவு கைக்கொள்ள வேண்டும்
சுற்றத்தோடு வாழவைத்து மனிதம் பழக்க வேண்டும்


புதன், ஜனவரி 15, 2020

தைப்பொங்கல் கோலம்


தைப்பொங்கல் கோலம்
 


வாழும் மக்கள் வயிற்றுப்பிணித் தீர்த்துவிடும் கோலம்
வஞ்சமில்லா நெஞ்சம் மகிழ் பச்சைப்பசுங்கோலம்
கழனிபுகு விவசாயி கதி உயர்த்தும் கோலம்
உழவுக்கும் உழைப்புக்கும் உயர்வளிக்கும் கோலம்!

கதிரவனின் தேர் திரும்ப வரவேற்கும் கோலம்
நிலமடந்தை கதிராடை உடுத்தி நின்றக் கோலம்
பசுஞ்சோலைப் பூக்கப் பிஞ்சு மொட்டுவிடும் கோலம்
வசந்த காலம் வருவதையே கட்டியஞ்சொல்லும் கோலம்!

காடுவளர் காளைக்கெல்லாம் கணிவளிக்கும் கோலம்
கன்னிப்பெண்கள் குடி உயர்த்தும் கதிர்மணிக் கோலம்
கூடி நாமும் வாழவழிச் செய்யும் சீர்க் கோலம்
கன்னித் தமிழ்நாடு போற்றும் தைப்பொங்கல் கோலம்!

திங்கள், ஜனவரி 13, 2020

எதிர்காலப் பொங்கல்


எதிர்காலப் பொங்கல்
[வல்லமை இதழின் 240-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]விளை நிலங்கள் தனையெல்லாம்
விலைக் கொடுத்து வாங்கி,
வீடுகட்டிப் பார்க்க எண்ணும் ஒரு
வித்தகரின் கூட்டம்

சோறு போடும் நிலங்களையே
கூறுபோட்டுப் பார்த்து - எரி
வேதிபொருள் தேட தினம்
விழைந்திடுமோர் அரசு

பாடுபட்டு உழைத்து செங்கதிர்
பயிர்வளர்த்து வந்த மண்ணில் வேறு
நாட்டதனின் கூட்டம் தினம்
செய்யும் பல ஆய்வு

நிலைதிருத்தி விதிமாற்ற
வழியேதும் எண்ணிடாமல்
வெள்ளித்திரை வழியே தலைவனைத்
தேடும் மக்கள் கூட்டம்

மகிழ்ச்சி கொண்டு குடும்பத்துடன் கொண்டாட
கதிர், கரும்பு எழிற்கோலம் ஏதுமின்றி
நெகிழிப் பானையில் பஞ்சு பொங்கல் வைத்து
கொண்டாடும் நம் எதிர்காலச் சமுதாயம்!

புதன், ஜனவரி 08, 2020

பரிணாமம்

பரிணாமம்
[வல்லமை இதழின் 239-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]காக்கைக் கரவாக் கரந்துண்ணும் என்னும்
வாக்கை நினைந்து நிற்பாய் மானிடனே
யாக்கை எடுத்த பயன் பிறர்க்குழைக்க என்னும்
பாடம் கற்றுப் பரிணமிபாய் வாநரனே வா

பொய் பொறாமைத் தீக்குணங்கள் தான்விடுத்து
செய் நன்றி கொண்டார்க்கு உய்வில்லையெனும்
மெய்ப்பொருளைத் தானுணர்ந்து
உய்வு கொண்டு பரிணமிப்பாய் வாநரனே வா

கவி காட்டும் மெய்யன்பைக் கண்டுணர்ந்து
புவியணைத்தும் களிக்கும் வகைச்செய்து
பொதிகை வளர் திருநாட்டில் புது
ஆதிமந்தியெனப் பரிணமிப்பாய் வாநரனே வா

திங்கள், ஜனவரி 06, 2020

பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை 
[வல்லமை இதழின் 237-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


ஆதாரம் தேடித் தேடி 
ஆண்டாண்டு அலையும் கொடிகள்! 
சேதாரம் கிட்டாமல் 
செழித்துக் காய்ந்த நிலங்கள்! 
நீராதாரம் பொய்த்துப் போய் 
காய்ந்த நிலமடந்தை! 
ஏர்முனைத் தேய்ந்து போய் 
மழுங்கிய மண்ணின் மைந்தர்! 
ஒட்டிய தேகம் பட்டினி வயிறு 
எலும்பு தெரியும் வெற்றுடம்பு 
கந்தல் நிறை வேட்டி - என 
உன்நிலைப் பார்த்தபின்பு 
நூற்றாண்டு பல கண்டாலும் 
காந்திக்கும் உடை மாறாது!  
கண்ணில் கனவுகள் வண்ணம் இழந்து போனாலும் 
கண்ணீர் வற்றிக் காய்ந்து போனாலும் 
சுழலும் சக்கரம் சுற்றுவது நிற்பதில்லை - இவர் 
வாழ்க்கைத் துயரங்கள் முடிவிற்கு வருவதில்லை!  
இங்குப் பொய்த்தது பருவம் மட்டுமல்ல 
பதவியிலிருப்போர் வாக்கும் தான்