வெள்ளி, ஜூன் 28, 2013

கூர்ஜர தேசம்

கூர்ஜர தேசம் என்பது தற்போதைய வட குஜராத் பகுதிகளைக் குறிப்பதாகும்.

கூர்ஜர்கள் வட இந்திய இனங்களில் முக்கியமானவர்கள். சென்ற வருடங்களில் ராஜஸ்தானில் இடஒதுக்கீட்டிற்காக நடத்தியப் போராட்டத்தில் இந்த இடங்களில் ரயில் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனதை நாம் அனைவரும் படித்திருப்போம்.

யார் இந்த கூர்ஜர்கள்?

வரலாற்று ஆசிரியர்களைப் பொறுத்தவரை இவர்கள் கி.பி. முதலாம் நூற்றாண்டில் இந்தியாவை வட மேற்கிலிருந்து படையெடுத்த ஹூனர்களின் வழித் தோன்றலாக இருக்கலாம் என்று கணிக்கின்றனர். துருக்கியர்களில் கஸ்ஸர் என்ற இனத்தவர் கிழக்கில் ஊடுருவியதாகவும் அவர்களே பின்னர் ஹூனர்களாக இனம் காணப்பட்டதாகவும் கூறுவர்.

கூர்ஜர்கள் என்பதற்கு மேலும் இரண்டு விளக்கங்களையும் கூறுகிறார்கள். அவை..

கோ+ஜர் – பசுக் கூட்டங்களை அழிப்பவர்கள்
கௌர்+ஜர் – எதிர்க்கூட்ட்த்தை அழிப்பவர்கள்                  என்பதே.

பொதுவாக கூர்ஜர்கள் தங்களை சூர்யவம்ச வழிகளாக்க் கூறிக் கொள்கின்றனர்.

பவிஷ்ய புரணத்தில் பரசுராமர் 21 தலைமுறையைச் சேர்ந்த க்ஷத்ரியர்களை அழித்தப் பின்னர், சில காலம் கழித்து, க்ஷத்ரியர்கள் இல்லாமையால் மக்களுக்குள் அமைதியும் கட்டுப்பாடும் இருக்காது என்பதால், வஷிட்டர் ஒரு பெருயாகம் செய்ததாகவும் அந்த யாகத் தீயிலிருந்து ஒரு அரசன் தோன்றியதாகவும் அவர்களின் வம்சம் அக்னிவம்சம் என்ற பெயரில் வழங்கப்படுவதாகவும் கூறுகிறது. பொதுவாக வட இந்திய ராஜ வம்சங்கள் தங்களை சூரிய, சந்திர, அக்னி வம்சங்களில் ஏதாவது ஒன்றைச் சேர்ந்தவர்களாகவேக் கூறிக் கொள்கின்றனர்.

இந்திய மானுடவியல் கண்கானிப்பு என்ற அரசு சார் அமைப்பு குஜராத், ராஜஸ்தானில் பர்மார், சங்க்லா, சௌஹான், சோலங்கி ஆகியோருடன் கூர்ஜார-பிரதிகாரர்கள் என்ற க்ஷத்ரியவம்சங்கள் அக்னிவம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறது. (நம் தமிழகத்தின் வன்னியர்களும் அக்னிவம்சத்தைச் சேர்ந்தவர்களாகக் கூறப்படுகின்றனர்.)

இவர்கள் தங்களைச் சூர்ய வம்சத்தவர்களாகவும் கூறிக்கொள்வர். இதற்கு மற்ற புராணங்களைச் சுட்டுகிறார்கள். அதில் வசிஷ்டரின் யாகத்தில் தோன்றிய தேவதூதனின் நீரிலிருந்து சூர்ய வம்ச அரசர்களை உயிர்ப்பித்ததாகவும் அதனால் தாங்கள் சூர்ய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறிக் கொள்கிறார்கள்.

இந்தக் கூர்ஜர தேசம் அனர்தம் என்ற பெயரிலும் வழங்கப்பட்டு வந்துள்ளது. வைவஸ்வத மனுவின் ஐந்தாவது மகன் இஷ்வாகு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவரின் ஏழாவது மகனின் பெயர் ஷர்யாதி. ஷர்யாதியின் மகன் அனர்தன். இவர் நந்திபூரை (தற்போதைய நந்தோல் –அஹமதாபாத் அருகில் உள்ளது) தங்கள் தலைநகராகக்  கொண்டு ஆண்ட தேசம் அனர்தம்.  ஷர்யாதியின் மகள் சுகன்யா. இவள் பிருகு முனிவரின் மகன் ச்யவன முனியின் மனைவி (ச்யவன்ப்ராஷ் இந்த முனிவரின் பெயராலேயே வழங்கப்படுகிறது).

பாகவத புராணத்தில் இந்த அனர்த வம்சத்தின் கடைசி அரசனாக அனர்தனின் மகன் குகுத்மி குறிப்பிடப்படுகிறார். இவர் அனைத்து லோகங்களுக்கும் செல்லும் விசேஷ சக்தி படைத்தவர். இவரின் மற்றொரு பெயர் ரைவதன். ரைவதனின் மகள் ரேவதி (ஜனகரின் மகள் ஜானகி என்பது போல்). இவர் பின்னர் குஷஸ்தலி(துவாரகை)யில் ஒரு பெரிய நகரை நிர்மாணித்து அதை தன் தலைநகராக மாற்றிக் கொண்டு அங்கு அரசாண்டார். ஒரு சமயம் இவர் தன் நாட்டை விட்டு பிரம்ம லோகம் சென்று. அங்கு சில காலம் தங்கியிருந்தார். பின்னர், தன் நாடு திரும்பிய போது பல யுகங்கள் கடந்திருதன (இங்கு ஒரு வருடம் என்பது தேவலோகத்தில் ஒரு நாள்; பிரம்ம லோகத்தில் சில நாட்கள் என்பது இங்கு பல யுகங்களைக் கடந்திருக்கும் என்ற கணக்கினால்). அப்பொழுது, அவரின் தலைநகர் குஷஸ்தலி, துவாரகையாகவும் அதன் அரசராக உக்ரசேனரும் மாறியிருந்தனர். தன் மகள் ரேவதியை அதன் இளவரசர் பலராமனுக்கு மணமுடிதார் என்று பாகவத புராணம் கூறுகிறது.

பிற்காலத்தில், கூர்ஜர பிரதிஹாரர்கள் (பிரதிஹாரர்கள் என்றால் மெய்காப்பாளர்கள்; தாங்கள் ராமனின் தம்பி லக்ஷ்மணனின் – அவன் ராமனுக்கு மெய்காப்பாளனாக இருந்ததால் –  வழித் தோன்றல்கள் என்று கூறிக் கொள்கிறார்கள்.

அக்னிவம்சத்தின் மற்றொரு பிரிவினரான பர்மார்களில் சிலர் தான் பின்னர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி குஜராத்-இல் (ஸௌராஷ்ட்ரம்) ஜுனகத்-பகுதியை ஆண்டனர் என்று குறிப்பிடப்படுகிறார்கள்.

இன்று ராஜஸ்தானில் குர்ஜர்கள் (கூர்ஜர்கள் என்பது நாளடைவில் குர்ஜர், குஜ்ஜர் என்று திரிந்தது) அரசியல் ரீதியில் ஒரு முக்கிய இனமாக இருக்கின்றனர். இவர்களிலும் இரண்டு இனத்தவர் உண்டு . அவை லௌர் மற்றும் காரி ஆகியவை. லௌர்கள் தங்களை ராமரின் மகன் லவனின் வழிவந்தவர்களாகவும், காரிகள் தங்களை குசனின் வழிவந்தவர்களாகவும் கூறிக்கொள்கிறார்கள்.

இன்று, குர்ஜர்கள் குஜராத், ராஜஸ்தான் தவிர பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற  பல்வேறு இடங்களில் இருந்தாலும், வட குஜாராத் தான் அவர்கள் முதலில் இருந்த இடமாகக் கருதப்படுகிறது.

கூர்ஜர தேசம் என்பதிலுருந்து மருவியதுதான் இன்றைய குஜராத்.

வியாழன், ஜூன் 27, 2013

ஸௌராஷ்ட்ரம்
முதலில் ஸௌராஷ்ட்ரம் என்பது தென் குஜராத்தின் ‘கத்யவார்’ பகுதி என்றழைக்கப்படும் பகுதியாகும். இதில் முக்கியமாக 7 பகுதிகளைக் குறிப்பிடுவர். அவை ராஜ்கோட், ஜாம்நகர், பவநகர், ஜௌநகத், போர்பந்தர், அம்ரேலி, சுரேந்திரநகர் ஆகியவை. அதாவது கட்ச் வளைகுடாவிற்கும் கம்பத் வளைகுடாவிற்கும் இடைப்பட்ட கிண்ணம் போன்ற பகுதியே ஸௌராஷ்ட்ரம் என்று வழங்கப்படும்.

ஸௌராஷ்ரடம் என்பதன் பொருளை இரண்டு விதமாகக் குறிப்பிடுவர்.

ஸு + ராஷ்ரம் – ’ஸு’ என்றால் நல்ல; ’ராஷ்ட்ரம்’ என்றால் நாடு. நன்னாடு என்ற பொருளில் வழங்குவதாகக் கூறுவர்.

மற்றொரு விளக்கமாக ஸௌர் + ராஷ்ட்ரம் – ஸௌர் என்றால் சூரியன். சூரிய வழிபாட்டைக் கடைபிடிப்பவர்களின் நாடு என்று பொருள். ஒரிஸாவின் கொனாரக் சூரியக் கோவிலைப் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். அதைப் போலவே குஜராத்தின் மதேரா சூரியக் கோவிலும் பழம் பெருமை வாய்ந்தது. இதிலிருந்தே அக்காலத்தில் அப்பகுதி மக்களின் சூரிய வழிபட்டைப் புரிந்து கொள்ள முடியும்.

இதைத் தவிர இந்தியில் ஸோ என்றால் நூறு என்பதால் இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான நாடுகள் (சிற்றரசுகள்) இருந்ததால் ஸௌராஷ்ட்ரம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். ஆனால், இந்தி/உருது மொழி பிறப்பதற்கு முன்னரே இப்பெயர் வழங்குவதை நாம் அறிய முடியும்.

ஸௌராஷ்ட்ரத்தின் முக்கிய நகரங்களாக சூரத், ராஜ்கோட், மதேரா, சோம்நாத் (பிரபாசப்பட்டணம் என்ற பெயரும் உண்டு), துவாரகா (இதன் பழைய பெயர் குஷஸ்தலி) ஆகியவை ஆகும்.

பாகவதப் புராணத்தைப் பொறுத்தவரை ஸௌராஷ்டரம் ஆபிரர்களின் நாடுகளின் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஆபிரர்கள் என்றால் யாதவர்கள் என்று பொருள். கட்ச் பகுதியின் பிரந்தாரியா, மூச்சாயா, போரீச்சா, சுராயா, வகாடியா, பர்வாதா ஆகிய இனத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை யாதவ குல (யது வம்சம்) வழித்தோன்றலாகவே குறிப்பிடுகின்றனர். யாதவ குலத்தில் முக்கியமான கிருஷ்ணரும் துவாரகையை ஆண்டது குறிப்பிடத்தக்கது.

மஹாபாரதத்தில்  கிருஷ்ணர் பாண்டவர் பக்கம் நின்று போரிட அவரின் நாராயண சேனை கௌரவர் பக்கம் நின்று போரிட்டதை நாம் அறிவோம். அந்த நாராயண சேனையின் தலைவர் ‘க்ருதவர்மன்’. இவர் ஸௌராஷ்டிரர் என்று குறிப்பிடப்படுகிறார். இவர் தான் பாரதப் போரின் கடைசி நாள் இரவில் அஸ்வத்தாமன் பாண்டவர்கள் என்று நினைத்து த்ரௌபதியின் ஐந்து மகன்களைக் கொன்ற பொழுது அவனுக்கு உதவியாக வெளியில் நின்று காவல் காத்தவர். பாரதப் போரில் கௌரவர் பக்கத்தில் உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருவர். பின்னர், காந்தாரியின் சாபத்தால் யாதவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்ட பொழுது கிருஷ்ணரின் நண்பனான சத்யகியால் கொல்லப்பட்டார்.

பாகவத புராணத்தில் கிருஷ்ணரின் மாமனார் (சத்யபாமாவின் தந்தை) சத்ரஜித்-இடம் இருந்த ஷ்யமாந்தக மணியை கவர விரும்பிய மூவரில் இவரும் ஒருவராகக் குறிப்பிடப்படுகிறார். மற்ற இருவர் அக்ரூரரும் (கோகுலத்திலிருந்து கிருஷ்ணரை கம்சனிடம் அழைத்துவந்த அதே அக்ரூரர் தான்), சத்ரஜித்தைக் கொன்று மணியைக் கவர்ந்துச் சென்ற, சததன்வனும் தான்.

பின்னர் மௌரியர் காலத்தில் ஸௌராஷ்ட்ரம் சோமசர்மனாலும், சாக வம்சத்தைச் சேர்ந்த ருத்ரதாமனாலும் குப்தர்கள் காலத்தில் சந்தரகுப்தராலும் (விக்ரமாதித்யன்) குமாரகுப்தனாலும் ஆளப்பட்டது.

உலகப் பட்டு நூல் தர வரிசையில் ஸௌராஷ்ட்ரத்தின் பட்டும் மிக பிரபலமானது. பொதுவாக மஹாராஷ்ட்ரத்தின் வட கடலோரப் பகுதிகள் இந்தியாவின் மான்சிஸ்டர் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. அதன் காரணம் அப்பகுதியில் நூற்பதற்கு சாதகமாக இருந்ததுடன் அவர்களின் நூற்புத் திறனும் தான்.

1024 கஜினி முகமது கத்யவார் பகுதியில் (சோம்நாத்) தாக்குதல் நடத்தியதை நாம் படித்திருப்போம். அப்பொழுது, இந்த ஸௌராஷ்ட்ர மக்களில் ஒரு பிரிவினர் அங்கிருந்து குடிபெயர்ந்து முதலில் சூரத்-இலும் பின்னர், அதைத் தாண்டி தெற்குப்பகுதிகளுக்கும் குடியேறினர். அதன் பின்னர் மெல்ல விஜய நகரப் பேரரசின் காலத்தில் துங்கபத்ரா  நதிக்கரையில் (தாசப்புரா) குடிபெயர்ந்து, பின்னர் நாயக்கர் காலத்தில் தமிழகத்திலும் (தஞ்சை, மதுரை) குடியேறினர். நாயக்கர் காலத்தில் ஸௌராஷ்டிரர்கள் ’பட்டுநூல்காரர்கள்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டனர். இன்று அவர்கள் தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுப் பெருமைச் சேர்க்கின்றனர்.

செவ்வாய், ஜூன் 25, 2013

யூரிகாகரினும் மாற்றானும்
சென்ற வாரம் சூர்யா நடித்த மாற்றான் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் (ஜெயா?)

அந்தப் படத்தில் சில நிகழ்வுகள் ரஷ்யாவில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கின்றன. அதில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் சிலர் விமானவிபத்தில் இறந்தது போலவும் காட்டி அந்த விமான விபத்து சதித்திட்டம் என்பது போல் கதைத் தொடரும்.

இதைப் பார்த்ததும் சமீபத்தில் படித்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அது…

யூரி காகரின். இந்தப் பெயர் 1960-70களில் மிகவும் பிரபலம்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் ‘பனிப்போர்’ நடந்து கொண்டிருந்த நேரம். இருவரும் ஒவ்வொரு துறையிலும் மற்றவர்களை பின் தள்ளி முன்னேற எண்ணியிருந்த நேரம். விண்வெளித்துறையில் பூமியைத் தாண்டி பிற கோள்களின் கால்பதிக்க இரு தரப்பும் முயன்று கொண்டிருந்த வேளையில் அமெரிக்கா 1961 ஆண்டு மேமாதம் அலென் ஷெபெர்ட் என்பவரை முதன் முதலாக விண்வெளிக்கு அனுப்ப எண்ணியிருந்த நிலையில் அதற்கு முன்னதாக 1961 ஏப்ரல் மாதத்தில் (12-ஆம் தேதி) யூரிகாகரினை விண்வெளிக்கு அனுப்பியது. ஆக முதன் முதலில் விண்வெளிக்குச் சென்ற மனிதர் ’யூரிகாகரின்’. இந்த நிகழ்வை வாஸ்டாக் 1 மிஷன் என்றுக் கூறுவர்.

ஆனால் விண்வெளிக்குச் சென்ற 7 வருடத்திற்குள் 1968-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் நாள் தன் விமானப் பயிற்றுவிப்பாளர் விளாடிமிர் ஸெர்யொகினுடன் வழக்கமான மிக் 15 ரக ஜெட் பயிற்சி விமானத்தில் மாஸ்கோ அருகே பறக்கும் பொழுது விபத்தில் உயிரிழந்தார். தொடர்ந்து அவர் உயிரிழந்தச் சம்பவம் விபத்தா அல்லது சதிவேளையா என்ற கேள்வி எழுந்தது.

அதிகாரப்பூர்வ கண்டுபிடிப்புகளின் படி,  ககாரினும் ஸெர்வோகினும் பறவை அல்லது வேறு பொருள் மோதுவதைத் தவிர்க்க விமானப்ப்பாதையை மாற்றும் பொழுது அது குறைந்த உயரத்தில் இருந்த்தால் வால் சுழற்சி (tailspin) ஏற்பட்டு தரையில் சரிந்தது என்பதே ஆமும்.

ஒரு ஓய்வு பெற்ற சோவியத் விமானப்படை கர்னல் மூலம் வெளியிடப்பட்ட மற்றொரு கோட்பாடு என்னவென்றால், மிக் 15 ஜெட் விமானத்தின் காக்பிட் திறந்ததால்  விமானத்தில் காற்றுவெட்டு (vacuum) ஏற்பட்டு விமானிகளுக்கு பிராணவாயு இழப்பு ஏற்பட்டு கட்டுப்பாட்டை இழந்திருக்கக் கூடும் என்பதாகும்.

இந்த அதிகாரபூர்வ அறிவிப்பைத் தவிர பல கோட்பாடுகள் – தொழில்நுட்ப காரணங்கள் (கட்டுப்பாட்டை இழத்தல், காட்டு மானை potshots எடுத்து) முதல் சதி வரை (சோவியத் அரசாங்கம், இராணுவம், KGB ஆகியவற்றால்)  - பல்வேறு சமயங்களில் எழும்பியுள்ளன.

இதைப்பற்றி யூரிகாகரினின் நண்பரும் சம்பவம் நடந்த இடத்தின் அருகில் இருந்த அலெக்ஸி லியோனொவ் கூறுவதைப் பார்ப்போம்…

[அலெக்ஸி லியோனொவ்-உம் வரலாற்றில் இடம் பெற்றச் சிறந்த விண்வெளி வீரர். 1965-ஆம் ஆண்டு (மார்ச்,18) விண்வெளியில் திறந்த வெற்றிடத்தில் மிதந்த முதல் மனிதன் என்ற பெருமை பெற்றவர் அலெக்ஸி லெயோனொவ்]

இவர், ககாரினின் மரணத்திற்கானக் காரணத்தை அறிய அமைக்கப்பட்ட குழுவிலும் இடம் பெற்றுப் பணியாற்றியுள்ளார்.  அவர் சென்ற வாரம் (ஜூன் 14, 2013) ரஷ்யத் தொலைக்காட்சியில் ஒரு பேட்டியில் இதைப் பற்றிய விவரங்களைக் கூறினார்.

இதன் படி சம்பவம் நடந்த அந்த தினத்தில் ஒரு Su-15 [ஃபைட்டர் ஜெட்] சோதனை ஓட்டம் நடத்தியது, விமானி அதை 450-500 மீட்டர் [33,000 அடி] அல்லது உயர் 10,000 மீட்டர் [1,480-1,640 அடி] உயரத்தில் பறக்க வேண்டும். ஆனால், தவறுதலாக அந்த விமானி அதன் உயரத்தைச் சற்றுக் குறைவாக செலுத்த, அந்த  Sukhoi (Su-15) அதிவேக ஜெட், காகரின்னின் மிக்-15 ஐ நெருங்கிய போது மேகமூட்ட்த்தால் அதைச் சரியாக கணிக்க முடியாமல் அதன் ஆபத்தான அஃப்டர்பர்னிங் 10-15 மீட்டர் [30-50 அடி] தூரத்தில் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அழுத்தத்தில்  அவரது விமானம் திரும்ப அதனால்  ஏற்பட்ட tailspin-ஆல் - ஒரு ஆழமான சுழல் போல் உள்வாங்க - ஒரு மணி நேரத்திற்கு 750 கிலோமீட்டர் வேகத்தில் [ஒரு மணி நேரத்திற்கு 470 மைல்] தரையில் விழுந்து நொறுங்கியது.

அரசு அந்த நேரத்தில் இந்தத் தகவலை வெளியிட்டால் பயிற்சி விமானங்களைப் பறக்கவிடுவதில் விதி மீறல் (அல்லது) விதிகள் சரியாக நிர்ணயிக்கப்படாதமை ஆகியவை வெளியே தெரிந்திருக்கும். அதனால், அப்பொழுது இதைப் பறவை/பலூன் மோதல் என்று கூறியுள்ளனர்.

மாற்றான் படத்தின் இதே போன்ற காட்சியைக் கண்டவுடன் கிட்டத்தட்ட இந்த நிகழ்வை ஒட்டி எடுத்த இயக்குநரைப் பாராட்டத்தான் தோன்றியது.

புதன், ஜூன் 19, 2013

உடைந்த மேகம்


இந்த ஆண்டு பருவமழை சற்று முன்னதாகவே வந்துவிட்டது. கடந்த வாரத்தில் வடமாநிலங்களையும் இந்த பருவமழை வந்தடைந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இப்பருவமழையால் உத்த்ராஞ்சல் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 130க்கும் மேல்.

இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுவது பெருமழையும் மேகம் உடைந்த்தும் என்று கூறுகிறார்கள். மழை, மேகம் உடந்த்தைத் தொடர்ந்து மந்தாகினி நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் புகழ் பெற்ற கேதாரிநாத் கோவில் பெருமளவில் சிதைந்துள்ளது.
மழைக்கு முன் கேதார்நாத் கோவில்
மழைக்குப் பின் கேதார்நாத் கோவில்


முக்கியக் காரணமாகக் கூறப்படும் ’மேகம் உடைதல்’ என்றால் என்ன?

நிலப்பரப்பிற்கு அருகில் காற்று சுழலும் பொழுது அதிலுள்ள ஈரப்பதம் இணைந்து ஒரு உருவமில்லா நிலையைப் பெறும். காற்று சூடாகும் பொழுது அது இலேசாகி விரிந்து மேலெழும்பிச் சென்றுக் குளிர்ந்துவிடும். குளிர்ந்த காற்று நீராவியைத் தாங்கிப் பிடிக்காது. ஆனால், சில நீராவித் துணுக்குகள் ஒன்றை ஒன்றுத் தாங்கிப் பிடித்துக் கொள்கின்றன. பின் அவை மேலும் இறுகி பனித்துகள்களாகவும் படிகங்களாகவும் (Crystals) மாற்றமடைந்து பின்னர் மேலும் இறுகி மேகங்களாகவும் மாறுகின்றன. மாறிய இந்த மேகங்களின் படிகங்களும் துகள்களும் மேலும் குளிர்ந்து பருக்கும் பொழுது துகள்கள் ஒன்றுடன் ஒன்று உராய்வதால் ஏற்படும் வெப்பத்தில் இளகி நீர்துளிகளாய் மழையாய் பொழியும். இவற்றை நாம் பள்ளிக் கூடங்களிலேயே படித்திருப்போம்.

ஆனால், சில நேரங்களில் குறிப்பாக உயர்ந்த மலைப் பிரதேசங்களில் உள்ளுக்குள் இந்த மேகத்தின் பனித்துகள்கள்/படிமங்கள் உராய்ந்து இளகும் வேளையில் வெளிப்புறத்தில் குளிர்ந்த தட்பவெப்பத்தின் காரணமாய் இறுகியே இருக்கும். மெல்ல மெல்ல மேகத்தின் உட்பகுதி இளகி அதன் வெளிப்புறத்தை அழுத்த திடீரென்று ஒரே இட்த்திலேயே மொத்த மழையும் ஒரு பெரிய தண்ணீர் தொட்டி உடைந்தது போல் மொத்தமாகக் கொட்டும். உத்தராஞ்சல் பகுதியில் உடைந்த இந்த மேகத்தின் அளவு ஒரு பெரிய ஏரியை விட பெரிதாக இருந்துள்ளது. கீழே விழும் தண்ணீரின் வேகம் மணிக்கு 100 கி.மீ.க்கும் அதிகமாக இருக்கும் [சாதாரணமாக ஒரு நிமிடத்தில் 2 மிமீ க்கும் அதிகமாக மழைபெழிந்தால் அதை மேகம் உடைதல் என்று கூறுகிறார்கள்]. பெரும்பாலும் இந்த மேகம் உடைதல் மலைப்பகுதிகளில் நிகழ்ந்தாலும் சில நேரங்களில்  மற்ற இடங்களிலும் நிகழ்வதுண்டு.

மேகங்களின் அமைப்பைக் கொண்டு அவற்றை வகைப்படுத்தியுள்ளார்கள். அவற்றைப் பார்ப்போம். முதலில் இந்த வகைப்படுத்தல்களைப் பற்றிய சிறு வரலாறு. 1803-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் வேதியியலாளர் லூக் ஹோவர்ட் என்பவர் தான் முதன் முதலில் இந்த மேகங்களை அவற்றின் நிலைகளைப் பொறுத்து பிரித்து, பின்  அவற்றின் தன்மைகளைப் பொறுத்து வகைப்படுத்தினார். பிரித்த மேகங்களுக்கு அவற்றின் தன்மையைப் பொறுத்து லத்தின் பெயர்களிட்டுக் குறிப்பிட்டார். இப்பொழுது அவற்றின் வகைகளைக் காண்போம்….
 

உயர் நிலை மேகங்கள்: இந்த மேகங்கள் வானில் மிகவும் உயரத்தில் இருக்கும். இவை சிறுசிறு பனித்துளிகளைக் கொண்டு இருக்கும். இவற்றின் குளிர் நிலை மைனஸ் 40 டிகிரிக்கும் குறைவாக இருக்கும். இவற்றின் வகைகள்…

சைரஸ் (கீற்று):     இவை இறகுகள் போல மென்மையாக சுருட்டையாக இருக்கும். சாதாரணமாக நீல வானத்தில் இவைதான் அதிகமாகத் தெரியும். ஆனால், இவை மிக உயரத்தில் இருப்பதால் பெரும்பாலும் மழையைத் தராது. இந்த சைரஸ் வகையில் பல உள்வகைகளும் உண்டு. 1951-ஆம் ஆண்டு கடைசியாக சைரல் இண்டார்டஸ் (இண்டார்டஸ் என்றால் ஒழுங்கற்று வளைந்த என்று பொருள்) என்ற வகை உலக வளிமண்டல அமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வகையாகும்.

சைரோக்யூமுலஸ் (கீற்றுத் திரள்) :                 இவை வெள்ளை நிறத்தில் சிறுசிறு பந்துகளைப் போலத் திரண்டு (க்யூமுலஸ் என்றால் ’குவியல்’ என்று பொருள்) இருக்கும். பந்துகளை வரிசையாக அடுக்கி வைக்கப்பட்ட சிறிய அலைகள் போல இருக்கும்.

சைரோஸ்ட்ரடஸ் (கீற்றுப்பட்டை) :              இவை பெரிய தகடுகள் போல படர்ந்திருக்கும். இவற்றின் தடிமன் சில நேரங்களில் 5-6 கி.மீ. பருமன் கொண்டதாகக் கூட இருக்கும். ஆனாலும் இவை ஒளி ஊடுறுவும் (transparent) வகையில் இருக்கும். இவற்றில் நிலவொளி ஊடுறுவும் பொழுது இவை வட்ட வடிவில் ஒரு ஒளிவட்டம் போல் நிலவொளியைச் சுற்றி ஒளிவிடும்.

