வியாழன், மார்ச் 14, 2013

ஸாவித்ரி புராணம்மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் துவங்கும் பொழுது காரடையான் நோன்பு என்ற விரதம் இருப்பார்கள். இது எமனிடமிருந்து ஸத்யவானின் உயிரை ஸாவித்ரி போராடி மீட்டதாக்க் கூறுவர்.

விரதத்தின் பொழுது ஸாவித்ரியின் கதையைப் படிப்பர். இந்த ஸாவித்ரியின் கதையை கதா காலட்சேப வடிவில் கேட்பதும் உண்டு. பாடல்களில் எழுதியவர் தன் பெயரை நீலகண்ட தாசர் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார். இயற்பெயர் தெரியவில்லை. அந்தப் பாடல்கள் இதோ…

ஓம்
வினாயகர் துதி           
(விருத்தம்)          ராகம்: ஹம்ஸத்வனி
          அனைத்துலகிற்கும் ஆதிதேவனாய் விளங்கும்
          ஆனை முகத்தானை அடிபணிந்தேத்தி
          பதியின் இன்னுயிர் காத்த பாவையவள்
          சரிதமதை ஈண்டுரைக்க ஈசன் மகன் காப்பாமே

பல்லவி (ஹம்ஸத்வனி; ஆதிதாளம்)
உமையருள் பாலனே உவந்தருள் செய் – சிவன் மகிழ்
உமையருள் பாலனே உவந்தருள் செய் –பரமசிவன் மகிழ்  (உமை)

அனுபல்லவி
சுமை நீங்க வினை சுமை நீங்க பழவினை
சுமை நீங்க  மெய் ஞான உபதேசம் செய்து
எமை ஆண்டருளும் சண்முக சகோதரனே                (உமை)

சரணம்
காலனை உதைத்துப் பாலனைக் காத்திட்ட
சீலன் திருநீல கண்டனும் பணியும்
மூலனே நீல கண்டனும் பணியும் – ஆதி
மூலனே திரு நீலகண்டனும் பணியும் ஆதிமூலனே
தொழும் அன்பர் துயர்தனைத் தீர்க்கும் தயாளனே
கஜாஸுர ஸம்ஹாரனே வீர ப்ரதாபனே                  (உமை)
***
மத்ர தேசத்து மஹராஜன் மனம் வருந்தி, புத்ரன் இல்லாக்குறை தீர  தன் மனை விட்டு, சத்ர சாமரம் துறந்து கானகம் சென்று விசித்ரமான தவம் புரிந்தான் மன்னன் அஸ்வபதி தானே

பாட்டு (சங்கராபரணம்; ஆதிதாளம்)
பல்லவி:      
மன்னன் தவம் புரிந்தான் கானகமேகி
                   மக்கட் பேற்றை வேண்டியே தேவியைப் பணிந்து    (மன்னன்)
அனுபல்லவி:
                   தன்னிகரில்லாமல் தலைவன் தன் நகர் விட்டுத்
                   தன்னிலை மறந்து த்யானத்தில் ஆழ்ந்து                   (மன்னன்)
சரணம்:
                   இன்னல் சூழும் வெங் காட்டிலமர்ந்து
                   அன்னபான மொழித்து ஆடம்பரம் விடுத்து
                   பன்னும் பனுவலும் பத்திக் கொண்டு தொழுது
                   என்னரும் வரதமும் விரதமும் கொண்டு
(துரிதகாலம்)
                   மன்னன் மனமகிழ மண் சுமந்துழைத்து
                   திண்ணன் அளித்த புலால் அமுதையும் உண்டு
                   புன்னகையோடன்பன் காலால் உதைபட்ட
                   மன்னும் புகழ் சுந்தரனிடம் சேர்ந்தானை போற்றி     (மன்னன்)


கலைவாணி ப்ரத்யக்ஷம்
விருத்தம்: (மோஹனம்)
                   முத்தன்ன வெண்ணகையாள் முழுமதி வண்ணத்தினாள்
புத்தகமும் மாலையும் கையில் ஏந்தும் கலைவாணி
சித்சக்தி ரூபமாகி வந்து பக்திக்கு மெச்சினேன்
வேண்டும் வரமேதென்றாள்
உத்தமன் அச்வபதியும் பிள்ளை வரம் பெற்று
சித்தம் மகிழ்ந்தானே
பல்லவி: (மோஹனம்; ஆதி தாளம்)
                   பாவையாய் பிறந்தாளே பாரோர்
புகழும் பாரதி மன்னன் கலி தீர                      (பாவையாய்)
அனுபல்லவி:
                   பூவை நிகர்த்த பொன்மேனியும் கொண்டு
                   புவனம் வியக்கும் பேரறிவுங்கொண்டு (பாவையாய்)
சரணம்:
                   நாராயண நாமம் நாவும் ஜபிக்க
                   நாரத மாமுனி அங்குறைந்தார்
                   பார்வேந்தன் மகிழ ‘ஸாவித்ரி’ யெனப் பேரிட்டு
                   பாரோர் புகழும் புண்ணிய பாவையாவாள் என்றார்
(துரிதம்)       சீலமும் சிறந்த சித்திகளும் பெற்றும்
                   காலனையும் கதி கலங்கிடச் செய்யவும்
                   ஆலமுண்டு அமரர்க்கருள் புரிந்திட்ட
                   நீலகண்டன் தேவியின் அருளிவளுக்குண்டென்றார்
(பாவையாய்)
விருந்த்தம்:
          கண்டோர் மயங்கும்  கட்டழகியாய்
          வண்டார்க்குங்குழலி வண்ண எழிலுருவாய்ப்
          பெண்டிரும் கண்டுவக்கும் பண்பின் உருவாய்த்
          திகழ்ந்தாளே எண்டிசையும் பரவும் புகழ் படைத்தாளே!

விருத்தம்: (ரஞ்சனி)
          திசை திசைக்கும் மன்னன் தூதுவிடுத்தான்
          தன் மகளுக்கிசைந்த மணாளனைத் தேடிவரத்
          தூதுவரும் பார்மிசை எங்கும் காணாது சோர்வுறப்
          பாவையும் இசைந்து சென்றாள் தன் நாயகனை நாடியே
பல்லவி (ரஞ்சனி; ஆதிதாளம்)
          கண்டாளே மனம் கொண்டாளே
          தன்னுயிர் நாதனைக் கானகம் நடுவினில்       (கண்டாளே)
அனுபல்லவி)
          கண்டாளே த்யுமத் ஸேனனின் மைந்தனைத்
          தொண்டு செய்து பெற்றோருடன் வாழும் ஸத்யவானைக்
`(கண்டாளே)
சரணம்:
          கண்டாளே தன் மந்திரி முதலோர்க்கு
          விண்டாளே தனக்கிசைந்தவன் இவனென்று
          பண்டு செய்த புண்ணிய பலனிவன் என்றாளே (இங்கு)
          தொண்டு செய்து வாழ்வதென் கை தவமென்றாளே           (கண்டாளே)
விருத்தம்:
          ஸத்யவானைப் பற்றிய சரித முழுவதும் அறிந்தனர்
          மதிமந்திரி மார்களும் ஸாவித்ரியுடன் நாட்டையடைய
பத்தியிர் சிறந்த மாமுனிவர் நாரதரும் அங்கு தோன்றிடப் பதி தன்னைத் தேர்ந்தெடுத்த கதையை உரைத்து வணங்கினாளே பொற்பாவை

விருத்தம் (கீரவாணி)
          பண்பினில் சிறந்த  நாயகனைக் கண்டு கொண்டாய் அய்யமில்லை,
          நாண் கண்ட மாந்தரில் இவனைப் போல் உத்தமனில்லை
          எண்டிசைத் தேடினாலும் இவனுக்கோர் இணையுமில்லை,
          கொண்ட கணவனுடன் கூடி ஸுகித்திருப்பாய்
          பெண்டு பிள்ளைகளும் ஈன்று வாழ்வாய் என தவமுனி வாழ்த்தினார்.
          ஆனாலும், கேள் பெண்ணே!
          நானிலமும் சுற்றி முக்காலும் உணர்ந்த ஞானத்தினால் சொல்கிறேன்
          இவன் இன்னிலத்தில் வாழும் காலம் ஓராண்டுதான் என் ஆனதால்
          வேறு துணை நாடுவது நலமென்றார்.

