புதன், ஏப்ரல் 29, 2020

வீட்டுக் கன்றுக்குட்டி

வீட்டுக் கன்றுக்குட்டி
வீடு முழுதும் துள்ளிச் செல்லும்
காடு முழுதும் சுற்றித் திரியும்
நாடியாரும் வரும் போதெல்லாம்
ஓடிப் பதுங்கி ஒளிந்து அவரை
ஓரக்கண்ணால் பார்த்திருக்கும்
கள்ளங்கபடமின்றி கனிவாய் நின்றிருக்கும்
எல்லைகள் ஏதுமின்றி எங்கும் திரிந்து வரும்
தொல்லைகள் பல செய்தாலும்
சுகமாய் அவைகள் தோன்றும்
பிள்ளையும் கன்றும் ஒன்றாய் எங்கள்
வாழ்க்கையில் கலந்தே இருக்கும்

வியாழன், ஏப்ரல் 23, 2020

கண்ணாம்பூச்சி

கண்ணாம்பூச்சி
மழைத்தரும் நீர்த்துளியை
புழைசெய்துத் தேக்கிவைக்க
வழியேதும் செய்யாமல்
காலமதைக் கழித்திருந்தேன்
சுற்றுப்புறம் மாசு செய்யும்
குற்றங்களை நிறுத்திடாமல்
வெற்றுச் செயல்களையே
கொற்றம் செய்ய விட்டுவிட்டேன்
புயல் வருமோர் காலந்தன்னில்
சுயமுயற்சி ஏதுமின்றி
இயலாமைக் காப்புபூட்டி
முயலாமல் நின்றிருந்தேன்
பட்டுபோன பழமைகளை
மனதினிலே தேக்கிவைத்து
புதுமைகளைத் துரத்திவிட்டு
புரட்சிக்காகக் காத்திருந்தேன்
அறியாமைக் காரிருளில்
புரியாமல் நின்றிருந்தது
விதியாடும் கண்ணாம்பூச்சியென
வீணனாக உழலுகின்றேன்

செவ்வாய், ஏப்ரல் 21, 2020

திடங்கொண்டுப் போராடு

திடங்கொண்டுப் போராடு

ஆர்ப்பரிக்கும் அலைபோலே
பேரிரைச்சல் போட்டாலும்
ஆழ்கடலின் அமைதியினை
அடிமனதில் தேக்கிவைப்பாய்
கார்குழலி என்றுனையே
காதற்சிறை வைத்தாலும்
பார்ப்புகழும் சாதனைகள்
பலநூறு படைத்திடுவாய்
காலமெலாம் அறியாமைக்
காரிருளுள் வைத்தாலும்
ஞானஒளிக் கதிரவனாய்
புதுவிடியல் காட்டிடுவாய்
மென்மையான மலரென்று
மங்கையுன்னைச் சொன்னாலும்
திண்மையான உள்ளத்தோடு
திடங்கொண்டுப் போராடிடுவாய்