பண்டிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்டிகைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், டிசம்பர் 18, 2013

திருவாதிரைத் திருநாள்


இன்று திருவாதிரைத் திருநாள்…

திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் இரவு லிங்கோத்பவருக்கு சிறப்பு நீராட்டலும் பின் காலையில் உமையொருபாகனின் சிறப்பு நடன தரிசனத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிவாலயங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தில்லையம்பதி. திருவாதிரையன்று காலை இங்கு ஆடப்படுவது ’ஆனந்தத் தாண்டவம்’.

பதஞ்சலி முனிவருக்கு பரத சாத்திரம் அருள ஆண்டவனும் தேவியும் போட்டியிட்டதாகத் தொன்மம் நமக்குக் கூறுகிறது.

தில்லையம்பதியின் தரிசனம் பெற பதஞ்சலி அனந்தீஸ்வரத்தில் இருந்த பொழுது தில்லையின் மற்றொரு பகுதியில் இருந்து சிவனை வணங்கியவர் வ்யக்ரபாதர் என்ற சிவத் தொண்டர். இவர் மனிதத் தலையும் மிருக (புலி) உடலும் கொண்டவர். சில இடங்களில் இவரை புருஷ மிருகம் என்றும் அழைப்பர்.
 
வ்யாசரின் மகாபாரதம் தவிர்த்த ஒருசில மகாபாரதங்களில், குறிப்பாக தமிழ் மகாபாரதத்தில், தருமன் ராஜசூய யாகம் செய்த பொழுது பண்டிதர்கள் ஒரு குறிப்பிட்ட யாகத்தில் புருஷ மிருகம் கலந்து கொண்டால் தான் பலன் தரும் என்று கூற, அவர் புருஷ மிருகத்தை அழைத்துவர பீமனை அனுப்பினார். புருஷ மிருகம் பீமனிடம், அவன் ஓட தான் துரத்துவதாகவும், காட்டின் எல்லைக்குள் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விழுங்குவிடுவதாகவும் அவன் தப்பித்தால் அவன் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகவும் கூறியது. புருஷ மிருகத்தின் சிவ பக்தியை அறிந்த கண்ணன், பீமனிடம் 12 கற்களைக் கொடுத்து புருஷ மிருகம் அருகில் வரும் பொழுது அவற்றை ஒவ்வொன்றாக வீசச் சொன்னார். அவ்வாறே பீமன் கற்களை ஒவ்வொன்றாக வீச அவை சிவலிங்க வடிவத்தில் இருப்பதைக் கண்ட புருஷ மிருகம் சிவபூஜை செய்து பின் பீமனைத் தொடர, பீமனின் 12 கற்களும் தீர்ந்துவிட்டன. கடைசியில், மிருகம் பீமனை பிடிக்க அவன் உடலின் பாதி மட்டும் காட்டிற்கு உள்ளே இருக்க மீதி காட்டிற்கு வெளியே இருந்தது. முடிவைத் தீர்மானிக்க வந்த தருமன் தம்பி என்றும் பாராமல், காட்டின் உள்ளிருக்கும் பீமனின் உடல் பகுதி  புருஷ மிருகத்திற்கே செந்தம் என நீதி வழங்க, தருமனின் நேர்மையைக் கண்டு புருஷ மிருகம் பீமனை விடுவித்த்து. கண்ணனின் விளையாட்டைக் கண்ட புருஷமிருகம் ஹரியும் சிவனும் ஒன்று என்றுணர்ந்து இருவருக்குமான சங்கரநாராயணன் கோவிலைக் கட்டியதாகக் கூறுவர். திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் தான் அது என்பது அக்கோவிலின் தல வரலாறு.

ஞாயிறு, நவம்பர் 17, 2013

கார்த்திகைப் பெண்டிரும் ரிஷி பத்தினிகளும்



இன்று கார்த்திகை!

க்ருத்திகா என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘அறுத்தல்’ அல்லது ‘வெட்டுதல்’ என்று பெயர்.

கார்த்திகை நட்சத்திரம் என்றால் ஆறு நட்சத்திரங்கள் கொண்ட ஒரு நட்சத்திரக் கூட்டம் ஆகும். ஆறு மிக ஒளிர்ந்த நட்சத்திரங்களைத் தவிர நெபுலாவும் சில ஒளி குறைந்த நட்சத்திரங்களும் உள்ளன.

கார்த்திகைப் பெண்டிர் அறுவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அறுவர் என்றால் ஆறு பேர்களா? அல்லது அறுத்து/வெட்டி விடப் பட்டவர்களா? ஆறு பேர் என்றால் இவர்கள் யார்?

புராணங்களிலும் தொன்மங்களிலும் இவர்களைப் பற்றி வெவ்வேறான கதைகள் கூறப்படுகின்றன.

க்ரேக்கத் தொன்மத்தைப் பொறுத்தவரை கார்த்திகை ‘ப்லெயடெஸ்’ என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த ப்லெயடெஸ்-கள் மொத்தம் எழுவர். இவர்கள் உலகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் அட்லஸுக்கும் கடல்தேவதையான ப்லெயொன்க்கும் பிறந்தவர்கள்.  இவர்களின் பெயர்கள் மயா, எலெக்ட்ரா, அல்சியான், டெகெட், அஸ்ட்ரோப், சிலியானோ, மெரோப். வேட்டுவனான ஆரியன் (மிருகசீரிஷ நட்சத்திரம்) இந்த ப்லெயடெஸ் தேவதைகளின் மீது இச்சைக் கொண்டு இவர்களை மீண்டும் மீண்டும் அணுக, அவர்களின் தோழியான ஆர்டெமிஸ்  க்ரேக்கரகளின் இந்திரனான ஜியஸை இப்பிரச்சனையில் தலையிடுமாறு கோரியது. ஜியஸ் இவர்களை புறாக்கூட்டமாக மாற்ற, அவர்கள் பறந்து சென்று தனி நட்சத்திரக் கூட்டமாக மாறினர். ப்லெயடெஸ்-இல் இளையவளான மெரோப், பின்னர் ஸிஸிஃபஸ் என்ற மனிதனுடன் (கோரிந்த்-இன் மன்னன்) உறவு கொண்டதால் தன் ஒளியை ஒடுக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

மற்றொரு தொன்மத்தில் ட்ராய் நகரின் வீழ்ச்சியால் அந்நகரின் மூதாதையான எலெக்ட்ரா (ட்ராய் மன்னன் ப்ரியம் ஹெக்டர், பாரிஸ் ஆகியோரின் தந்தை எலெக்ட்ராவின் கொள்ளுப்பேரன்) சோகத்தில் வால் நட்சத்திரமாக மாறி வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மகாபாரதக் கதையின் படி, அக்னி தெவன் சப்தரிஷிகளின் மனைவியர் மீது மோகம் கொள்ள அக்னிதேவனின் மனைவியான ஸ்வாஹா தன் உருவை ஸப்தரிஷிபத்தினிகளின் உருவாக மாற்றிக் கொண்டு அவனுடன் இணைய முடிவுகொண்டாள். ஆறு ரிஷிகளின் மனைவியின் உருவம் எடுக்க முடிந்த அவளால் வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் உருவத்தை மட்டும் எடுக்க முடியவில்லை. அதற்கு காரணம் அருந்ததியின் பத்தினித் தன்மை. இதையறிந்த மற்ற ரிஷிகள் தங்கள் மனைவியரை ஒதுக்கிவைத்தனர். இவர்களே கார்த்திகைப் பெண்களாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது. அருந்ததி மட்டும் தன் கணவர் வசிஷ்டருடன் இருக்கிறாள்.

[இரவில் வானத்தில் தெரியும் சப்த ரிஷி மண்டலத்தில், காற்றாடியின் வால் பகுதி போல் நீண்டிருக்கும் மூன்று நட்சத்திரங்களில் நடுவில் இருப்பது தான் வசிஷ்டர்; அதை ஒட்டியே அருந்ததி நட்சத்திரம் இருக்கிறது]

தைத்ரீய ப்ராஹ்மனத்தில் இவர்களின் பெயர்கள் அம்பா, துலா, நிதானீ, அப்ரயந்தீ, மேகயந்தி, வர்ஷ்யந்தி, சுபானிகா என்று குறிப்பிடப்படுகிறது. சதபத ப்ராஹ்மனத்திலும் கார்த்திகை நட்சத்திரம் சப்தரிஷிகளின் பத்தினி என்றும், ஆனால் இது எப்போதும் கிழக்கில் உதிக்கும் என்றும் - வடக்கில்  துருவ நட்சத்திரத்தை ஒட்டி இருக்கும் - சப்தரிஷி மண்டலத்திலிருந்து விலகி இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிவ புராணம்/ ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் முருகன் பிறந்த கதை பின்வருமாறு குறிக்கப்படுகிறது.

