புதன், டிசம்பர் 18, 2013

திருவாதிரைத் திருநாள்


இன்று திருவாதிரைத் திருநாள்…

திருவாதிரை தினத்தையொட்டி சிவாலயங்களில் இரவு லிங்கோத்பவருக்கு சிறப்பு நீராட்டலும் பின் காலையில் உமையொருபாகனின் சிறப்பு நடன தரிசனத்துடனும் கொண்டாடப்படுவது வழக்கம்.

சிவாலயங்களில் முதன்மையாகக் கருதப்படுவது தில்லையம்பதி. திருவாதிரையன்று காலை இங்கு ஆடப்படுவது ’ஆனந்தத் தாண்டவம்’.

பதஞ்சலி முனிவருக்கு பரத சாத்திரம் அருள ஆண்டவனும் தேவியும் போட்டியிட்டதாகத் தொன்மம் நமக்குக் கூறுகிறது.

தில்லையம்பதியின் தரிசனம் பெற பதஞ்சலி அனந்தீஸ்வரத்தில் இருந்த பொழுது தில்லையின் மற்றொரு பகுதியில் இருந்து சிவனை வணங்கியவர் வ்யக்ரபாதர் என்ற சிவத் தொண்டர். இவர் மனிதத் தலையும் மிருக (புலி) உடலும் கொண்டவர். சில இடங்களில் இவரை புருஷ மிருகம் என்றும் அழைப்பர்.
 
வ்யாசரின் மகாபாரதம் தவிர்த்த ஒருசில மகாபாரதங்களில், குறிப்பாக தமிழ் மகாபாரதத்தில், தருமன் ராஜசூய யாகம் செய்த பொழுது பண்டிதர்கள் ஒரு குறிப்பிட்ட யாகத்தில் புருஷ மிருகம் கலந்து கொண்டால் தான் பலன் தரும் என்று கூற, அவர் புருஷ மிருகத்தை அழைத்துவர பீமனை அனுப்பினார். புருஷ மிருகம் பீமனிடம், அவன் ஓட தான் துரத்துவதாகவும், காட்டின் எல்லைக்குள் அவனைப் பிடித்துவிட்டால் அவனை விழுங்குவிடுவதாகவும் அவன் தப்பித்தால் அவன் கட்டளைக்குக் கட்டுப்படுவதாகவும் கூறியது. புருஷ மிருகத்தின் சிவ பக்தியை அறிந்த கண்ணன், பீமனிடம் 12 கற்களைக் கொடுத்து புருஷ மிருகம் அருகில் வரும் பொழுது அவற்றை ஒவ்வொன்றாக வீசச் சொன்னார். அவ்வாறே பீமன் கற்களை ஒவ்வொன்றாக வீச அவை சிவலிங்க வடிவத்தில் இருப்பதைக் கண்ட புருஷ மிருகம் சிவபூஜை செய்து பின் பீமனைத் தொடர, பீமனின் 12 கற்களும் தீர்ந்துவிட்டன. கடைசியில், மிருகம் பீமனை பிடிக்க அவன் உடலின் பாதி மட்டும் காட்டிற்கு உள்ளே இருக்க மீதி காட்டிற்கு வெளியே இருந்தது. முடிவைத் தீர்மானிக்க வந்த தருமன் தம்பி என்றும் பாராமல், காட்டின் உள்ளிருக்கும் பீமனின் உடல் பகுதி  புருஷ மிருகத்திற்கே செந்தம் என நீதி வழங்க, தருமனின் நேர்மையைக் கண்டு புருஷ மிருகம் பீமனை விடுவித்த்து. கண்ணனின் விளையாட்டைக் கண்ட புருஷமிருகம் ஹரியும் சிவனும் ஒன்று என்றுணர்ந்து இருவருக்குமான சங்கரநாராயணன் கோவிலைக் கட்டியதாகக் கூறுவர். திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் தான் அது என்பது அக்கோவிலின் தல வரலாறு.

2 கருத்துகள்:

  1. புருஷமிருகம் ஹரியும் சிவனும் ஒன்று என்றுணர்ந்து இருவருக்குமான சங்கரநாராயணன் கோவிலைக் கட்டியதாகக் கூறுவர். திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவில் தான் அது என்பது அக்கோவிலின் தல வரலாறு.//
    திருநட்டாலம் தலவரலாறு அறிந்து கொண்டேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு