வியாழன், மே 31, 2012

புகை இ(ல்)லை


1988-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை புகையிலை மறுப்பு/எதிர்ப்பு தினமாகக் கொண்டாடத்  தீர்மாணம் இயற்றியது.

சாதாரணமாக, புகையிலை என்றவுடன் நமக்கு சிகரெட் புகைப்பது தான் நினைவுக்கு வரும். மற்றவை, அவ்வளவாக பெரிதாக எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. காரணம், புகைப்பது புகைப்பவரை மட்டுமன்றி, மற்றவர்களையும் பாதிக்கும் என்பதால் கூட இருக்கலாம். ஆனால்,  புகைப்பிடிப்பதைப் போலவே மற்ற புகையிலைப் பொருட்களை பாவிப்பதும் அந்த அள்வு தீமைச் செய்யக் கூடியதே.

சிகரெட், பீடி, சுருட்டு போன்றைவைத் தவிர புகையிலை வேறு வழியிலும் உட்கொள்ளப்படுகிறது. அவை….

1.            ஷிஷா புகையிலை (ஹூக்காவில் இடப்படுவது)
2.            குட்கா
3.            மூக்குப் பொடி
4.            (புகையிலை) சுவிங்கம்

புகைப்பிடிப்பதாலும், புகையிலைப் பொருட்களை பாவிப்பதாலும் இந்தியாவில் ஆண்டுக்கு 9 லட்சம் பேர் இறப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. உலக அளவில் இது ஆறில் ஒரு பங்காகும். சமீபத்தில் நட்த்தப்பட்ட ஆய்வு, நகர்புற பகுதி பெண்களிடம் புகையிலைப் பழக்கம் கடந்த ஆண்டுகளைவிட மூன்று மடங்காக உயர்ந்திருப்பதாத் தெரிவிக்கிறது. உலக சுகாதார நிறுவன தகவலின் படி இந்தியா ஆண்களில் 25 சதவிகித்தவரும் பெண்களில் 3 சதவிகிதத்தவரும் புகைப்பிடிப்பவர்களாம். இப்படியே போனால், புகையிலையால் இறப்பவர்களின் எண்ணிக்கை 2020-ல் 16 லட்சத்தை எட்டக்கூடும் என்பது கணிப்பு.

புகைபிடிப்போருக்கு இணையாக அவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். பள்ளி-கல்லூரிகளுக்கு அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்ற விதியும் பெயரளவிலேயே உள்ளது. இதை மிகக் கடுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புகையிலை பொருட்கள் தொடர்பான அனைத்து விளம்பரங்களையும் தடை செய்வது, புகையிலை பொருட்கள் மீதான வரிகளையும் அதிகரிப்பது என்று கடந்த சில வருடங்களாகச் செய்வதைப் போலல்லாமல் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.

புகையிலை பொருட்களால் ஏற்படும் பாதிப்பு தனிமனிதருக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அது தீமை பயக்கும் என்பதை நாம் உணர வேண்டும். அப்பொழுதான் அதற்கு எதிராக நாம் அனைவரும் இணைந்து போராட முடியும்.புதன், மே 30, 2012

பொய் சொல்லப் போறேன்


நாம் அனைவரும் நம் குழந்தைகள் எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்று விருப்பப் படுவோம்.

 திடீரென்று ஒருநாள் நாம் எதிர்பாராத ஒரு பொழுது அவர்கள் உண்மைக்குப் புறம்பாகப் பேசுவதை அல்லது அவர்கள் முன்னர் சொன்ன ஒரு பொய் வெளிப்படும் பொழுது, நம் மனதில் ஒரு பெரிய வெற்றிடமும் அவர்களைப் பற்றிய பெரிய கேள்வியும் உருவாகும்.  இனி அவர்கள் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள்; படிப்பு, நன்னடத்தை, எதிர்காலம் ஆகியவை பாதிக்கப்படும் என்ற பயமும் உருவாகும். மேலும், மனதின் மற்றொரு பகுதியில் ‘நம் வளர்ப்பு முறைச் சரியில்லையா’ அல்லது ‘அவர்களின் சேர்க்கைச் சரியில்லையா’ என்பது போன்ற கேள்விகளும் வரும்.

