வியாழன், நவம்பர் 03, 2011

இன்று சுடுவது நிச்சயம் - ‘சவால் சிறுகதை-2011’


இன்று சுடுவது நிச்சயம்

ன்றைக்கு நிச்சயம் சுட்டு விடவேண்டும்!! என்று மனதில் நினைத்துக் கொண்டார் கோகுல்நாத். பாவம் அவரும் எத்தனை நாள் தான் மனைவி ரூபலா செய்வதைப் பொருத்திருப்பார். கடந்த 40 வருடங்களில் இப்படி ஒரு நிலை வரும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை. அதிலும், கடந்த இரண்டு வருடமாக அதாவது ரிடையர் ஆனபின் தான் இத்தனை மோசம். காரணம் அந்த விவேக் தான். அவனை நினைத்த உடனேயே அவர் உடல் வேர்க்கத் துவங்கியது.

ஆம் இன்று சுடுவது நிச்சயம்.

அதற்கு, அவர் தேர்ந்தெடுத்த ஆள் விஷ்ணு. ஆம், அதே விஷ்ணு தான். எவன், தன் அத்தை மகள் ரூபலாவை தனக்கு அறிமுகம் செய்து தன் காதல் திருமணம் நடக்க உதவினானோ, அந்த பால்ய நண்பன் விஷ்ணு தான் இதற்கு சரியான ஆள்.

இந்த ரூபலாவோ விஷ்ணு தன் மாமன் மகன், தன் காதலுக்கு உதவியவன் என்பதை எல்லாம் மறந்து அவனை எப்பொழுதும் ஏசிக் கொண்டே இருக்கிறாள். அவனைக் கண்டாளே இவளுக்கு எட்டிக் காய்தான். அதுவும் நாங்கள் இருவரும் பேசிக் கொள்வதைப் பார்த்தால் ஏதோ வெளிநாட்டு ஒற்றன் போல் வேவு பார்க்க வந்து விடுவாள். அவளுக்கு என்ன தெரியும்; எங்கள் நட்பு இவள் வருவதற்கு முன்பே சிறு வயதிலேயே ஆரம்பித்து விட்டது. இன்றைக்கும் என் ஒரே நண்பன் என்றால் அவன் விஷ்ணுதான் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

உடனே அவர் மனசாட்சி எதிரில் இருந்த கண்ணாடியில் வந்து,  ஏன் விவேக் உன்னை விட சிறியவன் என்றாலும் அவனும் உன் நண்பன் தானே?” என்று கேட்டது.

நண்பன்!! யார்?  அந்த விவேகா!! துரோகி, அவன் தான் இது எல்லாத்துக்கும் காரணம். அவனைப் பற்றி பேசாதேஎன்று திட்டி அதைத் துரத்தினார்

அவன் பெயரை நினைத்ததுமே அவருக்கு அன்று அந்த விவேக்-இன் 50-வது பிறந்த நாளில் நடந்தது தான் நினைவுக்கு வந்த்து. அவருக்கும் விஷ்ணுவுக்கும் முன்னாலேயே ரூபலாவும் விஷ்ணுவின் மனைவி பாமாவும் ஒரு பெரிய கேக் துண்டை எடுத்து விவேக்-இன் வாயில் ஊட்ட அவனும் சிறிது கூடத் தயக்கம் இல்லாமல் பெரிய கேக் துண்டை அவர்களுக்கு ஊட்ட இவருக்கு வந்ததே பெரிய கோபம். ஆனால், மனதுக்குள் புழுங்குவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும். வயதாகிவிட்டதால் இது போன்ற நிலை சகஜம் தான். அதற்காக இந்த பெண்கள் இப்படியா நடப்பார்கள். அவருக்கு ஒரே ஆத்திரம். அவருக்குள் மீண்டும் அந்த மிருகம் விழித்துக் கொண்டது.

இன்று நிச்சயம் சுட வேண்டும்.