இடை நிலை மேகங்கள்: இந்த மேகங்கள் வானில் 2-6 கிமீ தூரத்தில் இருக்கும். இவற்றின் வகைகள்…

ஆல்டோஸ்ட்ரடஸ் (உயர் பட்டை/போர்வை) : இவை பெரும்பாலும் பனித்துகள்களும் படிமங்களும் சிதறி இருப்பது போல் இருக்கும். சாதாரணமாக இவை வானத்தில் மூடுபனியைப் போன்று இருக்கும்.

ஆல்டோக்யூமுலஸ் (உயர்திரள் முகில்) :  இவை மேல் பகுதியில் வெள்ளை அல்லது வெளிர் சாம்பல் நிறத்திலும் கீழ்பகுதியில் சற்று கறுத்த நிறத்திலும் இருக்கும். சில நேரங்களில் இவை கீற்றுத்திறள் போல காட்சியளிப்பதும் உண்டு.

கீழ்நிலை மேகங்கள்: இந்த மேகங்கள் வானில் 2 கிமீக்கும் குறைவான தூரத்தில் இருக்கும். இவற்றின் வகைகள்…


ஸ்ட்ரடஸ் : இது பூமிக்கு அருகில் ஒரு போர்வை போல ஒரே மாதிரி மூடியிருக்கும். பூமியில் இது படியும் பொழுது இதை மூடுபனி என்று அழைக்கிறோம்.

ஸ்ட்ரடோக்யூமுலஸ் :      இவை சாம்பல் நிறத்தில் ஒன்றின் மேல் ஒன்று படிந்தது போல் இணைந்திருக்கும். சாதாரணமாக புயல் மழைக்குப் பின்னர் இவை வானில் தோன்றும்.

நிம்போஸ்ட்ரடஸ் (மழை முகில்): நிம்பஸ் என்ற வார்த்தைக்கு  நெடிய/ஆழ்ந்த/உள்வாங்கிய/வியர்த்த என்று பல பொருள்கள் உள்ளன. ஸ்ட்ரடஸ் என்றால் பட்டை அல்லது போர்வை என்று பொருள்.  மேகப்படுக்கைகள் ஒன்றின் மேல் ஒன்று பல படுகைகளாய் அமைந்தது நிம்போஸ்ட்ரடஸ். சில நேரங்களில் இவற்றின் பருமன் 2000-3000 மீட்டர்கள் கூட இருக்கும். இவை சூரியனை முழுவதுமாக மறைக்கும் தன்மைக் கொண்டவை.

செங்குத்து மேகங்கள்: சில நேரங்களில் மேகங்கள் படராமல் ஒன்றின் மேல் ஒன்றாக நீண்டு இருக்கும். இவற்றின் வகைகள்…

க்யூமுலஸ் :  சாதாரணமாக நீலவானத்தில் வடிவற்று அலையும் மேகங்கள் தான் இவை.

க்யூமுலோநிம்பஸ்: வடிவற்று அலையும் க்யூமுலஸ் மேகங்கள் பற்பல் ஒன்றிணைந்து பெருமேகமாக வடிவெடுத்து மழை மேகமாக மாறும். அவ்வாறு மாறும் மேகங்கள் சில 12-15 கி.மீ.க்கும் உயரமாக வளர்ந்து நிற்கும். கீழே பனித்துகள்களும் மேலே பனிப்படிகங்களுடனும் இவை இருப்பதாகக் கூறுவர்.

உலக வளிமண்டல அமைப்பு 1975 ஆம் ஆண்டு வரை சர்வதேச மேக வரைபட்த்தை வெளியிட்டு வந்தது. 1975-ஆம் ஆண்டின் வரைபடம் இரண்டு தொகுதிகளாக முதல் தொகுதி 1975-இலும் இரண்டாம் தொகுதி 1987-இலும் வெளியிடப்பட்ட்து. பின்னர் இது தொடரப்படவில்லை. இந்நிலையில் சமீபத்தில் 2009-ஆம் ஆண்டு அண்டுலேடட் ஆஸ்பிரடஸ் (Undulated Asperatus) – ஒழுங்கற்ற அசைவுறு அலை - என்ற புதுவகையை ஏற்கக் கோரி ’மேகப் பாராட்டு சமூகம்’ என்ற அமைப்பு உலக வளிமண்டல அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.