சனி, ஜூலை 01, 2017

மங்காத்தா

மங்காத்தா



விட்டு விடுதலையாகி
தடைகளை உடைத்து
கட்டுக்கள் நீக்கி
பறந்திட நினைக்கும் ஒருகணம்
மறுகணம்…
சாவுவீட்டு வைராக்கியம் போல்
உலகவாழ்வில்
கட்டுண்டு வீழ்ந்து
காண்பதெலாம் விரும்பி
சிக்கலில் சேர்ந்து
உழன்றிங்கு நிற்கும் மனம்.

பெண்ணே தாய்
அவளேத் தெய்வம்
பெண்ணுரிமை பெண்ணியம் – என
பெரும் பெரும் வார்த்தைகள்
சொல்லி நிற்கும் ஒரு புறம்.
மறுபுறம்….
பெண்ணடிமைச் செயல் புரிந்து
மாதர்தம்மை இழித்துரைக்கும்
மடமைகள் பலசெய்து
ஆணாதிக்க அதிகார
அழிச்சாட்டியம் தலைத்தூக்கும்

ஒருபொழுது
பிறர் நலம் விரும்பி
நன்மை பல நாடிச்
செயும் செயல்கள் நூறு
மறுபொழுது…
சுயநலம் தலைத்தூக்கி
சுற்றத்தின் நலம் மறந்து
அழுக்காறுற்று அவ்வியம் பேசி
பிறர் நலம் கெடுக்கச்
செய்திடும் பல்லாயிரம்.

உள்ளொன்று வைத்துப்
புறமொன்று பேசி
உள்ளே வெளியே என்று
மனம் காத்தில் ஆடி
நிலைமாறி அலைபாயும் - நான்
நிதமிங்கு வாழும் இவ்வாழ்க்கை.