அன்று, தனியே விஷ்ணுவிடம் பேச சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கு, அந்த வாய்ப்பு சாப்பிடும் போது தான் கிடைத்தது. அதுவும், அப்போது ரூபலாவும் பாமாவும் விவேக்-உடன் ஒட்டிக்கொண்டு ஏதோ ரகசியம் பேசிக் கொண்டிருந்ததால்.

ரூபலா நடந்து கொள்வதைப் பற்றி விஷ்ணுவிடம் விவரித்த கோகுலுக்கோ விஷ்ணு சொன்னது அதைவிட அதிர்ச்சியைத் தந்தது. ஆம், பாமா விஷ்ணு விஷயத்தை கேட்ட போது தன் நிலைமையே தேவலாம் என்று கூட அவர்க்குத் தோன்றியது. இதற்கும் இந்த விவேக் தான் காரணம்!! வேறு யாரால் இது மாதிரி செய்ய முடியும். அப்பொழுதுதான் அவருக்கு அந்த யோசனைத் தோன்றியது. அதைக் கேட்டவுடன் விஷ்ணுவுக்கோ ஒரே ஷாக்.

இது முடியுமா? நடக்குமா? உனக்கு சுடக் கூடத் தெரியுமா? எனக்குத் தெரியாதே என்று விஷ்ணு கேள்வி மேல் கேள்வி கேட்டான்

“அடப்பாவி, நான் உனக்குச் சுடத் தெரியும். நீ உதவுவாய் என நினைத்தேன். இப்படிக் காலை வாருகிறாயே!! என்று கோகுல் அறட்ரவே ஆரம்பித்தார்.

உடனே விஷ்ணு சரி சரி, நீ கவலைப்படாதே நான் என் பி.ஏ. ரமணியை விசாரித்து உனக்குக் கூறுகிறேன் என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, என்ன ரெண்டு பேரும் கோட் வேர்டில் பேசிக் கொண்டிருக்கிறிர்கள்? என்று கேட்ட படியே ரூபலா வேவு பார்க்க வந்ததைக் கண்டு இருவரும் சுதாரித்துக் கொண்டனர்.

கிளம்பும் போது விஷ்ணு, யாருக்கும் தெரியாமல், எப்படி சுடுவது என்பதை ரமணியிடம் கோட் வேர்டிலேயே அனுப்பச் சொல்வதாகக் கூறினான்.

ஒருவழியாக இன்று காலை ரமணி ரூபலாவிடம் ஏதோ கொடுப்பது போல் அந்த பேப்பரை கையில் திணித்த போது கோகுலால் தான் தரையில் நிற்பதையே உணர முடியவில்லை. அதற்குள் ரூபலா வந்துவிட அவசர அவசரமாக அங்கிருந்த புத்தகத்தில் அதை வைத்துவிட்டு எதுவும் தெரியாமல் நின்றுகொண்டார்.

உள்ளேயிர்ந்து வந்த ரூபலா என்ன இது இன்னும் சின்ன குழந்தை மாதிரி படித்த புத்தகத்தை எல்லாம் அடுக்க மாட்டீர்களா என்று கூறி அவற்றை கபோர்டில் அடுக்கி, என்றும் இல்லாத திருநாளாக “நான் பாமாவுடன் கோவிலுக்குப் போகிறேன். மாலைபில் தான் வருவேன் என்ற போது கோகுலுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல் இருந்தது. அதனால் தான் கோவிலுக்கு போனால் அத்தனை நேரம் ஏன்? விவேக்-ஐப் பார்க்கப் போகிறாயா? என்று வாய் வரை வந்த கேள்வியைத் தவிர்த்து பஸ்ஸில் போகவேண்டாம் ஆட்டோவில் சென்று வா என்று (வழிந்து கொண்டே) வழியனுப்பினார்.

ரூபலா சென்றவுடன் மெதுவாக, தன் சட்டைப் பாக்கெட்டில் கை விட்டவருக்கோ அதிர்ச்சி. ரமணி கொடுத்த குறிப்பு எங்கே என்று தலையை பிய்த்து கொள்ள, மெதுவாக தான் அங்கேயிருந்த புத்தகத்துக்குள் வைத்தது ஞாபகம் வந்தது. ஆனால், எந்த புத்தகம் என்பது சரியாக நினைவுக்கு வரவில்லை. சே!! என்ன ஞாபக மறதி. இப்படி காலை வாருகிறதே இன்றைக்கு விட்டு விட்டால் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டுமா?  அதுவுமின்றி அந்த காகிதம் மட்டும் ரூபலாவிடம் கிடைத்தால் தன் கதி என்ன நினைக்க நினைக்க அவருக்கு மீண்டும் வேர்த்தது. என்ன ஆனாலும் சரி இன்று நிச்சயம் சுட்டுவிட வேண்டும் என்று குறிப்பு வைத்த புத்தகத்தைத் தேட ஆரம்பித்தார்.

அப்பாடா ஒருவழியாக குறிப்பு கிடைத்தவுடன் தான் கோகுலுக்கு போன உயிர் திரும்பி வந்த்து.

முதலில் “S W H2 6F“.என்றிருந்த அந்த குறிப்பு அவருக்குப் புரிபடவில்லை. சற்று யோசித்தவருக்கு காதலித்த போது விஷ்ணு வீட்டிற்குத் தெரியாமல் தகவல் அனுப்பும் கோட் ஞாபகம் வர மெதுவாகத் தெளிவு வர ஆரம்பித்த்து.

பல வருடங்களுக்குப் பின், சில நாட்களாக ரூபலா தன்னை அனுமதிகாத, அந்த அறைக்குள் நுழைந்தவர் அந்த வாசனையிலேயே சற்றுத் தன்னை மறந்து நின்றார். மெதுவாக சுய நினைவு அடைந்தவராய், அந்த கபோர்டை திறந்து கண் முன் இருந்த அந்த கண்டெய்னரைக் கண்டார். மெல்ல அதைத் திறந்து பார்த்தவுடனேயே அவர், போதை பழக்கம் கொண்டவன் போதை மருந்தைப் பார்த்தால் ஏற்படும் உன்மத்த நிலையை அடைந்தாலும், நேரம் கடந்து கொண்டிருப்பதை உணர்ந்து அதில் கையை விட்டார். கையை விட்ட அவருக்கோ அதிர்ச்சி. ஆம், அதனுள்ளும் ஒரு காகிதம். அது என்ன? ஏதோ எழுதியுள்ளது தெரிகிறது. ஆனால், அந்த அறை வெளிச்சத்தில் அதில் என்ன எழுதியுள்ளது என்பது விளங்கவில்லை.

மெல்ல தன் வாசிப்பு மேசைக்கு வந்தவர் ”To Vivek” என்று எழுதப் பட்டிருந்த அந்த காகிதத்தைப் பார்த்தார். அந்த துரோகி விவேக், தனக்கு வந்த லெட்டரை ரூபலாவிடம் படிக்க்க் கொடுத்திருகிறானா அல்லது ரூபலா அந்த துரோகிக்குக் கொடுக்க வைத்திருக்கிறாளா என்ற கேள்வியுடன் விவேக்-இற்கு சாபமிட்டபடியேப் பேப்பரைப் பிரித்துப் படித்தார்.

படித்ததும் அவருக்கு அவர் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் கண்களை மட்டுமா நம்ப முடிய வில்லை. தன் கண் – அடச்சே கண் என்ன கண் – தன் உயிரே அவன் தான் என்று நினைத்த தன் நண்பன் விஷ்ணுவின் துரோகம் அவர் கண் முன்னே விரிந்து அவரை நிலை குலையச் செய்தது.

அதில் விவேகிடம், “சார், எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத் தான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்என்று விஷ்ணு எழுதியிருந்த்தைக் கண்டால் அவரால் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியுமா என்ன?.

சற்று நேரம் கற்சிலையாய் அமர்ந்த அவருக்கு விஷ்ணுவின் இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, அதுவும் அவருடைய தற்போதைய விரோதி அந்த விவேக்-உடன் சேர்ந்து அவன் செய்த இந்த நம்பிக்கைத் துரோகத்திற்கு, என்ன செய்யலாம் என்று புரியாமல் விழித்தார். மெல்ல மெல்ல தன்நிலையை அடந்தவருக்கு காலை முதல் விஷ்ணு ஏன் இன்னமும் Phone செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. சட்டென்று செல்லை எடுத்தவருக்கு அதுவும் துரோகம் செய்தது.

ஆம், சார்ஜ் இல்லாமல் அணைந்திருகிறது.


சார்ஜ் செய்தவுடன் போன் “நண்பனே எனது உயிர் நண்பனேஎன்று அழைத்தது. ஆம் விஷ்ணுவின் போன் தான். அந்த நம்பருக்குத்தான் அந்த ரிங்டோன்.

“சே!! எத்தனை அப்பாவியாக  இருந்திருக்கிறேன். இந்த விஷ்ணு கூட அவர்கள் பக்கம் தான் என்று நினைத்தாலும் அவன் துரோகம் தனக்குத் தெரிந்துவிட்டதை அவனுக்குக் காட்டக் கூடாது என்று நினைத்து போனை இயக்க, விஷ்ணுவோ “டேய், எஸ்.பி.ஜீ, என்னாடா காலையிலிருந்து போனில் யாரை பிலேட் போட்டுக்கொண்டிருக்கிறாய்என்று கேட்கவும் வாசலில் காலிங் பெல் ஒலிக்கவும் சரியாக இருந்த்து.

விஷ்ணுவின் போன்காலை அணைத்து வாசல் கதவைத் திறந்தால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

ஆம் அவர் முன்னே, ரூபலா, விவேக், பாமா ஆகியோர் நின்றிருந்தனர். அவர்கள் மட்டுமா? பின்னாலேயே விஷ்ணுவும், ரமணியும் நின்றிருந்தனர்.

கதவைத் திறக்க இவ்வளவு நேரமா என்று கூறியபடியே வீட்டில் நுழைந்த அவர்களின் கண்ணிற்கு நேரேயே அந்த காகிதங்கள் மேசையில் இருந்தன. அவை நேராக ரூபலா கண்ணிலும் பட்டுவிட, அவள்  கோகுலையும் விஷ்ணுவையும் மாறி மாறி பார்த்தாள்.

மெல்ல அவள் கோகுலிடம், என் மீது இத்தனைக் கோபமா. உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதால் தானே நான் கேக் சாப்பிடவிடுவதில்லை. அதற்காக நீங்களே அவனில் கேக் சுடுவதா? உங்களுக்கு ஒன்று என்றால் நான் என்ன செய்வேன். இதுக்கு இவன் வேறு “Sugar as Wish; Honey 2 (Spoon); 6 (cup) Flour“ என்று recipe கொடுதிருக்கிறான்”, என கோபத்துடன் விஷ்ணுவைப் பார்க்க அவன் தலையை குனிந்து கொண்டான்.

“நல்ல வேளையாக இந்த ரமணி பொண்ணு போனில் என்னிடம் சொன்னதால் இப்படி ஒரு மாற்று காகித்தத்தை சர்க்கரை டப்பாவில் வைத்தேன். இனிமேல் நீங்கள் என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள். நான் கேள்வி கேட்க மாட்டேன். நான் ஒருத்தி இருப்பது உங்களுக்கு சுமைதானே!!என்று கோபமாகக் கூறினாள்.

என்னை மன்னித்து விடு ரூபலா. இரண்டு வருடம் என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு தானே இருந்தேன். அன்னிக்கு இந்த விவேக் பிறந்த நாளில் எங்களுக்கு ஒரு துண்டு கேக் கூட கொடுக்காமல் நீங்க மூணு பேரும் சாப்பிட்டதுதான் என்னை இப்படி ஆக்கிவிட்ட்துஎன்று கோகுல் அவளைத் தேற்றினார்.

