ஞாயிறு, நவம்பர் 29, 2020

ஆறுபடையப்பன்


ஆறுபடையப்பன்

[வல்லமை இதழின் 285-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 

 

நெற்றிச்சுடர் எரித்த வெம்மைநோய் தீர்த்து
ஆற்றுப்படுத்தி நக்கீரன் நலம்பெற்று வாழ
போற்று தெய்வயானை மணமுடித்த கோலமுடன்
பரமசினக் குன்றமர்ந்து அருளும் பெருமானே!

வியாழனவர் தவமியற்ற, தூயசுடர் தனிலுதித்து
தாய்சக்திவேல் தொடுத்துத் தீயசூரன் தனையழித்து
ஆழிசூழ் புவனங்காக்கச் சேவற்கொடி ஏந்தி
சேயோனாய் குன்றழித்து நின்ற செந்தில்நாதா!

பானுவும் தேனுவும் இலக்குமியுடனே
பேணிடும் வேல் கொண்ட கரத்துடனே
சுத்த ஞான சித்தம் கொள் பக்தர் நலங்காக்க
தென்பொதிகை பழனிபதி நின்ற பாலகுருநாதா!

ஓரெழுத்து மந்திரத்து பொருள் மறந்த காரணத்தால்
பிரமனையே சிறைபிடித்து, பரமனுக்குப் பொருளுரைத்து
சீரகத்தின் பிணி நீக்கி அடியவரை
ஏரகத்தே காத்து நிற்கும் சாமிநாதா!

துள்ளிவரு வேலெடுத்து சூரர்தலை கிள்ளி
சினம்விடுத்து தேவவேழ வாகனத்திலேறி
வள்ளிமலைப் பெண் மயக்கி மணமுடித்து
குன்றுதோறும் ஆடிநிற்கும் ஞானவஜ்ரவேலா!

சிலம்பாற்றங் கரையினிலே இளைப்பாற வந்தவளின்
ஞானப்பசிதீர நாவல் பழந்தானுதிர்த்து
அழகுமாமன் சூடும் அரளி மாலையேந்தி
சோலைமலை தானமார்ந்த வெற்றிவேலா!

ஆறுபடை மீதுறைந்து நீயருளுகின்ற போதும்
கூறுதமிழ் நல்லுலகம் சென்றவிடந்தோறும்
குன்றிருக்குமிடமெல்லாம் குமரன் இடம் எனவே
செந்தமிழால் போற்றித்தொழும் கந்தகுருநாதா!!!

சனி, நவம்பர் 21, 2020

தீப ஒளி

 தீப ஒளி!

[வல்லமை இதழின் 284-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



கருமைத் தாளில் நிறங்கள் தீட்டி
வண்ணங்கள் ஏற்றும் தூரிகை
இருளெனும் மௌனம் விரட்டிட
வெளிச்சத் தாளம் கொட்டும் பேரிகை

மறையும் பகலின் வாழ்வை நீட்டிக்கும்
வெளிச்சக் கீற்றெனும் தேவதை
அறியாமை இருளை நீக்கி உண்மை
ஞானம் வளர்க்கும் நல்லொளிக் காரிகை

இருளை விலக்கி வாழ்வில் தினமும்
வெளிச்சம் செதுக்கும் உளி
காரிருள் நீக்கிப் பார்வையில்
தெளிவைக் கொடுக்கும் சூரியத் துளி

தனிமை வெக்கைப் போக்கித்
துணையைக் காட்டும் இன்ப வளி
இனிமை பொங்கி நம் இல்லம் சிறக்க
ஒளிரட்டும் நல் தீப ஒளி!


[இக்கவிதை இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது]

திங்கள், நவம்பர் 16, 2020

மூக்கணாங்கயிறு

மூக்கணாங்கயிறு

[வல்லமை இதழின் 283-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


உழைக்கும் மக்கள் பிழைத்து வாழ
வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
மாற்றம் ஏதும் கிட்டவில்லை

வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை

ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்

வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
மூக்கணாங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்

சனி, நவம்பர் 07, 2020

தேவைகள்

 தேவைகள்

[வல்லமை இதழின் 282-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


ஆட்டம் காட்டும் நிலையில் இருந்தும்
அமைதியாய் இருக்கும் திடம் வேண்டும்
வாட்டம் கொடுக்கும் துயரம் வருகையில்
தெளிவோடு சிந்திக்கும் திறன் வேண்டும்

கூட்டம் கூடிக் களிக்கும் போதும்
சுயத்தை மறக்காத அறிவு வேண்டும்
காட்டுத்தீ போல் தகிக்கும் வேளையில்
கனிவும் இனிமையும் தர வேண்டும்

கூச்சல் குழப்பம் பொய்மைகள் நடுவே
உண்மையை அறியும் அறிவு வேண்டும்
வீண் படாடோப ஆடம்பரம் நடுவே
தன்நிலை உணரும் மெய்ஞானம் வேண்டும்

கட்டுகளின்றிக் களிக்கும் போதும்
கண்ணியம் இழக்காத தெளிவு வேண்டும்
தனிமையில் தனித்து ஒதுக்கும் போதும்
சமூகம் உய்விக்கும் எண்ணம் வேண்டும்

ஞாயிறு, நவம்பர் 01, 2020

வளம் பெறும் வழி

வளம் பெறும் வழி

[வல்லமை இதழின் 281-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 



ஆணும் பெண்ணும்
சரி நிகர் சமானம்
அடையும் இலக்கில்
அவரவர் உயரம்
விடுதலை உணர்வு
விகிதத்தில் இல்லை
எட்டும் அறிவில்
இளைத்தவர் இல்லை...

உள்ளத்தின் உள் நோக்கி
உன் திறன் அறிந்தால்
உச்சம் எட்டி உன்னதம் பெறலாம்
அச்சம் தவிர்த்து
அகிலத்தை வெல்லலாம்
வெற்றுப் புகழ்ச்சியை
ஒதுக்கி வைத்து
உண்மை அறிவை
உயர்த்தும் கல்வியை
வளர்த்து வளம் பெறும் வழியறிவாய்!