கலவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 16, 2020

மூக்கணாங்கயிறு

மூக்கணாங்கயிறு

[வல்லமை இதழின் 283-ஆவது படக்கவிதைப் போட்டிக்கு அனுப்பிய கவிதை] 


உழைக்கும் மக்கள் பிழைத்து வாழ
வழிகள் ஏதும் கிடைக்கவில்லை
அழைக்கும் திசையில் அலையும் நிலைமை
மாற்றம் ஏதும் கிட்டவில்லை

வசதிகள் வாய்ப்புகள் வண்டிகள் எல்லாம்
சகதியில் வாழ்வோருக்கு வாய்க்கவில்லை
திகதிகள் மாதங்கள் ஆண்டுகள் மாறினும்
அகதியாய் வாழ்வதில் மாற்றமில்லை

ஏழைகள் பாழைகள் வசதிகள் பெற்றிட
ஏதும் செய்திட நாம் முனைவதில்லை
ஊழலில் கொழுத்தோர் ஏறி முன்னேற
இழுமாடுகள் போலே மாறிவிட்டோம்

வாக்குகள் விற்று நல்லோரை வீழ்த்தி
மூக்கணாங்கயிற்றை அவரிடம் கொடுத்துவிட்டோம்
அமிழ்தம் கிட்ட வாய்ப்புகள் இருந்தும்
கழுநீர்ப் பானையில் சுவைக்கின்றோம்

புதன், பிப்ரவரி 08, 2012

கலவை – 13



உத்திர பிரதேசத் தேர்தலில் இன்று முதற்கட்டமாக 55 தொகுதிகளில் வாக்கெடுப்பு நடைபெறுகிறது.  ஆரம்பத்தில் நீதிமன்றம் மாயாவதியின் சிலைகளை மூடிவைக்க ஆணையிட்டதைத் தொடர்ந்து சூடிபிடித்திருக்க வேண்டிய தாக்குதல்,  எதிர்தாக்குதல்கள் அதிகம் இன்றி பிரச்சாரம் நிலைமை மந்தமாகவே உள்ளது.

உத்திரபிரதேசத்தைப் பொறுத்தவரை போட்டி மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சிக்கும் முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் தான். ஆளும் கட்சிக்கு எதிரான எதிர்ப்பு அலை மாயாவதியின் அணிக்கு பல இடங்களில் இழப்பை ஏற்படுத்தலாம். இதன் பயன் முழுதுமாக முலாயாம் சிங்கிற்கு கிடக்குமா என்பது தான் கேள்வி. முக்கியமாக, முஸ்லீம்கள், அவர் கல்யாண்சிங்-உடன் கைகோர்த்த்தால், இம்முறை அவருக்கு எதிராக வாக்களிக்கக் கூடும் கூறுகிறார்கள். அதனாலேயே அவர் கட்சி தற்போது முஸ்லீம்கள் வாக்கு வங்கிகள் அல்ல; அவர்களும் மற்றவர்களைப் போல தனி வாக்காளர்களாகவே செயல் படுகிறார்கள் என்று கூறிவருகிறது. பொதுவாக, முலாயம் 150 இடங்களைப் பிடிப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பெரும்பாலும் தொங்கு சபைக்கு வாய்ப்பு அதிகம் என்பதால் தேர்தலுக்குப் பின் நடக்கும் கூட்டணி பேரங்களுக்கு காங்கிரஸின் பங்கு முக்கியமானதாக இருக்கும்.  ராகுல் காந்தி தேர்தலுக்குப் பின் கூட்டணி எதுவும் இருக்காது என்று இப்போது கூறினாலும் கூட அவர்கள் துணையின்றி ஆட்சியமைப்பது கடினம் என்றேத் தோன்றுகிறது. இம்முறை, ராகுலைப் பொறுத்தவரை உத்திர பிரதேசத்தில்  ஆட்சியை நிர்ணயிக்கும் அளவு இடங்களைப் பெறாவிட்டால் அவரின் அரசியல் எதிர்காலம் பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். அதனால், நேரு குடும்பத்தினர் (ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா) அனைவரும் வேறு வேறு பகுதிகளில் பிரச்சாரத்தை முடக்கிவிட்டுள்ளனர். தேர்தல் ஆணையமும் அவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று கூட விதிகளை மீறி பவனி வந்த ராபர்ட் வதேராவின் காரைத் தடுத்து நிறுத்திய அதிகாரி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியைப் பொறுத்தவரை, உமாபாரதியின் வருகை கட்சியினரிடையே சற்று உற்சாகத்தைக் கொடுத்திருந்தாலும் கூட, மூன்றாம் இடத்திற்காக காங்கிரஸுடன் மோதும் நிலையில் இருப்பதாகக் கூடத் தெரியவில்லை. இதையும் மீறி காங்கிரஸ் குறிப்பிட்ட அளவு இடங்களைப் பெறாவிட்டால்

தேர்தல் பிரசாரத்தின் போது ’ராகுலுக்கு பிரதமராகும் எண்ணம் இல்லை’ என்று பிரியங்காவும், தன் கவனம் பிரதமர் பதவியில் இல்லை; உத்திர பிரதேசத்தின் வளர்ச்சியில் தான் என்று ராகுலும் மாறி மாறி கூறுவது ’எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதா அல்லது  ’சீ!சீ! இந்த பழம் புளிக்கும்’ என்பதா என்பதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்.

2ஜி ஊழலில் நீதிமன்றம் 122 நிறுவனங்களின் உரிமையை ரத்து செய்துள்ள நிலைமையில், இஸ்ரோ-தேவாஸ் அலைகற்றை ஒப்பந்தத்தில் அரசின் விசாரணைக் குழு, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் உட்பட மூன்று பேர் தவறிழைத்துள்ளதாகக் கூறியுள்ளது. அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஏற்கனவே 2ஜி வழக்கில் ராஜாவை மட்டுமே பொறுப்பாக்கித் தப்பிக்க நினைக்கிறது. திமுக-வும் பெரிய அளவில் காங்கிரஸின் இந்த பொறுப்புத் துறப்பை எதிர்க்கவில்லை. ஒருவேளை, கனிமொழி வழக்கிற்கான பேரமாகக் கூட இருக்கலாம்.

உலகக் கோப்பை ஆட்ட நாயகன் யுவராஜ் சிங்கின் புற்று நோய் தாக்கியுள்ளச் செய்தி மிகவும் வருத்தம் தரும் நிகழ்வு. இது, சாதாரணமாக புகைபிடிப்பதால் நுரையீரலைத் தாக்கும் புற்றுநோய் அல்ல; ஜெனெடிக் கோளாறால் வந்த நோய் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். துவக்க நிலையிலேயே அது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதால் எளிதாக சரி செய்து விட முடியும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளது சற்று நம்பிக்கையைத் தருகிறது.

இந்தியாவில் வருடத்திற்கு 7 லட்சத்திற்கும் அதிகமானவர்கள்  புற்றுநோயால் பீடிக்கப்படுகிறார்கள் என்று  கணக்கிட்டுள்ளனர். இவர்களுள், 1½ - 2 லட்சம் பேருக்கு காரணம் புகைப்பிடிப்பதே. அடுத்த இடம் வாய் புற்றுநோய்க்கே. இதிலும் புகை பிடிப்பது ஒரு காரணம் என்றாலும் பெறும் பங்கு குட்கா போன்ற புகையிலைப் பொருட்களே முக்கிய காரணமாக உள்ளன.

பெண்களைப் பொறுத்தவரை 25%-33% சதவிகிதம் மார்பகப் புற்றுநோய்கே ஆளாகிறார்கள். கடந்த 20 வருடங்களில், புற்றுநோய்க்கானத் தீர்வும் மருத்துவமும் பெரிய அளவில் முன்னேறியுள்ளன என்று இந்த நோயிலிருந்து மீண்டு வந்து CanSupport என்ற சேவை நிறுவனத்தைத் துவங்கி நடத்திவரும் முன்ணணி சேவகி ஹர்மலா குப்தா கூறுகிறார். முன் காலங்களைப் போலன்றி மார்பகப் புற்று நோய்க்கு புற்று கட்டிகள் நீக்கப்பட்டு தரப்படும் லீனியர் அக்ஸெலெரேடர் எனப்படும் ரேடியோதெரபி, எக்ஸ்-ரே கருவியைப் போன்று துள்ளியமாக  இருந்து பக்கவிளைவுகளை தவிர்த்து வருவதாகவும் கூறுகிறார். மார்பகப் புற்று நோயைப் பொறுத்தவரை, முன் போலன்றி 80 சதவிகித நோயாளிகள் வெற்றிகரமாக மீண்டுவந்துள்ளதாகவும் கூறுகிறார். இதற்கு, நோயாளியின் உள்ள உறுதி முக்கியம். இந்நோயிலிருந்து மீள முடியும் என்பதை அவர்களைச் சுற்றியுள்ளவர்கள் அவர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.

புற்று நோயைப் பொறுத்தவரை எவ்வளவு விரைவில் அது கண்டறியப் படுகிறதோ அவ்வளவு சதவிகதம் தீர்வு கிட்டும் என்பது தான் உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை, இதில் தான் சற்று முடக்கம். பெரும்பாலும் ஏழைகளைக் கொண்ட நாட்டில் புற்றுநோயைக் கண்டறியும் ஆய்வகங்கள் குறைவாகவும் அவற்றிற்கான செலவு அதிகமாகவும் இருப்பதும் தான் காரணம். அரசு மருத்துவ மனைகளில் ஆய்வு, பயாப்ஸிக்கான உபகரணங்களும் அவற்றின் சரியான பராமறிப்பும் இருக்கும் பட்சத்தில் இதில் ஓரளவு முன்னேற்றம் காணமுடியும்.

இந்த ஆண்டுக்கான் ஐபிஎல் ஏலங்கள் நடந்துள்ளன. ஐபிஎல்-உம் சர்சைகளும் பிரிக்க முடியாதவை. இந்த ஆண்டு, புனே அணியின் உரிமையாளர்களும் இந்திய அணியின் விளம்பரதாரர்களுமான சஹாரா இந்தியா தங்கள் உரிமையையும் விளம்பரங்களையும் தானாக விலக்க முன் வந்துள்ளது ஒரு பெரிய எரிமலையின் சிறிய புகைச்சலே. லலித் மோடி இந்த குழப்பத்தில் மீன் பிடிக்கலாம் என்று தன் தலைமையின் கீழ் மூன்றாண்டுகள் எந்த குழப்பமும் இல்லாமல் நடந்ததாகக் கூறுகிறார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஆட்டக்காரர்கள் பொது ஏலத்திற்கு வந்து விடுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனாலும், சச்சின், தோனி, ரெய்னா, சேவாக் போன்றவர்கள் அந்த அணிகளினாலேயே தக்க வைக்கப்பட்டது விதி மீறல் என்று கூறுகிறார். இவர் தலைவராக இருந்த போது, ஆண்ட்ரூ பிலிண்டாஃப் எந்த ஏலமும் இல்லாமல் சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்ய அனுமதித்து இவர் செய்த விதிமீறல் அனைவராலும் மறக்கப்பட்டிருக்கும் என்று நினைக்கிறாரோ என்னவோ? அப்பொழுது, இந்தியா சிமிண்ட்ஸ்-இன் சீனிவாசன் இவர் கோஷ்டி; இப்போது, இவர் பிஸிஸிஐ-யால் தள்ளி வைக்கப் பட்டு பழி வாங்கப்படுகிறார் அது தான் வித்தியாசம்.

ஐந்து நாள் போட்டிகளில் இந்தியா ஆஸ்த்ரேலியாவிடம் 4-0 என்று படு தோல்வி அடைந்துள்ளது. எல்லோரும் மட்டைவீரர்கள் சொதப்பியதைக் குறிப்பிட்டாலும் பந்து வீச்சைப் பற்றி எதுவுமே கூறவில்லை. என்னைப் பொறுத்தவரை பந்து வீச்சு(ம்) சரியில்லை என்று தான் கூறுவேன். புது பந்தில் விக்கெட் எடுத்து கை ஓங்கியிருந்த சமயத்தில், களத்தடுப்பு சரியாக அமைக்கப் படாததும் (எளிதாக ஒரு ஓட்டங்கள் எடுக்க முடிந்தது) ஒரு காரணம் என்றாலும் பந்து வீச்சும் சரியாக இருக்கவில்லை. மட்டை ஆட்ட்த்தைப் பொறுத்தவரை கோஹ்லியை சற்று மேல் வரிசையில் (மூன்றாவது ஆட்டக்காரராக) அனுப்பியிருக்கலாம். மொத்தத்தில், டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை  தோனியின் தலைமை சரியில்லை என்றே கூறலாம்.

உலகக் கோப்பை-யில் முதலிடம் பெற்ற அணியின் நிலைதான் இப்படி என்றால், இரண்டாமிடம் பெற்ற இலங்கை அணியும் தொடரை இழந்துள்ளது. அது ஓரளவு எதிர்பார்த்ததுதான் என்றாலும் இந்திய அணி அளவு மோசம் இல்லை.

பாகிஸ்தானுடன் இங்கிலாந்து  ஓரளவாவது போட்டியுடன் விளையாடும் என்ற எதிர்பார்ப்பு இருந்த்து. ஆனால், அவர்கள் இங்கிலாந்துக்கு வெளியே சுழல் பந்தை விளையாடுவதில் சொதப்புவது மீண்டும் தொடர்ந்துள்ளது.

ஆஸ்த்ரேலிய-இந்திய-இலங்கை முத்தரப்பு ஒருநாள் போட்டியைப் பொறுத்தவரை இந்திய-இலங்கை போட்டிகள் தான் எந்த அணி இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பதை நிர்ணயிக்கும் என்று நினைக்கிறேன். கடைசி, இரண்டு போட்டிகளில் 300க்கும் மேல் அடித்து வெற்றி பெற்ற தெம்பில் இலங்கை இருக்கிறது. அதே நேரம் தென் ஆப்பிரிக்க களம் ஓரளவு மட்டை வீரர்களுக்கு  (குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில்) உதவும் என்பதையும் கருத வேண்டியுள்ளது. ஆஸ்த்ரேலிய ஆடுகளங்கள் பெரியவை. எனவே அடித்து ஆடுவதை விட ஓடி ரன் எடுக்கவேண்டியது அவசியம்.

புதன், டிசம்பர் 21, 2011

கலவை – 12

தில்லியில் தற்ப்பொழுது மாலையில் கடுமையான பனிமூட்டமும் காலையில் குளிர் காற்றும் வீசத் துவங்கி குளிர்காலம் முழு வீச்சுடன் ஆரம்பமாகிவிட்டது. முன் போலில்லாமல் கடந்த மூன்று நான்கு வருடங்களாக குளிர் திடீரென அதிகமாகி பின் திடீரென குறைவது என்பது நடக்கிறது. இருக்கும் 15-20 நாட்களில் முன் வருடங்களை விட அதிக குளிர் அளவை எட்டுவதும் வழக்கமாகியுள்ளது.

அதன் தாக்கமோ என்னவோ அரசியலிலும் சற்று சூடு குறைந்துள்ளது. ஆரம்பத்தில்  முரண்(டு) பிடித்த எதிர்கட்சிகள் தற்போது நாடாளுமன்றத்தை நடத்த விடும் அளவிற்காவது இறங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தின் இந்தக் குளிர்காலத் தொடர் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் நான்கு நாட்கள் வேலையே நடக்கவில்லை என்பதை நினைக்கும் பொழுது இது அந்த இழப்பை ஓரளவிற்காவது ஈடு செய்தால் சரிதான்.

மத்திய மந்திரி சபை சென்ற வாரம் உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 60 கோடி மக்களுக்கு (75 சதவீத கிராம மக்களுக்கும் மீதி நகர்புறத்தினரும்) மாதம் குறைந்தபட்சம் 7 கிலோ உணவு தானியம் வழங்கப் படும்). இதனால் உணவுக்கான அரசு மானியம் `65000 கோடி யிலிருந்து `12000 கோடியாக அதிகரிக்கும் என்று கணித்திருக்கிறார்கள். இது மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது ஏழைகளுக்கான நல்லத் திட்டம் போல் தெரிந்தாலும், இது மறைமுகமாக விலையேற்றத்திற்கு தான் வழிவகுக்கும். தமிழ்நாட்டில் நாம் ஏற்கனவேப் பார்த்து வருவது போல் அரிசி ஒரு ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டாலும் மற்ற பொருட்கள் விலை வெகுவாக ஏறுவதற்கே அது வழி வகுத்தது. மேலும் அதற்கான வருவாய்டாஸ்மாக்மூலம் ஈடுகட்டப்பட்டு வருகிறது. மேலும், இது தமிழ்நாட்டில் உள்ளது போல் போலி ரேஷன் அட்டைகளை உருவாக்கி ஊழலை  வளர்க்கவும் உதவும். ஏற்கனவே கல்வி உரிமைச் சட்டம் என்று சட்டம் இயற்றிவிட்டாலும், இன்றளவில் அது ஏட்டில் தான் உள்ளது. இதன் நிலையும் சற்றேறக்குறைய அது மாதிரி தான் ஆகும். ஆனால், அரசியல் ரீதியாக இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சாதனையாகச் சொல்லிக் கொள்ள உதவும்.

லோக்பால் மசோதா நேற்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் படும் என்று எதிர்பார்க்கலாம். லோக்பாலின் கீழ் பிரதமரைச் சேர்த்துள்ளனர். C-D பிரிவு அரசு ஊழியர்கள் (Clerks, Peons), சி.பி.ஐ. ஆகியோர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் லோக்பாலின் கீழ் சேர்க்கப் படவில்லை. C-D பிரிவு ஊழியர்களின் மீதானக் குற்றச்சாட்டுகளை மத்திய விஜிலென்ஸ் ஆணையமே விசாரிக்கும். சி.பி.ஐ. சேர்ப்பது பற்றி தான் நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடக்கும் என்று நினைக்கிறேன். சி.பி.ஐ, தேர்தல் ஆணையத்தைப் போல அரசு தலையீடு இல்லாமல் இருப்பது தான் நல்லது. சி.பி.ஐ.யின் விசாரணையில் லோக்பாலின் தலையீடும் இருக்கக் கூடாது. நாளை லோக்பாலின் உறுப்பினர்கள் மீதான ஊழலை விசாரிப்பதில் அவர்கள் தலையீடும் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இதனிடையில் அரசின் இந்த மசோதாவை அன்னா குழுவினர் வலுவற்றது என்று விமரிசித்துள்ளனர். அவர்களின் போராட்டம் தொடரும் என்றும் கூறியுள்ளனர். காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் சிங்வி, அரசு அன்னா குழுவினருக்கு பதிலளிக்கப் போவதில்லை என்றும் நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்கும் என்றும் கூறியுள்ளார். பாஜக-வும் இந்த மசோதா வலுவற்றது என்று கூறியுள்ளது. நாடாளுமன்ற விவாதத்தில் என்ன நடக்கும் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மீண்டும், அம்மா மன்னார்குடி குடும்பத்தைத் தள்ளி வைத்துள்ளார். 1996-ல் தேர்தல் தோல்வியின் எதிரொலி. ஆனால், இப்பொழுது அப்படி இல்லை. சாதாரணமாக இதன் பின்ன்ணி வெளிவராது. இப்பொழுதும், பெரும்பாலும் அப்படித்தான் நடக்கும். அதிமுக –வின் தொண்டர்கள் இதனால் உற்சாகமடைந்திருந்தாலும், இரண்டாம் கட்டத் தலைவர்கள் (அப்படி யாராவது இருக்கிறார்களா?) இதைப் பற்றி கருத்து வெளியிடவில்லை. இது ஊழல் வழக்கைச் சமாளிக்க நீதிமன்றத்தில் தனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லை என்று கூற உதவும் என்பதற்கான நாடகமாக இருக்கலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை. அம்மாவிடம் எதையும் எதிர்பார்க்கலாம். அண்ணா கூறியதைப் போல் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர்கள் அதிமுகவினர்.

ஆஸ்த்ரேலியத் தொடர் ஆரம்பமாகும் நிலையில் கங்குலி, நெஹ்ரா போன்றவர்கள் க்ரேக் சேப்பலுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். சாதாரணமாக ஆஸி ஊடகங்கள் வந்திருக்கும் அணியின் மன வலிமையை குலைப்பதற்காக இது போன்ற விஷயங்களை வெளியிடுவர். இம்முறை இந்திய ஊடகங்களும் இதைச் செய்ய முயல்கின்றனவா?

இலங்கை, தென் ஆப்பிரிக்காவில் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. சென்ற வருடம் இதே சமயத்தில் இந்தியாவும் அவர்களிடம் முதல் போட்டியை இழந்தது (முதல் இன்னிங்ஸில் 136 ரன்கள்; எனவே, இரண்டாம் இன்னிங்ஸில் சச்சினின் சதமும் அணியின் தோல்வியை தடுக்க முடியவில்லை). ஆனால், இரண்டாம் போட்டியில் (boxing day) இந்தியா வென்றது. இலங்கையால் அது முடியுமா என்பது சந்தேகமாத்தான் இருக்கிறது. காரணம், துவக்க ஆட்டக்காரர்கள்.  தில்ஷான் அடித்து ஆடுபவர் என்றாலும் அவர் சேவாக் இல்லை. உபுல் தரங்கா அவரை விட consistent-ஆக ஆடுவார். அதே போல் பந்து வீச்சும் சுமார் தான். அல்விகதலா களமிறக்கப் படலாம். தென் ஆப்பிரிகா, சுசுபே-வை மார்கெலுக்கு பதிலாக களமிறக்கலாம்.