உடனே விஷ்ணு, போதும் ரூபலா அவனை ரோம்ப படுத்தாதே. இன்று அவனுக்கு 60-வது பிறந்த நாள்; அதற்கு தான், “Sweet Wishes Here to (complete) 6 Full Decades“ என்பதுதான் அதன் விளக்கம் என்பதை சொல்லி, அவன் சர்க்கரை அளவு சரியாகிவிட்டதால் அவன் கேக் சாப்பிடலாம் என்று டாக்டர் விவேக் சார் கொடுத்த ரிபோர்டையும் காட்டி கொண்டு வந்த கேக்கை கட் பண்ணச் சொல் என்று சொல்ல, “அவர் பொண்டாட்டி பேச்சைக் கேட்டு கட்டுப்பாட்டுடன் இருந்ததால் சர்க்கரை அளவு குறைந்துள்ளது. அதனால் அவர் சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு இன்னமும் சர்க்கரையும் குறையல; கொழுப்பும் குறையல. அதனால், உங்களுக்கு கேக் கிடையாது என்று பாமா கூற, விஷ்ணு ப்ளீஸ்!! ப்ளீஸ்!!” என்று கெஞ்ச ஆரம்பித்தான்.
  

16 கருத்துகள்:

 1. கதை நல்லா இருக்கு சீனு... வெற்றி பெற வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 2. கதை அருமை பாஸ் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. எதிர்பார்க்கவே இல்லை இந்த முடிவை.. வித்தியாசமான கோணம், குறியீட்டை ரெசிபி ஆக்கிட்டீங்க. ரொம்ப யோசிச்சிருக்கீங்க. very nice.

  பதிலளிநீக்கு
 4. வெங்கட், ராஜா தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. அப்பாதுரை சார், உங்களைப் போன்ற பெரிய கதைச் சொல்லிகளின் வாழ்த்து, என் போன்ற புதிதாக எழுதத் துவங்கியுள்ளவர்களுக்கு பெரிய Boost. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 6. ( எப்படி சுடுவது என்பதை ரமணியிடம் கோட் வேர்டிலேயே அனுப்பச் சொல்வதாகக் கூறினான்.}}}

  இதைப் படிக்கும்போதே பொறிதட்டியது! அது போலவே நடந்துவிட்டது!

  நல்ல கதை! சுவாரஸ்யமாக முடித்திருக்கிறீர்கள்!

  (கடைசி தேதி 31 ஏன் இந்த தாமதம்?)

  பதிலளிநீக்கு
 7. லேட்டாப் பதிவிட்டிருந்தாலும் லேட்டஸ்ட்டா - இப்போது ரொம்ப பேர்களின் பிரச்னையான சர்க்கரை வியாதியையும் ஸ்வீட் ஆசையையும் அழகாச் சொல்லியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 8. Good one. All the best. Nice, unexpected finish.

  By the way, I am also a competitor for you because of this story.

  பதிலளிநீக்கு
 9. நன்றி நம்பிக்கை பாண்டியன். கடைசி தேதியை சரியாக கவணிக்கவில்லை. என் தவறுதான். ஆனால், உங்கள் பெய்ரில் இருக்கும் நம்பிக்கை என் மனதில் இருந்ததால் அதை அனுப்பியிருக்கிறேன். ஏற்றுக் கொள்வார்களா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். வருகைக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 10. நன்றி மாதவன்.

  உங்கள் கதையைப் படித்தேன். கோட் வேர்டை “பாஸ்வேர்ட்”ஆக ஆக்காமல் அருமையாக பயனர் பெயராக உபயோகித்துள்ளீர்கள். வாழ்த்துகள்.

  நான் தாமதமாக கதையை அனுப்பியுள்ளதால் பெரும்பாலும் ஆட்டத்தில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். பார்ப்போம்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 11. மாதவி,

  நல்ல காதல் கதை. தங்களுக்கும் வாழ்த்துகள்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு