செவ்வாய், ஜூன் 26, 2012

பிற இரத்தினக் கற்கள்


நவரத்தினம் அல்லாத வேறு சிறப்புடைய கற்கள்

நவத்தினங்களைப் பற்றி இரண்டு இடுகைகள் (பாகம் 1, 2) இட்டிருந்தேன்.
நவரத்தினங்கள் மட்டுமன்றி வேறு சில இயற்கைக் கற்கள் கிடைப்பதற்கு அரிதாகவும் விலை உயர்ந்ததாகவும் இருப்பதோடு மக்களால் நீண்ட காலமாக விரும்பி அணியப்பட்டும் வருகிறது.

நவரத்தினங்கள் பொதுவாக ஜோதிட ரீதியாக அணியப்படுபவை. சில கற்கள் நவரத்தினத்திற்கு மாற்றாகவும் சில அலங்காரத்திற்காவும் அணியப் படுகின்றன. அத்தகைய கற்கள் சிலவற்றைப் பார்ப்போம்…

ஜேட்:    வெளிர் பச்சை மற்றும் அடர் பச்சை நிறத்தில் இருக்கும் இது ஒரு ஒளி புகாக் கல் ஆகும். மரகதத்திற்கு மாற்றாக இது பயன் படுத்தப் படுகிறது. நல்ல கடினத்தன்மையுடன் உள்ள இக்கல்லும் ஓர் அரிய வகைக் கல்லே. ஸர்பெண்டைன் என்ற கல் இந்த ஜேட்-க்கும் போலியாகக் கிடைக்கிறது.

ஸ்படிகம்:       ஆங்கிலத்தில் இது க்வார்ட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நிறமற்றது. நிறமுள்ள ஸ்படிகக் கற்களும் உள்ளன, ஆனால் அவை வேறு பெயர்களால் வழங்கப்படுகின்றன.

கத்திரிபூ நிறத்தில் இருப்பது ஆங்கிலத்தில் அமெதிஸ்ட் என்றழைக்கப்படும் செவ்வந்திக் கல்.

சிட்ரின் க்வார்ட்ஸ் என்ப்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

வெவ்வேறு வண்ண க்ரிஸ்டல்களைப் பாருங்கள்...

ஓபல்:    வெள்ளை நிறத்தில் ஒளிபுகாத கல்லான இது வெளிச்சத்தை பல வித வர்ணங்களை பிரதிபலிக்கும். இந்த பிரதிபலிப்பு ஓபலஸ்கீன்ஸ் என்று ஆங்கிலத்தில் கூறப்படும். இதையொட்டியே இக்கற்கள் ஓபல் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கல் சூடானால் வெடித்துவிடும், எனவே இதனை அடிக்கடி நீரில் ஊற வைக்க வேண்டும்.

லேபிஸ்லசூலி:        கருநீல நிறமுடைய ஒளி புகாக் கல். மேலே தங்க நிறப் புள்ளிகளுடன் இருக்கும். நீலக்(ப்ளு ஸஃபையர்) கல்லுக்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவர்.

ப்ளட் ஸ்டோன் :     இக்கல் சிகப்பு புள்ளிகளுடன் பச்சை நிறத்தில் இருக்கும். மேலை நாட்டு  ஜோதிடத்தில் வயிற்றில் கட்டிகள், பாதிப்பு இருப்பவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.
[சென்ற வருடம் சூபர் ஸ்டார் வயிறு சம்பந்தப் பட்ட நோய்க்காகச் சிகிச்சை எடுத்தார் என்று படித்த பொழுது அவர் நடித்த இந்தப் படத்தின் பெயரும் ஞாபகம் வந்தது].

மாலகைட் :    இதுவும் பச்சை நிறமுள்ள ஒளி புகா கல் தான். ஆனால், இதில் கருப்புப் புள்ளிகள்/கோடுகள் இருக்கும்


ஹெமடைட் :  இது கருப்பு நிறமுடைய ஒளி புகாக் கல். கன் மெட்டல் போலவே இருக்கும்.