வெள்ளி, டிசம்பர் 09, 2011

கலவை – 11


நான் முன்பே எழுதியபடி, தில்லியில் VVIP-களின் ஊர்திகளில் சிவப்பு, நீல விளக்குகள் பொருத்துவது என்பது அடிக்கடி நடக்கும் பிரச்சனை. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் protocol சரியில்லை என்றும். அவர்களின் ஊர்திகளுக்கும் மத்திய அமைச்சர்களின் ஊர்தி போல் விளக்குகள் பொறுத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது மட்டும் நடந்துவிட்டால், தில்லி காவல் துறைக்கு நிரந்தர தலைவலிதான். ஏற்கனவே மத்திய, மாநில அமைச்சர்கள், நீதிபதிகள் என்று ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மேலும் 500 பேரை சேர்த்துவிட்டால் அவ்வளவுதான். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ராஜா உறுப்பினர்களின் சலுகைகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். பீகாரைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேறு தங்களுக்கு ரயிலில் முதல் வகுப்பில் பயணச்சீட்டு முன்பதிவு கிட்டுவதில் சிரமம் இருப்பதாகப் புகார் கூறியுள்ளனர். நாடாளு மன்றம் ஒரு வாரம் நடைபெறவே இல்லை, இதைப் பற்றி மக்கள் யாரிடம் முறையிட முடியும். ’பண்டாரம் சோத்துக்கு அலைகிறது, லிங்கம் பஞ்சாமிர்த்துக்கு அழுகிறதுஎன்று கூறுவார்கள்; அது இதுதான்.

இந்திய அரசு கூகுள், முகநூல் ஆகியவற்றில் காட்டப்படும் 255 தகவல்களை நீக்கும்படிக் கோரியுள்ளது (அவற்றில் 8 வெறுப்பைக் காட்டும் பதிவுகள்). ஒரு புறம் அமெரிக்கா (ஹிலேரி கிளிண்டன்) மற்ற நாடுகளை வலைதளங்களில் கருத்து சுதந்திரத்தை அனுமதிக்க உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ள வேளையில் அவர்கள் இதற்குச் சம்மதிப்பது கடினமே. நம் நாட்டில் நம் பத்திரிக்கை மற்றும் மற்ற ஊடகங்களையே கட்டுப் படுத்த முடியவில்லை. அதே நேரம் நம் வலைத் தலங்களிலும் சில நேரங்களில் எல்லைகள் மீறப் பட்டு வருவதையும் மறுக்க முடியாது. வலை தளங்களில் சீண்டல்கள் சில நேரங்களில் வெறுப்புத் தீயை வளர்க்கத் தான் செய்கின்றன. எல்லைகள் மீறப் படாத வரை அனைத்தும் சரி. அது மீறிவிட்டால் சில நேரங்களில் கடிவாளங்கள் அவசியமாகிவிடுகின்றன.

2-ஜி வழக்கில் சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என்று சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் சாமியின் வாதத்தை டிசம்பர் 17-ம் தேதி அளிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.  

பெட்ரோல் விலை சற்று குறைத்திருக்கிறார்கள். சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் விலையேற்றத்தில் அது தலைகீழ். முழம் ஏற்றினால், விரல்கடை அளவு குறைப்பார்கள்.

அருகாமை நாடுகளைப் பார்க்கும் பொழுது இந்தியாவில் தான்  தற்போது (விலை குறைப்பிற்கு பின்னரும்) பெட்ரோல் விலை அதிகம்.

            பாகீஸ்தான்                 -           `.48.64
            பங்களாதேஷ்              -           `.52.42
            இலங்கை                    -           `.61.38
           
            இந்தியாவில் விலைகுறைப்பிற்கு பின்னரும் இது `.66.42  (தில்லியில்) ஆக உள்ளது. அமெரிக்காவில் வெறும் `.44.88 (ஹூம்). ஆனால், டீசல் விலை `.40.91 க்கு விற்பது மற்ற நாடுகளைப் பார்க்கும் பொழுது குறைவுதான். அதற்காகத் தேற்றிக் கொள்ளலாம். முக்கிய காரணம் excise duty தான் அது லிட்டருக்கு `.14.78.

நாடு முழுவதும் ஆதார் அடையாள அட்டைகளுக்கு மக்கள் வழங்கப் பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அதற்கான மசோதாவை மத்திய நாடாளுமன்ற நிதிக் குழு நிராகரித்துள்ளது. ஏற்கனவே, மத்திய அமைச்சரவையிலேயே அதற்கு போதிய வரவேற்பில்லை. குறிப்பாக சிதம்பரம், நந்தன் நிலேகனி கூடுதல் நிதியாகக் கேட்ட 15000 கோடியை ஏற்கவில்லை. இதில் இந்த சட்ட சிக்கல் வேறு. ஆனால், பிரதமர் இதில் முனைப்புடன் இருப்பதால் குழுவின் எதிர்ப்பை மீறியும் மசோதா அறிமுகப் படுத்தப் படலாம்.

