புதன், ஜூன் 06, 2012

வெள்ளி கரும்புள்ளி


இன்று காலை சூரிய உதயத்திலிருந்து காலை 10.28 நிமிடம் வரை, சூரியனைப் பார்த்திருந்தீர்கள் என்றால் அதில் சூரியனுக்கு இடது பக்க மேல் பகுதியில் ஒரு புள்ளி மெதுவாக அதன் மேல் புறத்தை நோக்கி பயணித்து மறைந்ததைப் பார்த்திருக்கலாம். இது ஒரு சாதாரண புள்ளி இல்லை. வெள்ளி கிரகம் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்த ஒரு நிகழ்வாகும். அதாவது, கிட்டத்தட்ட சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் வந்தால் நிகழும் ஒரு சூரிய கிரகணம் போன்றது. ஆனால், வெள்ளிக்கும் பூமிக்கும் இடையிலான தூரம் சந்திரனின் தூரத்தை விட அதிகம் என்பதால் வெள்ளி, சந்திரனைப்போல் ஒரு பெரிய பந்தாக இல்லாமல், ஒரு சின்ன புள்ளியாகத்தான் தெரியும்.

இதே போல ஒரு நிகழ்வு 2004-ஆம் ஆண்டு ஜூன் மாத்ததிலும் நிகழந்தது. இப்பொழுது இதைத் தவற விட்டவர்கள், அடுத்து 8 ஆண்டுகள் கழித்து 2020-ல் இதைப் பார்க்கலாம் என்று நினைத்தால் அது தவறு.

சாதாரணமாக வெள்ளியின் பயணம், அடுத்தடுத்து ஜோடியாக இரண்டு முறை சூரியன்-பூமி ஆகியவற்றின் இடையில் 20 ஆண்டுகளுக்குல் நிகழும். அதே நேரம் ஒரு ஜோடி நிகழ்வு கடந்த பின் அடுத்த ஜோடி நிகழ 105-125 வருடங்கள் ஆகும்.

வெள்ளியின் பாதையை க்ரேக்கர்களும் இந்தியர்களும் எகிப்தியர்களும் சீனர்களும், பாபிலோனியர்களும் கணித்துள்ளதாகக் கூறப்பட்டாலும், தற்கால அறிவியல் முறைக் கணிப்பின்படி, கெப்ளரின் 1631-ஆம் ஆண்டு கணக்கீட்டைக் கொண்டு, பிரிட்டிஷ் வானவியல் நிபுணர் ஜெரெமியா ஹொரொக்ஸ் 1639-ல் இது மாதிரி ஒரு நிகழ்வை கணித்த்து தான் முதன் முதலாக ஆவணப்படுத்தப் பட்ட நிகழ்வு. [1631-ல் முதலில் இந்த வெள்ளியின் பயணம் சூரிய-பூமி இடையில் நிகழ்ந்தாலும் அதை முன் கூட்டியே கெப்ளர் கூறாததால் மற்றவர்களால் அதை உறுதிப்படுத்த முடியாமல் அது ஆவணப்படுத்தப் படவில்லை] இதைத் தொடர்ந்து 105 ½ ஆண்டுகளுக்குப் பின் 1761, 1768   ஆண்டுகளில் ஜோடி நிகழ்வுகள் நடந்தன. அதற்குப் பின் 1874, 1882 ஆகிய ஆண்டுகளில் அடுத்த ஜோடி நிகழ்வுகள் நடந்தன. தற்போது 2004-2012 ஆகிய ஆண்டுகளில் இது நிகழ்ந்துள்ளது. அடுத்த நிகழ்வு நடைபெற 105 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதாவது, 2117, 2125 டிசெம்பரில் தான் அடுத்த நிகழ்வு நடைபெறும். தொடர்ந்து 2247, 2255; 2360,2368; 2490-2498 ஆகிய ஆண்டுகளில் இந்த நிகழ்வு நடக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
தில்லியில் இன்று, காலை சிறிது நேரம் மேகமூட்டம் இருந்தாலும், சுமார் 8 மணியளவில் இதை ரசிக்க முடிந்தது.

2 கருத்துகள்: