திங்கள், டிசம்பர் 16, 2019

வெடிச்சிரிப்பு

வெடிச்சிரிப்பு
[வல்லமை இதழின் 236-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]

சுற்றுப்புரத்தைப் பாழ்படுத்தும் என
வெற்றுக் கோஷம் போட்டிடுவார்
மாற்றுத்துணிக்கோர் வழிசெய்யார்;
தேற்று நிலையும் தானுரையார்!
குளிர்பதனப் பெட்டியிலும்
குளிர்சாதனச் சூட்டினிலும்
பாழுறும் சீதனச் சூழ்நிலையைக்
கண்டும் காணாமல் ஒதுங்கிடுவார்!

பணம்படைத்தோர் பாழாக்கும் நிகழ்வெல்லாம்
தினந்தினந்தான் நடந்தாலும் சிந்தைசெய்யார்!
வலியோர்த் தம் வாய்ச்சொல்லும் சட்டமாகும்
எளியார் தம் வாழ்க்கையையார் எண்ணிடுவார்!

சுற்றும் வெடிக்கட்டினிலே
வெற்று வயிறு நிரம்பிடுமே...
கட்டும் தீப்பெட்டியிலே
கிட்டிய சில்லரைக் கொண்டிங்கே
வாடிய வயிறும் குளிர்ந்திடுமே...

திரிதனில் வைத்திட்ட தீயினாலே
வறுமை நீங்கி வயிறு நிறைந்தால்
இறுகிய முகத்திலும் வெடிச்சிரிப்பு
மத்தாப்புப் பூவாய்ப் பூத்திடுமே...

திங்கள், டிசம்பர் 09, 2019

நல்வழி

நல்வழி
[வல்லமை இதழின் 235-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


கள்ளிப்பால் கடந்து
கல்வியறிவுதான் வென்று
எட்டா அறிவுதனை
எட்டிப் பிடித்துவிட்டு
பட்டங்கள் பலபெற்று
சட்டங்கள் தானறிந்து
திட்டமிட்டு தான் வாழும்
திறமனைத்தும் பெற்றிருந்தும்
பெட்டை பிள்ளை என்று
புறம் பேசித் திரிகின்றார்!

பட்டாம்பூச்சிபோல
சிட்டாகப் பறந்திடும் கனவை
கிட்டாமல் செய்கின்றார்...
வீட்டு முற்றத்தில் நிறுத்துகின்றார்!

காரியங்கள் பல செய்ய
காத்திருக்கும் காலத்திலும்
காமமொன்றே காரணமாய்
காரிகையை ஆக்குகின்றார் நெஞ்சைக்
காயம்தினம் செய்கின்றார்!

உயிருள்ள பொம்மையாக
உருவத்தைப் புணர்கின்றார்
உணர்ச்சிகளை மிதிக்கின்றார்
உள்ளத்தைக் காண்பதில்லை...

விட்டுவிடுதலையாகி நினறு
எட்டும் எல்லை தானடைந்து - வான்
முட்டும் மலைச் சிகரம்
தொட்டுவிடச் செய்யுமொரு
வழிதேடி இருக்கின்றேன் - நல்
வழிபார்த்துக் காத்திருப்பேன்...

இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத்தேர்ந்தெடுக்கப்பட்டது.

திங்கள், டிசம்பர் 02, 2019

நாற்காலி ஆட்டம்


நாற்காலி ஆட்டம்
[வல்லமை இதழின் 234-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



வெற்று கோஷத்திலே,
வீண் வாதத்திலே,
மதமாச்சரியத்திலே,
சாதி அபிமானத்திலே,
சுயநலத் தாக்கத்திலே
சூழ்நிலைக் கைதியாகி
தகுதியற்றோரைத் தேர்ந்தெடுத்தோம்
தலைவர்களை வீழ்த்திவிட்டோம்...