சென்ற வாரம் ஹிந்தி திரைப்பட நடிகர் தேவ் ஆனந்த் காலமானார். 1940 களின் ஆரம்பத்தில் நடிக்க வந்த அவர் அப்போதைய முன்ணனி நடிகை சுரையா-வுடன் இணைந்து தொடர்ந்து ஐந்து வெற்றிப் படங்களைத் தந்தாலும் அதன் பெருமைகள் சுரையாவிற்கே சென்றதைக் கண்டு, தன் பயணத்தை வேறு பாதையில் திருப்பினார். பின்னர் நடிகர் அசோக் குமாரால் அவரது திறமை கண்டெடுக்கப் பட்டு வெற்றி கண்டார். தன் வெற்றியால் தன் நண்பர் குருதத் (என்னைப் பொறுத்தவரை ஹிந்தி திரையின் மிகத் திறமை வாய்ந்த நடிக இயக்குனர் என்றால் அது குருதத் தான்). வசனங்களை வேகமாக உச்சரிப்பார்;  Style மன்னர் (ரஜினிகாந்த் ஞாபகம் வருகிறதா?). 50-60, ராஜேஷ் குமார் வரும் வரை, பெண்களின் கனவு நாயகன்; அதற்கு பின் வித்யாசமான கதையமைப்புகளைக் கொண்ட படங்கள், 70களின் பின்னால் கவர்ச்சி நாயகிகள் என்று எப்பொழுதும் தன்னைப் புதுபித்துக் கொண்டே வந்துள்ளார். ஆர்.கே.நாரயணின் கதையை “கைட்” என்று தனக்கேற்றவாறு திருத்தி அவரது தம்பி விஜய் ஆனந்தால் இயக்கப் பட்ட படம் இந்திய திரைப்படங்களுக்கு ஒரு மைல் கல். அவரது இசை ஆர்வம் அவர் படங்களின் பாடல்களில் வெளிப்பட்டுள்ளது. அவரது படத்தின் அணைத்து பாடல்களுமே ஹிட் தான்.  60களுக்கு முன் வரை முஹமத் ரஃபியுடனும், பின் கிஷோருடனும் இணைந்து அவர் அளித்துள்ள பாடல்கள் சாகாவரம் பெற்றவை.

நேற்று சேவாக் இரட்டைச் சதம் அடித்த இரண்டாவது ஆட்டக்காரர். சேவாக் அதிரடி ஆட்டக்காரர். ஆனால், இவ்ரால் மட்டும் எப்படி நீண்ட innings ஆட முடிகிறது. பொதுவாக, இது போன்ற அதிரடி மட்டையாளர்களின் பலமே அவர்களின் hand-eye coordination தான். சேவாகிடம் அது இருக்கிறது. சாதாரணமாக சேவாகின் footwork தான் அவர் பலவீனம் என்று கூறுவார்கள். ஆனால், அதுவே cut விளையாடுவதற்கு நிறைய நேரம் தருகிறது என்று நினைக்கிறேன். அவர் அதிரடியாக விளையாடினாலும் மற்றவர்களிடம் இருந்து அவரை வேறு படுத்துவது அவரின் அதிரடிகள் offside-ல் இருப்பதுதான். சாதாரணமாக அதிரடி ஆடுபவர்கள் leg-sideல் தான் பலமாக அடிப்பார்கள்; அதனால் cross-bat விளையாடி ஆட்டமிழ்ப்பார்கள். ஆனால் சேவாக் பொதுவாக சுழல் பந்தை தான் leg-sideல் ஆடுவார். அதுகூட அவர் நீண்ட innings ஆடுவதற்கு காரணமாக இருக்கிறது போலும்.

செவ்வாய், நவம்பர் 29, 2011

கலவை – 10


நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் வடிவேலு காமடி போல் “நடக்கிறது ஆனால் நடக்கவில்லை” என்ற நிலையில் இருக்கிறது. எதிர்கட்சியான பாஜக, தினம் தினம் ஏதாவது புதுப் பிரச்சனையைத் துவக்கி அவையை ஸ்தம்பிக்கச் செய்து தன் கடமையை ஆற்றுகிறது. காங்கிரஸும் தன் பங்கிற்கு குழந்தையைக் கிள்ளிவிடுவது போல் ஏதாவது செய்து கொண்டுதான் இருக்கிறது.

இப்போது அவர்களுக்குக் கிடைத்திருப்பது சில்லறை வணிகத்தில் நேரடி வெளிநாட்டு முதலீடு. நேரடி வெளிநாட்டு முதலீட்டைப் பொறுத்தவரை பாஜக சாதரணமாக ஆதரவு நிலைதான் எடுக்கும். ஆனால், இது காங்கிரஸின் திட்டம்; அதனால் தான் அவர்கள் எதிர்க்கிறார்கள். இடதுசாரிகள் எதிர்ப்பதிலாவது அர்த்தம் இருக்கிறது. இது அவர்கள் கொள்கைக்கு எதிரானது. ஆனால் பாஜக எதிர்ப்பதற்கு வேறு எந்த காரணமும் தெரியவில்லை.

ஒரு வழியாக கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. இன்று விடுதலைச் செய்யப் படுவார். கலைஞருக்கு சற்று ஆறுதலாக இருக்கும். ஆனால், மத்திய அரசில் காலியாக இருக்கும் அமைச்சர் பதவிக்கு யாரையும் தேர்ந்தெடுக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

முல்லை-பெரியாறு அணை விவகாரம் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தை அடந்திருக்கிறது. நேற்று கேரள நாடாளு மன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் முன் “தர்ணா”வில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவர்கள் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதாகவும் அதனால் அணை உடையும் அபாயம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். அப்படியெனில் புதிதாக அவர்கள் அணைகட்டினால் அது உடையாதா? எந்த அளவு (ரிக்டர் அளவுகோலில்) நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் அது அமைக்கப்படும். இதுவரை, நிலநடுக்க அபாயம் இல்லாத பகுதியாக இருந்த அணைபகுதியில் திடீரென அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டால், புதிதாக அணை கட்ட இருக்கும் பகுதியிலும் (இப்பொழுது நிலநடுக்க அபாயம் இல்லை) பின்னர் நிலநடுக்கம் வந்தால் அதனால் ஆபத்து வராதா? ஆனால் ஒன்று கேரள உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துகிறார்கள். முதல்வருடன் அனைத்து கட்சியினரும் சேர்ந்து பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். நம் தமிழ்நாட்டு உறுப்பினர்களால் இது எந்த காலத்திலும் சாத்தியமில்லை என்பது தான் நிதர்சனம்.

தில்லியில் சென்ற இருவாரங்களாக நடந்த சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. கடந்த எல்லா வருடங்களை விட இந்த வருடம் போக்குவரத்து மிகவும் நன்றாக சீரமைக்கப் பட்டிருந்த்து. சாதாரணமாக இந்த இரண்டு வாரங்கள் இந்த இடத்தை தினமும் கடந்து போகும் பயணிகளுக்கு கெட்ட கனவாகவே இருக்கும். ஆனால், இம்முறை இது மிகவும் நன்கு ஒழுங்குபடுத்தப் பட்டது. காமன்வெல்த் சமயத்தில் நடந்த சீரமைப்பினால் கற்ற பாடமாக இருக்கலாம். மேலும், கூட்டமும் ஒரு கட்டுக்குள்ளேயே வைக்கப் பட்ட்தும் க் கூட காரணமாக இருக்கலாம். இருந்தாலும், தில்லி காவல் துறைக்கு ஒரு ஓ!! போடலாம்.

தில்லியில் நேற்று இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை (27 வயது) தாக்கிக் கொன்றுள்ளார்கள். காரணம், அவர் இவர்களை ’முறைத்து’க் கொண்டே இருதாராம். நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் என்பது புரியவில்லை.

மேற்கிந்திய அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என்று வென்றுள்ளது இந்திய அணி. கடைசி போட்டியில் 3-0 என்ற வாய்ப்பைத் தவற விட்டுள்ளார்கள். ஆனாலும், விராட் கோஹ்லி அவுட் ஆன போது, சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிராக 15 ரன்கள் வேண்டிய நிலையில்  6 விக்கெட்களையும் இழந்து  (சச்சின் முதுகு வலியுடன் சதம் அடித்து சக்லினிடம் அவுட் ஆனது) 2-1 என்றாகிவிடுமோ என்ற பயம் எழத்தான் செய்தது. இன்றிலிருந்து ஒருநாள் போட்டிகள் ஆரம்பம். தோனி இல்லை; சேவாக் தலைமை.

திங்கள், நவம்பர் 21, 2011

கலவை – 9


மல்லையாவைக் கைத்தூக்கிவிடுவோம் என்று எழுதி ஒரு வாரம் கூட ஆகவில்லை, இது தான் சமயமென்று நிதி அமைச்சகம் விமானப் போக்குவரத்துத் துறையில் 24 சதவீதம் நேரடி வெளிநாட்டு முதலீட்டை (Foreign Direct Investment) அனுமதிக்க உள்ளது. இது பல நாட்களாகவே அரசின் திட்டத்தில் இருந்தாலும் அத்துறை நிறுவனங்களின் எதிர்ப்பால் அதற்கு அனுமதிக்கவில்லை. இப்போதைய ‘கிங்பிஷர்’-இன் நிலைமையைக் கண்டு இதற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு தான் தீர்வு என்ற துறை வல்லுநர்களின் கூற்றுக்காகவே காத்திருந்தது போல் மத்திய அரசு இப்போது இதற்கு அனுமதி தந்துள்ளது. இதனால், விமான போக்குவரத்து நிறுவனங்களின் நிதி நிலைமை வேண்டுமானால் சீராகுமே தவிர மக்களுக்கு அதன் பலனாக போக்குவரத்து செலவு குறையுமா என்பது புரியவில்லை. பொதுவாக, இது போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின்  முதலீட்டாளர்கள் ஆரம்பத்தில் நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை என்று முதலில் சில சலுகைகளைத் தந்து பின்னர் போட்டியிலிருக்கும் இந்திய நிறுவனங்களை மூழ்கடித்துத் துரத்திவிட்டு பின் சுரண்டத் தொடங்குவர். நம் கண் முன்னரேயே பெப்ஸி, கோக் நிறுவனங்கள் முதலில் ரூ.5/- க்கு விற்ற அதே அளவு பானத்தை இன்று ரூ.22/-க்கு விற்கிறார்கள். இடையில், இந்திய நிறுவனங்கள் தாக்கு பிடிக்க முடியாததால் தொழிலை விட்டுவிட்டன அல்லது அவற்றின் பிரபலமான brand-கள் (limca, thumpsup போன்றவை) இவற்றாலேயே வாங்கப்பட்டது தான் மிச்சம். ஆனால், இப்போதைக்கு இதன் அனுமதி வெறும் 24% என்பது தான் ஒரே ஆறுதல்.

தில்லி மெட்ரோ ரயில் சேவையின் நான்காம் கட்டத்தின் திட்ட விரிவாக்க அறிக்கைத் தயாரிக்கப் பட உள்ளது. இதன் படி, ஏழு புதிய இணைப்புகள் நடக்க இருக்கின்றன. அவை:
1.    யமுனா – லோனி எல்லை (11.97 கி.மீ)
2.    ஜனக்புரி (மே) – முகுந்த்புரி (18.74 கி.மீ)
3.    முகுந்த்புரி – தில்ஷாத் கார்டன் (17.54 கி.மீ)
4.    கீர்த்திநகர் – த்வாரகா (செ.28) (18.7 கி.மீ)
5.    பதர்பூர் – தில்லி ஏரோசிட்டி (20.79 கி.மீ)
6.    லாஜ்பத் நகர் – மதன்கீர் (7.33 கி.மீ)
7.    ஆசாத் பூர் – ராமக்ருஷ்ணா ஆஷ்ரமம் (8.3 கி.மீ)
மேற்கூறிய இணைப்புகள் நிறைவேறினால் தில்லி மெட்ரோ ரயில் லண்டன் மெட்ரோவை விட நீளமானதாக ஆகிவிடும். இது வரை காலக்கெடுவுக்குள் தன் புதுத் தளங்கள் மற்றும் இணைப்புகளை நிறைவேற்றியுள்ள DMRC இதையும் குறித்த காலத்திற்குள் நிறைவேற்றும் என்று நம்புவோம்.

இங்கே கூடங்குளத்தில் புதிய அணு உலை திறப்பிற்கு எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், ஈரானில் இதற்கு நேர் எதிர் நிலை. டெஹ்ரானில் இயங்கி வரும் அணுமின் நிலையத்தில் அணு உலையை ஆக்கப்பூர்வ பணிகளுக்கு மட்டுமன்றி ஆயுதம் தயாரிக்கவும் பயன் படுத்துகிறது என அமெரிக்காவும் பிரிட்டனும் புகார் கூறியுள்ளன. ஈரான் அரசும் இதை மறுத்துள்ளது. ஈராகிலும் இது போன்ற குற்றச்சாட்டுகளை (தவறாக) சதாமுக்கு எதிராகக் கூறியது நினைவுக்கு வருகிறது.

சென்ற வாரம், வினோத் காம்ப்ளி 1996 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் (இந்தியா-இலங்கை இடையே நடைபெற்றது) அணிக் கூட்டத்தில் முதலில் மட்டையாட்த் தீர்மானித்ததாகவும் ஆனால், டாஸில் வென்றதும் (அசார் தன்னிச்சையாக) முதலில் இலங்கையை விளையாட அனுமதித்த்தில் ஏதோ உள் நோக்கம் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், அணியின் அப்போதைய பயிற்சியாளர் கெய்க்வாட் மற்றும் அணைத்து ஆட்டகாரகளும் (சித்து நீங்கலாக) மறுத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரையில் இது காலந்தவறிய குற்றச்சாடு. இந்தக் குற்றச்சாட்டை அவர் அப்போதே (ஏனெனில் அப்போது அசார் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு அவர் தனிமை படுத்தப் பட்டிருந்தார். அதாவது அவர் influence-இல் இல்லை; அந்த சமயத்தில் அவர் மீதான அத்தனைக் குற்றச்சாட்டுகளும் நம்பப் பட்டிருக்கும்) அதைவிட்டு இப்பொழுது கூறுவதை “கொம்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது” என்பார்கள். என்னைப் பொறுத்தவரை அன்றைய தேதியில் இலங்கை நல்ல chaser-களாக இருந்தார்கள்; தவிர தில்லியில் நடந்த லீக் போட்டியில் சச்சின் சதம் அடித்தும் முதலில் விளையாடிய இந்தியா தோற்றது. அதனால், பொதுவாக ரசிகர்கள் மத்தியிலேயே இந்தியா முதலில் பந்து வீச வேண்டும்; அப்படி வீசினால் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்பதால் அதிரடியாக ஆடாமல் சற்று நிதானமாக ஆடுவார்கள் (யார் ஜெயசூர்யா கலு ஜோடியா என்று எதிர்கேள்வி கேட்பது புரிகிறது) மைதானமும் fresh ஆக இருப்பதால் துவக்க ஆட்டக் காரர்களால் அடிக்க முடியாது என்று தான் பேசிக் கொண்டோம். அது ஓரளவு நல்ல முடிவாக துவக்க ஆட்டக் காரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். (அரவிந்தா வேறு திட்டம் வைத்திருந்தால் என்ன செய்ய முடியும்?). அதே போல, இந்திய வீரர்கள் 92/2 என்ற நிலையிலிருந்து சச்சின் அவுட் ஆனவுடன்108/8 என்று மாறியதிலும் ”ஏதோ” நடந்திருக்கிறது என்கிறார். ஆனால், வல்லுநர்கள் புதிதாக இடப்பட்ட மைதானம் உடைந்தது தான் காரணம் என்று அன்றைய தினம் comment செய்தனர்; இதைப் பற்றி மைதானத்தில் அவுட் ஆகாமல் இருந்த காம்ப்ளி கூறுவது தான் சரியாக இருக்கும் என்று கொண்டாலும், இத்தனைக் காலம் கழித்து இதைக் கூறுவது சரியில்லை என்பது தான் என் கருத்து.

கடைசியாக படித்ததில் பிடித்தது,

”ராஜராஜ சோழனுக்குப் பின் ”அம்மா” அரசாண்டிருந்தால்…..
பெரிய கோவில், பெரியாஸ்பத்திரி ஆகியிருக்கும்.”
Mummy Returns!!!