சூர்ய காந்தம் : சிகப்பு கலந்த ஆரஞ்சு நிறத்தில் வெல்வெட் போன்ற ஜொலிப்புடன் இருக்கும். இது மாணிக்கத்திற்கு மாற்றாக பயன்படுத்தப் படுகிறது. ராஜவர்த்தினி என்ற செயற்கை கல் சூரியகாந்தக் கல்லின் போலி.

ஜிர்கான் :      இது வெள்ளை, பிரவுன், நீலம், பச்சை ஆகிய நிறத்தில் கிடைத்தாலும் வெள்ளை தான் மிகப் பிரபலம். ஏனென்றால், இது வைரத்திற்கு மாற்றாகப் பயன்படுத்தப் பட்டது.


டர்மலைன்ஸ் :        இவை பச்சை, சிகப்பு, நீலம் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன. மரகதம், மாணிக்கம், நீலம் ஆகியவற்றின் மாற்றாகப் பயன் படுகின்றன.

 டோபாஸ் :    சஃபையர் போலவே வண்ணங்களில் கிடைக்கிறது. மஞ்சள் வண்ணம் புஷ்பராகத்தின் மாற்றாகக் கொள்ளப்படுகிறது.

அலெக்ஸாண்டிரைட் :      இது க்ரைஸ்பெரைல் வகையைச் சேர்ந்தது. சூரிய ஒளியில் பச்சையாகவும் செயற்கை ஒளியில் சிகப்பாகவும் மாறும் தன்மை கொண்டது.

பெரிடாட் :     பச்சையும் மஞ்சளும் கொண்ட ஒளி ஊடுறுவும் கல்.

அக்வாமெரைன் :     கடல் நீர் நிறத்தில் அதாவது நீல நிறத்தில் இருந்தாலும் இதுவும் மரகதத்தின் மாற்றாக இருக்கும். இது ஒரு ஒளி ஊடுறுவும் கல்.

சந்திர காந்தம் :       சாதாரணமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் இக்கல் சில நேரங்களில் நீலம் கலந்த நிறத்திலும் கிடைக்கிறது.

டர்குவாய்ஸ் : கருப்பு வர்ணத்தில் கோடுகள் கொண்ட வான்நீல நிறம் கொண்ட கல்.

அயோலைட் : ஒரு புறம் நீலமும் மறு புறத்தில் மஞ்சள் அல்லது ப்ரௌன் நிறமும் கொண்ட டிகோரிஸம் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இருநிறத் தோற்றம் கொண்டது அயோலைட்.

இவற்றைத் தவிர, கார்னிட், பைரோப், அல்மேண்டைன், ஆம்பர், பெரிடாட், அசூரைட் போன்ற பல விதமான கற்கள் மக்களால் விரும்பி, சில நேரங்களில் நவரத்தினங்களுக்கு மாற்றாகவும், அணியப் படுகின்றன.8 கருத்துகள்:

 1. ப்ளாக் என்கிற வடிவத்தை சரியாக பயன்படுத்தி படம் + விளக்கத்துடன் எழுதி உள்ளீர்கள் நன்று !

  பதிலளிநீக்கு
 2. கற்களைப் பற்றிய நல்ல அறிமுகம்...

  கலக்கறடா சீனு....

  பதிலளிநீக்கு
 3. இத்தனை கல் வகைகளைப் பார்த்தால் எங்கள் வீட்டில் உடனே ஆரம்பமாகும் பிக்கல்! பிடுங்கல்! எனக்கு சிக்கல்!

  (அப்பு! அப்படியே செங்கல் - என்று ஒரு விலை மதிப்பற்ற கல் இருக்கு தெரியுமா! நவரத்தினக் கற்களை விட அதுக்குத்தான் இப்போ விலை அதிகமாக்கும்!)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இத்தனை கல்(ற்)களை அடுக்கினால் எனக்கும் வயிறு கலக்கல் தான்.

   //அப்படியே செங்கல் - என்று ஒரு விலை மதிப்பற்ற கல் இருக்கு தெரியுமா! நவரத்தினக் கற்களை விட அதுக்குத்தான் இப்போ விலை அதிகமாக்கும்!//
   அதற்குக் காரணமாக இருப்பதும் ஒரு கல் தான். அது பதுக்’கல்’. (பத்து’கல் அல்ல)

   நீக்கு