தாட்சாயினி தேவி தட்சனின் யாகத்தீயில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டதும் சிவபெருமான் சதிதேவியின் உடலைக் கையில் எடுத்து ஊழித்தாண்டவம் ஆட, சதிதேவியின் பூத உடல் இருக்கும்வரை சிவனின் கோபத்தைத் தணிக்க இயலாது என்பதை உணர்ந்த திருமால் தன் சக்கரத்தால் அவ்வுடலைத் துண்டாக்கினார். [அவை விழுந்த இடங்கள் அனைத்தும் 108 சக்தி பீடங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.] சதிதேவியின் உடல் மறைந்த பின் சிவபெருமான் தனிமையில் நீண்ட தவத்தில் கண்மூடி அமர்ந்துவிட்டார்.

சிவபெருமான் நீண்ட தவத்தில் இருந்ததால், அவருக்கு மகன் பிறக்க வாய்ப்பில்லை என்று எண்ணி, தாரகாசுரன் தன் இறப்பு சிவனின் மகனால் ஏற்பட வேண்டும் என வரம் வாங்கியிருந்தான்.

சதிதேவி ஹிமவானின் மகள் பார்வதியாக அவதரித்தாள். அவள் சிவ பெருமானை மணக்கக் காத்திருக்க, அவர்களை இணைக்க காமதேவன் மலர்கணை எய்து சிவனின் நெற்றிக் கண் பெறியினால் தீக்கிரையானான்.

சிவனின் விந்துத் துளிகள் சில பூமியில் சிந்த, அதனால் ஏற்பட்டும் வெப்பத்தாலிருந்து உலகைக் காக்க பிரமன், அக்னித்தேவனை அதை எடுத்துக்கொள்ளப் பணித்தார்.

ஸ்கந்த புராணத்தின் படி, அக்னி அதன் வெப்பத்தைத் தாளாமுடியாமல் தவிக்க பிரமன் அதை குளிர்காய வரும் பெண்ணிடம் அதைக் கொடுக்கக் கூறினார். கார்த்திகைப் பெண்கள் முதலில் வர அவர்களின் உடலில் அந்த வீரியத்தை அக்னி செலுத்த அந்த அறுவருக்கும் குழந்தைகள் பிறந்தனர்.

சிவபுராணத்தில், இது சற்று மாறுபட்டு வெப்பம் தாள முடியாத அக்னி, சிவனின் வீரியத்தை கங்கையில் இட்டதாகவும் அது அங்கிருந்து ஸரவனத்தில்  (நாணல் காடு) ஆறு தாமரைகளில் அவற்றைச் சேர்த்ததாகவும் அங்கு தோன்றிய குழந்தையைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததாகவும் கூறுகிறது.

க்ரேக்க தொன்மத்த்தின் ஏழு ‘ப்லெயடெஸ்’ சகோதரிகளில் மூத்தவள் மயா என்று பார்த்தொம். அவளுக்கும் க்ரேக்கர்களின் இந்திரனான ஜீயஸுக்கும் பிறந்தவன் ஹெர்மஸ். இந்த ஹெர்மஸின் சின்னம் சேவல்; அவன் கையில் பிடித்திருக்கும் தண்டத்திற்கு கெரிகியான் (Kerykeion) என்று பெயர். இந்த கெரிகியான் கடூஸியஸ் – Caduceus (சேவல் சிறகு கொண்ட தண்டத்தில் இரண்டு பாம்புகள் சுற்றியிருப்பது போல் அமைக்கப்பட்டிருக்கும்) – என்றும் அழைக்கப்படும். [இது தவறுதலாக இது தற்போது மருத்துவர்கள் சின்னமாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தத் தவறு ’ஆஸ்க்லியன் தண்டம்’ பாம்பால் சுற்றப்பட்டது என்பதால் ஏற்பட்டது. ஆஸ்கிலபஸ் க்ரேக்கர்களின் மருத்துவ கடவுள்; அவர் தண்ட்த்தில் ஒரு பாம்பு தான் இருக்கும்; சிறகுகள் கிடையாது. அமெரிக்க ராணுவத்தின் மருத்துவப் பிரிவு முதல் முதலாக இந்த்த் தவறைச் செய்ததால் அதுவே பிரபலமாகிவிட்டது]. இந்த ஹெர்மஸ் உள்நோக்கிப் பயணிப்பவரின் வழிகாட்டி (Guide to inner journey) என்று க்ரேக்கர்களால் வணங்கப்படுகிறான். இந்த ஹெர்மஸின் சிலைகளில் ஆண்குறி மிகவும் பிரதானமாகக் குறிக்கப்பட்டிருக்கும்.


முருகனுக்கு குஹன் என்ற பெயரும் உண்டு. குஹன் என்றால் உள்ளில் மறைந்து இருப்பவன் என்ற பொருள் உண்டு. முருகனின் குருகுஹன் என்ற பெயருக்கும் இந்த ஹெர்மஸ்-க்கும் உள்ளத் தொடர்பு மிகவும் வியப்பளிக்கிறது!


புதன், ஆகஸ்ட் 21, 2013

ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?


வட மாநிலங்களில் ரக்ஷாபந்தனம் என்ற பண்டிகைக் கொண்டாடப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே!

பெண்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரர்களுக்கு கையில் ‘ராக்கி’ என்ற கயிற்றைக் கட்டி தங்கள் அன்பைத் தெரிவிப்பார்கள்.

இந்தப் பண்டிகை வட இந்தியர்களின் ‘ச்ரவண’ மாதத்தின் பௌர்ணமியன்றுக் கொண்டாடப்படும். இந்த வருடம் பொதுவாக நாட்காட்டிகளில் 20.08.2013 அன்று ரக்ஷாபந்தனம் என்று போட்டிருந்தாலும் சிலர் 21.08.2013 அன்று கொண்டாடுகிறார்கள். [என் மகள் பள்ளியில் நேற்று விடுமுறை விட்டிருந்தார்கள்; ஆனால் என் மகனின் பள்ளியில் இன்றுதான் விடுமுறை].

காரணம் என்ன? ரக்ஷாபந்தனம் நேற்றா? இன்றா?

இந்த வருடம் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருக்கிறது. பௌர்ணமியின் முதல் பாகம் பத்ர கரணம் ஆகும் (கரணத்தைப் பற்றிய மேலதிகத் தகவல்களை இந்த இடுகையில் எழுதியுள்ளேன்).

பொதுவாக பத்ர கரணத்தில் திருமணம், முடிகாணிக்கை, ரக்ஷாபந்தனம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவர்.

ரக்ஷாபந்தனத்தைப் பொறுத்தவரை அதற்கு ஏற்ற நேரமாக ப்ரதோஷ காலத்தைக் குறிப்பிடுகிறார்கள். பிரதோஷம் சூரிய அஸ்தமனத்தை ஒட்டிய முந்தைய பிந்தைய 10 நாழிகைகளைக் குறிக்கும். இந்த ஆடி மாதத்தில் பொதுவாக சூரிய அஸ்தமனம் மாலை 7 மணியளவில் இருக்கும். ஆகவே பிரதோஷ நேரமாக மாலை சுமார் 5 மணியிலிருந்து சுமார் 9 மணிவரை குறிப்பிடுவர்.

இந்த மாதப் பௌர்ணமி நேற்று (20.08.2013) காலை சுமார் 10 மணி முதல் இன்று (21.08.2013) காலை 7.30 மணி வரையில் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன். இதில் மாலை 8.15 / 8.20 மணிவரையான முதல் பாதி (மொத்த பௌர்ணமி நேரமான சுமார் 22 1/2 மணி நேரத்தில் பாதியான 11 1/4 மணிநேரத்தை காலை 10 மணியுடன் கூட்டினால் வரும் நேரம்) பத்ர கரணம்.

இந்த பத்ர கரணத்திற்குப் பின்னர் வரும் பௌர்ணமியின் பின்பாதி (பவ கரணத்தில்) ரக்ஷாபந்தனம் கொண்டாடலாம். பத்ர கரணம் முடிந்து 8.20 முதல் பிரதோஷம் முடியும் சுமார் 9 மணி வரையிலான நேரம்  மிகச் சிறந்த நேரமாகக் கருதப்பட்டு நாட்காட்டிகளில் நேற்றைய தினம் ரக்ஷாபந்தனமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் மேற்கூறிய நேரங்கள் அனைத்தும் திருக்கணிதப் பஞ்சாங்கக் கணிப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், மற்ற சில சித்தாந்தைங்களை (சூரிய சித்தாந்தம், வாக்கிய பஞ்சாங்கங்கள் மற்றும் மற்றைய இடங்களில் பயன் படுத்தும் பஞ்சாங்கங்கள் போன்றவை) அடிப்படையாகக் கொண்ட பஞ்சாங்கங்கங்களில் இந்த நேரக் கணிப்புகள் வேறுபட்டுள்ளன. மேலும், சில ஜோதிடர்கள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ரக்ஷாபந்தனம் செய்யக்கூடாது என்றும் கூறுகிறார்கள். அதனால் சிலரால் ரக்ஷாபந்தனம் இன்று (21.08.2013) கொண்டாடப் படுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013

தீஜ்



தீஜ் என்பது வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தான், குஜராத், உத்திரபிரதேசப் பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை.

இந்தப் பண்டிகை மூன்று தினங்களில் கொண்டாடப்படுகிறது.

தீஜ் என்பது திரிதியை திதியைக் குறிக்கும். அக்ஷய திரிதியை என்பது ’அக்க தீஜ்’ என்று அழைக்கப்படும். மேற்கூறிய மூன்றில் அக்ஷய திரிதியை சேராது. இம்மூன்றும் வேறு தினங்களில் அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் கொண்டாடப்படுபவை. இதைத் தவிர கங்குவார் தீஜ் என்று அழைக்கப்படும் கௌரி திரிதியை யுகாதியை ஒட்டிக் கொண்டாடப்படும்.

இப்பொழுது தீஜ் என்றப் பொதுப் பெயரில் மூன்று தினங்களில் தனித்தனியாகக் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையைப் பற்றிப் பார்ப்போம்.

முதலாவதாகக் கொண்டாடப்படுவது  ’சோடி தீஜ்’ (சின்ன திரிதியை) அல்லது ஹரியாலி தீஜ் (பசுமை திரிதியை) என்று வழங்கப்படுகிறது. இது வட இந்திய மாதமான ஷ்ரவண மாதத்தில் சுக்ல பக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. இது இன்று 09.08.2013 வருகிறது.

இரண்டாவதாக வருவது ’படி தீஜ்’ (பெரிய தீஜ்) அல்லது காஜரி தீஜ் (கண்மை திரிதியை) என்றுப் பெயர். இது ஹரியாலி தீஜ்-க்கு அடுத்த க்ருஷ்ணபக்ஷ த்ரிதியையில் கொண்டாடப்படுகிறது. அதாவது ரக்ஷாபந்தனுக்கு அடுத்த த்ரிதியையில் கொண்டாடப்படும் (இந்த வருடம் ஆகஸ்ட் 23 ஆம் நாள் வரும்). இந்த நாளில் இரவு முழுவதும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவதால் அல்லது க்ருஷ்ண பக்ஷத்தில் வருவதால் கருமையைக் குறிக்க இந்தப் பெயரை உபயோகித்திருக்கலாம்.

மூன்றாவதாக வருவது ஷ்ரவண மாதத்தின் அடுத்த மாதமான பாத்ரபாத மாத்த்தின் சுக்கில பட்சத்தில் கொண்டாடப்படுகிறது. அதாவது விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் வரும். இது ஹரதாலிகா தீஜ் என்று அழைக்கப்படுகிறது.
 
பொதுவாக இந்தப் பண்டிகை சிவ-பார்வதி விவாஹத்தை ஒட்டிக் கொண்டாடப் படுகிறது. காமதகனத்தைத் தொடர்ந்து சிவன் அங்கிருந்து மறைந்து விட நாரதர் அறிவுரையால் பார்வதி கானகம் எய்தி அங்கு விரதமிருந்ததாள். (அவள் கானகம்  செல்வதைக் கேட்ட அவள் தாய் மீனாள் ‘ஓ’ மா! என்று கூற அதுவே பார்வதிக்கு உமா என்ற பெயர் கொடுத்த்தாகவும் கூறுகிறார்கள்). அங்கு அவளை ஸப்தரிஷிகள் பரிசோதிக்க இறுதியில் ஜடாமுடி சன்யாசியாக சிவன் வந்து அவளிடம் சிவனைப் பற்றித் தாழ்வாகக் கூற அதைக் கேட்க இயலாமல் அவள் தீ புகுந்த்தாள். ஆனால், அவள் தவ வலிமையின் காரணமாக நெருப்பு உறைந்து விட பார்வதி ஜடாமுடியானிடம் சிவ பெருமைகளை உரைத்தாள். பிறகு சிவன் தன் உருகாட்ட, உமை தன் பெற்றோரின் சம்மதத்துடன் தன்னை மணமுடிக்க வேண்டினாள். அதை ஈசன் ஏற்க, தன் நாடு திரும்பினாள்.

முதலாவதாக்க் கொண்டாடப்படும் ஹரியாலி தீஜ் அன்று தன் பெற்றோரிடம் விடை பெற்று கானகம் எய்திய நாள் என்பதால் அன்று பெற்றோர் தங்கள் மகள்களுக்கு பரிசளிக்கும் வழக்கம் உள்ளது.

இரண்டாவது கொண்டாடப்படும் காஜரி தீஜ் அன்று தான் ஸப்தரிஷிகளும் ஜடாதாரியும் உமையைச் சோதித்த நாட்கள் அன்று உபவாசம் இருந்து இரவு சந்திரனை தரிசித்து உணவு உண்பர். நாள் முழுவதும் நிர்ஜல (நீர் அருந்தாமல்) உபவாசம் இருப்பவர்களும் உண்டு.

மூன்றாவதாகக் கொண்டாடப்படும் ஹரதாலிகா விரதத்தன்று உமையின் கோரிக்கையை ஏற்று சிவன் அவள் பெற்றோரிடம் பெண் கேட்க ஒப்புக்கொண்ட தினம் என்று சிலரும் கானகத்தில் கடுந்தவத்திலிருந்துத் திரும்பிய உமை  வீடு திரும்பிய தினம் என்று சிலரும் கூறுகிறார்கள். அன்று பார்வதி தேவியின் சிலைகளை வைத்து வழிபடுவர்.

ஆனாலும் தற்போது ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களில் இந்த நாட்களில் ஊஞ்சல் கொண்டாட்டமும் ஆட்டம் பாட்டத்துடன் பெரும் விழாக்களாகக் பொதுவெளியில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊஞ்சல் ஆட்டமும் கோலாட்டமும் முக்கிய நிகழ்வுகளாக நடைபெறுகின்றன.

ப்ருந்தாவனத்தில் ஹரியாலி தீஜ் அன்று ‘பங்கே பிஹாரி’ கோவிலில் ராதா-க்ருஷ்ணர் இருவரும் வெளிக் கொணரப்பட்டு ஒரு சேர தங்க ஊஞ்சலில் ’ஜோலாட்டம்’ நடைபெறும். இதற்கு ‘ஜூலன் லீலா’ என்று பெயர். இதில் முக்கியமாக வருட்த்தில் ஒரே முறையாக க்ருஷ்ணருக்கு கட்கம் (வாள்) வைத்து வணங்கப்படுவது வழக்கம்.
 
தீஜ் நேரத்தில் கேவர் என்ற இனிப்பு இப்பகுதிகளில் மிகவும் பிரபலம். 

வியாழன், ஏப்ரல் 11, 2013

யுகாதி


ன்று யுகாதி ஆந்திர கர்நாடக மராட்டிய மாநிலங்களில் கொண்டாடப்படும் புத்தாண்டு நாள்.

வட மொழியின் யுக்மம்” (இணை/ஜோடி) என்ற வேர்ச் சொல்லிலிருந்து பிறந்தவை யோகம், யுகம் ஆகியச் சொற்கள். யோகம் என்றால் இணைப்பு அல்லது இணைவது; யோக சாஸ்த்ரம் என்பது உடலும் உள்ளமும் இணைந்து கட்டுப்படுவது. யுகம் என்றால் இரண்டின் சந்திப்பு அல்லது இணைப்பு என்று பொருள்.

ராசிகள் அல்லது நக்ஷத்திரங்கள் இணைவதும் யுகம். இந்த இணைப்பு ஆதிராசியான மேஷத்தில் நிகழும் பொழுது அது யுகாதி எனப்படும். யுகாதியில் வரும் ’யுகம்’ என்ற வார்த்தைக்கும் சதுர்யுகம் என்பதில் வரும் ‘யுகம்’ என்ற வார்த்தைக்கும் இணைப்பு என்பதைத் தவிர வேறு சம்பந்தம் இல்லை. அதனால் இந்த யுகாதியை சதுர்யுகங்களின் ஆதி (ஆரம்பம்) என்று கொள்ளக் கூடாது.