ஆனால், சமீபத்திய மனோதத்துவ ஆராய்சிகள் கூறுவது என்னவென்றால், 4 – 6 வயதில் அவர்களுக்கு இந்த பொய் சொல்லும் வழக்கம் துவங்கிவிடுகிறதாம்.  இது அவர்களின் மன வளர்ச்சியின் முக்கிய கட்டமாகும். குழந்தைகளின் ’பொய் சொல்லுதல்’ என்ற இச்செயல் எப்படி நடக்கிறது என்பதைப் பற்றி நிபுணர்கள் கூறுவது என்னவென்றால்,  பொய் சொல்லத் துவங்கும் குழந்தை முதலில் உண்மை என்ன என்பதை தன் மூளையில் ஏற்றி தனது அறிவால் அதை பகுத்து ஆய்ந்து பின் அதற்கு மாற்றாக ஒரு கற்பனையை தன் மூளையில் உருவாக்கி அதை மற்றவர் நம்பும் வகையில் அவர்களிடம் எப்படி எடுத்து வைப்பது என்பதை ஆராய்ந்து அந்த செயலைச் செய்கிறது. மேலும், இதை வளர்ப்பு, சமூக நிலை என்பவற்றைத் தாண்டி அவர்களின் இயல்பான மூளை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதுகிறார்கள்.

இந்த பொய் சொல்லுதல் அவர்களுக்கு அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்களின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளுவதையும், அவற்றின் உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளவும் அவற்றுக்கு மாற்றான தன்மையை கற்பனை செய்ய அல்லது அனுமானிக்கவும் உதவுகிறது.

ஆக, சிறுவயதில் குழந்தைகள் கூறும் சிறு சிறு பொய்களைப் பற்றி கவலைப் படுவதற்கு எதுவும் இல்லை. பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் அந்த பொய்கள் அளவுக்கு அதிகமாகப் போய்விடக் கூடாது என்பது தான்.

அவர்கள் பொய் சொல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்கள் உண்மை சொல்ல ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவது தான். அதாவது, அவர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது அதைக் கோவமாக வெளிப்படுத்தாமல் அவர்கள் உண்மை உண்மையை உரைத்த்தற்கு பாராட்டியோ அல்லது அந்தத் தவறுகளை மன்னிப்பதன் மூலமோ இதை அவர்களுக்கு உணர்த்தலாம். சில நேரங்களில் நாம் செய்யும் அதீத எதிர்வினைகள் (over reactions) அவர்களை பொய் செல்வதை நோக்கிச் செலுத்துகின்றன. மேலும், உண்மை சொல்வதால் ஏற்படும் நன்மைகளையும் அது தரும் சுயமதிப்பையும் அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உண்மை உரைப்பதற்கும் அதனால் ஏற்படும் சோதனைகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாக வளர்க்கவும் வேண்டும். 

வியாழன், மே 24, 2012

வெள்ளைத் தாளில் கறுப்புப் பணம்


டந்த திங்கட்கிழமையன்று நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜீ நாடாளுமன்றத்தில் கறுப்புப் பணத்தைப் பற்றிய வெள்ளை அறிக்கையைச் சமர்ப்பித்தார். சி.பி.ஐ., நிதிஅமைச்சகம் (மத்திய நேர்முக வரி போர்டு) ஆகியவற்றின் தகவலடிப்படையில் 25 முதல் 75 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் சட்டத்திற்குப் புறம்பான வகையில்  சேர்த்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று அதிகார பூர்வமற்றத் தகவல்கள் கூறிகின்றன. இந்நிலையில், இந்த அறிக்கையில் கறுப்புப் பணத்தைத் தடுக்க அரசு தான் எடுத்துவரும், வரும் காலங்களில் எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றை விரிவாக குறிப்பிட்டுள்ளது. சுமார் நூறு பக்கங்களைக் கொண்ட இவ்வறிக்க்கையின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்.

கறுப்புப் பண பதுக்கலில் உலகில் சீனா முதலிடத்திலும், ரஷ்யா இரணாடாமிடத்திலும் உள்ள நிலையில் இந்தியா 15-ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகார பூர்வமாக, சுமார் எத்தனைக் கோடிகள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கலாம் என்பதைக் கூறவில்லை. அதே சமயம், 2010-ஆம் ஆண்டு இறுதியில், ஸ்விஸ் நாட்டு வங்கியில் 9295 கோடி ரூபாய் (1945 ஸ்விஸ் ஃப்ரங்க்ஸ்) இருப்பதாகக் கூறியுள்ளது; 2006-ஆம் ஆண்டு இது 23373 கோடி ரூபாயாக இருந்தது. அதாவது, ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டிருந்த 15000 கோடி ரூபாய் கறுப்புப் பணம் கடந்த 5 ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறியுள்ளது.

அரசு, இந்த வெளியேற்றத்திற்கு காரணமாக கூறுவது என்னவென்றால், இந்த கருப்புப் பணம் ஹவாலா, ஏற்றுமதி மதிப்பில் திருத்தம் செய்தல், வரிச் சலுகை உள்ள நேரடி வெளிநாட்டு முதலீடுகள், இந்திய நிறுவனங்களின் உலக முதலீடுகளின் வருமானம், இந்திய பங்குகளின் பகுதி முதலீடுகள் ஆகியவ்ற்றின் மூலம் இந்தியாவிற்குள் வந்திருக்கலாம் என்பது தான்.  ஆனால், இந்த பணம் கடந்த ஆண்டுகளில் பல்வேறு இயக்கங்களால்ம், எதிர் கட்சிகளினாலும் ஏன் பல்வேறு தளங்களில் (பத்திரிகைகள், வலை பதிவுகள், முகநூல் போன்றவை) சர்ச்சைக்கு உள்ளாகியிருந்ததால், அங்கிருந்து அதிகம் அறியப்படாத, வெளியிட வேண்டிய நிர்பந்தம் இல்லாத, கேமன், விர்ஜின் தீவுகள் அல்லது வரி குறைவான மொரீஷியஸ், சிங்கபூர் போன்றவற்றிர்கும் கடத்தப் பட்டிருக்கலாம்.

அரசு இந்த நிலையை சீர் செய்ய கீழ் கண்ட சட்ட மசோதாக்களைக் கொண்டு வந்திருப்பதாக கூறுகிறது:

1.            லோக்பால் ;
2.            நீதித்துறைப் பொறுப்பு மசோதா;
3.            புகார் / குறைத் தீர்வு மசோதா;
4.            விசில் ப்லோயர் (சாட்சிகள் பாதுகாப்பு) மசோதா
5.            பொது கொள்முதல் மசோதா

இவற்றில் லோக்பாலின் நிலை நாம் அறிந்ததே. பலவருடங்களாக மசோதாவாகவே இருக்கிறது. மற்றவை இன்னமும் நடைமுறைப் படுத்தப் படவில்லை.

இதைத் தவிர சர்வதேச அளவில் இது தொடர்பானத்  தகவல் பரிமாற்றத்தில் இன்னமும் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. மேற்கத்திய நாடுகள் இது தொடர்பாக ஸ்விஸ் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. இந்தியாவும் ஸ்விஸ் மற்றும் லக்ஸம்பெர்க் நாட்டுடன் இது போன்ற ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. மேலும், கேமன் தீவுகள், வர்ஜின் தீவுகள் போன்ற 75 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ளது. ஆனால், ஒப்பந்தங்களின் பிரிவுகள் (ஷரத்துகள்) நமக்குச் சாதகமாக இல்லை என்பது தான் எதிர்கட்சியின் முக்கியக் குற்றச்சாட்டு.

