வியாழன், மார்ச் 19, 2020

நேர்கொண்ட பார்வை!


நேர்கொண்ட பார்வை




அன்னையர்க் குலப் பெண் தெய்வமென
ஆலயந்தனிலே வைப்பதாய்ச் சொல்லிப்
புழக்கடைத் தனிலே பூட்டிடுவார்- பெண்ணைக்
கிணற்றுத் தவளை ஆக்கிடுவார்!

முரட்டு உலகின்றுக் காப்பதாய்ச் சொல்லி
இருட்டு வாழ்க்கைத் தந்திடுவார் – மூடர்
குருட்டுத்தனம் பல செய்திடுவார் – அவற்றைப்
புனிதம் என்றே காட்டிடுவார்!
கைவளை அழகென்று சொல்லி – பெண்ணுக்குக்
கைவிலங்கிட்டே முடக்கிடுவார்
கொடியவர் பார்வைப் பழுதென்று கூறி
முக்காட்டிட்டு அவர் திறம் மூடிடுவார்!
தாயினத்தைத் துரத்தும் கயமைகளை – உன்
பார்வைத் தீயால் பொசுக்கிவிட
முண்டாசுக் கவிஞனின் வாரிசென
நேர்கொண்ட பார்வை காட்டிடுவாய்…








திங்கள், மார்ச் 16, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-3)

ஓடிஸியஸ் இதாகாவை அடைதல்
(பகுதி-3) 






பைகளை வைத்துக் காற்றைக் கட்டுப்படுத்தி கப்பலை தன் நாட்டின் பக்கம் திருப்பிய ஓடிஸியஸ், வெகுநாட்களாகத் தூக்கமின்றி பயணம் செய்த களைப்பில் அசந்து தூங்கி விட்டான். கப்பல் அவர்கள் நாட்டை நெருங்கிக் கொண்டிருந்த்து. ஆனால், அப்பொழுது அவனுடன் இருந்த இருவர் தங்களுக்குக் காட்டாமல் ஓடிஸியஸ் அந்தப் பையில் வைத்திருக்கும் பொருட்களை அபகரிக்க நினைத்து அந்தப் பையை திறந்தனர். உடனே, அதில் அடைக்கப்பட்ட பல திசைக் காற்றுகளும் சீறிப் பாய்ந்து சீற்றமான புயலை உருவாக்கின. காற்றின் சீற்றத்தால், கப்பல் நிலைத் தடுமாறி பின்னோக்கிச் சென்றது. இதற்கிடையில் பாலிஃபீமஸ் விவகாரத்தில் கோவமாக இருந்த போஸிடன் தன் மகனான ஏயோலஸ்க்கு பாலிஃபீமஸின் நிகழ்வைக் கூறி ஓடிஸியஸுக்கு உதவக் கூடாது என்று கூறிவிட்டார். இதனால், ஏலியோஸ் இம்முறை ஒடிஸியஸுக்கு உதவ மறுத்துவிட்டார். மனமுடைந்த ஒடிஸியஸ் மீண்டும் தன் பயணத்தைத் துவக்கினான்.
சில நாட்கள் பயணம் செய்த பின்னர், ஒரு நள்ளிரவில், கப்பல் ஒரு தீவை நெருங்கியது. அதன் பெயர் டெலிபிலோஸ். அந்தத் தீவுக்கு இயற்கையாக ஒரு பாதுகாப்பு அரண் இருந்தது.  இரண்டு மலைகளுக்கு இடையே ஒரு குறுகிய பாதை வழியே பயணித்து தான் கப்பல் அந்தத் தீவை அடைய முடியும். மற்ற வீர்ர்களின் கப்பல் அதில் நுழைய ஓடிஸியஸ் மட்டும் அதனுள் நுழையாமல், வெளியேயே தன் கப்பலை நங்கூரமிட்டு, தன் இரண்டு வீர்ர்களை தீவை ஆராய அனுப்பினான். அவர்கள் அங்கு ஒரு பெண்ணைக் கண்டனர். அவள், அவர்களைத் தன் தந்தையிடம் அழைத்துச் சென்றாள். கோட்டையை நெருங்கியதும் அங்கு ஒரு மிகப் பெரிய ராட்சத வடிவம் கொண்ட பெண் தன் கணவனை அழைக்க அந்த ராட்சதன் அவர்களில் ஒருவனைத் தூக்கித் திங்க ஆரம்பித்தான். உயிருக்குப் பயந்து மற்றவன் ஓட அவனை அத்தீவின் மற்ற ராட்சதர்கள் துரத்தினர். துறைமுகத்தில் கப்பலைக் கண்ட ராட்சதர்கள் அதன் மீது பெரிய பாறைகளை வீசினர். ஓடிஸியஸின் கப்பல் வெளியே நங்கூரமிட்ட்தால் அது மட்டும் தப்ப மற்ற கப்பல்கள் நொறுங்கின. ஓடிஸியஸ் சில வீரகளுடன் அந்தத் தீவிலிருந்துத் தப்பினான்.

அங்கிருந்து தப்பிப் பிழைத்து பயணித்தக் கப்பல் ஏயியா என்ற தீவை வந்தடைந்த்து. அது, சிர்ஸ் (Circe) என்ற சக்தி வாய்ந்த சூனியக்காரி வாழும் தீவு ஆகும். தீவுக்கு வெளியே கப்பலை நிறுத்திய ஓடிஸியஸ் இரண்டு வீர்ர்களை தீவை ஆராய அனுப்பி வைத்தான். தன் மந்திர சக்தியால் ஓடிஸியஸின் வீரர்கள் தீவுக்கு வருவதை சிர்ஸ் அறிந்திருந்தாள், வீர்ர்கள், சிர்ஸ் தன் அரண்மனையில் ஒரு பெரிய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க அவளைச் சுற்றிக் காட்டு மிருகங்கள் இருப்பதைக் கண்டனர்.. அம்மிருகங்கள், சிர்ஸால் விலங்குகளாக மாற்றப்பட்ட மனிதர்கள் ஆவர். வீர்ர்கள அவளை சந்தித்த பொழுது அவள் தந்த பானங்களைப் பருக வீரகள் இருவரும் பன்றிகளாக மாறினர். தொடந்து வீர்ர்கள் திரும்பி வராமல் இருக்க, அவர்களைத் தேடி ஓடிஸியஸ் தானே தீவுக்குச் செல்ல முடிவெடுத்தான். அப்பொழுது அவனுடைய முன்னோரான ஹெர்மெஸ் கடவுள் (Hermes – பயணிகளின் கடவுள் – அவரது மகன் செஃபலஸ் – பேரன் லாரடெஸ் – லாரடெஸின் மகன் ஓடிஸியஸ்) ஒடிஸியஸை மோலி என்ற பூண்டு வகை மூலிகையின் திரவத்தை உட்கொள்ளச் சொன்னார். அதனால், சிர்ஸின் மந்திரங்களால் ஓடிஸியஸை ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் மந்திரங்கள் ஓடிஸியஸை மாற்ற முடியவில்ல என்றவுடன் சிர்ஸ் அவன் வீர்ர்களை திரும்ப மனிதர்களாக மாற்ற சில நிபந்தனைகளை விதித்தாள். அதன்படி, ஓடிஸியஸ் அவளைக் கூட, அவர்களுக்கு டெலிகானஸ் என்ற மகன் பிறக்கிறான். [வேறு சில கதைகளில், அவர்களுக்கு மூன்று குழந்தைகள் – அர்டியாஸ்  என்ற அக்ரியஸ், லத்தினாஸ், டெலிகானஸ் - பிறந்ததாகவும் கூறப்படுவதுண்டு.] பின்னர், அவன் தன் நாடு திரும்பும் விருப்பத்தைத் தெரிவிக்க சிர்ஸ் அவன் வீர்ர்களை மனிதர்களாக மாற்றி அவனுடன் அனுப்பினாள். அதற்கு முன், அவள் ஓடிஸியஸை பாதாள உலகம் சென்று அங்குள்ள கடவுள்களை (குறிப்பாக டைரேசியஸ் என்ற குருட்டு தீர்க்கதரிசியை) வணங்கவும் இறந்தவர்களுடம் பேசும் தந்திரம் கற்றுக் கொள்ளுமாறும் கூறினாள். இவை, அவன் நாடு திரும்பும் பொழுது அவனுக்கு மிகவும் உதவும் என்று கூறினாள்.

அவள் கூறியபடியே பாதாள உலகம் சென்ற ஓடிஸியஸ் அங்கு, அச்செர்ரோன் நதிக் கரையில், க்ரேக்கரகளின் எமனான ஹேடஸுக்கு பலி கொடுத்தான். பாதாள உலகில் குருட்டு தீர்க்கதரிசி டைரேஸியஸ் அவன் முன் தோன்றி அவன் நாட்டிற்க்கு செல்லும் வழியில் அவனை தடுக்க இருக்கும் தடங்கல்களையும், ஸ்கைலா, சாரிப்டிஸ் என்ற இரு அரக்கர்களைப் பற்றியும், தடைகளைக் கடந்து செல்வதற்கான வழியையும் ஓடிஸியஸுக்குக் கூறினார்.
பாதாள உலகத்தை விட்டு வெளியேறிய ஓடிஸியஸும் அவன் ஆட்களும் பின்னர் பல நாட்கள் பயணம் செய்தனர். ஒருநாள் திடீரென்று விசித்திரமான குரல்கள் அவர்களுக்குக் கேட்க ஆரம்பித்தன. இடையே அருமையான கீதங்களும் ஒலித்தன. அதைக் கேட்டவுடன் அவர்கள் மகிழ்ச்சியால் கண்ணீர் சிந்த ஆரம்பித்தனர். சிர்ஸ் முன்னரே எச்சரித்த்தால், தாங்கள் சைரன்களின் தீவை நெருங்கிவிட்ட்தை ஓடிஸியஸ் உணர்ந்தான். அவள் கூறியிருந்தபடி, அந்த குரல்கள் கேட்காமல் இருக்க அனைவரையும் காதில் மெழுகால் மூடக்கொள்ளச் சொன்னான். ஆனால், தான் மட்டும் அந்தக் குரல்களை கேட்க விரும்பி தன் காதுகளை மூடிக் கொள்ளாமல் தன்னைக் கப்பலின் தூணில் கட்டிப்போடச் சொன்னான். சைரன்களின் இனிமையான குரல்களைக் கேட்ட ஓடிஸியஸ் தன்னை விடுவித்துக் கொண்டு தீவை நோக்கிச் செல்ல பகீரதப் ப்ரயத்தனம் செய்தான். ஆனால், தீவை நோக்கிச் செல்ல அவன் போட்டக் கூச்சலோ சைரன்களின் குரல்களோ கேட்காததால் மாலுமிகள் கப்பலை அத்தீவிலிருந்து விலகி செல்லும் படி செலுத்தினர். தீவிலிருந்து வெகு தூரம் சென்றபின் சைரன்களின் ஒலி மறைந்தது.

பின்னர் கப்பல் ஆறு கைகளைக் கொண்ட ஸ்கைலா என்ற ராட்சசியும் சாரிப்டிஸ் என்ற சுழல் வடிவிலான ராட்சதனும் வாழும் பகுதியை அடைந்தனர். சாதாரணமாக ஆறு தலை ராட்சசியைப் பார்த்தவுடன் அங்கிருந்து விலகிச் செல்லும் கப்பல்கள் சாரிப்டிஸின் சுழல் வாயில் விழுந்து இறப்பார்கள் அவர்களை இருவரும் பங்கிட்டுக் கொள்வார்கள். டைரேசியஸின் எச்சரிக்கைப் படி ஸ்கைலாவிடமிருந்து விலகிச் செல்லாமல் அவள் அருகில் செல்ல அவள் தன்னுடைய ஆறு தலைகளால் ஆறு வீரகளைப் பிடித்துக் கொள்ள அவர்களை விட்டுவிட்டுத் தன் கப்பலை வெகு வேகமாக அங்கிருந்து விலகிச் சென்றுத் தப்பினான். ஆறு வீர்ர்கள் இறப்பார்கள் என்பதை முன்னரே அறிந்திருந்தாலும் அவர்களை வேண்டுமென்றே பலியாக விட்டுவிட்டுச் சென்றான் என்பதே உண்மை. எதிர்காலத்தில் அவர்களுக்குச் செய்த துரோகத்தை எண்ணி வருந்தினான் என்றும் கூறப்படுகிறது.

இவ்வாறு உடல் உலைச்சலுக்கு ஆளான வீர்ர்களும் மன உலைச்சலுக்கு ஆளான ஓடிஸியஸும் சற்று இளைப்பாற வழியில் இருந்த த்ரினேசியா என்ற தீவுக்கு அருகில் தங்கள் கப்பலை நங்கூரமிட்டனர். அது சூரிய கடவுளான ஹீலியஸுக்கு சொந்தமானது. அங்குள்ள கால்நடைகளுக்கு எந்த்த் தீங்கும் நேரக்கூடாது  என்று முன்னரே டைரேசியஸ் எச்சரித்திருந்தார். ஆனால், ஓடிஸியஸின் கட்டளையை மீறி சில வீர்ர்கள் அவற்றைக் கொன்று புசித்தனர். இதனால், கோபமடைந்த ஹீலியஸ் தான் பாதாள் உலகம் சென்று மறைவதாகவும் இனி மீண்டும் உதிக்க மாட்டேன் என்றும் ஜீயஸிடம் (க்ரேகர்களின் இந்திரன்) கூறினார். அதைத் தடுத்த ஜீயஸ், ஓடிஸியஸ் தீவை விட்டுச் செல்லும் பொழுது அவன் கப்பலைத் தாக்குவதாகக் கூறினார். அவ்வாறு தாக்கும் பொழுது, அந்த மாமிசம் உண்ட அனைவரும் இறந்தனர். இடியால் கப்பலும் நொறுங்கியது. ஓடிஸியஸ் மட்டும் அங்கிருந்து நீந்தித் தப்பிச் சென்றான்.

பல மைல் தூரம் நீந்திய ஓடிஸியஸ் மயக்கமடைய கடல் அலைகள் அவனை ஒரு தீவுக்குக் கொண்டு சென்றன. அத்தீவின் பெயர் ஓகிஜியா. அங்கு கலிப்ஸோ (Calypso) என்ற கன்னிதேவதை (nymph) வசித்து வந்தாள். அவள் ஓடிஸியஸ் மீது மோகம் கொண்டாள். அவள் அவனைக் காப்பாற்றினாள். ஓடிஸியஸ் அவளுடன் சில காலம் தங்கியிருந்தான். அவர்களுக்கு நௌசிதோஸ், நௌசினோஸ் என்ற இரு குழந்தைகள் பிறந்தன. (சில கதைகளில் சிர்ஸின் மகனான லத்தினாஸ் கலிப்ஸோவின் மகன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது). ஓடிஸியஸ், மீண்டும் தன் நாடு திரும்ப ஆசைப்பட்டான். ஆனால், கலிப்ஸோ அவனைத் தன்னுடன் இறுதிவரை வைத்துக் கொள்ள ஆசைப்பட்டாள்.  அவள் ஓடிஸியஸிடம்,, தன்னைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி, அவனுக்கு அமரத்துவம் அளிப்பதாகவும் வாக்களித்தாள். ஆனால், ஓடிஸியஸ் தன் நாட்டிற்குத் திரும்பி தன் மனைவி மக்களுடன் வாழவே விரும்புவத்தாக்க் கூறினான். அதனால், அவனை சிறையில் அடைத்து வைத்தாள். அத்தீவில், அவன் 7 ஆண்டுகள் தங்கியிருந்தான். அவனுடைய ப்ரார்த்தனையைக் கண்ட அவன் இஷ்ட தெய்வமான ஏதென்னா (க்ரேக்கர்களின் சரஸ்வதி – அதனால் தான் ஓடிஸியஸ் அனைத்தும் அறிந்தவன் என்றும், அவனிடம் அனைவரும் ஆலோசனை கேட்பார்கள் – பல நேரங்களில் அவள் ஓடிஸியஸுக்கு உதவுகிறாள்) ஜீயஸிடம் முறையிட அவர் ஹெர்மெஸ் வழியாக அவனை விடுவிக்கும் படி கலிப்ஸோவிற்குக் கட்டளையிட்டார். அதை மறுக்க முடியாத கலிப்ஸோ அவனை விடுவித்தாள். அவனுக்கு ஒரு படகை அளித்து அவன் நாடு திரும்ப அனுமதித்தாள். ஆனால், வழியில் மீண்டும் புயலில் சிக்கிய ஓடிஸியஸ் வேறு ஒரு தீவில் கரை ஒதுங்கினான்.

அது பையக்சியர்கள் வாழும் தீவு. கடற்கடவுளான போஸிடன்,, கோர்கீரா (அசொபோஸ் நதிக்கும் மெடோப் என்ற நதி தேவதைக்கும் பிறந்தவள்) என்ற நீர் தேவதையின் மீது மோகம் கொண்டு அவளை இந்தத் தீவில் கடத்தி வைத்த்தாக்க் கூறுவர். அவர்களுக்கு பிறந்தவர்கள் பையாக்ஸிகள். கரையோரத்தில், புயலால் தன் படகையும் உடைகளையும் இழந்த, ஓடிஸியஸைக் கண்ட அத்தீவின் இளவரசி நௌசிசா (நாஃப்சிகா என்றும் கூறுவர்), தாங்கள் துவைக்க்க் கொண்டுவந்த துணிகளை அவனை உடுத்தவைத்து, தன் தந்தை அல்சினொஸ் இடம் அனுப்பி அவர் மூலம் தன் தாய் அரெட்-ஐச் சந்திக்கச் சொன்னாள். அங்கு, ஒரு விழா நடந்து கொண்டிருந்தது. அதில், ட்ராய்-ஐ க்ரேக்க வீர்ர்கள் வீழ்த்தியதைப் பாடலாகப் பாடிக் கொண்டிருந்தனர். அதில் ஓடிஸியஸின் சாகசங்களைப் பாடிய பொழுது அவனை அறியாமல் அவன் கண்களில் நீர் வழிந்த்து.

அவனைத் தனியே அழைத்துச் சென்ற அரசனும் அரசியும் விசாரித்தனர். அப்பொழுது, ஓடிஸியஸ் தான் யார் என்பதை வெளிப்படுத்தவில்லை. ஆனாலும், அவன் அணிந்திருந்த உடை தன் மகளுக்காகத் தான் தயாரித்த உடை என்பதைக் கண்ட அரெட், அவனை வற்புறுத்தி அவனைப் பற்றிய உண்மைகளைக் கூறும்படிக் கேட்டனர். ஓடிஸியஸ் தான் யார் என்பதை வெளிப்படுத்தினான். அவனைத் தன் மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி அல்சினாஸ் கோரிக்கை விட நௌசிசா மிகவும் சிறிய பெண் என்பதால் தான் அவளை மணப்பது சரியல்ல என்று ஓடிஸியஸ் மறுத்தான் [பின்னர், அவன் மகன் டெலிமாசஸ், நௌசிகாவை – கிட்டத்தட்ட அர்ஜுனனின் மகன் அபிமன்யு, உத்திரையை மணந்த்து போன்றே – மணந்தான்]. அவனது, கதையையும் நிலைமையையும் கண்ட அவர்கள் ஓடிஸியஸை அவனது நாட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

ஒருவழியாக ஓடிஸியஸ் அவனது தாய் நாடான இதாகாவை வந்தடைந்தான். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல அங்கும் அவனுக்குப் பல சோதனைகள் காத்திருந்தன.

வற்றை டுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.

திங்கள், மார்ச் 09, 2020

புது உதயம்

புது உதயம்


காடுவெட்டிக் கழனியாக்கி
கதிர்நெல்லை விளைவித்தார்!
பட்டினியே உணவென்று வாழ்கின்றார்

பள்ளம் மேடு சீராக்கி
வீடுகட்டி வாழவைத்தார்!
நாடோடியாக நாளும் திரிந்தலைந்து நிற்கின்றார்

பாடுபட்டு,
நாளுமிங்கே கரஞ்சிவந்து வேலை செய்தும்
வறுமையதே சீதனமாய் வாழுகின்றார்

நிலையான வாழ்வு
நிரந்தரமாய் ஊதியம் என்றவரின்
வாழ்வினிலே காரிருளை நீக்கிக்
கரம் பற்றி மேலுயர்த்தி வாழவைக்கும்
புது உதயம் கண்டிடுவோம்!
புதியதோர் உலகம் செய்வோம்

வெள்ளி, மார்ச் 06, 2020

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் (பகுதி-2)



ஹோமரின் ட்ராய்-உம்  ஒடிஸியஸும்

ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்... (பகுதி-2)


ஆங்கில வார்த்தை Odyssey 'ஒரு நீண்ட பயணம்’ என்று பொருள். இந்த வார்த்தை ஹோமர் என்ற க்ரேக்க பழங்கவியின் The Odyssey என்ற காவியத்திலிருத்து உருவானது. ஹோமர் எழுதிய The Iliad, The Odyssey ஆகிய இரண்டும் மிகப் பிரபலமான கதைகள். இதில் இலியாட் என்பது ட்ராய் போரை விவரிப்பது. அதிலும் குறிப்பாக, ட்ராய் போரில் ட்ராயின் இளவரசன் ஹெக்டர்-ஐ அகில்லீஸ் கொல்வது வரை நடக்கும் சம்பவங்களை விவரிப்பது ஆகும்.  இந்த ஓடிஸி என்பது ட்ராய் போரில் ஈடுபட்ட ஒடிஸியஸ் (Odysseus) தன் நாடான ’இதாகா’(Ithaca)விற்குத் திரும்பிச் செல்ல மேற்கொண்ட நீண்ட பயணத்தையும் (20 ஆண்டுகள்!) அவன் செய்த சாகசங்களையும்  விவரிப்பது. ஓடிஸியஸ், ’நாயகன்’ திரைப்படத்தின் ’வேலு நாயகர்’ போல நல்லவனா கெட்டவனா என்பது கடைசி வரை புரியாத புதிர்.


இந்த கதையின் முன்கதையில், ட்ராய்-இன் இளவரசன் பாரிஸ், ஸ்பார்டாவின் மன்னன் மெனெலஸின் மனைவி ஹெலனை (சில கதைகளில் பாரிஸ் அவளைக் கடத்திச் சென்றதாகவும் சில கதைகளில் அவள் விருப்பப்பட்டு அவனுடன் சென்றதாகவும் உள்ள்ன), தன் நாட்டிற்குக் கடத்துகிறான். கோபமடைந்த மெனெலஸ் க்ரேக்கத்தின் அனைத்து மன்னர்களையும் அழைத்து, தாங்கள் முன்னரே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, தான் ட்ராய் மீது படையெடுக்க உதவுமாறு கூறுகிறார்.


ஒருவகையில் இந்த ஒப்பந்த்ததிற்குக் காரணகர்தாவே ஓடிஸியஸ்தான். முதலில் ஹெலனை மணக்க விரும்பிய வரன்களில் ஒருவனாக வந்தவன் தான் ஓடிஸியஸ். ஆனால் அவளை மணக்க பல க்ரேக்க மன்னர்களும் விரும்பினர். அவர்கள் அனைவரையும் எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அவள் தந்தை டைண்டரெஸ் கவலையுற்று இருந்தார். தனக்கு ஹெலன் கிடைப்பது கடினம் என்று உணர்ந்த ஓடிஸியஸ் அவள் தந்தையிடன் அவரது சகோதரனின் மகள் பெனலோப்-ஐ தனக்குத் திருமணம் செய்து கொள்ள அவர் உதவினால் தான் அவரின் இப்பிரச்சனைக்குத் தீர்வு சொல்வதாகக் கூறினான். அதன்படி அவர், அவன் திருமணத்திற்கு உதவ, அவன் க்ரேக்க மன்னர்கள் அனைவரையும் சுயம்வரத்திற்கு வரவழைத்து, ஹெலன் – அவள் விரும்பும் கணவனைத் தேர்ந்தெடுப்பாள் என்றும் அந்த ஜோடிக்கு எவரேனும் தீங்கிழைத்தால் தாங்கள் அனைவரும் மெனெலஸுக்கு உதவி, பிர்ச்சனையைத் தீர்த்து வைப்போம் என்றும் சபதமேற்கச் செய்தான்.


ஆனால், இப்பொழுது பாரிஸ்-ஆல் பிரச்சனை எழுந்ததும், இதில் ஈடுபட்டால் தான் தன்நாடு திரும்ப வெகு வருடங்கள் ஆகும் என்ற தன் ராஜகுரு ஹலிதெரஸ்ஸின் தீர்க்கதரிசன (oracle) வார்த்தையைக் கேட்ட ஓடிஸியஸ், தன் மனைவியையும் குழந்தையையும் பிரிய மனமின்றி, இச்சண்டையில் ஈடுபட விருப்பமின்றி பைத்தியம் போல நடித்தான். ஆனால் இதை, மெனலஸின் சகோதரனான அகமெம்னோன், அவருடைய நண்பனான பாலமெடாஸ் என்பவன் மூலம், கண்டு பிடித்து விடுட்டார். [போரின் இடையில் தன்னைக் காட்டிக் கொடுத்த பாலமெடாஸ்-ஐ சதித்திட்டம் தீட்டி, அவன் தங்களின் துரோகி என்று காட்டி, அவனை ஓடிஸியஸ் கொன்றது தனி கதை.]


இருந்தும், பின்னர் போரில் ஒடிஸியஸ் முக்கிய பங்கு வகித்தான். அவனது ஆலோசனை, முயற்சியால் புத்திசாலியான நெஸ்டர், அகில்லெஸ் (யாராலும் வெல்ல முடியாதவன்), டீசர் (பெரிய வில்லாளி) ஆகியாரும் படையெடுப்பில் கலந்து கொள்கின்றனர். பல நேரங்களில், க்ரேக்க வீரர்கள் சோர்வுற்ற பொழுது அவர்களை ஊக்குவிப்பதிலும் ஓடிஸியஸே முக்கிய பங்கு வகித்தான். அகமென்னின் கர்வ போக்கினால் க்ரேக்க வீர்ர்களிடம் ஏற்படும் சலசலப்பை நீக்குவதிலும் அவனே முக்கிய பங்கு வகித்தான். ஒரு படை வீரனாகவும் அவன் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. ஒருமுறை அகமென்ன்னுக்கும் அகில்லெஸிக்கும் இடையில் இருந்த விரிசல் அதிகமாகி அகில்லெஸ் சண்டையிலிருந்து விலகுவதாக அறிவிக்க, ஓடிஸியல் அகில்லெஸின் நண்பன் (அவனுடைய ஓரினச் சேர்க்கைக் காதலன் என்றும் சில கதைகளில் கூறுவது உண்டு) பெட்ரோக்லஸ்-ஐ அவன் இல்லாத பொழுது அவனுக்கு பதிலாக அவனுடைய கவசங்களை அணிவித்து அவனை களமிறக்கினான். அதனால், அகில்லெஸின் வீரர்கள் உற்சாகமாகப் போரிட்டனர். [அந்த போரில் பெட்ரோக்லஸ், ட்ராயின் இளவரசன் ஹெக்டரால் கொல்லப்பட அந்த கோபத்தால் தான் அகில்லெஸ் ஹெக்டரை வீழ்த்தினான் என்பதுதான் ஹோமரின் இலியாட்-இன் மூலக்கதை]. இவற்றைத் தவிர ஒரு வீரனாகவும் போரில் ஓடிஸியஸுக்கு முக்கிய பங்கு இருந்தது. ட்ராய்க்கு உதவிய ரீசஸ் என்ற த்ராஸ் நாட்டின் மன்ன்னை போரில் கொன்று அவனுடைய குதிரைகளை எடுத்து வந்த்தும் ஓடிஸியஸ் தான், 


10 ஆண்டுகள் முற்றுகையிட்ட பின்னரும் க்ரேக்க படையால் ட்ராயின் கோட்டைகளைத் தகர்க்கவோ உள் நுழையவோ முடியவில்லை. அப்போதும் ஓடிஸியஸ் தான், ட்ராஜன்களை ஏமாற்ற ஒரு திட்டம் வகுத்துக் கொடுத்தான். முதலில், க்ரேக்கர்கள், தங்களின் நீண்ட நாள் முற்றுகையால் சோர்வுற்று பொறுமையிழந்து தங்கள் நாட்டிற்குத் திரும்புவதாக ஒரு வதந்தியை உண்டாக்கினான். பின்னர் ஒருநாள் நள்ளிரவில் ஒரு பிரம்மாண்டமான மரக்குதிரையை க்ரேக்கக் கடவுள் ஏதென்னாவிற்குக் காணிக்கையாக்க் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர். மறுநாள், ட்ராய் மக்கள், கோட்டைக்கு வெளியே, ஆள் அரவமின்றி, படைகள் எதுவுமில்லாமல், க்ரேக்கர்கள் விட்டுச் சென்ற மரக்குதிரையை தங்களின் வெற்றிச் சின்னமாக நகரத்திற்குள் எடுத்துச் சென்று தங்களின் வெற்றியைக் கொண்டாடினர். ஆனால், ஓடிஸியஸின் திட்டப்படி, இரவில் அந்த மரக்குதிரையின் உள்ளே ஒளிந்து கொண்டிருந்த க்ரேக்க வீர்ர்கள், கோட்டைக் காவலர்களைக் கொன்று, கோட்டைக் கதவைத் திறந்து விட, கடலில் சற்று தூரத்தில் இருந்த க்ரேக்க வீர்ரகள் மீண்டும் திரும்பி வந்து, கோட்டைக்குள் நுழைந்து, ட்ராய் நகரத்தை வீழ்த்தினர்.


இந்த போர் முடிந்தவுடன் ஓடிஸியஸ் தன் வீர்ர்களுடன் மீண்டும் தன் தாய் நாடான இதாகாவிற்குத் திரும்பிய கதையே ஒடிஸி என்று கூறப்படும். 


இப்பொழுது, இந்தப் பயணத்தில் நடந்த சம்பவங்களைச் சற்று பார்ப்போம்.


ஓடிஸியஸும் அவரது படையினரும் ட்ராய் நகரிலிருந்து 12 கப்பல்களில் பயணித்தனர்.  சில நாட்கள் பயணித்தப் பின் அவர்கள் ஒரு நிலப்பரப்பைப் பார்த்தனர். அது சிகானியன் தீவு. ஓடிஸியஸ், உபதளபதி, யூரிலொகஸின் தூண்டுதலால் கப்பலை நங்கூரமிட்டு நகரத்தைத் தாக்க விழைந்தான். அத்தீவு மக்கள் ட்ராய்க்கு நெருக்கமானவர்கள் என்பது ஒரு காரணம். படையினரைக் கண்ட தீவின் பெண்கள், குழந்தைகள் அனைவரையும் நகரத்தை விட்டு அருகிலுள்ள மலைகளுக்குச் சென்று தப்ப படையினர் நகரத்தை சூறையாடி கொள்ளையிட்டனர். அதில் தீவின் ஆண்கள் அனைவரையும் படையினர் கொன்றுவிட ஓடிஸியஸ், அப்பல்லோ கோவிலின் காப்பாளரான மரோன் என்பவரைக் காப்பாற்றினான். படையினரையும் உடனடியாக கப்பலுக்குத் திரும்ப கட்டளையிட்டான். அப்போழுது மரோன் அவனுக்கு 12 ஜாடி மதுக்களை அவனுக்கு வழங்கினார். படையினர் கிடைத்த மதுவை உண்டு அங்கு கரையிலேயேத் தூங்கிவிட்டனர்.


மறுநாள் விடிவதற்குள், சிகானியர்கள் தங்களின் நன்பர்களான மலைவாழ் மக்களுடன் சேர்ந்து படை வீர்ர்களைத் தாக்க ஆரம்பித்தனர். தாக்குப் பிடிக்க முடியாமல் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இறக்க, மீதமிருந்த வீர்ர்களுடன் கப்பலுக்கு அவசரமாகப் பின்வாங்கினர். கப்பலில் ஓடிஸியஸும் யூரிலோகஸும் பெரும் வாக்குவாத்த்துடன் சண்டையிட மற்ற வீர்ர்கள் அவர்களைச் சமாதானப் படுத்திப் பிரித்தனர்.


அவசரத்தில் தீவிலிருந்துத் தப்பிக்க திசையைமாற்றி, தென் திசையை நோக்கி, கப்பல் செலுத்தப்பட்டது. அங்கே அவரகள் லோடஸ் ஈட்டர்ஸ் எனப்படும் தாமரை-உண்ணிகள் என்பவர்கள் வசிக்கும் தீவிற்கு வந்து சேர்ந்தனர். முதலில் அவர்களுடன் சேராமல் தனித்து தங்கியிருந்த வீர்ர்கள் பின்னர் அவர்களுடன் சேர ஆரம்பித்து அவர்களுடன் அங்குள்ள தாமரை மலர்களை உண்ண ஆரம்பித்தனர். அதன் போதையால் அவர்கள் தங்கள் நாடு, வீடு, குடும்பம் ஆகியவற்றை மறந்து அங்கேயேத் தங்கிவிட்டனர்.


வேறு வழியில்லாமல், ஓடிஸியஸ் மீதமுள்ளவர்களுடன் சேர்ந்து போதைக்கு அடிமையானவர்களில் முக்கியமான வீரகளை அவர்கள் மயக்கம் தெளிவதற்குள் தூக்கி கப்பலில் போட்டு, மற்றவர்களை அத்தீவிலேயே விட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.


சில நாட்கள் பயணம் செய்த பின்னர் அவர்கள் ஒரு விசித்திரமான தீவுக்கு வந்து சேர்ந்தனர். ஓடிஸியஸும் படைவீர்ர்களில் சிலரும் தீவைப் பற்றி அறிய தீவிற்கு உள்ளேச் சென்றனர். சில தூரம் சென்ற பின் அவர்கள் ஒரு பெரிய குகையை அடைந்தனர். அது மிகப் பெரிய வாழ்விடமாகவும் அதில் ஆட்டு மந்தைகள் இருப்பதையும் கண்டனர். அதில் சில ஆடுகளை வெட்டி அதன் மாமிசத்தை உண்டனர். அது பாலிஃபீமஸ் என்ற சைக்ளோப்ஸின் (மிகப் பெரிய ஒற்றைக் கண் அரக்கர்கள்) குகை. இதற்குள் குகைத் திரும்பிய பாலிஃபீமஸ், ஒரு பெரிய பாறையால் மூடி அடைத்து அவர்களை விசாரிக்க ஆரம்பித்தான். ஓடிஸியஸ் தாங்கள் அடையாளங்களைக் கூறாமல் தாங்கள் கடல் பயணிகள் என்றும் வழி தவறி அங்கு வந்த்தாகவும் கூறினான்.


ஆனால், தன் ஆட்டு மந்தையிலிருந்து ஆடுகளைக் கொன்று அவற்றைத் தன்னைக் கேட்காமல் உண்டது தெரிந்ததும் பாலிபீமஸுக்குக் கோபம் வந்துவிட்டது. அவர்களை வெளியேற அனுமதிக்காமல் தடுத்து, படை வீர்ர்களில் இருவரைச் சுவற்றில் அடித்துக் கொன்றுத் திங்கத் துவங்கினான். ஒடிஸியஸ், பாலிபீமஸைச் சமாதானம் செய்ய தான் கொண்டு வந்திருந்த பலமான மதுபானத்தை அவனுக்கு வழங்கினான். போதையில் மயங்கிய பாலிபீமஸின் கண்ணில், ஓடிபியஸ் அங்கிருந்த கொள்ளிக் கட்டையால் குத்தி குட்ருடாகினான். வலி தாங்காமல் கத்திய பாலிஃபீமஸ் யார் குத்தியது என்று கத்த, பெயர் சொன்னால் ஏதோ விபரீதம் நடக்கும் என்பதை ஓடிபியஸ் புரிந்து கொண்டான். எனவே, கண்ணைக் குத்தியது “யாரும் இல்லை” (Nobody) என்று கூறினான். ஆனால், வலியில் துடித்த பாலிஃபீமஸின் கூக்குரலைக் கேட்ட அவனது சக சைக்லோப்ஸ்கள் குகைக்கு வெளியே நின்று என்ன நடந்தது என்று கேட்டனர். பாலிஃபீமஸ் தன் கண்ணைக் குத்தியது யாரும் இல்லை என்று கூற, மற்ற சைக்லோப்ஸ்கள் பாலிஃபீமஸை முட்டாள் என்று கூறி சென்று விட்டனர்.


அடுத்த நாள் காலையில், ஓடிபியஸும் அவன் படையினரும் ஆடுகளின் வயிற்றில் தங்களைக் கட்டிக் கொண்டு, பாலிபீமஸ் அவற்றை மேய்க்கச் செல்லும் பொழுது  குகையிலிருந்துத் தப்பித்தனர். ஆனால், அங்கிருந்து வெளியேரும் பொழுது பாலிஃபீமஸை கேலி செய்யும் விதமாக ஓடிஸியஸ் கண்ணைக் குத்தியது தான் தான் என்று தற்பெருமையாக்க் கூற அவனிருந்த திசையில் ஒரு பெரிய பாறையை பாலிபீமஸ் தூக்கி எறிந்தான். அதிர்ஷ்ட வசமாக அது ஓடிஸியஸ் மேல் விழாமல் அவன் தப்பினான். அவமானத்தைத் தாங்காத பாலிஃபீமஸ், தன் தந்தையான போஸிடானிடம் (Poseidon – அவர் 12 ஒலிம்பியன் கடவுள்களில் ஒருவர்; கடல், புயல், நிலஅதிர்வு, குதிரைகள் ஆகியவற்றுக்கு அதிபதி) முறையிட்டான். இதனால், ஒடிஸியஸ் போஸிடானின் கோபத்திற்கு உள்ளானான்.


சைக்லோப்ஸிடமிருந்து தப்பிய ஓடிஸியஸ், காற்றுக் கடவுள் ஏயோலஸின் தீவான ஏயோலியாவை வந்தடைந்தான். அங்கு, ஏயோலஸ் அவனுக்கு காற்று நிறைந்த பையைக் (ox-hid bag என்ற  bag of winds) கொடுத்தார். அதில் மேற்கு திசையைத் தவிர அனைத்து திசைகளிலும் வீசும் காற்று அடைக்கப் பட்டிருந்தது. அதன் மூலம் காற்றைக் கட்டுப்படுத்தி தன் நாட்டை எளிதில் அடைந்து விட ஓடிஸியஸ் தேவையான ஏற்பாடுகளைச் செய்தான். ஆனால், விதி வேறு விதமாக விளையாடியது.


வற்றை டுத்தப் பதிவுகளில் பார்ப்போம்.

திங்கள், மார்ச் 02, 2020

சுதந்திரக் கிள்ளை


சுதந்திரக் கிள்ளை

[வல்லமை இதழின் 246-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


அன்னையுடன் ஆடிப்பழகும்
அற்புத வாய்ப்புமின்றி
சுற்றி வட்டமிட்டு
கற்றிடுமோர் சூழலற்று
கூண்டில் அடைபட்டு
வேற்றுமொழி ஓதி தினம்
வாடி வதங்கிடும்
பள்ளிச் சிறார் போலன்றி,
புனம் தோறும் சுற்றி நாளும்
புதுக் காற்றைச் சுவாசித்து
தினைவளத்தைத் தான் புசித்து
திளைத்திட வா! என் கிள்ளாய்!