ஞாயிறு, மார்ச் 28, 2021

உளியின் வலி

உளியின் வலி

[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




உள்ளத்தில் எண்ணிய சிந்தை
உருக் கொண்டு எழுந்ததோர் விந்தை
உளி கொண்டு உருவாக்கிய கவிதை
உருவாக்கியவன் கையிலோ கந்தை

விரல்களில் விளையாடும் கலை
வியப்பூட்ட உருவான சிலை
உழைத்து உருவாக்கியவன் நிலை
எண்ணிப் பார்த்தவர் எவரும் இலை

ஆலயங்காணும் கடவுளர் திருமேனி
காலங்கள்தோறும் நிலைத்திடும் வண்ணம்
மாயங்கள் காட்டும் மனங்கவர் சிற்பம் – அவர்
காயங்கள் துயரங்கள் காட்டியா நிற்கும்?!



[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

திங்கள், மார்ச் 22, 2021

குறி கேளீர்

 குறி கேளீர்

[வல்லமை இதழின் 298-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



அறமும் திறமும் கொண்டோரை
அறச்சொல் ஏதும் செய்வதில்லை
அறிவும் உழைப்பும் இழந்துவிட்டால்
அதிர்ஷ்டம் உதவத் தேவையில்லை

நற்சிந்தைக் கொண்டு வாழ்வோரை
நாளும் கோளும் கெடுப்பதில்லை
இன்சொல் இயல்பாய் அமைந்துவிட்டால்
இன்பம் வாழ்வில் தொலைவதில்லை

நேர்மறை எண்ணம் நிறைந்திருக்க
நித்தமும் நிறைவு தேய்வதில்லை
சோர்வைத் தவிர்த்துச் செயல்பட்டால்
சுகத்துக்கு எப்போதும் கேடில்லை

கடமையைத் தொடர்ந்துச் செய்திருக்கக்
காலம் கணியாமல் போவதில்லை
கட்டுப்பாடும் கலந்திருந்தால்
கண்ணியம் வாழ்வில் குறைவதில்லை

எறும்பாய் என்றும் உழைத்திருக்க
எதிர்காலக் கவலை ஏதுமில்லை
குறிக்கோளில் குறியாய் இருந்திருக்க
குறிச்சொல் கேட்கத் தேவையில்லை

ஞாயிறு, மார்ச் 14, 2021

வாழை

வாழை

[வல்லமை இதழின் 297-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



உழைக்கும் மக்கள் குறும்பசியைத் 

தீர்த்து வைக்கும் வாழை
ஏழை மக்கள் வீட்டினிலும்
குடியிருக்கும் வாழை


உயிர்ச்சத்து தாதுஉப்பு
உயர்ந்திருக்கும் வாழை
உடல் நலத்தைச் சீராக்க
உதவி செய்யும் வாழை


மருந்தாக மக்கள் நலம்
காத்து நிற்கும் வாழை
விருந்தோம்பல் வேள்விகளில் கொலு
வீற்றிருக்கும் வாழை


மனிதர் வாழ்வில் மங்களங்கள்
சேர்த்திருக்கும் வாழை
புனிதச் சின்னமாக என்றும்
பூத்திருக்கும் வாழை



[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வு செய்யப்பட்டது]


ஞாயிறு, மார்ச் 07, 2021

பயணம் தொடர்

பயணம் தொடர்

[வல்லமை இதழின் 296-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 




எதிர்பார்த்து காத்திருந்து
ஏங்கித் தவித்து ஏமாறி
காயத்தின் வடுக்களை
காலமெலாம் சுமந்து
மயங்கித் தவித்து
மனமொடிந்து மாள்கின்றோம்

மெய்யன்புத் தேடலிலே
துரோகத்தின் தாக்கத்தால்
தூக்கி எறியப்படும் நேரம்
சந்தேகத்தின் பாரம்
நம்பிக்கையின் அச்சை
முறிக்காமல் காத்திருப்போம்

நடக்காதவற்றை நீக்கி
நம்பிக்கை மனதிருத்தி
நேர்மறை நல்லெண்ணம்
நமதாக்கித் தொடர்ந்திருந்து
நாளைய பொழுதை நமதாக்கி
நம் பயணம் நாம் தொடர்வோம்