மேலும், அரசு நிலமை சீரடைய எட்டு யோசனைகளை முன் வைத்துள்ளது. அவை…
1.    நிதி மோசடி வழக்குகளுக்கு தனி நீதி மன்றங்கள் (Fast Track Courts);
2.    குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள்
3.    வங்கி பற்று/கடன் மூலம் வணிகம் செய்வதை ஊக்குவித்தல்
4.    கறுப்புப் பணத்தை வெளிக் கொண்டுவர வரி சலுகைகள் தருதல்
5.    லோக்பால் லோகாயுக்தா போன்றவற்றை துரிதப்படுத்துதல்
6.    நில பதிவிற்கு நாடு முழுதும் ஒரு பொது தரவுத்தளம் (data-base) ஏற்படுத்துதல்
7. நிலப்பதிவு மற்றும் அசையா சொத்துகளின் நடவடிக்கைகளை கணிணி மயமாக்குதல்
8.    தங்க வைப்புத் திட்டத்தை ஏற்படுத்தி அதற்கு தகுந்த வரிச் சலுகைகள் தருதல்

மேலும் கறுப்புப் பணம் உருவாகுவதைத் தடுக்க கீழ் கண்டவற்றையும் அறிமுகப்படுத்துவதாகக் கூறியுள்ளது…
  • நேர்முக வரியில் சீரமைப்பு [இது எந்த அளவு இருக்கும் என்பது தெரியவில்லை. ஏனெனில் Direct Tax Code-க்கான பரிந்துரைகளே இன்னமும் கிடப்பில் இருக்கிறது. வரிவிதிப்பு அட்டவணை, பணவீக்கத்திற்கு ஏற்ப திருத்தப்படுவதில்லை; உதாரணத்திற்கு 2011-12-ஆம் ஆண்டு 500000 ரூபாய் வரையான வருமானத்திற்கு வரி 10%. இதற்கு முந்தைய ஆண்டும் 500000 ரூபாய் வரையான் வருமானத்திற்கு வரி அதே 10 சதம் தான். ஆனால், இந்த ஒரு வருடத்தில் பண வீக்கத்தினால் அதன் மதிப்பு குறைந்தது கணக்கில் கொள்ளப்படவில்லை].
  • பொருளாதாரச் சீர்திருத்தம்
  • ரியல் எஸ்டேட் விவகாரத்தில் சீர்திருத்தம்
மேலும் இது பற்றி நிதிமந்திரி கருத்துத் தெரிவிக்கையில், கறுப்புப் பணத்தைப் பற்றிய விவரங்கள் நிபுணர்குழுவின் பரிசீலணையில் இருப்பதால் தற்பொழுது பெயர் பட்டியல் வெளியிட முடியாது என்றும், இதன் விவரங்கள் செப்டம்பர் மாதத்திற்குப் பின்னர் வெளியிடப்படும் என்றும், ஸ்விசர்லாந்து நாட்டுடன் கொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி அந்த வங்கியில் சேமித்துள்ளவர்களின் பெயர்கள் வெளியிடப்பட முடியாது என்றும் கூறியுள்ளார்.
ஆக, பெயர் பட்டியல் கூட இல்லாத இந்த காகித அறிக்கை வெறும் வெற்றுக் கூற்றாகத்தான் முடியும்.

திங்கள், மே 21, 2012

இராஜீவ் காந்தியின் மரணம்


1991-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி காலை சுமார் 6.00 மணி; நாங்கள்  (நானும் என் அறையில் தங்கியிருந்த நண்பரும்) தில்லி வந்து 7-8 மாதங்களே ஆன நிலைமை – அப்பொழுது தினமும் காலை நடைப்பயிற்சி செய்யும் அடுத்த அறையில் தங்கியிருந்த மராட்டிய நண்பர் பதட்டத்துடன் திரும்பி, ராஜீவ் காந்தி கொலை செய்யப் பட்டு விட்டார் என்று கூறினார். அவர் வரும் போது அருகில் கிடைத்த பிரட், பால் போன்றவற்றை கையோடு வாங்கி வந்திருந்தார்.

ராஜீவ் இறந்தார் என்று கேட்டதும் உடனே எங்கள் மனதில் எழுந்த கேள்வி கொலையாளி சீக்கியரா என்பதுதான். ஏனென்றால், அந்நேரத்தில் காலிஸ்தான் பிரச்சனை சற்று தீவிரமாக இருந்த நிலை. மேலும், சீக்கியர்கள் இந்திரா-வின் இறப்பிற்குப் பின் நடந்த படுகொலைகளுக்காக எந்நேரமும் பழிவாங்கக் காத்திருந்தனர்.

ஆனால் நண்பர் மேலும் தொடர்ந்து ராஜீவ், தமிழ் நாட்டில் கொல்லப்பட்டுள்ளார் என்றும் அவரைக் கொன்றது தமிழர்களே என்று கூறினார். அத்துடன் அவர், நாம் அனைவரும் இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டை விட்டு எங்கும் செல்லக்கூடாது என்றும், பதட்டம் ஓய்ந்து நிலைமை சீரான பின்னரே வெளியில் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.

அவர் அவ்வாறு கூறியது ஓரளவு சரிதான்; காரணம், இந்திரா இறந்த பொழுது சீக்கியர்கள் பெருமளவில் தங்கியிருந்த பகுதிகள் குறிவைத்துத் தாக்கப்பட்டதுதான்.

தில்லியைப் பொறுத்தவரை, மஹாராஷ்டிரத்திற்கு தெற்கில் உள்ளவர்கள் அனைவருமே மதராஸிகள் தான். (எப்படி நம் தமிழ்நாட்டில் வடவர் என்றாலே அவர்கள் சேட்டுகள் தான் என்று நினைக்கிறோமோ அது போல). அதிலும், நாங்கள் அப்பொழுது இருந்த்து, தமிழ் நாட்டிலிருந்து அனைவரும் முதலில் காலடி வைக்கும் ‘கரோல் பாக்’ பகுதி. நாங்கள் தங்கியிருந்த அந்த mansion-ல் குறைந்த்து 50 பேர் இருந்திருப்போம்;  அதில் 35 பேருக்கு மேல் தமிழர்கள்; மீதி மற்ற மாநிலத்தைச் சேர்ந்தத் தென்னிந்தியர்கள்.

இதனிடையே படபடப்புடன் வந்த mansion-ன் மேலாளர், அனைத்து கதவுகளையும் மூடச் சொல்லி யாரும் எதற்கும் வெளியில் செல்லக் கூடாது என்றும் வீட்டிலிருந்து எந்த சத்தமும் வெளியில் கேட்கக் கூடாது என்றும் எங்களை எச்சரித்தார்.

அந்த காலத்தில் இப்பொழுது இருப்பது போல், தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லை. இருந்த ஒரேத் தொலைக்காட்சிப் பெட்டியில் (கேபில் போன்ற வசதிகள் அவ்வளவாக இல்லாத நிலை) தூர்தர்ஷனையும், ரேடியோவில் செய்திகளையும் கேட்டுக் கொண்டிருந்தோம்.

ஆனால், நல்ல வேளையாக அப்பொழுது கலவரம் எதுவும் நிகழவில்லை.

அப்பொழுது, ஆட்சியில் காங்கிரஸ் இல்லை. மத்தியில் சந்திரசேகர் ராஜினாமா செய்து குடியரசுத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் அப்பொழுது, குடியரசுத் தலைவராக இருந்த திரு.வெங்கட்ராமன் தமிழர்கள் பெருமளவில் இருந்த (கரோல் பாக், ஆர்.கே.புரம் போன்றவை) பகுதிகளில் இராணுவத்தை (mock-drill நடத்த) முன் கூட்டியே அனுப்பியிருந்தார்.  

மேலும், அப்பொழுது நாட்டில் காங்கிரஸுக்கு எதிரான மனநிலை (அதிலும் குறிப்பாக, தில்லியில் அத்வானியின் இரதயாத்திரையை ஒட்டி பாஜக-விற்கு ஆதரவான நிலை) இருந்ததும் ஒரு காரணம்.


மெதுவாக, உள்ளிருந்த நாங்களும் வெளியில் நிலவியது ஒரு ஆரம்பப் பதட்டமே அது கலவரத்திற்கான ஆரம்பம் இல்லை என்பதை உணர்ந்தோம். மதியமே, நாங்கள் உணவு மற்றையத் தேவைகளுக்காக வெளியே செல்லத் துவங்கினோம்.