வேறு சில கால சந்தி(இணைப்பு)களில் இந்த யுகம், யுகாதி என்ற வார்த்தைகள்  பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பார்ப்போம்….

1.           சந்திரமான, சௌரமான யுகம் :  சந்திர, சூரிய ஆண்டுகள்.
2.           ப்ரஹஸ்பதி யுகம் :   இது 12 ஆண்டுகளைக் கொண்டது. சூரியன், சந்திரன், புஷ்ய (பூசம்) நக்ஷத்திரம், குரு ஆகியவை ஒரே ராசியில் இணையும். இதைக் கொண்டு தான் கும்பமேளா கணிக்கப்படுகிறது. சில இடங்களில் இது சற்று வேறுபாட்டுடன் 60 வருடங்கள் கொண்டதாகக் கூறப்படுவதுண்டு (சூரியன், சந்திரன், பூசம், குரு ஆகியவற்றுடன் சனியும் இணையும்)
3.           சஹஸ்ர சதுர் யுகம்  :         ஒரு பருவ ஆண்டு (tropical year based on vernal equinox) நகர்ந்து ஒரு நக்ஷத்திரத்தைக் கடக்க ஆகும் 1000 ஆண்டுகள் நான்கு யுகங்களாக பகுக்கப்பட்டு (400 க்ருத யுகம்; 300 த்ரேதா யுகம்; 200 த்வாபர யுகம்; 100 கலியுகம்) இருப்பது. [விளக்கங்களை பிரிதொரு சமயத்தில் தனி பதி்வாக முயற்சிக்கிறேன்].
4.           கவம் அயனம் :        இது நான்கு ஆண்டுகள் கொண்ட ஒரு தொகுப்பு. இதில் ஒவ்வொரு ஆண்டும் 365¼ நாட்களைக் கொண்டவை. முதல் ஆண்டு 365 நாளுடன் ஒரு கால் (பாதம் என்று கூறுவர்) நாள் இணைத்து அதைக் கலியுகம் என்றும், அடுத்த ஆண்டுகளில் 365 நாளுடன் மற்றொரு பாதங்கள்  இணைத்து அதை த்வாபர, த்ரேதா யுகங்கள் என்றும், கடைசி ஆண்டை க்ருத ஆண்டு என்றும் அழைப்பர். கடைசி ஆண்டின் கால் பகுதி முடிந்தவுடன் நாளின் மீதி பகுதி எதுவும் மீறாமல் இருப்பதால் அதை ஸத்ய அல்லது ரித யுகம் என்றும் கூறுவர்.
5.           ஸப்தரிஷி யுகம்        :         இது 2700 ஆண்டுகள் கொண்டது. ஸப்தரிஷி மண்டலம் ஒரு நக்ஷத்திரத்திலிருந்து அடுத்த நக்ஷத்திரத்திற்கு செல்ல 1000 வருடங்கள் ஆகும். பூமி தன்னைத் தானேச் சுற்றி, சூரியனையும் சுற்றுவதை அறிவோம். அதே போல் அதன் 23.5 டிகிரி சாய்வும் தலையாட்டி பொம்மைப் போல சுழலும். அப்பொழுது வான்மையத்தில் இருக்கும் ஸப்தரிஷி மண்டலமும் சுழலும். இதற்கான காலம் 2700 ஆண்டுகள் என வராஹமிஹ்ரர் கூறுகிறார். பாகவத, விஷ்ணு புராணங்கள் ஸப்த ரிஷிகள் மகத்திலிருந்து பூராட நக்ஷத்திரம் செல்லும் சமயத்தில் மகத வம்சாவளியைத் தொகுத்து பரிக்ஷிதிலிருந்து நந்த வம்சம் வரை விவரித்துள்ளது. இது 1015 ஆண்டுகளைக் கொண்ட வம்சாவளியுடன் ஒத்துப் போவதாகக் கூறுகிறார்கள்.

இவற்றைத் தவிர ரோமக சித்தாந்தம், சூர்ய சித்தாந்தத்திற்கு முந்தைய சித்தாந்தங்கள், சூரிய சித்தாந்தம், மார்கண்டேய யுகம், சஞ்சய யுகம், ஆர்யபட்டர் சித்தாந்தம், ப்ரஹ்ம ஸ்புடிக சித்தாந்தம் ஆகியவை வெவ்வேறு ஆண்டுக் கணக்குக்களைக் கொண்டுள்ளன.

அனைவருக்கும் யுகாதி வாழ்த்துகள்!