மன்னர் எவ்வழியோ மக்கள் அவ்வழியே…
குடியாட்சியிலோ மக்களே மன்னர் – எனவே
மக்கள் எவ்வழியோ மந்திரியும் அவ்வழியே…

தேர்ந்தெடுத்த மக்களையே
ஒரு பொழுது மேலேற்றி பின் கீழ்தள்ளி
மகாராட்டினத்தில் ஆட்டிவைக்கும
குறுமதிகொள் சிற்றோரை
அரியாசனம் ஏற்றிவைத்து
அறிவிழந்து வாழ்கின்றோம்...

கொள்கைக் கோலம் கலைந்து
பின்புலமும் களையிழந்து
எடுப்பார் கைப்பிள்ளையாய்
ஏமாற்றம் அறியாமல்
குரங்காட்டம் கண்டு
குதூகளித்து அமர்ந்துள்ளோம் ...

ஞாயிறு, நவம்பர் 24, 2019

தாழ் திறவாய்!


தாழ் திறவாய்!

[வல்லமை இதழின் 233-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]


வானுயர் கோவிலில் தொழுதுநிற்போம்
பள்ளிவாசல்கள் தோறும் ஓதிநிற்போம்
தேவ ஆலயம் தேடி ஓடிடுவோம்
ஆதிமூலத்தை காண ஏங்கிடுவோம்!

காட்டினில் இறையைத் தேடிடுவோம் - மந்திர
பாட்டினில் அவன்தாள் நாடிடுவோம் - வெற்று
ஏட்டினில் சொல்லிய வழியேல்லாம்
போட்டிப் போட்டு செய்திடுவோம்!

ஆண்டுகள் பல தவஞ்செய்து நின்று
கண்டிடும் வழியென்னி காத்துநிற்போம்
கண்டவர் விண்டிலர் என்று சொல்லி
கண்டிட தினந்தினம் ஏங்கிடுவோம்!

நல்லுரை சொல்லிடும் வேதமெல்லாம் - பிறர்
வெந்துயர் தீர்த்திடும் அன்பர்தனை
முந்திய தெய்வமாய் வைத்தையுணர்ந்து - நம்
உள்ளுரை பரம்பொருள் மீட்டிடுவோம்!

ஈட்டிடும்பொருள் பிறர்க்கீழ்ந்திடுவோம்!
வாட்டிடும் பிறர்பிணித் தீர்த்திடுவோம்!
நாட்டினில் வறியவர் வாழ்ந்திடவே
பூட்டிய மனத்தாழ் திறந்திடுவோம்!

திங்கள், நவம்பர் 18, 2019

வேடந்தாங்கிய பறவைகள்


வேடந்தாங்கிய பறவைகள்
[வல்லமை இதழின் 232-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]



இயற்கையன்னை தானளித்த
இன்பபுரி இவ்வையகத்தை
நகரமயமாக்கி வைத்து
நரகமதை உருவாக்கினோம்!

நீர்வளத்தைக் கெடுத்துவிட்டோம்
நிலமடந்தை வளமொழித்தோம்
கால் வைக்கும் இடமெல்லாம்
கட்டிடங்கள் உயர்த்திவைத்தோம்!

பச்சைநிறத் தாயவளின்
கச்சைமலை முகடழித்து
மிச்ச மீதம் ஏதுமின்றி
தாய்ப்பாலை வீணடித்தோம்!

வான்பொழித்து மழையில்லை
கதிரவனால் அதிவெப்பநிலை
நில அதிர்வால் வீடில்லை எனக்கூறி
அப்பாவிப் பறவையென்ற
வேடங்கொண்டு வாழ்ந்திருப்போம்!


இயற்கை வளமழித்து

கான்க்ரீட் மரக்கிளையில் 
வண்ணமெல்லாம் தானிழந்து

திங்கள், நவம்பர் 11, 2019

பிஞ்சு (ெ)நஞ்சு


பிஞ்சு (ெ)ஞ்சு



 

[வல்லமை இதழின் 231-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]
கனியமுதுக் குழந்தையென்றால்
கள்ளமில்லா புன் சிரிப்பும்
வெள்ளைத் தும்பைப்பூ மனதும்
கண்முன்னே நின்றதொரு காலமம்மா-அது
கனவாகப் போனதிந்த காலமம்மா

வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சில்
சூதானமாய் இருக்கச் சொல்லி
நஞ்சதனைக் கலந்திட்டோம்

வெம்பியிங்கு நிற்க வைத்தோம்
வெள்ளாவியில் விதைநெல்லால் பொங்கல் வைத்தோம்

இன்ப துன்பமெல்லாமே
இரு நொடியில் மறந்துவிடும்
கள்ளமில்லா நெஞ்சதனில்
தந்திரத்தைப் புகுத்திவிட்டோம்
நம்பிக்கையின்மையை நிலைக்கவிட்டோம்

பஞ்சு போன்ற நெஞ்சதனை
போட்டி பல போடச் சொல்லி
ஊடகச் சோதியிலே
எரிபானையாக்கி விட்டோம்
ஏய்த்துப் பிழைப்பதைக் கற்க வைத்தோம்

அறிவு வளர்க்கும்
கல்வியதை கற்பிக்காமல்
வெற்று வெற்றியே குறிக்கோளாய்
முற்றிபோகச் செய்துவிட்டோம்
முளைக்குருத்தை முற்செடியாய் ஆக்கிவிட்டோம்

பெற்றோர் தம் பேராசையால்
பிஞ்சினிலே பழுத்து  
சுயநல ஆழ்துளையில் வீழ்ந்து
மறைந்ததுவே அவர்தம் குழந்தைத் தனம் - இதில்
வெற்று கொண்டாட்டமே மழலையர் தினம்


செவ்வாய், நவம்பர் 05, 2019

மனக்கண்ணாடி

மனக்கண்ணாடி

வீண் படாடோபம் கொண்டு
வெற்று வார்த்தைப் பேசி
நல்லவனாய்
வல்லவனாய்
நாலும் தெரிந்த துயவனாய்
நித்தம் நூறு வேடம் கொண்டு
சுயநலப் பச்சோந்தியாய்
பிணந்தின்னும் சாத்திரம் சொல்லி
தன்னுருவே தனை வெறுக்க
உள் ஒன்று வைத்து புறமொன்று பேசி
வயிறு வளர்க்கும் நாடகத்தை
உயிர் வாழ்க்கை எனக்கூறி
உழன்று நாளும் திரிவதனை
எடுத்திங்கே காட்டுதம்மா
என் மனக்கண்ணாடி
அரிதாரம் தனை நீக்கி
தன்மானம் கொண்டு
சுயபிம்பம் எதுவென்று
தெளியும் நாள் எந்நாளோ?

திங்கள், அக்டோபர் 21, 2019

குதிரைச் சவாரி


குதிரைச் சவாரி
[வல்லமை இதழின் 228-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை]





தடைகள் அனைத்தும் தவிர்த்து

தளைகள் உடைத்து எறிந்து
சிறுமை அனைத்தும் களைந்து
சிறகுகள் விரித்திட வேண்டும்

குறுநகை புரிந்து பின்னால்
குயுக்திகள் செய்யும் வீணர்
குறுக்கீடு தாண்டிப் பாய்ந்து
குவலயம் வென்றிட வேண்டும்

சிறுமைகள் செய்திட விழையும்
குறுமதி செயல்கள் தவிர்த்து
நேர்பட நிமிர்ந்து செல்லும்
நெஞ்சுரம் பெற்றிட வேண்டும்

மயக்கிடும் வீண்செயல்தனை மறைக்கும்
கண்ணிய கடிவாளம் கொண்டு
கடமைக் குதிரை ஏறி - துன்பக்
கடலினைத் தாண்டிட வேண்டும்

எதிர்ப்புகள் எத்தனை வந்தும்
உயிர்ப்புடன் அவற்றை வென்று
பொறுப்புடன் செயலது புரியும்
மனிதரைப் போற்றிட வேண்டும்