விருத்தம் (ஸஹானா)
          மன்னன் இது கேட்டு மனம் வருந்திக்
          கண்ணானப் பெண்ணின் வாழ்வு கெடவோ!
          என்னால் இயலாதென்றான்
          பின்னால் வருவதறிந்தும் பேதமையால்
          தன்னாவி இழப்பாருண்டோ என துடித்தான் – தன்
          இன்னுயிர் மகளை மனந்தேற்றி
வேறு வரன் தேட வேண்டினனே

விருத்தம் (ஆரபி)
          தவமுனிவரையும் தாய் தந்தையரையும் வணங்கி
          பாவை அதிதீரமுடன் செப்பலுற்றாள்
          இவ்விதயத்தில் ஒருவனைக் கொண்டேன்;
          என் ஆவியுடன் இணைத்துவிட்டேன்;
          இவ்வையகமே எதிர்த்தெழுந்தாலும்
          இனி என் மனதில் மாற்றாமில்லை; நாதன்
          இவனையன்றி மற்றொருவனை ஏற்பதற்கில்லை;
          என்றுரைத்தாள் மங்கையருள் மாணிக்கம் ஒத்தவள் தானே!

மங்கையின் மனவுறுதி கண்ட மாமுனியும் மகிழ்ந்து வாழ்த்துக் கூறிச் சென்றார். மன்னவனும் தேறித் தன் மகள் மனதுக் கிசைந்த மணமுடிக்க இசைந்தானே.

திருமணம்
விருத்தம் (ஹிந்தோளம்)
          நகர முழுவதும் திருவிழாக் கோலம் பூண,
          நகர மாந்தரும் தம் தலைவியைப் பேண,
          நாற்றிசை மன்னவரும் பெரியோர்களும் காண,
          உற்றாரும் பெற்றாரும் பெருங்களி கூறத்
          திருமணஞ்செய்தனர் ஸாவித்ரி ஸத்யவானுமே
பல்லவி (ஹிந்தோளம்; ஆதிதாளம்)
          திருமணம் கொண்டருளினார் ஸத்யவானும்
          தேவியும் திருமணம் கொண்டருளினார்
அனுபல்லவி
          அறுமணிகள் பூண்ட அற்புத மண்டபத்தில்
          திருநீல கந்தரனும் உமையும் சேர்ந்தார்ப்போல்  (திருமணம்)
சரணம்
          மங்கல வாழ்த்துக் கூறிப் பெண்கள் கொண்டாடத்
          தங்கச் சிலையெனத் தாதியர் போற்றிட
          மன்காப் புகழ் பெறும் பாவை இவளெனப்
          பொங்காதரவுடன் முனிவரும் வாழ்த்திட
(துரிதம்)
          செங்கமலபாதச் சிலம்பொலிக்கத்
          திங்களொத்தனுதலில் திலகமிலங்கச்
          சங்கமொத்த மார்பில் தாலியும் ஜொலிக்கப்
          பங்கயப் பொற்பாவை தன் நாதனுடன் அமர்ந்து  (திருமணம்)
விருத்தம்:
          மாந்தரெல்லாம் மனம் நெகிழ
          மன்னன் தன் மனைவியுடன் மனங்கலங்க
          மகராஜியும் தன் நாதனைத் தொடர்ந்து
          கானகம் ஏகினாளே!


விருத்தம் (மாண்டு)
          மரங்களடர்ந்த கானகம் நடுவே – தன்
          மனதுக்கிசைந்த மணாளனுடன்
          மாமனும் மாமியும் மன நிறைவுடன் போற்ற
          மகிழ்வுடன் வாழ்ந்தாள் மங்கை ஸாவித்ரி.
பல்லவி (மாண்டு)
          ஆனந்தமாகவே வாழ்ந்திட்டாள் – பாவை
          ஆறுயிர் அன்பனுடன் வனமதில்                   (ஆனந்த)
அனுபல்லவி
          ஆருமறியா வனமே விண்ணுலகமாய்க் காண
          ஆத்மானந்தமுடன் தூயதம்பதியரா                (ஆனந்த)
சரணம்
          அன்னை பராசக்தியை அனுதினம் பூஜித்தும்
          தன்னை மறந்து நித்தம் த்யானத்தில் ஆழ்ந்தும்
          தன்னுயிர் நாதனை என்றும் பிரியாது பல்
          இன்னல்களையும் தாங்கி இன்முகம் காட்டியே         (ஆனந்த)
விருத்தம் (மாண்டு)
          ஓராண்டு காலம் இவ்விதம் ஓடிடக்
 காற்குழலாள் தன் நாதன் பாரிதனை விட்டு
நீங்கும்நாள் நேர் கொண்டதைக் கண்டாள்
மனம் கலங்கினாளே!

விருத்தம் (ஸிந்து பைரவி)
          சென்று வருகிறேன் கனிகள் கொணர
          என்றுரைத்த நாதனி இருத்தி
          என்றும் இல்லாதொரு ஆசை மனதில்
          இன்று உதித்ததென்றாள்;
          நானும் பின் தொடர்வேன் என்றாள்.
          அந்தகாரம் தாய் தந்தையரை விட்டு
          இந்த கானகத்திற்குப் பூங்கொடியாள் நீ
          வந்தாள் உன் மென் மலர்பாதம்
          நொந்து போகுமே,
          எனக் கணவன் உரைக்க ஸுந்தரியும்
          தன் மாமனிடம் வேண்டலுற்றாளே.
பல்லவி (ஸிந்துபைரவி)
          இன்றொரு வரம் தருவீர் ஐயனே!
          என் நாதனுடன் சென்று வர                (இன்றொரு)
அனுபல்லவி
          கனிகள் எடுத்து வருவேன் தேவிக்குகந்த
          பனிமலர் கொணர்வேன் போய்வர வேண்டுகிறேன் (இன்றொரு)
சரணம்
          கானகம் முழுவதும் கண்டிட விழைந்தேன்
          காதவழி யாயினும் நடந்திட வேண்டுகிறேன்           (இன்றொரு)
வ்ருத்தம்
          அதிவிரைவில் வந்திடுவோம் என்று
          மதிமுகத்தாளின் உரை கேட்ட
          பதியின் தாய், தந்தையரும் மகளின் மனங்குளிர
          அதிமகிழ்வுடன் அனுமதி தந்தாரே!
          ஆனந்தமாகத் தன் நாதனைத் தொடர்ந்தாள்;
          கானகம் தனைக் களிப்புடன் கடந்தாள்;
          வானமளாவும் மரம் கொடிகளைக் கண்டாள்;
          மனம் மகிழ்ந்தாளே மங்கை ஸாவித்ரி!

வ்ருத்தம் (ப்ருந்தாவன சாரங்கா)
          இங்ஙனம் வனமதில் மகிழ்வுடன் திரிந்த பின்னே
          அங்கோர் கனி நிறைந்த தருவைக் கண்டார்.
          செங்கையேந்தி ஏந்திழையாள் ஆவலுடன் நிற்கப்
          பொங்கும் ஆனந்தமுடன் தாவி ஏறினான் அண்ணலுமே
பல்லவி
          தாவியே ஏறினான் அண்ணலுமே
          தருமீதினில் இனிய கனிகளைப் பறித்திட                (தாவியே)
அனுபல்லவி
          ஆவியெல்லாம் ஒருங்க (கீழே) விழும்
          கனிகளை ஆவலுடன் ஏந்தி (அங்கையில்) (ஆவலுடன்)
          மங்கை தான் நிற்க                                                 (தாவியே)
சரணம்
          காத்திருந்தார் போல் கொடும் காலன்
          அங்கு வந்துற்றான் பறித்த கனி என
          நிலத்தில் வீழ்ந்த நாதனின் சாய்ந்த
          சிரந்தனைத் தன் மடிமீதிருத்தி மாதவத்தாள்
          மனத்திடம் கொண்டு நோக்க
துரிதம்
          கண்கள் மங்கக் கால்கள் சோர
          அங்கமெல்லாம் விதிர்த்து விதிர்த்து வாட
          அந்தகனின் பாசக்கயிற்றினால் கட்டுண்டு
          தன் ஆவிதனைத் துறக்க                                         (தாவியே)

விருத்தம் (பாகேஸ்ரீ)
          (ஸாவித்ரி)
          நிலமதில் வீழ்ந்த நாதனைத் தாங்கிய
          குலமகள் தன் தவ வலிமையால் கால தேவனை
          அங்கு கண்டாள் கலக்கமின்றியே அவன்
          திருவடி தனைப் பணிந்தாள்.

வ்ருத்தம் (அடாணா)
          (காலதேவன்)
          ”தருமத்தைக் காக்கும் கடன் எனக்குண்டு;
          கருமத்தைப் போக்க யாராலும் இயலாது.
          சிரந்தனைக் கீழே நிலத்தில் இடுவாய்; என்
          கருமத்தைச் செய்திட உதவி புரிவாய்;
காரிகையே!, உன் தவ வலிமை முன்
சோர்வுற்று நிற்க இனி இயலாது
          யாருக்குத் தான் மலரைப் பறித்தெரிய மனம் இசையும்?
          பார்மிசை உன் நாதனின் ஆவி இனி தரிக்க இடமில்லை;
          தடையேதும் செய்யாதே”, என்றுரைத்த
யமதர்ம ராஜனும் செல்லலுற்றான் ஸத்யவானின் ஆவி கொண்டு
அதிவேகமாகவே பின் தொடரும் பாவையைக் கண்டதுமே
மனச் சஞ்சலமுற்று உரைக்கலானான்
பல்லவி
          போய்வருவாய்ப் பெண்ணே! உன்
          நாதனின் சடங்குகளை இனி முடித்திடப்        (போய்) 
அனுபல்லவி
          மாய வாழ்விதென்பதை நீ அறியாயோ?
          பொய்யான உடலைவிட்டு நீங்குவதும் ஞாயமன்றோ        (போய்)
சரணம்
          மெய்ஞ்ஞானத்தால் என்னைக் கண்டு கொண்டாய்
          அந்த மெய்மணிக்கந்தரனிடம் சேர்ந்தாளை
          மெய்யன்புடன் போற்றித் துதித்த பயனிங்குற்றாய்
          இனிக்கடமைகளைக் கருத்தினில் கொண்டு             (போய்)

(ஸாவித்ரி)
பல்லவி (பாகேஸ்ரீ)
          எவ்வாறு செல்வேன் ஐயனே! என்
          இன்னுயிர் நாதனைப் பிரிந்து இனி நான்                          (எவ்வாறு)
அனுபல்லவி
          ஒவ்வாதிது என்பதை அறியீரோ!
          எவ்வாறு மனங்கொல்வேன் உயிர் வாழ்ந்திடவே              (எவ்வாறு)
சரணம்
          என்னுயிர் நாதன் இருப்பிடம் தானே - இனி
          என்வாழ்விடமென்றிருந்தேன் – அவன்
          பின்னால் வருவதும் ஞாயமன்றோ;
என்னையும் அழைத்துச் சென்றிடுவீரே!                   (எவ்வாறு)

(யமதர்மன்)
(அடாணா; ஆதிதாளம்)
          வேண்டும் வரம் ஒன்றைக் கேட்டிடுவாய்
          உன் நாதனின் உயிர் நீங்கலாக;
          மகிழ்ந்தளித்திடுவேன்; ஏற்றுக் கொள்வாய்
          மன நிறைவுடன் என் பணிதனைப் புரிந்திடப்          (போய் வருவாய்)

(ஸாவித்ரி)
(பாகேஸ்ரீ; ஆதிதாளம்)
          கருணைப் பெரும் பொருளே1 உந்தன்
          அருளுக்கு அடிபணிந்தேன் இரு கண்கள்
          இழந்த என் மாமி மாமனும் ஒளி பெற்று
          மீண்டும் பதவி பெறவும் அருள்வாய்!                       (எவ்வாறு)

(யமதர்மன்)
(அடாணா; ஆதிதாளம்)
          மீண்டும் தொடர்வதேன் பெண்ணே.
          உன் தவவலிமை கண்டு மகிழ்ந்தேன்
          இன்னொரு வரமும் வேண்டின் கேள்; உன்
          இன்னுயிர் நாதனின் ஆவிதனை விடுத்துப்              (போய் வருவாய்)

(ஸாவித்ரி)
(பாகேஸ்ரீ; ஆதிதாளம்)
          அருட்ஜோதியே! உன் கருணை இந்த
          வையகத்தில் எவருக்குண்டு? என்னருமை
          தந்தை நூறு புத்திரர்களைப் பெற அருள்வாய்
          என்றென்றும் உன்னை மறவேனே!                         (எவ்வாறு)
(யமதர்மன்)
(அடாணா; ஆதிதாளம்)
          இன்னும் தொடரும் உன்னை என் செய்வது
          என்றறியேன்; பெண்ணென்று தயைக் கொண்டேன்
          இனி ஒருகணம் பொறுக்கேன்? இன்னுமொரு
          வரம் தருவேன்; என்னைத் தொடரலாகாது              (போய் வருவாய்)

(ஸாவித்ரி)
(பாகேஸ்ரீ; ஆதிதாளம்)
          குலம் தழைக்க அருள்வாய்!
          என் மாமனுக்குக் குலக் கொழுந்தை நான்
          அளித்திட வேண்டும்; சகல சௌபாக்கியங்களும்
          பெற்று வாழ்ந்திட வேண்டும்                                  (எவ்வாறு)

(யமதர்மன்)
(அடாணா; ஆதிதாளம்)
          தந்தேன் வரம் தந்தேன்! இனி என் பணி
          இனிதே முடிய விடுவாய். என்றுரைத்த காலன்
          சடுதியே சென்றிட நினைத்தான். பின்னால்
          வரும் பாவையைக் கண்டதும், வெகுண்டு
          ஸத்தியம் தவறலாமோ பெண்ணே! என்று
          கேட்கப் பேதை இயம்புகிறாளே.

(ஸாவித்ரி)
வ்ருத்தம் (பாகேஸ்ரீ)
          வரம் தந்தீர் ஐயா! ஆயினும்;
          ஸர்வ வல்லமையுள்ள நீர் அறிய மறந்தீரோ?
          நீர் தந்த வரம் பொய்க்காமலிருக்க, அருமை
          நாதன் உயிர் பெற வேண்டுமன்றோ என்றாள்.

வ்ருத்தம் (தன்யாசி)
          காலனும் கணநேரம் கதி கலங்கி நின்றான்
          தன் பேதமையை அறிந்து உளம் தளர்ந்தான்
          கற்பின் உருவே! நீ என்னை வென்றாய்
          எனச் சிரம் தாழ்ந்தானே.

(யமதர்மன்)
பல்லவி (தன்யாசி; ஆதிதாளம்)
போய்வருவாய்ப் பெண்ணே! உன் இன்னுயிர்
          நாதனுடனே இணைந்து                               (போய்) 
அனுபல்லவி
          மெய்ஞ்ஞான வலிமைக்கு முன் தலை தாழ்ந்தேன்
          மெய்யான அன்புடனே பல்லாண்டு வாழ்ந்திடுவாய் (போய்)
சரணம்
          பாரினுள்ள மங்கையர் உன்னைப்
          பாருள்ள நாள் வரைப் போற்றிப்
          பணிந்திடுவார்; வாழ்த்தி மகிழ்ந்திடுவார்.
          இருவினைகளும் நீங்கிப் பேரின்பம் தனைக் காண்பாய்
          பெரும் தர்மமும் புத்ர பாக்யமும் பெருவாய்.                       (போய்)

வ்ருத்தம் (பைரவி)
          துயில் கலைந்தானைப் போல் எழுந்த நாதனைக்
          கயல் விழியும் கண்ணாரக் கண்டுவந்தனனே!
          தூயவனும் நடந்ததேதும் அறியாமல்
          தாமதமேன் நங்காய்? என,
          ஐயா! உங்கள் அறிதுயில் அழியக் காத்திருந்தேன்
          இனிச் செல்வோம் என்றாளே
பல்லவி (பைரவி; ஆதிதாளம்)
          தையல் செல்லலுற்றாளே! தன்
          தலைவனைத் தொடர்ந்து படர்ந்தாளே!                   (தையல்)
அனுபல்லவி
          பைய நடந்தாளே பாவை – கனிகளை 
          கையில் ஏந்திய வண்ணம்                    (தையல்)
சரணம்
          வையகம் புகழும் யமனையும் வெற்றி கொண்டு
          அண்ணலுடன் மங்கையும் தன் வாழ்விடம் சேர்ந்தாள்.
          அன்னை தந்தையர் கொண்ட மாற்றமும் கண்டாள்
          அந்தகரும் ஒளிபெற்ற விந்தைதனைக் கண்டாள்      (தையல்)
விருத்தம் (பைரவி)
          அரசினைப் பறித்த மாற்றாரும் மனம் மாறி
          அரசரைப் பணிந்து, தம்பிழைப் பொறுக்க வேண்டிட
          அன்புடன் த்யுமத்ஸேன மஹராஜன்
          அன்னவரையும் மன்னித்து, அரசை ஏற்றானே

(குந்தலவராளி; ஏகதாளம்)
          அன்னை தந்தை உள்ளம் மகிழ்ந்து
                   அழகி ஸாவித்ரியுடன் நடந்து,
          அடைந்தார் தன் நகரமதை
                   அரசோச்சி வாழ்ந்திடவே!
          இன்னல்கள் தீர்ந்த விந்தையை
                   இன்னமும் உணராமலே
          இன்னதென்று அறியாதொரு
                   இன்பமான உணர்வு கொண்டு
          உவந்தளித்த அரசை ஆள
                   உத்தமனும் மனமிசைந்தான்
          உன்னதமான வாழ்வு கண்டார்
                   உற்றாரும் உள்ளம் குளிர்ந்தார்.
          என்னே என் அன்னை அருள்!
                   என்றே பாவை தனக்குள் வியக்க
          என்றென்றும் மறவேனே அவள்
                   என்னின்னுயிர் காத்தக் கதையென்றுவக்க
          ஐந்திருவது புத்திரர்களை
                   ஐயன் அச்வபதியும் பெற்றான்
          ஐயமில்லை நடந்ததனைத்தும்
                   ஐயையவள் லீலையென்றான்
          ஒன்றாய் இருந்து, பலவாய் நிறைந்த
                   ஒளியின் அருளிதென உணர்ந்தார்
          ஓதும் அன்பர்க்கருளும் அன்னையை
                   ஒன்றியச் சித்தங்கொண்டேத்தி வாழ்ந்தார்

பல்லவி (சுருட்டி; ரூபகம்)
          சோபனம் சுப சோபனம்
          சோபனம் நித்ய சோபனம்
அனுபல்லவி
          சீலமிகுந்த    நங்கையருக்கும்
          சிற்றம்பலத்தானின் மங்கையவளுக்கும் (சோபனம்)
சரணம்-1
          மாசில்லாத அன்புடையாருக்கும்,
          மாதவத்தோர் போற்றும் அடியவருக்கும்
          ஞாலம் போற்றிடும் ஞாலமுள்ளார்க்கும்
          கற்பின் உருவாய் திகழும் மங்கையவர்க்கும்    (சோபனம்)
சரணம்-2
          பதியைத் தன்னுயிர் போலக் காத்திடும்
          பத்தினியர்க்கும், பரம் கருணை புரி
          உத்தமியான உமையவளுக்கும்
          நீலகண்டதாஸன் ஏத்தும் அன்னைக்கும்.

வ்ருத்தம் (சுருட்டி)
           ஆதியில் வனவாஸமதில் பல துன்பங்களுற்ற
பாண்டியன் தமக்கு மார்கண்ட மாமுனி மகிழ்ந்துரைத்த
ஸாவித்ரி தேவியின் கதையிதன் ஸாரமறிந்து நடக்கும்
பாவையர் ஸௌபாக்கியமும், மங்களமும்,
புத்ரஸந்தானமும் பெற்று ஸர்வகாலமும் ஸுகிப்பாரே!
(மத்யமாவதி)
          பக்தி கொண்டு நித்தம் கதையிதைப் பாடும் மங்கையர் வாழி!
தேர்ந்த ஞானியாம் மார்க்கண்டேயர் வாழி!
கதையினைச் செவியுற்ற பாண்டவர் வாழி!
அணியிதை உரைப்பவர், கேட்பவர், கற்றவர், கற்பிப்பவர்
எவரும் இன்பமாக வாழி!!!

சுபம்
ஸ்ரீ நீலகண்ட குரவே நம:
ஓம் ஸ்ரீரஸ்து!
ஸ்வத்திரஸ்து!4 கருத்துகள்:

  1. கதா காலட்சேபம் என்றால் ‘சீதா கல்யாணம்’ தவிர வேறெதையும் கேட்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. ஸாவித்ரி புராணம் கதையை ஒரு கதா காலட்சேபமாக கேட்க ஆசை எழுகிறது.

    (எனக்கும் அந்த விநாயகர் துதியை ஹம்ஸத்வனியில் பாட ஆசைதான். ஆனால் எனது கம்சத் தொனி வெளிப்பட்டு இம்சத் தொனியானதால் விநாயகரை மனதிலேயே துதித்து விட்டேன்.)

    பதிலளிநீக்கு